search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிவசேனா சின்னம் விவகாரம்: உத்தவ் தாக்கரேயை கைவிட்டதா கூட்டணி கட்சிகள்?
    X

    சிவசேனா சின்னம் விவகாரம்: உத்தவ் தாக்கரேயை கைவிட்டதா கூட்டணி கட்சிகள்?

    • பா.ஜனதா ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே அரசு பதவி ஏற்றது.
    • தலைவர்கள் பட்டும், படாமல் தான் விமர்சனங்களை முன்வைத்து உள்ளனர்.

    சிவசேனா கட்சி மராட்டியத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜனதாவுடன் நட்பு பாராட்டி கூட்டணி வைத்து இருந்தது.

    2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை பங்கிடுவதில் சிவசேனா, பா.ஜனதா இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து மாநிலத்தில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி உடைந்தது. இந்துத்வா கொள்கை கொண்ட சிவசேனா கொள்கைகள் மாறுபட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை மலைப்போல் நம்பி மாறுபட்ட கொள்கை கொண்ட கட்சிகளுடன் மகாவிகாஸ் அகாடி கூட்டணி என்ற விஷப்பரீட்சையில் உத்தவ் தாக்கரே இறங்கியதாக கூறப்படுகிறது. இதனால் சரத்பவார் அரசியல் சாணக்கியராக கருதப்பட்டார். உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருந்தாலும், முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் சரத்பவார் தான் இருந்தார். அவரின் கட்சிக்கு தான் நிதி, உள்துறை போன்ற முக்கிய இலாகாக்கள் வழங்கப்பட்டு இருந்தது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் மராட்டிய அரசியலில் பூகம்பம் வெடித்தது. சிவசேனாவில் பிளவு ஏற்பட்டதால் உத்தவ் தாக்கரே அரசு பதவி விலகியது. பா.ஜனதா ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே அரசு பதவி ஏற்றது.

    தற்போது ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி பெயர், கட்சியின் வில்-அம்பு சின்னத்தை வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. 7 மாத இழுபறிக்கு பின் இந்த முடிவை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

    தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே தரப்பை உண்மையான சிவசேனா என அங்கீகரித்ததை உத்தவ் தாக்கரே தரப்பு கடுமையாக விமர்சித்து உள்ளது. தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் அடிமையாக செயல்படுகிறது என விமர்சித்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் உத்தவ் தாக்கரேவின் கூட்டணி கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தண்ணீரும், தாமரை இலையும் போல செயல்படுகின்றன.

    குறிப்பாக உத்தவ் தாக்கரே யாரை பெரிய அளவில் நம்பி கொள்கை மாறுபட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாரோ, அதே சரத்பவாரே தேர்தல் ஆணையத்தின் முடிவு பற்றி கடும் கண்டனங்களை தெரிவிக்கவில்லை. அவர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆலோசனைகளை மட்டுமே வழங்கி உள்ளாரே தவிர, தேர்தல் ஆணையத்தின் முடிவு குறித்து எந்த கருத்துகளையும் கூறவில்லை.

    ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் கட்சி பெயர், சின்னத்தை வழங்கியது தொடர்பாக சரத்பவார் கூறியதாவது:- தேர்தல் ஆணையம் ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதை பற்றி ஆலோசிக்க முடியாது. தேர்தல் ஆணைய முடிவை ஏற்று கொள்ள வேண்டும். புதிய சின்னத்தை தேர்ந்தெடுங்கள். பழைய சின்னத்தை இழப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எமர்ஜென்சிக்கு பிறகு இந்திரா காந்திக்கும் இதே நிலை ஏற்பட்டது. காங்கிரசின் சின்னம் 'இரட்டை காளையாக' இருந்தது. அந்த சின்னத்தை அவர்கள் இழந்தனர். அதன்பிறகு 'கை' சின்னத்துக்கு மாறினர். மக்கள் அதை ஏற்றுக்கொண்டனர். அதுபோல உத்தவ் தாக்கரேவின் புதிய சின்னத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இதேபோல நேற்று முன்தினம் அவர் தேர்தல் ஆணையம் ஷிண்டே தரப்புக்கு சின்னம், கட்சியை வழங்கிய விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சோ்ந்த எதிர்க்கட்சி தலைவர் அஜித்பவாரும் உத்தவ் தாக்கரே தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என உத்தவ் தாக்கரேவுக்கு ஆலோசனை தான் கூறியுள்ளார்.

    எனவே தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டேக்கு வில், அம்பு, கட்சியின் பெயரை வழங்கிய விவகாரத்தில் சரத்பவார் விலகி இருப்பதாக பொதுவான கருத்து நிலவுகிறது. அதே நேரத்தில் சரத்பவார் நடைமுறைக்கு எது சாத்தியமோ அது பற்றி பேசியிருக்கிறார் என தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.

    2019-ம் ஆண்டு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி அமைப்பது பற்றி தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இருந்த போது, சரத்பவாரின் அண்ணன் மகனான அஜித்பவார், தேவேந்திர பட்னாவிசுடன் சேர்ந்து துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அஜித்பவார், சரத்பவார் ஒப்புதலுடன் தான் எங்களுக்கு ஆதரவாக பதவிஏற்றார் என சமீபத்தில் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தேசியவாத காங்கிரஸ் போல, காங்கிரஸ் கட்சியும் சிவசேனா கட்சி, சின்னம் விவகாரத்தில் பெரிய அளவில் எதிர்ப்புகளை வெளிப்படுத்தவில்லை. மாநில தலைவர் நானா படோலே தவிர மற்ற தலைவர்கள் பட்டும், படாமல் தான் விமர்சனங்களை முன்வைத்து உள்ளனர்.

    இது கூட்டணி கட்சிகளின் உறுதித்தன்மை மீது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

    Next Story
    ×