search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TTV Dinakaran"

    ஜெயலலிதா ஆட்சி என்று கூறி எடப்பாடி பழனிசாமி மக்களை ஏமாற்றி வருகிறார் என சூலூரில் நடந்த பிரசார கூட்டத்தில் டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TNAssemblyByElection #EdappadiPalanisamy #TTVDinakaran
    சூலூர்:

    சூலூர் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று 2-வது நாளாக பிரசாரம் செய்தார். அவர் கள்ளப்பாளையம், சின்னக்குயிலி, இடையர்பாளையம், அக்கநாயக்கன்பாளையம், வடவள்ளி, செஞ்சேரிமலை, ஜல்லிப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் பேசினார். அப்போது டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-

    தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற துரோக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டிய கடமை வாக்காளர்களாகிய உங்களுக்கு உள்ளது. அதற்கு காரணம் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த ஆட்சியை தொடர்ந்து நடத்திட வேண்டி சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பு, எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் ஆக்கினார். ஆனால் இந்த கட்சி எக்கேடு கெட்டு போனால் என்ன என்று சசிகலா நினைத்திருந்தால் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் என்று மார்தட்டிக் கொண்டிருக்க முடியாது. எடப்பாடி பழனிசாமியை ஒரு சகோதரராக நினைத்து சசிகலா ஆட்சியை விட்டு சென்றார். ஆனால் அவர் துரோகம் செய்து விட்டார். அவர் செய்தது சரியா என்பதற்கு வாக்காளர்களாகிய நீங்கள் தான் இந்த தேர்தல் மூலம் பதில் அளிக்க வேண்டும்.

    மோடியின் ஏஜெண்டாக செயல்படும் இவர்கள் ஜெயலலிதா எந்தெந்த திட்டங்களையெல்லாம் எதிர்த்தாரோ அதையெல்லாம் ஆதரிக்கிறார்கள். நீட் தேர்வு வேண்டாம் என்று ஜெயலலிதா போராடினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை ஆதரிக்கிறார். மோடிக்கு பயந்து கொண்டு விவசாயிகளை பாதிக்கிற திட்டங்களை கொண்டு வருகிறார்கள். வியாபாரிகளை பாதிக்கும் ஜி.எஸ்.டி.யை ஜெயலலிதா வரவிடவில்லை. ஆனால் எடப்பாடி அதை ஆதரித்தார். இது ஜெயலலிதா ஆட்சி என்று கூறி எடப்பாடி பழனிசாமி மக்களை ஏமாற்றி வருகிறார். அவர் இரட்டை இலையை காட்டி ஏமாற்றுகிறார். இதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகளுக்குத் தான் வாக்களிப்போம் என்ற நிலையில் தான் மக்கள் உள்ளனர்.

    ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவருடைய உருவப்படத்தை சட்டமன்றத்தில் வைக்கக்கூடாது என்று கூறிய விஜயகாந்த் கட்சியுடன் இவர்கள் கூட்டணி வைத்துள்ளனர். ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்டக்கூடாது என்று நீதிமன்றம் வரை சென்ற பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டு வைத்துள்ளனர். துரோகம் செய்தவர்கள் எப்படி மக்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள்.



    எங்களை வெற்றி பெற செய்தால் சூலூர் தொகுதியில் வேளாண் உதவி மையம் அமைக்கப்படும். விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். பரம்பிக்குளம்-ஆழியாறு மூலம் இந்த பகுதிக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். 60 வயதான விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே தமிழகத்தில் அனைத்து தரப்பினருக்கும் பலன் அளிக்கும் வகையில் சிறப்பான மக்களாட்சியை அமைத்து தர நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் பரிசு பெட்டகம். உங்களது வெற்றி வேட்பாளர் சுகுமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் பேசினார்.

    முன்னதாக கள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி-புவனேஸ்வரி தம்பதியின் பெண் குழந்தைக்கு அகல்யா என்று டி.டி.வி. தினகரன் பெயர் சூட்டினார். #EdappadiPalanisamy #TTVDinakaran
    குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார். #TTVDinakaran #RasipuramNurse
    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சட்டவிரோத குழந்தைகள் விற்பனை மற்றும் கடத்தல் பற்றி அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

    ராசிபுரத்தில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக விருப்ப ஓய்வு பெற்ற அரசு செவிலியர் மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுவும் குழந்தை விற்பனை தொடர்பான ஆடியோ வெளியாகி தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பிறப்பு சான்றிதழ் போன்ற ஆவணங்களை அவர்கள் போலியாக தயாரித்திருப்பதும் அம்பலமாகி இருக்கிறது.

    பிடிபட்டிருக்கும் குழந்தை விற்பனை கும்பலின் பின்னால் பெரிய சட்டவிரோத சங்கிலி பிணைப்பு இருப்பதாக வெளியாகும் தகவல் பொதுமக்களிடையே அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதில் உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்துவதும், முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதும் மிகவும் முக்கியம்.

    சென்னை உயர்நீதிமன்றம் நேரடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு குழந்தை விற்பனை மற்றும் கடத்தல் புகார்கள் பற்றி முழுமையான விசாரணை நடத்த சிறப்புக்குழு அமைக்க வேண்டும். அந்த விசாரணையை உயர்நீதிமன்றமே கண்காணிக்க வேண்டும்.

    சென்னையில் வீடுகள் இன்றி சாலை ஓரங்களில் படுத்திருக்கும் குழந்தைகள் தொடர்ந்து கடத்தப்பட்டது குறித்த வழக்கில் பழனிசாமி அரசின் செயல்பாடுகளை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து இருந்ததை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.



    நாட்டின் எதிர்காலம் குழந்தைகள். அவர்கள் கடத்தப்படுவதை தடுக்க தமிழக அரசு தவறி விட்டது. நீதிபதிகள் மற்றும் காவல் துறையினரின் குழந்தைகள் பாதுகாப்பாக இருந்தால் மட்டும் போதாது. இந்தியாவின் கடைசி குடிமகனின் குழந்தையும் பாதுகாப்பாக இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் குழந்தை கடத்தலை முற்றிலுமாக தடுப்பதற்கான நடவடிக்கைகளை உயர்நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    அப்போதுதான் குழந்தை கடத்தல் தடுப்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி செயல்படும் சமூக விரோத வலைப்பின்னலை அறுத்தெறிந்து அப்பாவி பெற்றோரின் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும். அவர்களும் இந்த சமூகத்தில் நிம்மதியாக வாழ்வதற்கான வாய்ப்பை உருவாக்கித் தரமுடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TTVDinakaran #RasipuramNurse
    சசிகலாவின் ஒப்புதலோடு தான் புதிய கட்சி பதிவு செய்யப்பட்டதாகவும் அவரை ஓரங்கட்டவில்லை எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறையில் சசிகலாவை சந்தித்த பின் பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சசிகலா எனக்கு வாழ்த்து சொன்னார். நன்றாக செயல்பட சொன்னார். ஊடகங்களில் பல வி‌ஷயங்களை கிளப்பி விடுவதை போன்று ஒன்றும் இல்லை என்று உங்களிடம் (செய்தியாளர்களிடம்) தெரியப்படுத்த சொன்னார்.

    ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தில் நான் இருந்ததால் இங்கு வந்து சசிகலாவை சந்திக்க முடியாத காரணத்தினால் கட்சி, சின்னம் தொடர்பாக ஏற்கனவே எங்களது வழக்கறிஞர் சசிகலாவிடம் கலந்து பேசினார். சசிகலாவின் ஒப்புதலோடு தான் அனைத்தும் நடைபெற்று வருகிறது.

    சசிகலா பேச முடியாத நிலைமையில் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு சில வி‌ஷமிகள் புகழேந்தியை வைத்து சில டாட்காமில் தவறான தகவல்களை கொடுத்திருக்கிறார்கள். அதெல்லாம் உண்மை இல்லை.

    சாதிக்அலி தீர்ப்புபடி எண்ணிக்கை அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை பழனிசாமி-பன்னீர்செல்வம் கம்பெனிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியது. ஆனால் அதனை ஏற்காத ஆர்.கே.நகர் மக்கள் பழனிசாமி-பன்னீர்செல்வம் கம்பெனிக்கு தோல்வியை தந்தார்கள். அதேபால் தற்போது மக்கள் தீர்ப்பு வந்தவுடன் மீதமிருக்கிற உண்மையான தொண்டர்களும் எங்கள் பக்கம் வந்து விடுவார்கள்.

    மக்களே இறுதி எஜமானர்கள். ஜனநாயக முறைப்படி போராடுவோம். அதே நேரத்தில் சசிகலா இரட்டை இலை தொடர்பாக சீராய்வு மனுவை சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்து சட்டப்படி போராடுவார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக தான் சுப்ரீம்கோர்ட்டில் சீராய்வு மனுதாக்கல் செய்யப்படும். அதே நேரத்தில் கட்சி தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. அதனையும் அவர் நடத்துவார்.

    ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். கம்பெனியால் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். அது தொடர்பான வழக்கையும் அவர் தொடர்ந்து நடத்துவார். எங்கள் கட்சியில் சசிகலாவுக்காக தலைவர் பதவியை காலியாக வைத்துள்ளோம். துணைத் தலைவரும் தற்போது வந்திருக்கிறார்.

    எங்கள் கட்சியில் தலைவர், பொதுச்செயலாளர், துணைத்தலைவர் ஆகிய பதவிகள் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய பதவிகள். பொதுச்செயலாளர், துணைத்தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவியை சசிகலாவுக்காக காலியாக வைத்திருக்கிறோம். அவர் வெளியில் வந்தபிறகு அது தொடர்பாக முடிவு செய்வார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா ஏற்கனவே இருக்கிறார். அதனால் சசிகலாவை ஓரங்கட்டுவது, ஒதுக்குவது என்று சொல்வது மிகவும் தவறானது. அதேபோல் தொலைக்காட்சிகளின் விவாதங்களில் இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்று கூறி அ.தி.மு.க. தொண்டர்களை அழைத்து வந்து தினகரன் ஏமாற்றிவிட்டார் என்று சொல்வதும் தவறானது. ஏனெனில் எதனால் இதுபோன்று நடைபெறுகிறது என்பது எங்கள் தொண்டர்களுக்கு நன்றாக தெரியும்.

    சுப்ரீம்கோர்ட்டில் எங்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு சீராய்வு மனுதாக்கல் செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கும் பணியில் நாங்கள் இறங்கி விட்டோம். சசிகலா சீராய்வு பணியை மேற்கொள்வார். அதுபோல அ.தி.மு.க. கட்சி தொடர்பான வழக்குகளையும் தொடர்ந்து நடத்துவார். சசிகலா நன்றாக இருக்கிறார்.

    பொன்பரப்பி போன்ற இடங்களில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும். சமுதாய அடிப்படையிலான சண்டைகள் இல்லாமல் இருப்பதுதான் நாட்டிற்கு நல்லது. அதனால்தான் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அரசியல் இயக்கங்கள் இருக்க வேண்டும் என்று திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருக்கிறேன்.

    நடந்து முடிந்த தேர்தலில் பரிசுப் பெட்டகம் மாபெரும் வெற்றி பெறும். அதே போல் மே 19-ந்தேதி நடைபெறவிருக்கும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். மே 1-ந்தேதியிலிருந்து 15-ந் தேதி வரை பிரசாரம் மேற் கொள்கிறேன்.

    இவ்வாறுஅவர் கூறினார். #TTVDinakaran

    சசிகலா சிறையிலேயே இருக்க வேண்டும் என்பதுதான் தினகரனின் எண்ணம் என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். #MinisterKTRajendraBalaji
    விருதுநகர்:

    விருதுநகர் நகர்ப்பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, நிருபர்களிடம் கூறியதாவது:-

    யார் பக்கம் தொண்டர்கள் உள்ளார்கள். யார் பக்கம் குண்டர்கள் உள்ளார்கள் என்பது வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 23-ந் தேதி தெரியும்.

    சசிகலாவால் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன், தேர்தல் பிரசாரத்தில் சசிகலா பெயரையே பயன்படுத்த வில்லை. சிறையில் உள்ள சசிகலாவை வெளியே கொண்டுவர தினகரன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சுயநலத்தோடு செயல்பட்டுவருகிறார். கட்சியினரை ஏமாற்றி அரசியல் நடத்தி வருகிறார்.



    சசிகலா சிறைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதுதான் தினகரனின் எண்ணம். எந்த கட்சியாக இருந்தாலும், தான் தலைவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் தினகரன்.

    நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க., காங்கிரஸ் தான். உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு வேண்டும் என்று வாதாடியது நளினி சிதம்பரம் தான். அ.தி.மு.க. அரசுக்கும், முதல்வருக்கும் தான் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறுவதற்கு அருகதை இருக்கிறது.

    மத்தியில் ஆட்சியில் நாங்கள் பங்கு பெற உள்ளோம். அப்போது இதற்கு உரிய அழுத்தம் கொடுக்கப்படும்.

    தேர்தல் முடிவு வந்தவுடன் எடப்பாடி பழனிசாமி ராஜாவாக இருப்பார். ஸ்டாலின் கூஜாவாக இருப்பார். தேர்தல் கமி‌ஷனுக்கும் அ.தி.மு.க. ஆட்சிக்கும், மோடி ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அது ஒரு தன்னிச்சையான அமைப்பு.

    தங்க தமிழ்ச்செல்வனுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. மொத்தத்தில் தினகரன் கட்சியினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. கடைசியில் தினகரன் பணநாயகம் வென்றது என்று கூறிவிட்டு செல்வார்.

    இறுதியில் ஒருவர் டெபாசிட் இழப்பார். ஒருவர் டெபாசிட் வாங்குவார். ஆனால் வெற்றி பெறுவது அ.தி.மு.க. கூட்டணி தான். முதல்வர் துணை முதல்வர் பிரசாரத்தில் இருப்பதால் சென்னை சென்றவுடன் 4 தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்கள்.

    40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். 22 சட்டமன்றத் தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். மக்கள் அலை அரசுக்கு எதிராக இல்லை. இந்த அரசு மீது மக்களுக்கு எந்த கோபமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterKTRajendraBalaji
    கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க.வின் வாக்கு வங்கி குறைந்துவிட்டதாக கடலூரில் நடந்த தேர்தல் பொதுகூட்டத்தில் டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran
    கடலூர்:

    கடலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து கடலூர் உழவர் சந்தையில் அம்மா மக்கள் முன்னேற்றகழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்தார்.

    பாரதிய ஜனதாவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என கூறியவர் ஜெயலலிதா. அவருக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றம் சென்றதோடு ஜெயலலிதா உயிரோடு இருந்தால் சிறைக்கு சென்றிருப்பார். என்று கூறியவர்கள் பா.ம.க. வினர். அவர்களுடன் தமிழகத்தை ஆளுவோர் கூட்டணி வைத்துள்ளனர்.

    ஜெயலலிதா இருக்கும் வரை ஜி.எஸ்.டி. வரியை தடுத்து வந்தார்.

    மதச்சார்பற்ற கூட்டணி எனக் கூறும் தி.மு.க. இந்து மதத்தை விமர்சித்து வருகிறது. தற்போது முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் தி.மு.க.வை. கைவிட்ட நிலையில், இந்துக்களுக்கு நாங்கள் விரோதியல்ல, எங்கள் வீட்டு பெண்களும் கோவிலுக்கு செல்வார்கள் என்று கூறி வருகிறார் மு.க.ஸ்டாலின்.

    எந்த மதத்தினரும் யாரையும் தரம் தாழ்த்துவது இல்லை. ஆனால் தாங்கள்தான் இந்து மதத்தை கண்டுபிடித்தவர்கள் போல பாரதிய ஜனதா கட்சியினர் கூறிக்கொள்கின்றனர். இந்துக்களுக்கு பாதுகாவலர்கள் என்று கூறுகின்றனர்.

    தி.மு.க. இந்து எதிர்ப்பு நிலையை எடுத்துள்ளது. அரசியல்வாதிகள் ஜாதி மதத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

    நீட் தேர்வு, குடிநீர், மீனவர் பிரச்சினை, என்.எல்சி. நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை, விவசாயவிளை பொருள்களுக்கு விலை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

    இதுகுறித்து அரசியல்வாதிகள் பேச வேண்டும். தற்போது தமிழகத்தை மட்டுமன்றி இந்தியாவையும் மீட்க வேண்டிய நிலைஉள்ளது. தமிழகத்தில் படித்த இளைஞர்கள் ஒரு கோடிபேர் வேலைக்காகக் காத்திருக்கிறார்கள்.

    மத்தியில் முந்தைய காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் வைப்பு தொகையை தி.மு.க. இழந்தது.

    கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க.வின் வாக்கு வங்கி குறைந்துவிட்டது என்பது உண்மை. அதை மறைப்பதற்காகத்தான் பல கட்சிகளை கூட்டணி வைத்துக்கொண்டு அவர்கள் தான் வெற்றிபெறுவார்கள் என்பது போன்ற மாய தோற்றத்தை உருவாக்கிறார்கள்.

    ஆனால் உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டில் 80 சதவீதம் இளைஞர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தாய்மார்களும், பெரியோர்களும் இன்று புதிய மாற்றம் தேவை என்று நினைக்கிறார்கள். அவர்களும் எங்களை ஆதரிக்கிறார்கள்.

    எனவே பொதுமக்கள் ஜாதி, மதம், குறித்துப் பேசு வோரைப் புறக்கணித்து அ.ம.மு.க.வை ஆதரிக்க வேண்டும். மாநில கட்சிகளால் மட்டுமே மாநில பிரச்சினைகளை தீர்க்க முடியும். தேசியக் கட்சிகளை மக்கள் நம்பக் கூடாது. பணம் கொடுத்து மக்களை வாங்கிவிடலாம் என்று நினைப்பவர்களை புறக்கணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TTVDinakaran
    ஆர்.கே.நகர் போல் சுயேச்சையாக போட்டியிட்டு அ.தி.மு.க.வை புறமுதுகிட்டு ஓட செய்வோம் என தஞ்சையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran
    தஞ்சாவூர்:

    தஞ்சை பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பேராசிரியர் பொன்.முருகேசன், தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் ரெங்கசாமி ஆகியோரை ஆதரித்து அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை அருகே பிரசாரம் செய்தார்.

    தஞ்சை சட்டசபை தொகுதி வேட்பாளராக போட்டியிடும் ரெங்கசாமியை பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. எனக்கு சில சமயத்தில் கோபம் வரும். ஆனால் அவர் கோபப்படமாட்டார். அரசியலில் பொறுமை, சகிப்புதன்மை அவசியம். அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது வைத்திலிங்கத்தால் எவ்வளவோ பாதிக்கப்பட்டார். தொகுதிக்கே வரவிடாமல் செய்தார்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி தொடர வேண்டும் என சசிகலா சொன்னதால் அவருக்கு ஆதரவாக ரெங்கசாமி செயல்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். சோழநாட்டு மக்கள் நியாயத்தின் பக்கம் இருப்பார்கள். துரோகத்திற்கு துணை போகமாட்டார்கள். வைத்திலிங்கத்திற்கு ஒரத்தநாட்டில் முடிவு கட்டியதைப்போல, அவரது பினாமியான அ.தி.மு.க. வேட்பாளர் காந்தி டெபாசிட் கூட வாங்க விடக்கூடாது.

    காங்கிரஸ் கட்சியை விட்டு ஜி.கே.மூப்பனார் பிரிந்து வந்தாலும் பா.ஜ.க.வுடன் அவர் கூட்டணி வைக்கவில்லை. மதசார்பின்மையை கடைபிடித்தார். ஆனால் அவரது மகன் ஜி.கே.வாசன், மதசார்பின்மையை கடைபிடிக்காமல் வழிதவறி சென்று பா.ஜ.க. இடம்பெற்றுள்ள கூட்டணியில் சேர்ந்துள்ளார். ஜி.கே.மூப்பனாருடன் வாசனை ஒப்பிட முடியாது. பெரிய வீட்டு பிள்ளைகள் சில சமயத்தில் இப்படி தான் இருப்பார்கள். தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. நின்றிருக்க வேண்டும். ஆனால் தோல்வி அடைந்து விடும் என்று பயந்து த.மா.கா.வுக்கு சீட் கொடுத்து விட்டார்கள்.

    நாங்கள் இந்துக்களுக்கு எதிரி அல்ல. எங்கள் குடும்பத்து பெண்களும் கோவிலுக்கு செல்கிறார்கள் என மு.க.ஸ்டாலின் சொல்கிறார். அவர் பா.ஜ.க.வின் ‘பி டீம்’ போல் செயல்பட்டு வருகிறார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது பார்வையிட வந்த ஸ்டாலின் புயலை விட வேகமாக சென்று விட்டார். அதனால் மக்கள் அவருக்கு ‘கஜா’ என்று பெயர் வைத்துள்ளதாக என்னிடம் தெரிவித்தனர்.

    மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டது ஸ்டாலின் தான். தஞ்சை மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு உள்ளது. 80 சதவீத இளைஞர்கள் அ.ம.மு.க.வில் உள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்படும். விவசாயம் செழிக்க, நல்ல விளைபொருட்கள் கிடைக்க அரசு உதவி செய்ய வேண்டும். பூமிக்கு அடியில் வைரமே கிடைத்தாலும் மக்களை பாதிக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை கொண்டு வருவோம்.

    ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க.வினர் ரூ.10 ஆயிரம் வரை பட்டுவாடா செய்தனர். ஆனால் மக்கள் நமக்கு தான் வாக்களித்தனர். ஆர்.கே.நகர் தேர்தலின்போது பணம் பட்டுவாடா நடந்ததாக கூறி அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஒரு துண்டு சீட்டை கைப்பற்றியதாக கூறி தேர்தலை நிறுத்தினர். தற்போது துரைமுருகன் வீட்டில் கட்டு, கட்டாக பணம் எடுக்கப்பட்டும் தேர்தல் நிறுத்தப்படவில்லை.

    ஆர்.கே.நகரில் சுயேச்சையாக போட்டியிட்டு தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்தோம். அ.தி.மு.க.வை புறமுதுகிட்டு ஓட, ஓட விரட்டினோம். நம்மை சுயேச்சை என கிண்டல் செய்கிறார்கள். சுயேச்சைகள் இப்படி ஒரே சின்னத்தில் போட்டியிடுவது இந்திய வரலாற்றிலேயே இது தான் முதல் முறை. சுயேச்சையாக ஒரே சின்னத்தில் 39 தொகுதிகளில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமரை தீர்மானிக்க இருக்கிறார்கள். இந்தியாவில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ, லஞ்ச-லாவண்யம் இல்லாத ஆட்சி மலர பரிசுப்பெட்டகத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

    22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் கூட வெற்றிபெறவில்லை என்றால் தற்போது நடக்கும் ஆட்சி ஆட்டம் கண்டு விடும். தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சிக்கின்ற துரோகத்தின் கூட்டணி, மோடியின் கூட்டணியாகும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TTVDinakaran
    மக்களை ஏமாற்றுகின்ற தி.மு.க. கூட்டணியை புறந்தள்ள வேண்டும் என தூத்துக்குடியில் நடந்த பிரசார கூட்டத்தில் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.#TTVDinakaran
    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் புவனேசுவரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று திருச்செந்தூரில் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி ஆட்சியும், எடப்பாடி பழனிசாமியின் கம்பெனி ஆட்சியும் முடிவுக்கு வர வேண்டும். மதங்களைப் பற்றி பேசி, மக்களிடம் குழப்பங்களை ஏற்படுத்துவதில் பா.ஜனதாவுக்கு இணையாக தி.மு.க.வும் வந்து விட்டது. இதனால் சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்காது என்ற நிலை தற்போது தி.மு.க.வுக்கு உள்ளது.

    எனவே, பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளையாவது பெற வேண்டும் என்பதற்காக தி.மு.க. இந்துக்களுக்கு எதிரி இல்லை, எங்களது குடும்பத்தில் அனைவரும் கோவிலுக்கு செல்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, திருப்பதி வெங்கடாசலபதியை தவறாக பேசினார். ஆனால் அவரது தாயார், திருச்செந்தூரில் முருக பெருமானை சென்று வணங்கி வருகிறார். யாரை ஏமாற்றுவதற்காக இந்த நாடகம்?. எந்தவொரு மதத்தினரும், பிற மதத்தினரின் மனம் புண்படும் படியாக பேசுவதை ஏற்க மாட்டார்கள்.

    மாறாக தமிழகத்தின் வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு வழங்குவது பற்றி சிந்திக்காமல் உள்ளனர். தூத்துக்குடியில் 13 பேரை சுட்டு கொன்றபோதும், ஏனோ கடமைக்கு ஒரு நாள் வந்து பார்த்து விட்டு இரவிலே சென்று விட்டனர். கஜா புயலால் பாதிக்கப்பட்டபோதும் இது போன்றே ஏனோ தானோ என்று பார்த்து சென்றனர்.

    சேலம்-சென்னை இடையே எட்டு வழிச்சாலைக்கு ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது. ஆனால் இந்த திட்டத்தை அறிவித்தபோது, தி.மு.க.வும் இந்த திட்டத்தை ஆதரித்தது. ஏனென்றால் இது பா.ஜனதாவின் திட்டம். அப்போது பா.ஜனதாவுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற கனவில் தி.மு.க. இருந்ததால், சட்டமன்றத்தில்கூட எட்டு வழிச்சாலைக்கு ஆதரவான கருத்தை பதிவு செய்தனர்.



    பின்னர் அப்போது நடந்த தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால், தி.மு.க. காங்கிரசுடன் கூட்டணி சேர்வதற்காக ராகுல்காந்தியை பிரதமராக மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். எனவே தி.மு.க.விடம் நிலையான தன்மை இல்லை. அவர்கள் ஒருபோதும் மக்களைப் பற்றி சிந்திப்பது இல்லை. மாறாக தாங்கள் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்றே சிந்திக்கின்றனர். மக்களை ஏமாற்றுகின்ற தி.மு.க. கூட்டணியை மக்கள் புறந்தள்ள வேண்டும். மதவாதத்தின் மூலம் நாட்டை துண்டாட நினைக்கின்ற பா.ஜனதா அரசுக்கும், அதன் அடிமையாக தமிழகத்தில் இருக்கின்ற எடப்பாடி பழனிசாமியின் அரசுக்கும் முடிவு கட்டுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #TTVDinakaran
    பணத்தை அள்ளிக்கொண்டு செல்லும் ஆளும் கட்சியினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை என்று டி.டி.வி.தினகரன் கூறினார். #TTVDinakaran
    திருச்சி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர்களை விமர்சனம் செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது அதிகார துஷ்பிரயோகம். அவர்களுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இப்படி எல்லாம் பேசினால் மக்களிடம் எடுபட்டு விடும் என்ற பயத்தில் வழக்கு போடுகிறார்கள்.

    ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்து பேசி இருக்கிறார்கள். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. அ.தி.மு.க.வினர் தேர்தலில் தோற்கப்போகிறார்கள். நிறைய தொகுதிகளில் ‘டெபாசிட்’ இழக்கப்போகிறார்கள்.

    இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், தேர்தல் ஜனநாயக முறையில் நடக்குமா? தி.மு.க.வினர் வீடுகளில் மட்டும் தான் சோதனை நடத்தப்பட்டு உள்ளது என்றும் கேட்கிறீர்கள். துரைமுருகன் வீட்டில் பணம் வைத்து இருந்தது தவறு தான். அதே நேரத்தில் தேர்தல் ஆணையமும், பறக்கும் படையினரும் எதிர்க்கட்சியினரிடம் மட்டுமே சோதனை நடத்தி இருக்கிறார்கள்.

    ஆளும் கட்சியினர் லோடு, லோடாக பணம் அள்ளிக்கொண்டு செல்கிறார்கள். அவர்களை பிடிக்காமல் விட்டு விடுகிறார்கள் என்பது தான் குற்றச்சாட்டு. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளும் கட்சிக்கு ஒரு அளவு கோல், எதிர்க்கட்சிக்கு என்று ஒரு அளவு கோல் வைப்பது தவறு.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDinakaran
    திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டிடிவி தினகரன் கும்மிடிப்பூண்டியில் 3 நிமிடம் மட்டுமே பிரசாரம் செய்தார். #TTVDinakaran
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி பஜாரில் நேற்று இரவு அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வேனில் நின்று பிரச்சாரம் செய்ய கட்சியினர் ஏற்பாடு செய்து இருந்தனர். பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு கூடியிருந்தனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு அவர் இரவு 9.57-க்கு கும்மிடிப்பூண்டி பஜாருக்கு வேனில் வந்தார். தினகரன் 10 மணியை தாண்டி பிரச்சாரம் செய்வாரா? தேர்தல் விதிமுறையை மீறுவாரா? என்பதை கண்காணிக்க அதிகாரிகளும் போலீசாரும் மறைமுகமாக காத்திருந்தனர்.

    ஆனால் டி.டி.வி.தினகரன், வேட்பாளரின் பெயரைச் சொல்லி அவரை அறிமுகப்படுத்தினார். பின்னர் ‘‘நமக்கு எந்த சின்னம் கொடுக்கப்பட்டாலும் அது வெற்றியின் சின்னம்’’ என்று தனது கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவாறு சரியாக 3 நிமிடத்தில் தனது பேச்சை முடித்தார்.

    பின்னர் சைகை மூலம் அவர் வாக்குகளை பொதுமக்களிடம் சேகரித்தார். தொண்டர் ஒருவர் கொடுத்த பூச்செண்டையும் அவர் வாங்க மறுத்து விட்டார். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் அதனை மீறக்கூடாது என அந்த தொண்டரிடம் எடுத்து கூறினார். #TTVDinakaran
    பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, அமமுக கட்சியின் தேர்தல் அறிக்கையினை துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். #TTVDhinakaran #AMMK
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையினை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ளார்.

    இதில் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

    கல்லூரி மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி (டேப்) வழங்கப்படும்.

    விவசாயம் மற்றும் சுற்றுச் சூழலை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை.

    டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.

    ஜிஎஸ்டி கவுன்சில் நிர்வாகத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.

    அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.

    இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு இலவச விதைகள் வழங்கப்படும்.

    விவசாயத்திற்கு இலவச ஆழ்துளை கிணறு அமைக்கப்படும்.

    மாணவர்கள் நல வாரியம் அமைக்கப்படும், கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்.



    நீட் தேர்வை ரத்து செய்து, பழைய முறை கொண்டு வரப்படும்.

    ஏழை பெண்கள் திருமணத்திற்கு இலவச அத்தியாவசிய  வீட்டு உபயோகப்பொருட்கள் வழங்கப்படும்.

    இளைஞர்கள் சுய உதவி குழு அமைக்கப்படும்.

    வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களுக்கு தனி நல வாரியம்.

    பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சுங்க சாவடிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படும்.

    தனியார் நிறுவன ஊழியர்களின் திருமண செலவுகளுக்கு ரூ. 2 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

    ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும்.

    கோவை, திருச்சி, மதுரைக்கு மெட்ரோ ரெயில் சேவை விரிவாக்கம் செய்யப்படும்.

    இவ்வாறு தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TTVDhinakaran #AMMK
    அமமுக-வின் தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளராக இருந்த விபி கலைராஜன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். #AMMK #dinakaran
    சென்னை:

    அமமுக-வின் தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளராக இருந்தவர் விபி கலைராஜன். இவர் அமமுக-வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து அமமுக-வின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘இவர் கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். 

    கழக உடன்பிறப்புகள் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது’’ என்று தெரிவித்துள்ளார். #AMMK #dinakaran
    20 ரூபாய் நோட்டுகளை வீசி டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் 300 பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #ttvdinakaran #rknagar

    ராயபுரம்:

    ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி. தினகரன் மக்களிடம் வாக்குகளை வாங்குவதற்காக இருபது ரூபாய் நோட்டை டோக்கனாக கொடுத்து ஒரு வாக்குக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்குவதாக உறுதி அளித்ததாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும் தங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்ற வில்லை என்றும் சாலை வசதி, கழிவு நீர், குடிநீர் வசதி என எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தராமல் தினம் தினம் அவதிப்பட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    வெற்றி பெற்ற பின்பு இதுவரை தொகுதி பக்கம் வந்து பார்க்காமல் மக்களை ஏமாற்றியது போல வரும் பாராளு மன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளில் இதே போன்று மக்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக ஆர்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று திரண்டு தண்டையார்பேட்டையில் உள்ள தினகரனின் ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர்.

    ஆனால் அலுவலகம் பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்ததால் ஆத்திரமடைந்த மக்கள் 20 ரூபாய் நோட்டை கையில் வைத்துக் கொண்டு கோ‌ஷங்களை எழுப்பினர். இதனையடுத்து தங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் டோக்கன் வேண்டாம் என்று இருபது ரூபாய் நோட்டை அலுவலகத்திற்குள் தூக்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    பாராளுமன்றத் தேர்தலில் தினகரனின் சுயரூபத்தை தொகுதி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பவர்களுக்கு தாங்கள் வாக்களிக்கப் போவதாக கூறினர்.

    தண்டையார்பேட்டையில் திடீரென்று பெண்கள் ஒன்று கூடி ஆர்.கே.நகர் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #ttvdinakaran #rknagar

    ×