search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்களை ஏமாற்றும் தி.மு.க. கூட்டணியை புறந்தள்ள வேண்டும் - டிடிவி தினகரன்
    X

    மக்களை ஏமாற்றும் தி.மு.க. கூட்டணியை புறந்தள்ள வேண்டும் - டிடிவி தினகரன்

    மக்களை ஏமாற்றுகின்ற தி.மு.க. கூட்டணியை புறந்தள்ள வேண்டும் என தூத்துக்குடியில் நடந்த பிரசார கூட்டத்தில் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.#TTVDinakaran
    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் புவனேசுவரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று திருச்செந்தூரில் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி ஆட்சியும், எடப்பாடி பழனிசாமியின் கம்பெனி ஆட்சியும் முடிவுக்கு வர வேண்டும். மதங்களைப் பற்றி பேசி, மக்களிடம் குழப்பங்களை ஏற்படுத்துவதில் பா.ஜனதாவுக்கு இணையாக தி.மு.க.வும் வந்து விட்டது. இதனால் சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்காது என்ற நிலை தற்போது தி.மு.க.வுக்கு உள்ளது.

    எனவே, பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளையாவது பெற வேண்டும் என்பதற்காக தி.மு.க. இந்துக்களுக்கு எதிரி இல்லை, எங்களது குடும்பத்தில் அனைவரும் கோவிலுக்கு செல்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, திருப்பதி வெங்கடாசலபதியை தவறாக பேசினார். ஆனால் அவரது தாயார், திருச்செந்தூரில் முருக பெருமானை சென்று வணங்கி வருகிறார். யாரை ஏமாற்றுவதற்காக இந்த நாடகம்?. எந்தவொரு மதத்தினரும், பிற மதத்தினரின் மனம் புண்படும் படியாக பேசுவதை ஏற்க மாட்டார்கள்.

    மாறாக தமிழகத்தின் வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு வழங்குவது பற்றி சிந்திக்காமல் உள்ளனர். தூத்துக்குடியில் 13 பேரை சுட்டு கொன்றபோதும், ஏனோ கடமைக்கு ஒரு நாள் வந்து பார்த்து விட்டு இரவிலே சென்று விட்டனர். கஜா புயலால் பாதிக்கப்பட்டபோதும் இது போன்றே ஏனோ தானோ என்று பார்த்து சென்றனர்.

    சேலம்-சென்னை இடையே எட்டு வழிச்சாலைக்கு ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது. ஆனால் இந்த திட்டத்தை அறிவித்தபோது, தி.மு.க.வும் இந்த திட்டத்தை ஆதரித்தது. ஏனென்றால் இது பா.ஜனதாவின் திட்டம். அப்போது பா.ஜனதாவுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற கனவில் தி.மு.க. இருந்ததால், சட்டமன்றத்தில்கூட எட்டு வழிச்சாலைக்கு ஆதரவான கருத்தை பதிவு செய்தனர்.



    பின்னர் அப்போது நடந்த தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால், தி.மு.க. காங்கிரசுடன் கூட்டணி சேர்வதற்காக ராகுல்காந்தியை பிரதமராக மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். எனவே தி.மு.க.விடம் நிலையான தன்மை இல்லை. அவர்கள் ஒருபோதும் மக்களைப் பற்றி சிந்திப்பது இல்லை. மாறாக தாங்கள் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்றே சிந்திக்கின்றனர். மக்களை ஏமாற்றுகின்ற தி.மு.க. கூட்டணியை மக்கள் புறந்தள்ள வேண்டும். மதவாதத்தின் மூலம் நாட்டை துண்டாட நினைக்கின்ற பா.ஜனதா அரசுக்கும், அதன் அடிமையாக தமிழகத்தில் இருக்கின்ற எடப்பாடி பழனிசாமியின் அரசுக்கும் முடிவு கட்டுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #TTVDinakaran
    Next Story
    ×