search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.டி.வி.தினகரன், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தபோது எடுத்த படம்
    X
    டி.டி.வி.தினகரன், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தபோது எடுத்த படம்

    ஆர்.கே.நகர் போல் அ.தி.மு.க.வை புறமுதுகிட்டு ஓட செய்வோம் - டி.டி.வி. தினகரன் பிரசாரம்

    ஆர்.கே.நகர் போல் சுயேச்சையாக போட்டியிட்டு அ.தி.மு.க.வை புறமுதுகிட்டு ஓட செய்வோம் என தஞ்சையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran
    தஞ்சாவூர்:

    தஞ்சை பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் பேராசிரியர் பொன்.முருகேசன், தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் ரெங்கசாமி ஆகியோரை ஆதரித்து அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை அருகே பிரசாரம் செய்தார்.

    தஞ்சை சட்டசபை தொகுதி வேட்பாளராக போட்டியிடும் ரெங்கசாமியை பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. எனக்கு சில சமயத்தில் கோபம் வரும். ஆனால் அவர் கோபப்படமாட்டார். அரசியலில் பொறுமை, சகிப்புதன்மை அவசியம். அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது வைத்திலிங்கத்தால் எவ்வளவோ பாதிக்கப்பட்டார். தொகுதிக்கே வரவிடாமல் செய்தார்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி தொடர வேண்டும் என சசிகலா சொன்னதால் அவருக்கு ஆதரவாக ரெங்கசாமி செயல்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். சோழநாட்டு மக்கள் நியாயத்தின் பக்கம் இருப்பார்கள். துரோகத்திற்கு துணை போகமாட்டார்கள். வைத்திலிங்கத்திற்கு ஒரத்தநாட்டில் முடிவு கட்டியதைப்போல, அவரது பினாமியான அ.தி.மு.க. வேட்பாளர் காந்தி டெபாசிட் கூட வாங்க விடக்கூடாது.

    காங்கிரஸ் கட்சியை விட்டு ஜி.கே.மூப்பனார் பிரிந்து வந்தாலும் பா.ஜ.க.வுடன் அவர் கூட்டணி வைக்கவில்லை. மதசார்பின்மையை கடைபிடித்தார். ஆனால் அவரது மகன் ஜி.கே.வாசன், மதசார்பின்மையை கடைபிடிக்காமல் வழிதவறி சென்று பா.ஜ.க. இடம்பெற்றுள்ள கூட்டணியில் சேர்ந்துள்ளார். ஜி.கே.மூப்பனாருடன் வாசனை ஒப்பிட முடியாது. பெரிய வீட்டு பிள்ளைகள் சில சமயத்தில் இப்படி தான் இருப்பார்கள். தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. நின்றிருக்க வேண்டும். ஆனால் தோல்வி அடைந்து விடும் என்று பயந்து த.மா.கா.வுக்கு சீட் கொடுத்து விட்டார்கள்.

    நாங்கள் இந்துக்களுக்கு எதிரி அல்ல. எங்கள் குடும்பத்து பெண்களும் கோவிலுக்கு செல்கிறார்கள் என மு.க.ஸ்டாலின் சொல்கிறார். அவர் பா.ஜ.க.வின் ‘பி டீம்’ போல் செயல்பட்டு வருகிறார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது பார்வையிட வந்த ஸ்டாலின் புயலை விட வேகமாக சென்று விட்டார். அதனால் மக்கள் அவருக்கு ‘கஜா’ என்று பெயர் வைத்துள்ளதாக என்னிடம் தெரிவித்தனர்.

    மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டது ஸ்டாலின் தான். தஞ்சை மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு உள்ளது. 80 சதவீத இளைஞர்கள் அ.ம.மு.க.வில் உள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்படும். விவசாயம் செழிக்க, நல்ல விளைபொருட்கள் கிடைக்க அரசு உதவி செய்ய வேண்டும். பூமிக்கு அடியில் வைரமே கிடைத்தாலும் மக்களை பாதிக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை கொண்டு வருவோம்.

    ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க.வினர் ரூ.10 ஆயிரம் வரை பட்டுவாடா செய்தனர். ஆனால் மக்கள் நமக்கு தான் வாக்களித்தனர். ஆர்.கே.நகர் தேர்தலின்போது பணம் பட்டுவாடா நடந்ததாக கூறி அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஒரு துண்டு சீட்டை கைப்பற்றியதாக கூறி தேர்தலை நிறுத்தினர். தற்போது துரைமுருகன் வீட்டில் கட்டு, கட்டாக பணம் எடுக்கப்பட்டும் தேர்தல் நிறுத்தப்படவில்லை.

    ஆர்.கே.நகரில் சுயேச்சையாக போட்டியிட்டு தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்தோம். அ.தி.மு.க.வை புறமுதுகிட்டு ஓட, ஓட விரட்டினோம். நம்மை சுயேச்சை என கிண்டல் செய்கிறார்கள். சுயேச்சைகள் இப்படி ஒரே சின்னத்தில் போட்டியிடுவது இந்திய வரலாற்றிலேயே இது தான் முதல் முறை. சுயேச்சையாக ஒரே சின்னத்தில் 39 தொகுதிகளில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமரை தீர்மானிக்க இருக்கிறார்கள். இந்தியாவில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ, லஞ்ச-லாவண்யம் இல்லாத ஆட்சி மலர பரிசுப்பெட்டகத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

    22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் கூட வெற்றிபெறவில்லை என்றால் தற்போது நடக்கும் ஆட்சி ஆட்டம் கண்டு விடும். தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சிக்கின்ற துரோகத்தின் கூட்டணி, மோடியின் கூட்டணியாகும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TTVDinakaran
    Next Story
    ×