search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN CM"

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற 3 தமிழக வீராங்கனைகளுக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #AsianGames2018

    சென்னை:

    ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் ஸ்குவாஷ் குழு பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த தீபிகா பல்லிக்கல், ஜோஸ்னா சின்னப்பா, சுனாய்னா ஆகிய 3 வீராங்கனைகளும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

    இவர்களுக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பதக்கம் வென்றதற்காக அவர்களுக்கு வாழ்த்து கடிதமும் அனுப்பி உள்ளார். #AsianGames2018

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற 3 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #AsianGames2018 #EdappadiPalaniswami
    சென்னை:

    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் பாய்மரப் படகு குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் தக்கர் மற்றும் கணபதி ஆகிய 2 வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.



    இதே போல டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த சரத் கமலுக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    3 வீரர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.  #AsianGames2018  #EdappadiPalaniswami

    முக்கொம்பு அணைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கிண்டலடிக்கும் வகையில் கூறினார். #MukkombuDam #AnbumaniRamadoss #EdappadiPalaniswami
    ஆற்காடு:

    வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவையில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், விடுதிகளில் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவற்றை தடுக்க கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும். நான் மரண தண்டனைக்கு எதிரானவன். பா.ம.க.வும் மரண தண்டனையை ஒருபோதும் ஆதரிக்காது.

    அதே நேரத்தில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்க மரண தண்டனை வழங்கலாம் என்பது என் கருத்து. மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை கைது செய்தது கண்டிக்கத்தக்கது.



    மனித உடலுக்கு திடீர் காய்ச்சல் வந்தது போல் முக்கொம்பு அணை மதகுகள் திடீரென உடைந்துவிட்டதாக கூறி மருத்துவம் பார்த்த எடப்பாடி பழனிசாமிக்கு ‘டாக்டர் பட்டம்’ தான் வழங்க வேண்டும். முக்கொம்பு அணை மதகு உடைப்புக்கு மணல் கொள்ளை முக்கிய காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார். #MukkombuDam #AnbumaniRamadoss #EdappadiPalaniswami

    முக்கொம்பு மேலணை உடைந்த விதம் குறித்து தமிழக முதல்வரிடம் திருச்சி மண்டல பொதுப்பணித்துறை சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. #MukkombuDam
    திருச்சி:

    பொதுப்பணித்துறையினர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் வருமாறு:-

    வரலாறு காணாத வகையில் வெள்ளம் வந்த சூழலிலும், 1924-ம் ஆண்டு, 1977, 2005, 2013-ம் ஆண்டுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலங்களிலும் கொள்ளிடத்தில் 1.75 கனஅடியும், காவிரியில் 67ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    மேலும் கர்நாடக அணைகளில் இப்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உபரி நீர் திறந்து விடப்பட்ட சூழலில் கொள்ளிடத்தில் 2.70 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலைகளிலும் மேட்டூர் அணையில் இருந்து 177 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள முக்கொம்பு மேலணை ஸ்திரத்தன்மையுடனேயே இருந்து வந்துள்ளது.

    6 அடி உயரம், 40 அடி அகலம் கொண்ட தூண்களுடன் 45 மதகுகுள் கொண்ட இந்த அணை வழியாகவே கொள்ளிடத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.



    காவிரியில் அதிகமாக வெள்ளம் வந்தாலும் முக்கொம்பு வந்தவுடன் மேலணை, கீழணை என இரு பகுதியாக இருப்பதால், இயல்பாகவே காவிரியில் தான் அதிக அளவு தண்ணீர் செல்லும். ஏனெனில் கொள்ளிடத்தை விட 2 அடிக்கு மேல் கீழே உள்ளது காவிரி. எனவே முதலில் காவிரியில் தண்ணீர் பெருக்கெடுக்கும்.

    மேலணையில் மேல் பகுதியில் 1846-ல்தான் பாதை அமைத்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. அதிகளவு தண்ணீர் வந்த சூழலிலும் உடையாத மதகுகள் 22-ந்தேதி இரவு கொள்ளிடத்தில் 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த நிலையிலும், அதன் தொடர்ச்சியாக 33 ஆயிரம் என அதிகரித்த நிலையிலும் உடைந்துள்ளது. 630 மீட்டர் நீளமுள்ள ரெகுலேட்டரில் 110 மீட்டர் தொலைவுக்கு உடைந்து விழுந்துள்ளது. மதகில் ஏற்பட்ட பழுது காரணமாக உடைந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

    இருப்பினும் பாதிப்புக்கான காரணம் குறித்து தொழில் நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வின் இறுதியிலேயே பாலம் விழுந்தமைக்கான காரணங்கள் தெரியவரும். உடைந்த மதகுகளை புனரமைக்கும் வகையில் தற்காலிக தடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    கடந்த 2015-ம் ஆண்டு கொள்ளிடம் அணையை உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.10 கோடியில் புனரமைப்பு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது மதகின் கீழ் பகுதியில் இருந்த ஓட்டைகள் மற்றும் மணல் அடைப்புகள் போன்றவை பழுதுபார்த்து சீரமைக்கப்பட்டது. இந்த பணியின் ஒரு பகுதியாக 45 மதகுகளிலும் தலா 1.5 குதிரை சக்தி திறன் கொண்ட மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டன. இந்த மோட்டார்கள் பொருத்தப்பட்ட பின்னர் மனித ஆற்றல் மூலம் மதகுகள் ஏற்றி இறக்கப்படவில்லை. மாறாக மின்சார மோட்டார் மூலமாக மட்டுமே தானியங்கி முறையில் இயக்கப்பட்டன.

    மின்சார மோட்டாரை ‘ஆன்’ செய்யும் போது ஒருவித அதிர்வு ஏற்படும். அந்த அதிர்வின் காரணமாக கூட மதகின் அடிப்பகுதி நாளடைவில் பலவீனமாகி சேதம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. #MukkombuDam
    சென்னை கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் அஸ்திக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர். #AtalBihariVajpayee #EdappadiPalaniswami #OPS
    சென்னை:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி டெல்லியில் காலமானார். அவரது அஸ்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டது.  மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மூத்த தலைவர்கள் அஸ்தியை 7 கலசங்களில் எடுத்து வந்தனர்.

    சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜனதா அலுவலகமான கமலாலயத்தில் 7 அஸ்தி கலசங்களுக்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அங்கு கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    இன்று மதியம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கமலாலயம் வந்து, வாஜ்பாய் அஸ்திக்கு மரியாதை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு  வரும் 26-ம் தேதி வாஜ்பாய் அஸ்தி கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சென்னை கடற்கரை, ராமேஸ்வரம் கடல், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், காவிரி, பவானி, வைகை என 6 இடங்களில் ஒரே சமயத்தில் கரைக்கப்பட உள்ளது. #AtalBihariVajpayee #EdappadiPalaniswami #OPS
    சென்னை காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். #MGRCentenaryArch
    சென்னை:

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாளை ஒட்டி தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பில் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க முடிவு செய்யப்பட்டது.



    அதன்படி காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். விழாவில் சபாநாயகர் தனபால், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.  சிற்ப வேலைப்பாடுகளுடன் சுமார் 66 அடி அகலம் 52 அடி உயரத்தில் எம்ஜிஆர் வளைவு அமைக்கப்பட உள்ளது.

    சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமையும் இரண்டாவது வளைவு இதுவாகும். இதற்கு முன், 2013-ம் ஆண்டு சட்டப்பேரவை வைரவிழா வளைவு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது.  #MGRCentenaryArch
    மேகதாதுவில் புதிய அணை கட்ட தமிழக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து பேச முடிவு செய்துள்ளேன் என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். #MegathathuDam #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக மந்திரிசபை கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. அதனால் இப்போது கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 71 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நாளை(அதாவது இன்று) முதல் இன்னும் அதிகளவில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு வரை திறக்க வேண்டிய நீரை இப்போது திறந்துவிடுகிறோம்.

    ஒரு நாளைக்கு சராசரியாக 10 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் தமிழகத்திற்கு செல்கிறது. இந்த நீர் வீணாக கடலில் கலக்கிறது. இது யாருக்கும் பயன் இல்லை. அதனால் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

    நீர்ப்பாசனத்துறை மந்திரி, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் அனுமதியை கேட்டுள்ளோம். மந்திரி டி.கே.சிவக்குமார் சமீபத்தில் டெல்லியில் மத்திய மந்திரி நிதின்கட்காரியை நேரில் சந்தித்து இதுகுறித்து பேசினார். அப்போது இதுபற்றி ஒரு ஆலோசனை கூட்டத்தை கூட்டுமாறு அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



    மேகதாதுவில் அணை கட்டுவதால் கர்நாடகத்தை விட தமிழகத்திற்கு தான் அதிக பயன் கிடைக்கும். அதனால் கர்நாடகம் தனது சொந்த செலவில் அணை கட்ட தயாராக உள்ளது. நமது விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்றால் மேகதாதுவில் அணை கட்டியே ஆக வேண்டும். வேறு வழி இல்லை.

    தமிழக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து இதுபற்றி பேசுவேன். அங்குள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து இதுபற்றி எடுத்துக்கூற நான் தயாராக உள்ளேன். இது தொடர்பாக அவர்களுக்கு கடிதம் எழுதுவேன்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.  #MegathathuDam  #Kumaraswamy
    வயதுமூப்பு காரணமாக இன்று மாலை உயிரிழந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். #RIPKalaignar
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து சிகிச்சை பலனின்றி கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். இந்த செய்தி அவரது கட்சியினர் மற்றும் தொண்டர்களிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, நடிகர் ரஜினி உட்பட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

    அதன்படி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இழப்பு தமிழகத்துக்கு பேரிழப்பாகும் என குறிப்பிட்டுள்ளார். #RIPKalaignar
    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அவரது இல்லத்தில், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #KauveryHospital #Karunanidhi #TNCM #ChiefSecretary
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் காவிரி மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

    இதையடுத்து சற்றுமுன்பாக திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்தார். இந்த செய்தியும் தொண்டர்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், தலைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மற்றும் டிஜிபி ராஜேந்திரன் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதையடுத்து. மாலை 5 மணியளவில் காவிரி மருத்துவமனையின் அறிக்கை வெளியாகும் என கூறப்படுவதால், அப்பகுதியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. #KauveryHospital #Karunanidhi #TNCM #ChiefSecretary
    டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று தண்ணீரை திறந்துவிட்டார். #Metturdam #Cauvery #EdappadiPalaniswami
    மேட்டூர்:

    தமிழகத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை தவறியதாலும், மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லாததாலும் குறித்த காலத்தில் தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை ஏற்பட்டது.

    கால தாமதமாக அணை திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பயிர்களும் கருகியது. இந்த ஆண்டும் கடந்த மாதம் 12-ந் தேதி குறித்த காலத்தில் தண்ணீர் திறக்க முடியவில்லை.

    இந்த சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வழிகின்றன.

    இதையடுத்து பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு, ஒகேனக்கல்லை கடந்து நேராக மேட்டூர் அணை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்து வருகிறது.

    நேற்று அணைக்கு 1 லட்சத்து 4 ஆயிரத்து 436 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை 1 லட்சத்து ஆயிரத்து 227 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 109 அடியாக உயர்ந்து உள்ளது. அணை நிரம்ப இன்னும் 11 அடி தான் தேவைப்படுகிறது.

    பொதுவாக நீர்மட்டம் 90 அடியாக இருக்கும்போது நீர்வரத்தும் சீராக இருந்தால் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். ஆனால் தற்போது 109 அடி தண்ணீர் இருப்பதால் அணையில் இருந்து 19-ந் தேதி (இன்று) பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    அதன்படி இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.



    இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார்.

    இந்த தண்ணீர் அணையின் மதகு வழியாக சீறிப் பாய்ந்து வெளியேறியது. முதலில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 20 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.

    முதலில் அணையின் வலதுகரை பகுதியில் மேல்மட்ட மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் நீர்மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன்மூலம் மின் உற்பத்தியும் தொடங்கி உள்ளது.

    மேட்டூர் அணை கட்டி 84 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக முதல்-அமைச்சர் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, அன்பழகன், கருப்பண்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சரோஜா, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகரன், சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதாலும் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி டெல்டா மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளுக்கு சென்று வந்த அனைத்து வழிகளின் கதவுகளும் பூட்டப்பட்டன. பொதுப்பணித்துறை மற்றும் போலீசார் உத்தரவின்றி கதவுகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



    மேட்டூர் அணையில் தண்ணீர் கடல்போல் காட்சி அளிப்பதால் அதை பார்க்க ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் திரண்டு வருகின்றனர். அவர்கள் மேட்டூர் அணை பகுதிக்கு செல்லாமல் இருக்க போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளில் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #Metturdam #Cauvery #EdappadiPalaniswami
    திருச்செந்தூரில் ரூ.30 கோடி செலவில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #ChendurShelterHome #EdappadiPalaniswamy #TNAssembly
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தர்கள் வசதிக்காக ‘பக்தர்கள் தங்கும் விடுதி’ 30 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோயில் நிதியிலிருந்து கட்டப்படும்.



    இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிதி வசதி இல்லாத 1,000 கிராமப்புற திருக்கோயில்களில், நடப்பாண்டில் திருப்பணி மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள, கோயில் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம், 10 கோடி ரூபாய் திருக்கோவில் நிதியிலிருந்து வழங்கப்படும்.

    இந்து சமய அறநிலையத்துறை ஆளுகையின் கீழ் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 1,000 கோவில்களில் நடப்பாண்டில் திருப்பணிகள் மேற்கொள்ள, கோயில் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம், 10 கோடி ரூபாய் திருக்கோவில் நிதியிலிருந்து வழங்கப்படும்.

    வேலூர் மாவட்டத்தில், 400 மீட்டர் தடகள ஓடு பாதை, பார்வையாளர் மாடம், நிர்வாக அலுவலகம், வளைகோல் பந்து, கூடைப் பந்து, கபடி, கோகோ, இறகுப் பந்து, டென்னிஸ் ஆகியவற்றிற்கான ஆடுகளங்கள், நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் இதர விளையாட்டு வசதிகளைக் கொண்ட மாவட்ட விளையாட்டு வளாகம் 17 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

    பல்வேறு விளையாட்டு வீரர்களின் திறன்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு தகுந்த முறையில் பயிற்சிகள் அளித்து சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், “பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம்” செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 5 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் உட்பட, 50 விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கும், வெளி நாடுகளில் சென்று சிறப்பு பயிற்சி மேற்கொள்வதற்கும் மற்றும் போட்டிகளில் கலந்துகொள்வதற்கும், மானியமாக தேவையின் அடிப்படையில் தலா 10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இதற்கென ஆண்டொன்றுக்கு 5 கோடி ரூபாய் செலவிடப்படும்.

    காஞ்சீபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், நீர்ப்பெயர் கிராமத்தில் தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி வளாகம் அமைக்க 2.02 ஹெக்டர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அணிவகுப்பு பயிற்சி மைதானம், தடை தாண்டுதல் பயிற்சி நிலையம், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் தூரம் சுடக்கூடிய துப்பாக்கி சுடும் தளம் ஆகியவற்றை கொண்ட தேசிய மாணவர் படை பயிற்சி வளாகம், 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

    இந்த பயிற்சி வளாகத்தில் ஒரே சமயத்தில் 600 மாணவர்கள் வீதம், ஆண்டு ஒன்றுக்கு சுமார் 18,000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

    இறகுப் பந்தாட்ட போட்டிகளில் சர்வதேச அளவில் பதக்கங்கள் வெல்லக் கூடிய திறமை மிக்க விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒரு “இறகுப்பந்து அகாடமி” தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ChendurShelterHome #EdappadiPalaniswamy #TNAssembly

    பொது இடங்களில் முதியோருக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கெதிரான கொடுஞ்செயல்கள், வன்முறைகளை தடுத்திட பாடுபட வேண்டும் என்று முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #worldelderabuseawarenessday
    சென்னை:

    முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முதுமை என்பது தவிர்க்க இயலாதது. காலத்தின் நெடிய பாதையில் நாம் அனைவரும் ஒவ்வொரு நொடியும் முதுமையின் திசையை நோக்கியே நகர்ந்து கொண்டு இருக்கின்றோம். முதுமையை மதித்தலே ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளம். நம்மை சுமந்தவர்களை நாம் சுமப்பது என்பது நமது கடமையாகும்.

    முதுமை என்பது இன்னொரு குழந்தை பருவம். முதியோர் நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான அன்பையும் பாசத்தையும் மட்டுமே. வாழ்க்கையின் மேடுபள்ளங்களை கடந்து களைத்த பாதங்களை தழுவுதல் இளையவர்களின் தலையாய கடமையாகும்.

    முதியோர் நலன் மீது மிகுந்த அக்கறையும், பாசமும் கொண்ட அம்மாவின் அரசு அவர்களுக்கென பல்வேறு சிறப்பு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    தமிழ்நாட்டில் சுமார் 15.50 லட்சம் ஆதரவற்ற முதியோருக்கு மாதந்தோறும் முதியோர் ஓய்வூதியமாக ரூபாய் 1000 வழங்கப்படுகிறது.

    மூத்த குடிமக்களுக்கான இலவச அரசுப் பேருந்து பயணச் சலுகை திட்டம் மூலம் சென்னையில் 3.12 லட்சம் மூத்த குடிமக்கள் பயனடைந்துள்ளனர்.

    அரசு முதியோர் இல்லங்களில் உள்ள முதியோருக்கு வழங்கப்படும் உணவு மானியம், 300 ரூபாயிலிருந்து 1200 ரூபாயாக உயர்த்தப்பட்டு, 2016-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவிலேயே முதன் முறையாக அரசு உதவிபெறும் முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியோருக்கு, நிமோனியா நோய்க்கு எதிரான தடுப்பூசி மருந்து அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு 1.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.



    ஐக்கிய நாடுகளின் சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன்15-ந்தேதியை முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக அனுசரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசும் இவ்வாண்டு முதல், ஜுன் 15-ந்தேதியை முதியோருக்கெதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக அனுசரிக்க உள்ளது.

    இதற்காக துண்டு பிரசுரங்கள் அச்சடித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி அரசு அலுவலகங்களில் உறுதிமொழி எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதில் “முதியோரை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோருக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கெதிரான கொடுஞ்செயல்கள், வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதனை தடுத்திட பாடுபடுவேன்’’ என உறுதிமொழி எடுக்குமாறு உங்கள் அனைவரையும் உளமாற கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #worldelderabuseawarenessday #EdappadiPalanisamy

    ×