search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asian Games 2018"

    ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வென்று தாய் நாட்டுக்கு பெருமை சேர்ப்பதாக ஆசிய விளையாட்டில் வெள்ளி பதக்கம் வென்று ஊர் திரும்பிய இந்திய வீரர் அவினாசி தருண் கூறியுள்ளார்.
    திருப்பூர்:

    ஆசிய விளையாட்டுப் போட்டியில், 400 மீ., தடை தாண்டும் ஓட்டம் மற்றும் தொடர் ஓட்டத்தில் இந்திய வீரர் தருண் அய்யாசாமி வெள்ளி பதக்கம் வென்றார்.

    திருப்பூர் மாவட்டம், அவிநாசி, ராவுத்தம்பாளையத்தை சேர்ந்த அவர் நேற்று காலை தனது ஊருக்கு வந்தார். அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ஊர் மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தருணுக்கு, மலர் கிரீடம் சூட்டினர். பள்ளி மாணவர் குழுவினர், பாண்டு வாத்தியம் முழங்க வரவேற்றனர்.

    அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு அவர் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். அங்கு சாமி தரிசனம் செய்தார். அவிநாசியை சேர்ந்த முகமது சுல்தான் என்பவர், தருணுக்கு தங்க மோதிரம் பரிசளித்தார்.

    பின், சொந்த ஊரான ராவுத்தம்பாளையம் கிராமத்துக்கு சென்றார். ஊர் எல்லையில், சின்னாரிபாளையம், வலையபாளையம், ராவுத்தம்பாளையம் கிராம மக்கள், மேள தாளம் முழங்க, வரவேற்பளித்தனர்.

    அவிநாசி தாசில்தார் வாணிலட்சுமி ஜெகதாம்பாள், பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். தருண் அய்யாசாமி கூறும்போது. பதக்கம் வென்றது பெருமையளிக்கிறது. வரும் நாட்களில், போட்டிகளில் சிறப்பாக பங்கேற்பேன். என் திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வென்று தாய் நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன் என்றார்.
    ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெள்ளி பதக்கங்களை பெற்ற அவினாசி வீரருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #AsianGame2018 #Tharun
    திருப்பூர்:

    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் ஜகர்தா மற்றும் பாலம்பேங் நகரங்களில் நடந்தது. இந்த போட்டியில் 400 மீட்டர் ஓட்டம் மற்றும் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் இந்திய வீரர் தருண் (வயது 21) கலந்துகொண்டு 2 வெள்ளி பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தார். இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள ராவுத்தம்பாளையத்தை சேர்ந்தவர். தருணின் தந்தை அய்யாசாமி. தருண் 4-ம் வகுப்பு படிக்கும் போது இறந்து விட்டார். தாயார் பூங்கொடி (46). இவர் கணியாம்பூண்டி அருகே உள்ள மைக்ரோ கிட்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    தருணின் தங்கை சத்தியா (19). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் கணினி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். தருண் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தனது தாயார் வேலை செய்து வரும் பள்ளியிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு திருப்பூர் ராக்கியாபாளையத்தில் உள்ள செஞ்சுரி மெட்ரிக்குலேசன் பள்ளியிலும் படித்தார். தற்போது மங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டு படித்து வருகிறார்.



    பள்ளியில் படிக்கும் போதே தடகள வீரராக உருவாகிய தருண் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு பதங்கங்களை வென்றுள்ளார். மேலும், பிளஸ்-2 படிக்கும் போது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். இந்த நிலையில் தற்போது நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

    வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்த அவினாசி வீரர் தருண் இந்தோனேசியாவில் இருந்து சென்னை வந்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து ரெயில் மூலம் நேற்று அதிகாலை 4.45 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார். சொந்த ஊருக்கு ரெயிலில் வந்து இறங்கிய அவரை, அவரது தாயார் பூங்கொடி, தங்கை சத்தியா மற்றும் குடும்பத்தினர், பயிற்சியாளர் அழகேசன் மற்றும் விளையாட்டு வீரர்கள் கை தட்டியும், பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

    தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் பலர் தருணை தூக்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன் பின்னர் அங்கிருந்து ராவுத்தம்பாளையத்திற்கு காரில் தருண் புறப்பட்டு சென்றார்.

    இதன் பின்னர் காலை 10.30 மணி அளவில் அவினாசி, ராவுத்தம்பாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் நல்லது நண்பர்கள் அறக்கட்டளையினர் சார்பில், அவினாசி பஸ் நிலையத்தில் தருணுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது அங்கு வந்த தருணுக்கு மேள தாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்தும், பள்ளி மாணவ-மாணவிகளின் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு கொடுத்து, மலர் கிரீடம் அணிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தருணுக்கு, வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து பாராட்டினர். மேலும், பலர் மாலையும் அணிவித்தனர்.

    அவினாசி பஸ் நிலையத்திற்கு தருண் வந்ததும், அவரை பின் தொடர்ந்து வந்த பொதுமக்கள் பலரும் தருணுடன் ‘செல்பி’ எடுக்க முயற்சி செய்தனர். இதை அறிந்த தருண் செல்பி எடுப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அவர்களுடன் புன்னகையோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    இதன் பின்னர் அவினாசி பஸ் நிலையத்தில் இருந்து வாகனத்தில் தருண் அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு மேளம், தாளங்களுடன் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். அப்போது வழியெங்கும் பொதுமக்கள் பலர் தருணுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்றதும் அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் தருணுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதன் பின்னர் கோவிலுக்குள்ளே சென்றதும், அவருக்கு பரிவட்டமும் கட்டி மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் தருண் பல வெற்றிகள் பெற வேண்டும் என அவரது பெயரில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கோவிலில் சாமிதரிசனம் செய்துவிட்டு, தருண் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் புறப்பட்டு சென்றார். கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலரும் தருணுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.  #AsianGame2018 #Tharun
    ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கத்தை தவறவிட்ட லட்சுமணன் கோவிந்தனுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கினார் மத்திய அமைச்சர் ரதோர். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்றது. தடகளத்தில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டம் ஒட்டப் பந்தய இறுதிச் சுற்றிற்கு இந்தியா சார்பில் தமிழகத்தின் லட்சுமணன் கோவிந்தன் தகுதிப் பெற்றார். அவருடன் மேலும் 12 பேர் கலந்து தகுதி பெற்றனர்.

    இதில் பஹ்ரைன் வீரர் ஹசன் சானி 28 நிமிடம் 35:54 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு பஹ்ரைன் வீரர் ஆப்ரஹாம் செரோபென் 29 நிமிடம் 00:29 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். தமிழக வீரர் லட்சுமணன் கோவிந்தன் 29 நிமிடம் 44:91 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் வென்றார்.

    ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணனின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரத்தில் அவர் பதக்கம் வென்றது செல்லாது என்று அறிவிக்கப்பட்டதும், அதிர்ச்சிக்குள்ளானார்.



    போட்டியின்போது, ஆடுகளத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட பாதையை விட்டு சற்று விலகி மற்றொரு பாதையில் அவர் கால்பதித்தது கண்டுபிடிக்கப்பட்டதால் சர்வதேச தடகள சம்மேளன விதிகளின்படி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    லட்சுமணனின் தகுதி நீக்கத்தை எதிர்த்து இந்திய தரப்பில் போட்டி அமைப்பு குழுவில் அப்பீல் செய்யப்பட்டது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

    இந்தியா சார்பில் பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை அழைத்து பிரதமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவித்தார். விளையாட்டு அமைச்சகம் சார்பிலும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்படடது.

    இந்நிலையில் சிறப்பாக விளையாடி பதக்கம் வெல்ல முடியாமல் போன லட்சுமணன் கோவிந்திற்கு பரிசு வழங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரதோர் விரும்பினார். அதற்கான முயற்சியை எடுத்த ரதோர் தற்போது 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இந்த செய்தியை மத்திய விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
    ஆசிய விளையாட்டு போட்டி டிரைலர்தான், முழுப்படத்தை டோக்கியோ ஒலிம்பிக்கில் பார்ப்பரீர்கள் என்று இந்திய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனோசியாவில் நடைபெற்றது. இதில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கல பதக்கங்கள் வென்ற அசத்தியது. மொத்தம் 69 பதக்கங்களுடன் 8-வது இடத்தை பிடித்தது. 2014-ம் ஆண்டு நடைபெற்றதில் 11 தங்கம், 10 வெள்ளி, 36 வெண்கலத்துடன் 57 பதங்கங்கள் வென்றிருந்தது. தற்போது 12 பதக்கங்கள் அதிகமாக வென்றுள்ளது.

    துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுக்களில் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார்கள். அவர்களுக்கு ராணுவ தளபதி ராவத் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். அப்போது ‘‘ஆசிய கேம்ஸ் டிரைலர்தான். முழுப்படத்தை டோக்கியோ ஒலிம்பிக்கில் நீங்கள் பார்ப்பீர்கள்’’ என்றார்.
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற 3 தமிழக வீராங்கனைகளுக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #AsianGames2018

    சென்னை:

    ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் ஸ்குவாஷ் குழு பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த தீபிகா பல்லிக்கல், ஜோஸ்னா சின்னப்பா, சுனாய்னா ஆகிய 3 வீராங்கனைகளும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

    இவர்களுக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பதக்கம் வென்றதற்காக அவர்களுக்கு வாழ்த்து கடிதமும் அனுப்பி உள்ளார். #AsianGames2018

    இந்தோனேஷிய ஆசிய விளையாட்டில் இந்தியா மொத்தம் 69 பதக்கங்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. #AsianGames #India
    ஜகர்தா:

    இந்தோனேஷியாவில் இரண்டு வார காலமாக நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டு திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடைசி நாளான இன்று டிரையத்லானில் (நீச்சல், சைக்கிளிங், ஓட்டம் ஆகிய மூன்று போட்டிகள் அடங்கியது) கலப்பு பிரிவு போட்டி மட்டும் நடக்கிறது. இதில் இந்திய தரப்பில் யாரும் இல்லாததால் நமக்குரிய பதக்க வாய்ப்புகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.



    இந்த ஆசிய விளையாட்டில் 572 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 69 பதக்கங்களை இந்தியா குவித்து பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தை பிடித்துள்ளது. இதில் தடகளம் (7 தங்கம் உள்பட 19 பதக்கம்), துப்பாக்கி சுடுதல் (9 பதக்கம்), ஸ்குவாஷ் (5 பதக்கம்) ஆகிய போட்டிகளில் ஓரளவு ஆதிக்கம் செலுத்திய இந்தியா எதிர்பார்க்கப்பட்ட கபடி, ஆக்கியில் ஜொலிக்கவில்லை.



    இருப்பினும் இதுவே இந்தியாவுக்கு புதிய வரலாற்று சாதனையாக அமைந்துள்ளது. சீனாவில் 2010-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டில் இந்தியா 14 தங்கம் உள்பட 65 பதக்கங்கள் வென்றதே ஒரு ஆசிய விளையாட்டில் இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாக இருந்தது. அதை விட இப்போது கூடுதலாக 4 பதக்கங்கள் கிடைத்துள்ளது. அத்துடன் 1951-ம் ஆண்டு நடந்த முதலாவது ஆசிய விளையாட்டில் 15 தங்கம் வென்றதே, ஒரு ஆசிய விளையாட்டில் இந்தியாவின் அதிகபட்ச தங்கவேட்டையாக இருந்தது. அது தற்போது சமன் செய்யப்பட்டு இருக்கிறது.

    வழக்கம் போல் பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்தை (132 தங்கம் உள்பட 289 பதக்கம்) ஆக்கிரமித்துள்ளது. ஆச்சரியம் அளிக்கும் வகையில் போட்டியை நடத்திய இந்தோனேஷியா 31 தங்கம் உள்பட 98 பதக்கங்களை அள்ளியுள்ளது. போட்டியையும் வெற்றிகரமாக நடத்தியிருப்பதால் 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு உரிமம் கோரப்போவதாக இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ உற்சாகமாக அறிவித்து இருக்கிறார்.

    ஆசிய விளையாட்டு போட்டியின் கோலாகலமான நிறைவு விழா ஜகர்தாவில் உள்ள ஜி.பி.கே. ஸ்டேடியத்தில் இன்று அரங்கேறுகிறது. கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நடனம், இசை, பாடல் உள்ளிட்டவையுடன் பிரமிக்கத்தக்க வாணவேடிக்கைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நிறைவு விழா அணிவகுப்பில் பங்கேற்கும் இந்திய அணிக்கு, வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் நிறைவு விழாவை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற 3 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #AsianGames2018 #EdappadiPalaniswami
    சென்னை:

    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் பாய்மரப் படகு குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் தக்கர் மற்றும் கணபதி ஆகிய 2 வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.



    இதே போல டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த சரத் கமலுக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    3 வீரர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.  #AsianGames2018  #EdappadiPalaniswami

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டை மற்றும் சீட்டு விளையாட்டுப் பிரிவுகளில் இந்தியாவுக்கு இன்று 2 தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. #AsianGames2018
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கல், இறுதிச்சுற்றில் ஒலிம்பிக் சாம்பியனான ஹசன்பாய் துஸ்மதோவை (உஸ்பெகிஸ்தான்) எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் அமித் பங்கல் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார்.  இவர் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

    இதன்மூலம் குத்துச்சண்டையில் இந்தியா இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளது. இதற்கு முன்பு 75 கிலோ எடைப்பிரிவில் விகாஷ் கிரிஷன் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.



    இதேபோல் இன்று நடைபெற்ற சீட்டு விளையாட்டிலும் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவு சீட்டு விளையாட்டில் இந்தியாவின் பர்தான் பிரணாப்-சர்க்கார் ஷிப்நாத் ஜோடி இறுதிச்சுற்றில் 384 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது. சீனாவின் யாங் லிக்சின்-சென் காங் ஜோடி 378 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றது. மூன்று மற்றும் 4-வது இடங்களைப் பிடித்த இந்தோனேசியா மற்றும் ஹாங்காங் ஜோடிகளுக்கு வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

    இந்த போட்டியின் முடிவில் இந்தியா 15 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 67 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 8-வது இடத்தில் நீடிக்கிறது.  #AsianGames2018 
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஷ் கிரிஷன், அரையிறுதியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. #AsianGames2018 #BoxerVikasKrishan
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஷ் கிரிஷன் 75 கிலோ எடைப்பிரிவில் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று மாலை நடைபெறும் அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் அமான்குல் அபில்கானுடன் மோதுவதாக இருந்தது. ஆனால், கண்ணில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்ததால் உடற்தகுதி பெறவில்லை.



    காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விகாஷ் கிரிஷனுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. காலிறுதியில் சீன வீரருடன் மோதியபோது காயம் மேலும் தீவிரமடைந்தது. எனினும், கடுமையாக போராடி அந்த போட்டியில் வெற்றி பெற்றார். அதன்பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையின் முடிவில், விகாஸ் கிரிஷன் அரையிறுதியில் பங்கேற்பதற்கு மருத்துவ ரீதியாக உடற்தகுதி பெறவில்லை என அறிவிக்கப்பட்டது. எனவே, அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

    காயத்தையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக செயல்பட்ட விகாஸ் கிரிஷன் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதன்மூலம் ஆசிய போட்டிகளில் அடுத்தடுத்து மூன்று முறை பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #AsianGames2018 #BoxerVikasKrishan

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் ஸ்குவாஷ் அணி, மலேசியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #AsianGames2018 #IndianSquashTeam
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் ஸ்குவாஷ் அணிகளுக்கான பிரிவில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஒரு ஆட்டத்தில், இந்திய அணி, மலேசிய அணியை எதிர்கொண்டது.

    இதில், ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனன்யா, தான்வி ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் அவர்களுக்கு வெள்ளிப் பதக்கம் உறுதியாகி உள்ளது.

    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஹாங்காங்- ஜப்பான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியுடன், இந்திய அணி தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளது. #AsianGames2018 #IndianSquashTeam
    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று இரண்டு தங்கப் பதக்கங்களை கைப்பற்றிய இந்திய அணி பதக்கப்பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. #AsianGames2018
    ஜகர்த்தா :

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவர்களுக்கான 400 மீ தொடர் ஓட்டப் போட்டியில் தமிழக வீரர்கள் அய்யாச்சாமி, தருன் ஆரோக்கிய ராஜ் உள்பட 4 பேரை உள்ளடக்கிய இந்திய அணி இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளிப் பதகத்தை வென்றது.

    முன்னதாக நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஹிமா தாஸ், பூவம்மா உள்ளிட்டோரை உள்ளடக்கிய இந்திய மகளிர் அணி மற்றும் ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜான்சன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.

    மற்றொறு போட்டியான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சீமா புனியா வெண்கலம் வென்றார். ஹாக்கி போட்டியில் ஆண்கள் அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வியை தழுவியது. மலேசியாவிற்கு எதிரான ஆட்டத்தில் 6-7 என்ற கணக்கில் ( பெனால்டி ஷூட்அவுட்) தோல்வியை தழுவியது.

    தொடக்க ஆட்டங்களில் இந்தோனேசியாவை 17-0 என்ற கோல் கணக்கிலும், ஹாங்காங்கை 26-0, ஜப்பான் அணியை 8-0, கொரியாவுக்கு எதிராக 5-3, இலங்கைக்கு எதிராக 20-0 என்ற கோல் கணக்கிலும் வெற்றியை தனதாக்கியிருந்தது இந்தியா.

    இதனால் இந்தியாவின் ஆக்ரோஷமான ஆட்டம், இன்றைய போட்டியில் பலம் வாய்ந்த மலேசியாவை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், விறுவிறுப்பு அடங்கிய இன்றை ஆட்டத்தில் மலேசியா வெற்றி பெற்றது.

    இதனால், 13 தங்கம், 21 வெள்ளி, 22 வென்கலப் பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் இந்தியா 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று நடைபெற்ற ஆடவர் 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் மற்றும் பெண்கள் 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. #AsianGames2018 #JinsonJohnson
    ஜகர்தா :

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில், ஆடவர்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

    இவர், நிர்ணயிக்கப்பட்ட 1,500 மீட்டர் தூரத்தை 3 நிமிடம் 44.72 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இவருக்கு அடுத்தபடியாக ஈரான் வீரர் அமிர் மொராடி(3 நிமிடம் 45.62 வினாடி) 2-வது இடத்தையும், பக்ரைன் வீரர் முகமது(3 நிமிடம் 45.88 வினாடி) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

    இதைத்தொடர்ந்து, ஹிமா தாஸ், பூவம்மா உள்ளிட்டோரை உள்ளடக்கிய இந்திய மகளிர் அணி, 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்து 13-வது தங்கப் பதக்கத்தை வென்றனர்.

    இன்று மட்டும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 2 தங்கப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இதனால், 13 தங்கம், 20 வெள்ளி, 22 வென்கலப் பதக்கங்களுடன் இந்தியா 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 
    ×