search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "olympic"

    • கடந்த சில தினங்களாக டேனிலா லாரியல் வேலைக்கு வரவில்லை.
    • இதனால் வெனிசுலா ஒலிம்பிக் கமிட்டிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    காரகாஸ்:

    வெனிசுலா நாட்டைச் சேர்ந்தவர் டேனிலா லாரியல். தடகள வீராங்கனையான இவர் சைக்கிள் ஓட்டப்பந்தய வீரர். இவர் ஒலிம்பிக் போட்டிகளில் 5 முறை பங்கேற்றுள்ளார். டேனிலா லாரியல் ஓட்டலில் பணிபுரிந்து வந்தார்.

    கடந்த சில தினங்களாக டேனிலா வேலைக்கு வரவில்லை. இதையடுத்து வெனிசுலா ஒலிம்பிக் கமிட்டிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில், லாஸ் வேகாஸ் குடியிருப்புக்கு சென்று அதிகாரிகள் பார்த்துள்ளனர். அங்கு டேனிலா லாரியல் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் டேனிலா உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், ஆகஸ்ட் 11 அன்று உணவு சாப்பிட்டபோது ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறலால் டேனிலா லாரியல் இறந்தது தெரிய வந்தது.

    அவரது மூச்சுக்குழாயில் காணப்பட்ட திட உணவு எச்சங்களால் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தார் என அறிக்கை கூறுகிறது.

    டேனிலா லாரியல் மரண செய்தியை வெனிசுலா ஒலிம்பிக் கமிட்டி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தியது.

    • தடியூன்றி தாண்டுதல் போட்டியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆன்டனி அம்மிரட்டி பங்கேற்றார்.
    • இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், தடியூன்றி தாண்டுதல் போட்டியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆன்டனி அம்மிரட்டி பங்கேற்றார். அப்போது மேலே மாட்டப்பட்டிருந்த குச்சியில் அவரது அந்தரங்க உறுப்பு அடிபட்டு தடுமாறி அவர் கீழே விழுந்தார். இதன் மூலம் இப்போட்டியில் 12 ஆவது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை அவர் இழந்து விட்டார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வரலாகியுள்ளது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருந்தால் கூட அவர் இந்த அளவிற்கு புகழ் பெற்றிருக்க மாட்டார் என்று இந்த வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

    2016 ரியோ ஒலிம்பிக்கில் ஜப்பான் வீரர் ஹிரோகி ஒகிதாவும் இதே போன்று அடிபட்டு கீழே விழுந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல ஆண்டுகளாக ஒலிம்பிக் கமிட்டி வீரர்களுக்கு இலவசமாக காண்டம் வழங்கி வருகிறது.
    • எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒலிம்பி கமிட்டி இதை செய்கிறது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 160 -க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    பல்வேறு நாடுகளிலிருந்து வரும் வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் நடைபெறும் நாட்களில் உடலுறவு கொள்வார்கள். இதனால் வீரர்களின் பாதுகாப்பு கருதி பல ஆண்டுகளாக ஒலிம்பிக் கமிட்டி இலவசமாக காண்டம் வழங்கி வருகிறது.

    இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீரர் வீராங்கனைகள் உடலுறவில் ஈடுபடக்கூடாது என்பதற்காக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அப்போது வீரர்களுக்கு காண்டம் வழங்குவதை ஒலிம்பிக் கமிட்டி நிறுத்தி வைத்தது.

    தற்போது கொரோனா அச்சுறுத்தல் இல்லை என்பதால் வீரர் வீராங்கனைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பாரீஸ் ஒலிம்பிக்கில் வீரர், வீராங்கனைகளுக்கு 2,30,000 காண்டம்களை ஒலிம்பிக் கமிட்டி வழங்கியுள்ளது. அதில் 2 லட்சம் ஆணுறைகளும், 20 ஆயிரம் பெண்ணுறைகளும் 10 ஆயிரம் ஓரல் காண்டம்களும் அடங்கும்.

    வீரர்கள் வீராங்கனைகளுக்கு எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்கள் தங்கள் நாட்டுக்கு சென்று மற்றவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தான் காண்டம் வழங்கப்படுவதாக ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

    • இருவரும் சிறப்பான திறமையையும், குழுப்பணியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
    • இந்தியா நம்பமுடியாத மகிழ்ச்சியில் உள்ளது.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.

    துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார்.

    இதையடுத்து, மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்துக்கு மோதும் வாய்ப்பை பெற்றது. இந்த ஜோடி இன்று நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தென்கொரியாவின் யெஜின்-வோன்ஹோலீ ஜோடியை எதிர் கொண்டது.

    இதில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி சிறப்பாக செயல்பட்டு வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்திய ஜோடி 16-10 என்ற கணக்கில் கொரியா ஜோடியை வீழ்த்தியது. இந்தியாவுக்கு கிடைத்த 2-வது பதக்கம் இதுவாகும். மனுபாக்கர் 2-வது பதக்கத்தை பெற்றார்.

    இந்த நிலையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்புப் பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியாவின் மனு பாக்கர்- சரோப்ஜோத் இணைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    எங்கள் துப்பாக்கி சுடும் வீரர்கள் தொடர்ந்து எங்களை பெருமைப்படுத்துகிறார்கள்!

    மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஒலிம்பிக்ஸில் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக வாழ்த்துகள். இருவரும் சிறப்பான திறமையையும், குழுப்பணியையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியா நம்பமுடியாத மகிழ்ச்சியில் உள்ளது.

    மானுவைப் பொறுத்தவரை, இது அவரது தொடர்ச்சியான இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம் ஆகும். இது அவரது நிலையான சிறப்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.

    • இந்திய ஜோடி 16-10 என்ற கணக்கில் கொரியா ஜோடியை வீழ்த்தியது.
    • ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று இருந்த அர்ஜூன் பபுதா மயிரிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டார்.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.

    துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார்.

    போட்டியின் 2-வது நாளில் அவர் பதக்கம் பெற்றுக்கொடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

    இந்த நிலையில் மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவிலும் வெண்கல பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அவரும், சரப்ஜோத் சிங் ஜோடியும் இணைந்து நேற்று நடந்த தகுதி சுற்றில் 580 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை பிடித்தது.

    இதன் மூலம் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்துக்கு மோதும் வாய்ப்பை பெற்றது. இந்த ஜோடி இன்று நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தென்கொரியாவின் யெஜின்-வோன்ஹோலீ ஜோடியை எதிர் கொண்டது.

    இதில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி சிறப்பாக செயல்பட்டு வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்திய ஜோடி 16-10 என்ற கணக்கில் கொரியா ஜோடியை வீழ்த்தியது. இந்தியாவுக்கு கிடைத்த 2-வது பதக்கம் இதுவாகும். மனுபாக்கர் 2-வது பதக்கத்தை பெற்றார். 

    அந்த வகையில் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையை மனுபாக்கர் பெற்றுள்ளார். மேலும் 124 ஆண்டுகளில் ஒரே ஒலிம்பிக் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்த ரமீதா 7-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார். அவர் 145.3 புள்ளிகளை பெற்றார்.

    இதேபோல ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று இருந்த அர்ஜூன் பபுதா மயிரிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டார். அவர் 208.4 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை பிடித்தார்.

    • பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.
    • வீரர்கள் அணிவகுப்பு அலங்கரிக்கப்பட்ட படகில் நடக்கிறது.

    பிரான்ஸ்:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2021-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கி யோவில் ஒலிம்பிக் போட்டி நடந்தது.

    33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 11-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடக்கிறது.

    இந்தப் போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 32 விளையாட்டுகள் 46 பந்தயங்களில் நடக்கிறது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், குத்துச் சண்டை, குதிரையேற்றம், ஆக்கி, கோல்ப், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மர படகு, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய 16 விளையாட்டுகளில் 70 வீரர்களும், 47 வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.

    ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா கோலாகல மாக நடக்கிறது. இதற்காக பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தொடக்க விழா பாரீசின் புகழ் பெற்ற சென் நதி கரையில் நடத்தப்படுகிறது. வீரர்கள் அணிவகுப்பு அலங்கரிக்கப்பட்ட படகில் நடக்கிறது.

    படகு அணிவகுப்பு சென் நதியில் ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் தொடங்கி 6 கிலோமீட்டர் தூரம் சென்று பான்ட் டி லெனா பாலத்தில் நிறைவடைகிறது. வீரர்கள் தங்களது பாரம்பரிய உடையில் தேசிய கொடியுடன் படகில் அணிவகுத்து நிற்பார்கள்.

    இந்திய அணிக்கு டேபிள் டென்னிஸ் வீரர் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இருவரும் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்கள்.

    இறுதியில் உலக அதிசயமான ஈபிள் கோபுரத்தின் எதிரில் உள்ள டிரோ கேட்ரோ பகுதியில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுகிறது. பின்னர் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஒலிம்பிக் தொடக்க விழா 3 மணி நேரம் நடைபெறுகிறது.

    இதில் 3 லட்சம் ரசிகர்கள் கலந்து கொள்கிறார்கள். ஒலிம்பிக் போட்டியையொட்டி பாரீசில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு தொடங்குகிறது.

    • பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டரின் பேரில் பனியன்கள் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.
    • விளையாட்டு போட்டிகளுக்கு திருப்பூரில் இருந்து பனியன்கள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    திருப்பூர்:

    பின்னலாடை நகரான திருப்பூரில் இருந்து வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு பனியன்கள் உள்ளிட்ட ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டரின் பேரில் பனியன்கள் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    ஐ.பி.எல். கிரிக்கெட் , உலக கால்பந்து போட்டி உள்பட சர்வதேச அளவில் நடைபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு திருப்பூரில் இருந்து பனியன்கள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    தற்போது உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ந்தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் அப்போட்டியில் பங்கேற்கும் பார்வையாளர்கள் அணிவதற்காக திருப்பூரில் உள்ள பேக் பே இந்தியா நிறுவனம் 10 லட்சம் டீ-சர்ட் பனியன்களை தயாரித்து அனுப்பி வைத்துள்ளது.

    இது குறித்து அந்நிறுவனத்தின் உரிமையாளர்களான தீபா ஜெயன் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர் கூறியதாவது:-

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்காக எங்களது நிறுவனம் மூலம் பெற்ற ஆர்டர்களில் இதுவரை 70 சதவீத ஆர்டர்களை முடித்து அனுப்பி வைத்துவிட்டோம். மீதமுள்ள 30 சதவீத ஆர்டர்களை முடிப்பதற்கு 6 சிறு, குறு நிறுவனங்கள் மூலம் பனியன் தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது.

    ஏற்கனவே 2023ம் ஆண்டு பிரான்சில் நடந்த ரக்பி உலக கோப்பைக்கான போட்டிக்கும் பனியன்கள் தயாரித்து அனுப்பி வைத்திருந்தோம். ஐ.ஓ.சி.யின் அதிகாரபூர்வ உரிம திட்டத்தின் மூலம் எங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு தயாரித்து அனுப்புகிறோம். ஜவுளி உற்பத்தியில் பல நிறுவனங்கள் பெண்களால் நடத்தப்படுவதில்லை. பல ஆண்டுகளாக நாங்கள் உருவாக்கிய நம்பகத்தன்மையின் மூலம் நாங்கள் சுமூகமாக இயங்கி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றேன்.
    • கடந்த முறையை விட அதிகமாக உள்ளது. நிச்சயம் இந்த தடவை நெருக்கடி அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி தடகள வீரர் நீரஜ் சோப்ரா. ஈட்டி எறியும் வீரரான அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று புதிய வரலாறு படைத்தார். ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு அவர் இந்த சாதனையை படைத்தார். மேலும் அவர் உலக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார். ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான நீரஜ் சோப்ரா மீது பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. தொடர்ந்து 2-வது முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் தன் மீது அழுத்தம் அதிகம் இருப்பதாக நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த முறை என் மீது அழுத்தம் அதிகம் உள்ளது. ஏனென்றால் ஒலிம்பிக் சாம்பியன் பட்டத்தை நான் தக்கவைக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன். இதற்கு முன்பு இதே மாதிரியான அனுபவத்தை கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டில் எதிர்கொண்டேன்.

    2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றேன். அதனால் நான் ஆசிய விளையாட்டில் மீண்டும் தங்கம் வெல்ல வேண்டும் என்ற அழுத்தம் ஏற்பட்டு இருந்தது.

    ஆனாலும் அதோடு ஒலிம்பிக்கை ஒப்பிட முடியாது. என் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனை மறுக்க இயலாது. கடந்த முறையை விட அதிகமாக உள்ளது. நிச்சயம் இந்த தடவை நெருக்கடி அதிகரித்துள்ளது.

    இவ்வாறு நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.

    • நிகழ்ச்சியில் சரத்கமலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • ஒலிம்பிக்கில் தேசிய கொடியை ஏந்திச் செல்லும் சரத்கமல், 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார்.

    உலக தரம் வாய்ந்த சில நிறுவனங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமாக டைம்லிங்க்ஸ், பாரிஸ் ஒலிம்பிக் 2024-க்கான அதன் பிராண்ட் தூதராக டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமலை பெருமையுடன் அறிவித்துள்ளது.

    இதற்கான நிகழ்ச்சி டைம்லிங்க்ஸ் நிர்வாக இயக்குநர்கள் சிவகுமார், சித்ரா சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சரத்கமலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அவரும், இந்திய அணியும் ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட டைம் லிங்க்ஸ் வாழ்த்து தெரிவித்தது.

    ஒலிம்பிக்கில் தேசிய கொடியை ஏந்திச் செல்லும் சரத்கமல், 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார். 10 முறை தேசிய சாம்பியனும் ஆவார். பத்மஸ்ரீ, கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளையும் பெற்றவர்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் நிறைவடைந்த நிலையில் டென்னிஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது.
    • அமெரிக்காவின் கோகோ காப் ஒரு இடம் உயர்ந்து 2 வது இடத்தை பிடித்துள்ளார். 2 வது இடத்தில் இருந்த பெலாரசின் சபலென்கா 3 வது இடத்துக்கு சரிந்தார்.

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் நிறைவடைந்த நிலையில் டென்னிஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் பிரெஞ்சு ஓபனை 4 வது முறையாக வென்ற போலந்தின் இகா ஸ்வியாடெக் 'நம்பர் ஒன்' இடத்தில் கம்பீரமாக தொடருகிறார். அமெரிக்காவின் கோகோ காப் ஒரு இடம் உயர்ந்து 2 வது இடத்தை பிடித்துள்ளார். 2 வது இடத்தில் இருந்த பெலாரசின் சபலென்கா 3 வது இடத்துக்கு சரிந்தார்.

    பிரெஞ்சு ஓபனில் இறுதிசுற்று வரை முன்னேறி ஆச்சரியப்படுத்திய இத்தாலி வீராங்கனை பாவ்லினி 15 ல் இருந்து 7 வது இடத்துக்கு வந்துள்ளார். அவர் டாப் 10 இடத்திற்குள் நுழைவது இதுவே முதல் முறையாகும்.

    ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இத்தாலி இளம் வீரர் ஜானிக் சினெர் ஒரு இடம் அதிகரித்து முதல்முறையாக நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 'நம்பர் ஒன்' இடத்தை அலங்கரிக்கும் முதல் இத்தாலி நாட்டவர் என்ற பெருமையையும் பெற்றார். இதுவரை முதலிடத்தில் இருந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பிரெஞ்சு ஓபனில் காயத்தால் 4 வது சுற்றுடன் வெளியேறியதால் நம்பர் ஒன் இடத்தை பறிகொடுத்ததுடன் 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஜோகோவிச் தனது டென்னிஸ் வாழ்க்கையில் மொத்தம் 428 வாரங்கள் முதலிடத்தில் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதே சமயம் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை முதல்முறையாக சொந்தமாக்கிய ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் ஒரு இடம் உயர்ந்து 2 வது இடத்தை பிடித்துள்ளார்.

    இந்திய வீரர் சுமித் நாகல் கிடுகிடுவென 18 இடங்கள் எகிறி 713 புள்ளிகளுடன் 77 வது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் நாகல் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு செல்வதை ஏறக்குறைய உறுதி செய்துள்ளார்.

    ஒற்றையர் தரவரிசையில் முதல் 56 இடங்களை வகிக்கும் வீரர், வீராங்கனைகள் நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும். ஆனால் தரவரிசையில் முன்னணியில் இருந்தாலும் ஒரு நாட்டில் இருந்து அதிகபட்சமாக 4 பேருக்கு மேல் ஒலிம்பிக்குக்கு செல்ல அனுமதி கிடையாது.

    உதாரணமாக ஆண்கள் பிரிவில் முதல் 56 இடத்திற்குள் 7 அமெரிக்க வீரர்கள் உள்ளனர். இவர்களில் 4 பேர் மட்டுமே ஒலிம்பிக்குக்கு தகுதி பெற முடியும். அடுத்த இடங்கள் தரவரிசையில் பின்தங்கி உள்ள வேறு நாட்டு வீரர்களுக்கும் செல்லும். அந்த வகையில் நாகல் ஒலிம்பிக்குக்கு தகுதி பெறும் நிலையில் இருக்கிறார். 2012 ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்குக்கு பிறகு டென்னிசில் ஒற்றையர் பிரிவில் களம் காணும் முதல் இந்தியர் என்ற சிறப்பை பெறுகிறார்.

    • கிரிக்கெட்டுடன், பேஸ்பால், லேக்க்ராஸ், ஸ்குவாஸ், பிளாக் ஃபுட்பால் ஆகிய விளையாட்டுகள் புதிதாக சேர்ப்பு.
    • சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் வரவேற்பு.

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை இணைத்து ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. கிரிக்கெட்டுடன், பேஸ்பால், லேக்க்ராஸ், ஸ்குவாஸ், பிளாக் ஃபுட்பால் ஆகிய விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டது.

    இதற்கு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்நிலையில், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு நிரந்தர இடத்தைப் பிடிக்கும் என்று ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தலைவர் கிரெக் பார்க்லே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

    வேகமாக வளர்ந்து வரும் நமது கிரிக்கெட்டை உலகின் மிகப்பெரிய நிலைக்கு எடுத்துச் செல்ல இது வாய்ப்பளிக்கிறது. நான் விளையாட்டைப் பற்றி சிந்திக்க விரும்புகிறேன். இனி வரும் காலங்களில் கிரிக்கெட் போட்டி ஒலிம்பிக்கில் நிரந்தர இடத்தைப் பிடிக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியை சேர்ந்த சிறுமியின் பெயர் அர்ஸியா கோஸ்வாமி.
    • பளுதூக்கும் பயிற்சி மேற்கொண்டு வரும் அர்ஸியா 60 கிலோ எடையை தூக்கி ஒரு சில விநாடிகள் வைத்திருந்து விட்டு பின் கீழே வைக்கிறார்.

    சிறுவர்-சிறுமிகளின் திறமைகளை உலகிற்கு வெளிக்காட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் பரவி வரும் ஒரு வீடியோவில் 8 வயது சிறுமி ஒருவர் 60 கிலோ எடையை தூக்கி அசத்தும் வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.

    அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியை சேர்ந்த அந்த சிறுமியின் பெயர் அர்ஸியா கோஸ்வாமி. ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் பளுதூக்கும் பயிற்சி மேற்கொண்டு வரும் அர்ஸியா 60 கிலோ எடையை தூக்கி ஒரு சில விநாடிகள் வைத்திருந்து விட்டு பின் கீழே வைக்கிறார்.

    பின்னர் அவர் கம்பீரமாக நடந்து வரும் வீடியோவை பார்த்த சமூக வலைதள பயனர்கள் அர்ஸியாவை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த சிறுமியின் செயல் இளைஞர்கள் பலருக்கும் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் கொடுக்கும் என்றும், இவரால் ஒரு நாள் இந்தியா பெருமையடையும் என்றும் சில பயனர்கள் பதிவிட்டுள்ளனர்.

    இதுவரை சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். 20 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

    ×