search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய விளையாட்டில் மொத்தம் 69 பதக்கங்கள் குவித்து இந்தியா சாதனை - இன்று நிறைவு விழா
    X

    ஆசிய விளையாட்டில் மொத்தம் 69 பதக்கங்கள் குவித்து இந்தியா சாதனை - இன்று நிறைவு விழா

    இந்தோனேஷிய ஆசிய விளையாட்டில் இந்தியா மொத்தம் 69 பதக்கங்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. #AsianGames #India
    ஜகர்தா:

    இந்தோனேஷியாவில் இரண்டு வார காலமாக நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டு திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடைசி நாளான இன்று டிரையத்லானில் (நீச்சல், சைக்கிளிங், ஓட்டம் ஆகிய மூன்று போட்டிகள் அடங்கியது) கலப்பு பிரிவு போட்டி மட்டும் நடக்கிறது. இதில் இந்திய தரப்பில் யாரும் இல்லாததால் நமக்குரிய பதக்க வாய்ப்புகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.



    இந்த ஆசிய விளையாட்டில் 572 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 69 பதக்கங்களை இந்தியா குவித்து பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தை பிடித்துள்ளது. இதில் தடகளம் (7 தங்கம் உள்பட 19 பதக்கம்), துப்பாக்கி சுடுதல் (9 பதக்கம்), ஸ்குவாஷ் (5 பதக்கம்) ஆகிய போட்டிகளில் ஓரளவு ஆதிக்கம் செலுத்திய இந்தியா எதிர்பார்க்கப்பட்ட கபடி, ஆக்கியில் ஜொலிக்கவில்லை.



    இருப்பினும் இதுவே இந்தியாவுக்கு புதிய வரலாற்று சாதனையாக அமைந்துள்ளது. சீனாவில் 2010-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டில் இந்தியா 14 தங்கம் உள்பட 65 பதக்கங்கள் வென்றதே ஒரு ஆசிய விளையாட்டில் இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாக இருந்தது. அதை விட இப்போது கூடுதலாக 4 பதக்கங்கள் கிடைத்துள்ளது. அத்துடன் 1951-ம் ஆண்டு நடந்த முதலாவது ஆசிய விளையாட்டில் 15 தங்கம் வென்றதே, ஒரு ஆசிய விளையாட்டில் இந்தியாவின் அதிகபட்ச தங்கவேட்டையாக இருந்தது. அது தற்போது சமன் செய்யப்பட்டு இருக்கிறது.

    வழக்கம் போல் பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்தை (132 தங்கம் உள்பட 289 பதக்கம்) ஆக்கிரமித்துள்ளது. ஆச்சரியம் அளிக்கும் வகையில் போட்டியை நடத்திய இந்தோனேஷியா 31 தங்கம் உள்பட 98 பதக்கங்களை அள்ளியுள்ளது. போட்டியையும் வெற்றிகரமாக நடத்தியிருப்பதால் 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு உரிமம் கோரப்போவதாக இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ உற்சாகமாக அறிவித்து இருக்கிறார்.

    ஆசிய விளையாட்டு போட்டியின் கோலாகலமான நிறைவு விழா ஜகர்தாவில் உள்ள ஜி.பி.கே. ஸ்டேடியத்தில் இன்று அரங்கேறுகிறது. கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நடனம், இசை, பாடல் உள்ளிட்டவையுடன் பிரமிக்கத்தக்க வாணவேடிக்கைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நிறைவு விழா அணிவகுப்பில் பங்கேற்கும் இந்திய அணிக்கு, வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் நிறைவு விழாவை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 
    Next Story
    ×