search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirukalyanam"

    • மாசி மக தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
    • திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை அரங்கநாத சுவாமி கோவில் கொங்கு மண்டலத்தில் புகழ் பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    இநத கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மாசிமக திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 23-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும், அதைத்தொடர்ந்து 24-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

    இதனையொட்டி தினந்தோறும் கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது. தேர்த்திரு விழாவை யொட்டி காரமடை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    இந்த நிலையில் காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு, அரங்கநாத சுவாமி பக்தர்கள் கொண்ட காரமடை ஸ்ரீ தாசப்பளஞ்சிகா மகாஜன சங்கம் சார்பில் 55 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான சப்பரம் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

    இந்த வெள்ளி சப்பரத்தில் மரகத பச்சை கற்களில் சங்கு, மாணிக்க கற்களில் சக்கரம், சிகப்பு மற்றும் வெள்ளை பவளத்தில் திருநாமம் என விலையுயர்ந்த வைடூரிய கற்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

    கோவிலுக்கு வழங்கப்படும் தேக்குமரத்தில் வெள்ளியால் வேயப்பட்ட இந்த சப்பரத்தில் அரங்கநாத சுவாமி உருவபடத்தை வைத்து கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியே உலா கொண்டு வரப்பட்டு கோவிலில் முறைப்படி ஒப்படை க்கப்பட்டது. பின்னர் கோவிலின் உள்ளே இந்த சப்பரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது பக்தர்கள் பல வண்ண வாண வேடிக்கை நிகழ்த்தினர்.

    • இன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.
    • கோவில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 6-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோசம் முழங்க கண்டு தரிசனம் செய்தனர்.

    இதனைதொடர்ந்து வெள்ளித்தேரில் சாமி வீதிஉலா நடைபெற்றது. தைப்பூச திருவிழாவின் 7-ம் நிகழ்ச்சியாக இன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது. இதனைமுன்னிட்டு தோழுக்கினியானில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை சண்முகநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு சாமி திருத்தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெறுகிறது.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாகவே பழனியில் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகளவில் காணப்பட்டது. கூட்டம் கூட்டமாக வரும் பக்தர்களுக்கு வழி நெடுகிலும் பல்வேறு அமைப்புகளால் அன்னதானம், பழங்கள், இளநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    கோவில் நிர்வாகம் சார்பில் தற்காலிக கழிப்பறைகள், குளியல்அறைகள், பக்தர்கள் தங்கும் இடங்கள் ஆகியவை ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளன. இடும்பன்குளம், சண்முகாநதி பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் திரண்டு நீராடி வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பான முறையில் குளித்து செல்வதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முக்கிய இடங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் சுமார் 2000-ககும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருக்கல்யாண நிகழ்ச்சியை நாளை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 1லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் பழனியில் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் பழனி நகரமே குலுங்கியது.

    தைப்பூசத்தை முன்னிட்டு பழனி கோவில் பாரவேல் மண்டபம் உள்பட முக்கிய இடங்களில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது.


    • முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி.
    • திருவிழாவின் 7-ம் திருநாளான இன்று தேரோட்டம்.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில், தைப்பூச திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 6-ம்நாளான நேற்று இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவில் வெளிப்பிரகாரத்தில் வண்ண மலர்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு திருமண மேடையில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வனையுடன் எழுந்தருளினார். அப்போது 16 வகை அபிஷேகம் நடந்தது.

    அதன் பின்னர் விநாயகர் பூஜை, சங்கல்பம், வருண பூஜை, பஞ்சகவ்யபூஜை, சுப்பிரமணிய பூஜை, வேதபாராயணம், சுப்ரமணியா யாகம், வாத்திய பூஜை நடைபெற்றது. மணமேடைக்கு முன்பு பல வகையான பழங்கள், பட்டுச்சேலை, வேட்டி, திருமாங்கல்யம், வண்ண மலர்கள், இனிப்பு வகைகள் மற்றும் பல்வேறு வகை சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

    அதன்பின்னர் பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, கன்னிகா தானம், மாங்கல்ய பூஜை நடந்தது. பின்னர் வள்ளி-தெய்வானைக்கு பழனி கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

    அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் "கந்தனுக்கு அரோகரா...! முருகனுக்கு அரோகரா"...! என சரண கோஷம் எழுப்பினர். மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்மன்களுக்கு தீபாராதனை, அர்ச்சனை, ரட்சை சாற்றுதல், 16 வகை உபசாரம் நடைபெற்றது. தொடர்ந்து திருமுறை பாராயணம், வாத்திய கோஷம் முழங்க மகா தீபாராதனை நடந்தது.

    வெள்ளிரத உலா

    பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருமண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். திருமணம் மற்றும் பூஜை நிகழ்ச்சிகளை செல்வசுப்பிரமணியம் மற்றும் குருக்கள் செய்தனர். இரவு 9.30 மணிக்கு மேல் வெள்ளிரதத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் நான்கு ரத வீதிகளில் உலா வந்தார்.

    இன்று தேரோட்டம்

    தைப்பூச திருவிழாவின் 7-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) தைப்பூச தேரோட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக இன்று அதிகாலை 5 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தோளுக்கினியாள் வாகனத்தில் எழுந்தருளி, சண்முகநதியில் தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10.30 மேல் மீன லக்னத்தில் திருத்தேரேற்றமும், தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடக்கிறது. தேர் நிலை வந்தடைந்த பின்னர் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சியும், ரதவீதிகளில் சுவாமி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    • 51 வகையான சீர்வரிசை பொருட்கள் மேளத்தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வடரங்கம் கிராமத்தில் ரங்கநாதர் பெருமாள் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் பெருமாள் சயன கோலத்தில் காட்சி தருகிறார்.

    பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெருமாள் தாயார் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    முன்னதாக திரளான பக்தர்கள் 51 வகையான சீர்வரிசை பொருட்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக மேளத்தாளங்கள் முழங்கிட கோவிலை வந்தடைந்தனர்.

    தொடர்ந்து பெருமாள் தாயார் எதிர்சேவையில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    அதன் பின்னர் திருக்கல்யாண சம்பிரதாய சடங்குகள் தொடங்கி நடைபெற்றது.

    பாலாஜி பட்டாச்சாரியார், ரமேஷ் குருக்கள் மற்றும் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க மங்களநாணை அணிவித்து திருக்கல்யாண உற்சவம் நடத்தி வைத்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஏற்பாடுகளை சேலத்தைச் சேர்ந்த அயோத்தியாபட்டினம் ஸ்ரீ சன்னியாசி ரிஷி மடம் மற்றும் சத்ய நாராயணன் திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • யானைக்கு பயந்து வள்ளி முருகனை சந்திப்பதும் அடியார்களால் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.
    • வேதமந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு மாங்கல்ய தாரண நிகழ்ச்சி நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வள்ளி- முருகன் திருமணம் சிறப்பாக நடந்தது.

    இதனை முன்னிட்டு குறவள்ளி முருகனை சந்திப்பதும், அப்போது விநாயகர் பெருமான் யானை ரூபத்தில் வந்து வள்ளியை பயமுறுத்துவதும், பின் முருகனை வள்ளி அடைக்கலமாகி திருமண காட்சி நடைபெறுவதும் நடைபெற்றது.

    யானை அழைத்து வரப்பட்டு யானை பிளிருவதும் அதனை அடுத்து யானைக்கு பயந்து வள்ளி முருகனை சந்திப்பதும் அடியார்களால் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு மாங்கல்யதாரணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதனை அடுத்து மாலை மாற்றும் வைபவம் நடைபெற்று, தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
    • திருமண தடை நீங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கஸ்பா பகுதியில் உள்ள வீர விநாயகர் கோவிலில் முருகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சாமிக்கு புத்தாடை அணிவித்து, வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. இதில் திருமண தடை நீங்க சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது
    • அறுசுவை உணவு பரிமாறப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், சாத்துமதுரை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோவிலில் முருகர் திருக்கல்யாணம் நடந்தது.

    இதற்கு கிராம கனாச்சாரி சிவலிங்கம், கிராம நாட்டான்மைதாரர் துளசிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமிராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் முருகனடிமை ஜம்பு என்கிற சம்பத் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    இதில்முருகருக்கு பட்டு வேட்டி ஆடை, அம்பாளுக்கு பட்டுப்புடவை மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க தேவசேனா, வள்ளி- முருகன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்கள் மொய் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பணம் மற்றும் நகைகளை மொய் எழுதினர். இதைத் தொடர்ந்து அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
    • யாகசாலை அமைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சண்முக நாதர் கோவிலில் கந்த சஷ்டி, சூரசம்ஹாரத்தை தொடர்ந்து ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சண்முகநாதர் சாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.

    இதனை முன்னிட்டு கோவில் வளாகத்தில் மேளதாளத்துடன் பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர்.

    பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டட வள்ளி, தெய்வானை, சண்முகநாதர் சாமிக்கு சிறப்பு யாகசாலை அமைத்து பூஜைகள் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், மகா தீபாரதனையும் நடந்தது. இதில் வந்தவாசியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சோழவந்தான் அருகே முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடந்தது.
    • சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோவிலிலும், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் கந்தசஷ்டி நிறைவு விழா நடைபெற்றது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவில் சுப்பிரமணி சுவாமி கந்த சஷ்டி விழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை சூரசம்கார விழா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை பாவாடை தரிசனம் நடந்தது. சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகன் அருள்பாலித்தார். நேற்று மாலை இங்குள்ள கிருஷ்ணன் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் வானவேடிக்கையுடன் பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர்.கிருஷ்ணமூர்த்திவாத்தியார் தலைமையில் யாகவேள்வி நடந்தது.நாகேஸ்வரன் பட்டர் மாப்பிள்ளை வீட்டாராகவும், விக்னேஸ்வரன் பெண் வீட்டாராகவும் இருந்து முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.

    இதில் செயல் அலுவலர் பாலமுருகன், ஆலயப் பணியாளர்கள், தொழிலதிபர் செந்தில்குமார் மற்றும் பிரதோஷ கமிட்டியினர், பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் மாங்கல்யபிரசாதம், கல்யாணவிருந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சுவாமி அம்மன் புறப்பாடு கோவில் வளாகத்தை சுற்றி வந்தது. காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோவிலிலும் திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் கந்தசஷ்டி நிறைவு விழா நடைபெற்றது.

    • சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம்.
    • சுவாமி-அம்பாளுக்கு பட்டாடைகள் மற்றும் மாலைகள் மாற்றப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடந்தது. திருவிழாவின் 7-ம் நாளான நேற்று காலையில் தெய்வானை அம்பாள் தெப்பக்குளம் அருகில் உள்ள தபசு காட்சி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அங்கு மாலையில் சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றுதல் நடைபெற்று இரவு 11 மணிக்கு சுவாமியும், அம்பாளும் ராஜகோபுரம் அருகில் உள்ள மண்டபத்திற்கு வந்தனர். அங்கு வேத மந்திரங்கள் முழங்க 12 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெரு மானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.

    கந்தசஷ்டி திருவிழா 8-ம்நாளான இன்று (திங்கட்கிழமை) இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் பட்டின பிரவேசம் வீதி உலா வருதல் நடக்கிறது.

    திருவிழாவில் 21, 22, 23-ந் தேதி வரை 3 நாட்களும் நாள்தோறும் மாலை 6 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் ஊஞ்சல் காட்சி நடக்கிறது.

    12-ம் திருவிழாவான 24-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு வைபவம் நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். *** திருச்செந்தூர் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றதை படத்தில் காணலாம்.

    • பெரிய வஞ்சரம் மீன் ரூ.1000 விற்பனை செய்யப்பட்டது
    • மீன்களின் விலையும் கனிசமாக குறைந்துள்ளன

    வேலூர்:

    கார்த்திகை மாதம் பிறந்ததால் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர்.

    மேலும் நேற்று கந்த சஷ்டி விழா முடிந்து இன்று சாமிக்கு திருக்கல்யாணம் நடப்பதால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்தனர்.

    இதனால் ஞாயிற்றுக்கிழமை எப்போதும் அதிக அளவில் கூட்டம் அலைமோதும் வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மீன்களின் விலையும் கனிசமாக குறைந்துள்ளன.

    பெரிய வஞ்சரம் மீன் ரூ.1000, சிறிய வஞ்சரம் மீன் ரூ.500, இறால் ரூ.350 முதல் ரூ.450, கட்லா ரூ.160, நண்டு ரூ.350 முதல் ரூ.450, மத்தி ரூ.140 முதல் ரூ.160, ஷீலா ரூ.350 என மீன் இன்று விற்பனை செய்யப்பட்டது.

    • கந்த சஷ்டி திருவிழா 7-ம் நாளான இன்று திருக்கல்யாணம்.
    • அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நேற்று மாலையில் நடைபெற்றது.

    சூரசம்ஹாரம் முடிந்ததும் சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் உள்ள சந்தோஷ மண்டபத்திற்கு சென்றார். அங்கு சினம் தணிந்த முருகனுக்கும், வள்ளி-தெய்வானை அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளி, கிரி வீதிவழியாக வலம் வந்து கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதியில் எழுந்தருளினார்.

    அங்கு இருந்த கண்ணாடியில் தெரிந்த சுவாமியின் பிம்பத்திற்கு அபிஷேகம் (சாயாபிஷேகம்) நடந்தது. பின்னர் விரதம் இருந்த பக்தர்களுக்கு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட தகடுகள் வழங்கப்பட்டன.

    கந்த சஷ்டி திருவிழா 7-ம்நாளான இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. 5 மணிக்கு தெய்வானை அம்பாள் கோவிலில் இருந்து தபசு காட்சிக்கு புறப்பட்டார். காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் சுவாமி மாலை மாற்றும் நிகழ்ச்சிக்கு புறப்படுகிறார். தெப்பக்குளம் நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டபத்தில் இருந்த அம்பாளுக்கு, சுவாமி காட்சி கொடுக்கிறார். பின்னர் தெற்கு ரதவீதி, மேல ரதவீதி, தெப்பகுளத்தெரு சந்திப்பில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுக்கு ராஜகோபுரம் அருகே உள்ள மண்டபத்தில் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    நாளை (திங்கட்கிழமை) இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம் பல்லக்கிலும் பட்டின பிரவேசமாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    21, 22, 23 ஆகிய 3 நாட்கள் ஊஞ்சல் வைபவம் நடக்கிறது. 24-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    ×