search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palanimalai Muruga Temple"

    • இன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.
    • கோவில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 6-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோசம் முழங்க கண்டு தரிசனம் செய்தனர்.

    இதனைதொடர்ந்து வெள்ளித்தேரில் சாமி வீதிஉலா நடைபெற்றது. தைப்பூச திருவிழாவின் 7-ம் நிகழ்ச்சியாக இன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது. இதனைமுன்னிட்டு தோழுக்கினியானில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை சண்முகநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு சாமி திருத்தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெறுகிறது.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாகவே பழனியில் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகளவில் காணப்பட்டது. கூட்டம் கூட்டமாக வரும் பக்தர்களுக்கு வழி நெடுகிலும் பல்வேறு அமைப்புகளால் அன்னதானம், பழங்கள், இளநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    கோவில் நிர்வாகம் சார்பில் தற்காலிக கழிப்பறைகள், குளியல்அறைகள், பக்தர்கள் தங்கும் இடங்கள் ஆகியவை ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளன. இடும்பன்குளம், சண்முகாநதி பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் திரண்டு நீராடி வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பான முறையில் குளித்து செல்வதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முக்கிய இடங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் சுமார் 2000-ககும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருக்கல்யாண நிகழ்ச்சியை நாளை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 1லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் பழனியில் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் பழனி நகரமே குலுங்கியது.

    தைப்பூசத்தை முன்னிட்டு பழனி கோவில் பாரவேல் மண்டபம் உள்பட முக்கிய இடங்களில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது.


    ×