search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று திருக்கல்யாணம்
    X

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று திருக்கல்யாணம்

    • கந்த சஷ்டி திருவிழா 7-ம் நாளான இன்று திருக்கல்யாணம்.
    • அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நேற்று மாலையில் நடைபெற்றது.

    சூரசம்ஹாரம் முடிந்ததும் சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் உள்ள சந்தோஷ மண்டபத்திற்கு சென்றார். அங்கு சினம் தணிந்த முருகனுக்கும், வள்ளி-தெய்வானை அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளி, கிரி வீதிவழியாக வலம் வந்து கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதியில் எழுந்தருளினார்.

    அங்கு இருந்த கண்ணாடியில் தெரிந்த சுவாமியின் பிம்பத்திற்கு அபிஷேகம் (சாயாபிஷேகம்) நடந்தது. பின்னர் விரதம் இருந்த பக்தர்களுக்கு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட தகடுகள் வழங்கப்பட்டன.

    கந்த சஷ்டி திருவிழா 7-ம்நாளான இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. 5 மணிக்கு தெய்வானை அம்பாள் கோவிலில் இருந்து தபசு காட்சிக்கு புறப்பட்டார். காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் சுவாமி மாலை மாற்றும் நிகழ்ச்சிக்கு புறப்படுகிறார். தெப்பக்குளம் நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டபத்தில் இருந்த அம்பாளுக்கு, சுவாமி காட்சி கொடுக்கிறார். பின்னர் தெற்கு ரதவீதி, மேல ரதவீதி, தெப்பகுளத்தெரு சந்திப்பில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுக்கு ராஜகோபுரம் அருகே உள்ள மண்டபத்தில் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    நாளை (திங்கட்கிழமை) இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம் பல்லக்கிலும் பட்டின பிரவேசமாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    21, 22, 23 ஆகிய 3 நாட்கள் ஊஞ்சல் வைபவம் நடக்கிறது. 24-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    Next Story
    ×