search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theni"

    தேனி அருகே கார் டிரைவரை கத்தியால் குத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உத்தமபாளையத்தை சேர்ந்தவர் கருணாநிதி (வயது54). தனியார் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று உத்தமபாளையம் வாகன காப்பகம் அருகே காரை நிறுத்தி இருந்தார்.

    அப்போது செல்வம் என்பவர் கருணாநிதி காரை மறித்து அவரது காரை நிறுத்தி சென்றுள்ளார். இதனால் கருணாநிதி செல்வத்திடம் காரை எடுக்க வேண்டும், ஏன் இப்படி மறித்து நிறுத்துகிறீர்கள் என தட்டி கேட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கருணாநிதியை குத்தி விட்டு தப்பி ஓடி உள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய செல்வத்தை தேடி வருகின்றனர்.

    தேனி-திண்டுக்கல் மாவட்டத்தில் பறக்கும்படை சோதனையில் சிக்கிய ரூ.9.76 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #LSPolls

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள கொண்டமநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கலைச்செல்வம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் பறக்கும்படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போதுசென்னையில் இருந்து வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.4 லட்சத்து 6 ஆயிரத்து 300 பணம் இருந்தது தெரிய வந்தது.

    காரை ஓட்டிவந்தவர் சென்னை திருமுக்கூர் பகுதியை சேர்ந்த மனோஜ் (வயது36) என்பதும் இவர் கேரளாவில் வாகமான் என்ற இடத்தில் நிலம் வாங்குவதற்காக இந்த பணத்தை கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    ஆனால் அந்த பணத்திற்கு எந்தவித ஆவணங்களும் இல்லாததால் அதனை கைப்பற்றிய அதிகாரிகள் ஆண்டிப்பட்டி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

    தமிழக-கேரள எல்லையில் போடி முந்தல் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரி சின்னவெளியப்பன் தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது கேரளாவில் இருந்து வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.40 லட்சம் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் போடி சார் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    இதேபோல் கம்பம் மெட்டு சோதனைச்சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன தணிக்கையின்போது கேரளாவில் இருந்து சாகுல்அமீது என்பவர் ஓட்டி வந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2.30 லட்சத்தை பறிமுல் செய்தனர்.

    கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவடிவேல் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். அந்த காரை ரவி என்பவர் ஓட்டி வந்தார்.

    அந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை கொடைக்கானலில் காய்கறிகள் வாங்குவதற்காக கொண்டு வந்ததாக தெரிவித்தபோதும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்து சார்பதிவகத்தில் ஒப்படைத்தனர்.  #LSPolls

    தேனியில் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுவன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி பாரஸ்ட் ரோடு 3-வது தெருவை சேர்ந்தவர் சேகர். அவரது மகன் முத்தையா (வயது15). படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கூலி வேலைக்கு சென்று வந்தான். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சைக்கிளில் சென்று உள்ளான். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது மகனை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் பதறிபோன சேகர் தேனி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து சிறுவன் என்ன ஆனான்? பணத்துக்காக கடத்தப்பட்டானா? எங்கு சென்றான்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் தேனி, மதுரை மாவட்டத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    கூடலூர்:

    வடகிழக்கு பருவ மழை ஏமாற்றியதால் பெரியாறு உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர் மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடை சமாளிப்பதற்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

    இருந்தபோதும் இந்த நிலை தொடர்ந்தால் தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. பெரியாறு அணை நீர் மட்டம் 113.85 அடியாக குறைந்துள்ளது. மழை முற்றிலும் ஓய்ந்துள்ள நிலையில் 3 கன அடி நீர் மட்டுமே வருகிறது.

    அணையில் இருந்து 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

    இதனால் தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படும். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து நீர் நிலைகளும் வறண்டு போய் உள்ளன. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குடிநீர் தேடி அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மழை கை கொடுத்தால் மட்டுமே இதனை சமாளிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வைகை அணை நீர் மட்டம் 44.93 அடியாக உள்ளது. வரத்து இல்லை. மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 34.05 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 95.94 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    தேனி மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தேனி:

    தமிழகத்தில் டாஸ்மாக் கடை மூலம் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மது பாட்டில்களை மொத்தமாக கொள்முதல் செய்து பதுக்கி கூடுதல் விலைக்கு சிலர் விற்று வருகின்றனர். போலீசார் ரோந்து சென்று இவர்களை பிடித்து அபராதம் விதித்த போதும் தொடர் கதையாகி வருகிறது.

    போடி தாலுகா இன்ஸ்பெக்டர் தர்மர் தலைமையில் போலீசார் ரெங்கநாதபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்றுக் கொண்டு இருந்த குலாளர்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 55) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 67 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதே போல் கூடலூர் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் விஜயசாரதி தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது பெட்டிக்கடையில் மது ஊற்றிக் குடித்த ராஜேந்திரன் என்பவரை கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர வெங்கடேசன் தலைமையில் போலீசார் டி.சுப்புலாபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு மது விற்றுக் கொண்டு இருந்த பரமசிவம் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    தேனி அருகே குடிபோதையில் நண்பரை தாக்கிய வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    தேனி:

    தேனி அருகே உள்ள வயல்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் சுரேஷ் (வயது23). இவரது நண்பர்களான சதீஷ், வருசநாடு வேங்கையன், நல்லு ஆகியோருடன் மது அருந்திக்கொண்டிருந்தார்.

    சம்பவத்தன்று போதை தலைக்கேறிய நிலையில் நண்பர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அது தகராறாக மாறியது. வாக்குவாதம் முற்றியதால் சதீசை அவரது நண்பர்கள் தகாத வார்த்தைகளால் பேசி உள்ளனர்.

    மேலும் அருகில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து சுரேசை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிசிக்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து சுரேசின் தாய் செல்லம்மாள் தேனி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார். புகாரை விசாரிக்குமாறு வீரபாண்டி போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். இதன் பேரில் சதீஷ், வேங்கையன், நல்லு ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனியில் உள்ள 2 வணிக நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் இன்று வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
    தேனி:

    தேனியில் முத்துராஜ் என்பவருக்கு சொந்தமான எம்.எம். மளிகை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பல்பொருள் அங்காடியாக இது உள்ளது.

    இதன் சார்பு நிறுவனமாக ஆர்.ஜி. கண்ணா எண்ணெய் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனங்களில் முறையான வருமானவரி தாக்கல் செய்யாமல் இருந்ததாகவும், ஜி.எஸ்.டி. வரி செலுத்தியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து இன்று திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் அந்த 2 நிறுவனங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் உரிமையாளர் வீடு மற்றும் மேலாளர் வீடு, அலுவலகம், உற்பத்தி பொருள் பேக்கிங் செய்யும் பகுதி என அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது.

    வருமானவரித்துறை சோதனையால் அலுவல கங்கள் மற்றும் வீடுகள் பூட்டப்பட்டது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் பல இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் தேனியிலும் இந்த சோதனை நடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தேனி அருகே வங்கி ஊழியர் வீட்டில் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே கொடுவிலார்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது34). தேனியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தனது குடும்பத்துடன் தேனியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது பக்கத்து வீட்டு காரர்கள் பாலகிருஷ்ணனின் வீட்டின் கதவு உடைக்கப் பட்டிருப்பதாக அவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது.

    அங்கிருந்த 6 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தேனி புறநகர் பகுதியில் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள் ளையடிக்கும் சம்பங்கள் அதிகரித்து வருகின்றன.

    வியாபாரிகள் போல் நோட்டமிட்டு பூட்டி கிடக்கும் வீடுகளில் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். மேலும் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

    எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    தேனி அருகே பள்ளியில் நுழைந்து ஆசிரியரை மிரட்டிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    தேனி:

    தேனி அருகே பெரியகுளம் ஏ.வாடிப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. இங்கு கண்காணப்பு பணியில் ஆசிரியர் மணிகண்டன் ஈடுபட்டிருந்தார். அப்போது மாணவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இதனால் இரு பிரிவினராக பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது 2 வாலிபர்கள் பள்ளியில் புகுந்து மாணவர்கள் கோவிந்தராஜ், சுந்தரேசன் ஆகியோரை தாக்கி உள்ளனர்.

    இதனை ஆசிரியர் மணிகண்டன் தட்டி கேட்டு பள்ளிக்குள் அத்துமீறி நுழைய கூடாது என அவர்களை எச்சரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் மணிகண்டனை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி சென்றுள்ளனர்.

    இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தில் அந்த 2 வாலிபர்கள் ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்த ரேவந்த் (வயது23), செங்குளத்துப்பட்டியை சேர்ந்த காசிபாண்டியன் (20) என தெரிய வந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் 95 சதவீத பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகமடைந்தனர். #JactoGeo
    திண்டுக்கல்:

    9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று வந்தனர்.

    அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் பிப்ரவரி 18-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் பங்கேற்கவில்லை.

    திண்டுக்கல்லில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 160 பெண்கள் உள்பட 200 பேர் கலந்து கொண்டனர். அவர்களை கைது செய்து போலீசார் தனியார் மண்டபங்களில் தங்க வைத்தனர்.

    நேற்று 80 சதவீத பள்ளிகள் இயங்கிய நிலையில் இன்றும் வழக்கமாக பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளைச் சேர்ந்த 3,497 ஆசிரியர்களில் 2894 பேர் பணிக்கு வந்தனர். 553 ஆசிரியர்கள் மட்டுமே வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1486 ஆசிரியர்கள் முழுமையாக பணிக்கு திரும்பினர்.

    அரசு தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் 3567 பேரில் 2847 பேர் பணிக்கு வந்தனர். 484 ஆசிரியர்கள் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்றனர். அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த 1614 ஆசிரியர்களில் 5 பேர் மட்டுமே வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இதே போல் தேனி மாவட்டத்தில் 6092 ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 97 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார். ஒரு வாரத்துக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் இன்று வகுப்புகளில் பங்கேற்றனர்.  #JactoGeo
    தேனி மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் 57 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தேனி:

    தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

    நேற்று கம்பம் சாலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் நல்லதம்பி தலைமையில் 57 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் தேனி நேரு சிலை அருகே மறியலில் ஈடுபட்ட 1583 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். கம்பம் சாலையில் மறியல் செய்த ஞானதம்பி உள்பட 57 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    தேனி அருகே அழகு நிலையத்தில் பெண்ணிடம் நகையை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    தேனி அருகே பழனிசெட்டி பட்டி பழனியப்பா தெருவை சேர்ந்தவர் அகிலா(வயது22). இவர் அதேபகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி செல்வக்குமாரி என்பவரது அழகுநிலையத்திற்கு சென்றார்.

    அங்கு தனது 5 பவுன் தங்கச்சங்கிலியை கழற்றி வைத்துவிட்டு முகஅலங்காரம் செய்து கொண்டிருந்தார். திரும்ப வந்து பார்த்தபோது சங்கிலி மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    செல்வக்குமாரியிடம் கேட்டபோது தனக்கு தெரியாது என கூறியுள்ளார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் அகிலா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் செல்வக்குமாரி தங்கச்சங்கிலியை திருடியது தெரியவந்தது.

    இதனைதொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்த சங்கிலியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×