search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lakh seized"

    திருச்சி விமான நிலையத்தில் மேலும் ஒரு பயணியிடம் ரூ.6.43 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. #TrichyAirport

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு மலேசிய தலை நகர் கோலாலம்பூருக்கு தனியார் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது பெரம்பலூரை சேர்ந்த பெரியசாமி என்பவரின் உடைமைகளை சோதனை செய்யும் போது, அவரது டிராவல் பேக்கில் 6265 யூரோ, 2579 மலேசியன் ரிங்கிட், 430 சிங்கப்பூர் டாலர், 2000 ரியால், 2760 கிராம் திராம்ஸ் ஆகிய வெளிநாட்டு பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.வெளிநாட்டு பணத்திற்கான இந்திய ரூபாயின் மதிப்புரூ.6.43 லட்சம் ஆகும். இது தொடர்பாக பெரியசாமியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று திருவாரூரை சேர்ந்த பயணி குமார் , வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்த ரூ.18 லட்சம் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். இந்தநிலையில் இன்று மற்றொரு பயணியிடம் ரூ.6.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TrichyAirport

    திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் ரூ.18 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. #TrichyAirport

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது.

    இதனை தடுக்க மத்திய வான் நுண்ணறிவு சுங்கப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று இரவு தனியார் விமானம் வந்தது. அதில் வந்திறங்கிய பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது திருவாரூரை சேர்ந்த ஸ்ரீகுமார் என்ற பயணியிடம் அதிகாரிகள் சோதனை போட்டனர். இதில் அவர் உடலில் மறைத்து 13,800 அமெரிக்க டாலர், 9,300 யூரோ, 1,150 சிங்கப்பூர் டாலர் ஆகியவற்றை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இந்த வெளிநாட்டு பணத்தின் மொத்த மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.17 லட்சத்து 17 ஆயிரத்து 500 என அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல் நேரமாக இருப்பதால் வெளி நாடுகளில் இருந்து அதிக அளவில் பணம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் விமான நிலையத்தில் கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. #TrichyAirport

    கோபி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் இரும்பு வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019 #LSpolls

    கோபி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற் கொண்டு வருகிறார்கள்.

    கோபி அருகே உள்ள கெட்டி செவியூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை பிரிவு அதிகாரி அசோக், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குட்டியண்ணன், சுந்தர வடிவேல் மற்றும் போலீசார், அதிகாரிகள் வாகன சோதனை மேற் கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.2 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை செய்யப்பட்டது.

    கோபியில் இருந்து கேரளா மாநிலம் எர்ணாகுளம் சென்றதாகவும், கேராளாவுக்கு பழைய இரும்பு சாமான்கள் வாங்க செல்வதாகவும் தெரிய வந்தது. ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததது தெரிய வந்தது.

    இதையடுத்து உரிய ஆவணம் இல்லாமல் பணம் எடுத்து சென்றதாக கூறி 2 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணத்தை காண்பித்து பணத்தை பெற்று கொள்ளலாம் என தெரிவித்தனர்.

    பறிமுதல் செய்த பணத்தை கோபி ஆர்.டி.ஓ. அசோகனிடம் ஒப்படைக்கப்பட்டது. #LokSabhaElections2019 #LSpolls

    சத்தியமங்கலத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வியாபாரிகளிடம் ரூ.4½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் பகல், இரவு என விடிய விடிய அதிரடி வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    சத்தியமங்கலம் அருகே உள்ள கள்ளிப்பட்டி செக் போஸ்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முரளிதரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் நள்ளிரவில் அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அப்போது ஊட்டியில் இருந்து ஈரோடு வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். காரில் இருந்த மாட்டு வியாபாரி அப்துல் மஜித் என்பவரிடம் ரூ.2 லட்சத்து 68 ஆயிரம் இருந்தது.

    இந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் சத்தியமங்கலம் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

    சத்தியமங்கலம் அருகே செண்பகப்புதூர் மேடு என்ற இடத்தில் பறக்கும் படை அதிகாரி நாகேந்திரன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் தீனதயாளன் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது கோவையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்த ஒரு காரில் வாழைக்காய் வியாபாரி மகேந்திரனிடம் (29) ரூ.95 ஆயிரம் இருந்தது.

    இவர் வாழைக்காய் விற்ற பணத்தை கொண்டு வருவதாக கூறினார். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அதே இடத்தில் மற்றொரு வேனை பறக்கும் படையினர் சோதனை நடத்திய போது அந்த வேனில் வந்த காய்கறி வியாபாரி புளியம்பட்டியை சேர்ந்த முகமது ஜக்காரியா (37) என்பவரிடம் ரூ.96 ஆயிரம் பணம் இருந்தது தெரிய வந்தது.

    அவர் காய்கறி விற்று வாங்கிய பணம் என கூறினார். எனினும் அந்த பணத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தேர்தல் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். #LSPolls

    ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் கேரளா ஜவுளி வியாபாரிகளிடம் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    ஈரோடு, மார்ச். 26-

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் ஈரோடு பகுதியில் பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தி அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகே தேர்தல் பறக்கும் படையினர் அந்த பகுதியில் வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியை சேர்ந்த பிரவீன் தாஸ் (50) என்ற ஜவுளி வியாபாரி வந்தார். அவரிடம் ரூ.2 லட்சம் உரிய ஆவணமின்றி இருந்ததாக தெரிகிறது.

    தான் ஜவுளி வாங்க வந்ததாக பிரவீன்தாஸ் கூறினார். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதே போல் வில்லரசம் பட்டி நால் ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

    அங்கு வந்த ஒரு காரை சோதனை நடத்திய போது காரில் வந்த கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரிடம் ஆவணமின்றி ரூ.1 லட்சம் இருந்தது. அவரும் ஜவுளி வாங்க இந்த பணத்தை கொண்டு வந்ததாக கூறினார்.

    அதே சமயம் அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பிறகு அந்த பணம் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. #LSPolls

    மதுரையில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.7 லட்சத்து 34 ஆயிரத்து 330 சிக்கியது. #LSPolls

    மதுரை:

    வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு தொகுதியிலும் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    மதுரை மாநகர பறக்கும் படை தாசில்தார் பிரபாகரன் தலைமையிலான குழுவினர் ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த வேனை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதனை சோதனை செய்தபோது 10 பண்டல்களில் ரூ.7 லட்சத்து 34 ஆயிரத்து 330 இருந்தது தெரியவந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சுப்பிரமணியபுரத்தில் உள்ள பீடி கம்பெனி ஊழியர்களுக்கு சம்பள பட்டுவாடா செய்வதற்காக கொண்டு வரப்பட்ட பணம் என தெரியவந்தது. இருப்பினும் ஆவணங்களை சமர்ப்பிக்காததால் அந்த பணம் கலெக்டர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. #LSPolls

    கும்பகோணம், ஒரத்தநாடு, பேராவூரணியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    கும்பகோணம்:

    அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை பகுதியில் நேற்று இரவு பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சங்கர் (வயது 49) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் வைத்திருந்தார். அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அந்த பணம் பூ வியாபாரிக்கு சொந்தமானது என்றும் அவரிடம் தான் ஊழியராக வேலை பார்த்து வருவதாக சங்கர் தெரிவித்தார். உரிய ஆவணத்தை காட்டி பணத்தை பெற்று கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அதன்படி நேற்று ஒரத்தநாட்டை அடுத்துள்ள நெய்வாசல் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மன்னார்குடி பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு சென்ற ரூ.3½ லட்சத்தை அதிகாரிகள் கைப்பற்றி ஒரத்தநாடு துணை தாசில்தார் (தேர்தல்) செல்வக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் அருகே தேர்தல் ஆணையத்தின் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாட்டாத்தி கொல்லையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவரிடம் உரிய ஆவணம் இன்றி ரூ.80 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #LSPolls

    குன்றத்தூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் டாஸ்மாக் வசூல் பணம் ரூ.53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    பூந்தமல்லி:

    குன்றத்தூர்- ஸ்ரீபெரும்புதூர் சாலையில் நேற்று இரவு போலீசார் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரூ.53 லட்சம் இருந்தது. காரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது ஸ்ரீபெரும்புதூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வசூலான பணத்தை வாங்கி தேனாம்பேட்டையில் உள்ள தனியார் வங்கிக்கு கொண்டு செல்வதாகவும், தாங்கள் தனியார் ஏஜென்சி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தனர்.

    ஆனால் அவர்களிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து ரூ.53 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்தை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர். #LSPolls

    நெல்லை அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.1.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #Parliamentelection #LSPolls
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று வரை ரொக்க பணம் ரூ.99 லட்சமும், பரிசு பொருட்களுடன் சேர்த்து ரூ.1 கோடி வரையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இன்றும் பறக்கும் படை அதிகாரிகள் காலையிலேயே தங்கள் அதிரடி வேட்டையை தொடங்கினார்கள். பழைய பேட்டை செக் போஸ்ட் பகுதிகளிலும், கே.டி.சி. நகர் மேம்பாலம் அருகிலும் அதிரடி சோதனை நடந்து வருகிறது. மானூர் அருகே உள்ள அழகிய பாண்டியபுரத்தில் இன்று அதிகாலை பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினார்கள்.

    அப்போது ராஜபாளையத்தில் இருந்து நெல்லைக்கு வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த ராஜபாளையத்தை சேர்ந்த கணேசனிடம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணம் ஆவணங்கள் இல்லாமல் இருந்தது. அதை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நேற்று நெல்லை தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞான திரவியத்துடன் வந்த காரில் ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் சிக்கியது. இதைத்தொடர்ந்து இன்று அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன், அ.ம.மு.க. வேட்பாளர் ஞான அருள்மணி ஆகியோர் நெல்லை வந்தனர். அவர்களுடன் ஏராளமான கார்கள் வந்ததால், பாளை கே.டி.சி. நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பறக்கும் படை அதிகாரிகள் குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் வரும் வாகனங்கள், வேன்கள் போன்றவற்றிலும் அதிரடி சோதனை நடந்தது.

    வேட்பாளர்களுடன் வந்த கார்களை, தேர்தல் செலவு கணக்கு கண்காணிப்பு அதிகாரிகள் குழுவினர் வீடியோ எடுத்தனர். மேலும் தேர்தல் பிரசாரம் குறித்த பல்வேறு அம்சங்களையும் இன்று கண்காணிப்பு அதிகாரிகளின் குழுவினர் வீடியோ எடுத்தனர். இந்த சம்பவங்கள் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.  #Parliamentelection #LSPolls
    திருப்பூரில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ. 3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #Parliamentelection #LSPolls

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பூரில் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு 12.30 மணிக்கு திருப்பூர் - மங்கலம் சாலையில் பாரப்பாளையத்தில் பறக்கும் படை அதிகாரி கோவிந்த பிரபாகர் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ. 3 லட்சம் பணம் இருந்தது. இது தொடர்பாக காரில் வந்த திருப்பூர் சிவசக்தி நகர் 2-வது தெருவை சேர்ந்த இளமணிமாறனிடம் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அவர் தனது கம்பெனியில் வசூலான பணத்தை வீட்டிற்கு எடுத்து செல்வதாக கூறினார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இன்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தை பெற்று செல்லலாம் என அதிகாரிகள் கூறி சென்றனர். திருப்பூரில் இதுவரை ரூ. 10 லட்சம் வரை அதிகாரிகள் சோதனையில் சிக்கி உள்ளது.  #Parliamentelection #LSPolls

    தேனி-திண்டுக்கல் மாவட்டத்தில் பறக்கும்படை சோதனையில் சிக்கிய ரூ.9.76 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #LSPolls

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள கொண்டமநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கலைச்செல்வம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் பறக்கும்படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போதுசென்னையில் இருந்து வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.4 லட்சத்து 6 ஆயிரத்து 300 பணம் இருந்தது தெரிய வந்தது.

    காரை ஓட்டிவந்தவர் சென்னை திருமுக்கூர் பகுதியை சேர்ந்த மனோஜ் (வயது36) என்பதும் இவர் கேரளாவில் வாகமான் என்ற இடத்தில் நிலம் வாங்குவதற்காக இந்த பணத்தை கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    ஆனால் அந்த பணத்திற்கு எந்தவித ஆவணங்களும் இல்லாததால் அதனை கைப்பற்றிய அதிகாரிகள் ஆண்டிப்பட்டி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

    தமிழக-கேரள எல்லையில் போடி முந்தல் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரி சின்னவெளியப்பன் தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது கேரளாவில் இருந்து வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.40 லட்சம் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் போடி சார் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    இதேபோல் கம்பம் மெட்டு சோதனைச்சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன தணிக்கையின்போது கேரளாவில் இருந்து சாகுல்அமீது என்பவர் ஓட்டி வந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2.30 லட்சத்தை பறிமுல் செய்தனர்.

    கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவடிவேல் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். அந்த காரை ரவி என்பவர் ஓட்டி வந்தார்.

    அந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை கொடைக்கானலில் காய்கறிகள் வாங்குவதற்காக கொண்டு வந்ததாக தெரிவித்தபோதும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்து சார்பதிவகத்தில் ஒப்படைத்தனர்.  #LSPolls

    பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    திருவள்ளூர்:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

    ரொக்கமாக பணம் கொண்டு செல்வதற்கு தேர்தல் கமி‌ஷன் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம்- பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திருவள்ளூரை அடுத்த காவல்சேரி அருகே அரக்கோணம் தாசில்தார் முருகானந்தம் தலைமையிலான பறக்கும் படையிளர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 70 இருந்தது. காரில் இருந்த செங்கல்பட்டை அடுத்த கொம்மனாஞ்சேரியை சேர்ந்த கண்ணனிடம் விசாரித்தபோது பணத்திற்கான ஆவணம் அவரிடம் இல்லை.

    இதையடுத்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 70-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணம் சமர்ப்பித்து பணத்தைப்பெற்று கொள்ளலாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    ×