search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.1.40 லட்சம் சிக்கியது
    X

    நெல்லை அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.1.40 லட்சம் சிக்கியது

    நெல்லை அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.1.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #Parliamentelection #LSPolls
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று வரை ரொக்க பணம் ரூ.99 லட்சமும், பரிசு பொருட்களுடன் சேர்த்து ரூ.1 கோடி வரையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இன்றும் பறக்கும் படை அதிகாரிகள் காலையிலேயே தங்கள் அதிரடி வேட்டையை தொடங்கினார்கள். பழைய பேட்டை செக் போஸ்ட் பகுதிகளிலும், கே.டி.சி. நகர் மேம்பாலம் அருகிலும் அதிரடி சோதனை நடந்து வருகிறது. மானூர் அருகே உள்ள அழகிய பாண்டியபுரத்தில் இன்று அதிகாலை பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினார்கள்.

    அப்போது ராஜபாளையத்தில் இருந்து நெல்லைக்கு வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த ராஜபாளையத்தை சேர்ந்த கணேசனிடம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணம் ஆவணங்கள் இல்லாமல் இருந்தது. அதை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நேற்று நெல்லை தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞான திரவியத்துடன் வந்த காரில் ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் சிக்கியது. இதைத்தொடர்ந்து இன்று அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன், அ.ம.மு.க. வேட்பாளர் ஞான அருள்மணி ஆகியோர் நெல்லை வந்தனர். அவர்களுடன் ஏராளமான கார்கள் வந்ததால், பாளை கே.டி.சி. நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பறக்கும் படை அதிகாரிகள் குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் வரும் வாகனங்கள், வேன்கள் போன்றவற்றிலும் அதிரடி சோதனை நடந்தது.

    வேட்பாளர்களுடன் வந்த கார்களை, தேர்தல் செலவு கணக்கு கண்காணிப்பு அதிகாரிகள் குழுவினர் வீடியோ எடுத்தனர். மேலும் தேர்தல் பிரசாரம் குறித்த பல்வேறு அம்சங்களையும் இன்று கண்காணிப்பு அதிகாரிகளின் குழுவினர் வீடியோ எடுத்தனர். இந்த சம்பவங்கள் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.  #Parliamentelection #LSPolls
    Next Story
    ×