search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theni constituency"

    தேனி தொகுதியில் தனக்கும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கும் இடையே தான் போட்டி நிலவுவதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #ThangaTamilselvan #ADMK #EVKSElangovan
    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.

    தினகரன் கட்சியில் முக்கிய பிரமுகராக உள்ள இவர் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இப்போது எம்.பி. தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார்.

    இந்த தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    3 பேருமே பிரபல நபர்கள் என்பதால் தமிழ்நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக தேனி உள்ளது.

    தேர்தல் போட்டி தொடர்பாக தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. அதுவும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால் அந்த கட்சிக்கு மக்களிடம் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

    பொதுமக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் இப்போது எங்களையே ஆதரிக்கிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் கட்சியில் மிகவும் ஜுனியர். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் என்ற ஒரே காரணத்தினால் அவரை முன்னிலைப்படுத்துகிறார்கள்.

    நான் அ.தி.மு.க. பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தந்தை அ.தி.மு.க.வில் முக்கிய பிரமுகராக இருந்தவர். அவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகவும் சீனியர்.



    டி.டி.வி.தினகரனால் தான் ஓ.பன்னீர்செல்வம் அரசியலிலும், அரசிலும் முன்னுக்கு வந்தவர். இப்போது அவருக்கு எதிராகவே மாறி இருக்கிறார். இது அவருக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும்.

    இந்த தொகுதியில் உள்ள நிலைமை எனக்கு சாதகமாக இருக்கிறது. டி.டி.வி.தினகரன் இந்த தொகுதி எம்.பி.யாக இருந்து சிறப்பான சேவைகளை செய்தார். அவர் எல்லா தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றார்.

    இப்போது இங்குள்ள நிலவரப்படி அ.தி.மு.க. தனது செல்வாக்கை இழந்து விட்டது. அவர்கள் எல்லாம் அ.ம.மு.க.வுக்கு ஆதரவாக மாறி விட்டார்கள். எனக்கும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க. களத்திலேயே இல்லை.

    ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க.வை நாங்கள் தோற்கடித்தோம். அதுபோன்ற நிலை இங்கும் ஏற்படும். இந்த தொகுதியில் முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் அவர்கள் ஓட்டு அ.தி.மு.க.வுக்கு கிடைக்காது. கடந்த தேர்தலில் 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் இங்கு வெற்றி பெற்றது. அதே வேட்பாளரை இப்போது ஏன் நிறுத்தவில்லை?

    ஓ.பன்னீர்செல்வம் குடும்ப அரசியலை எதிர்ப்பதாக கூறுகிறார். ஆனால் தனது மகனை வேட்பாளராக்கி இருக்கிறார். தனது தம்பியை ஆவின் சேர்மனாக்கி இருக்கிறார்.

    இவ்வாறு தங்க தமிழ்ச் செல்வன் கூறினார். #LokSabhaElections2019 #ThangaTamilselvan #ADMK #EVKSElangovan
    பிரதமர் மோடி 9 மற்றும் 13-ந் தேதிகளிலும், ராகுல் 12-ந்தேதியும் தேனி தொகுதியை குறிவைத்து பிரசாரம் செய்ய இருப்பதால் தமிழக தேர்தல் களத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #PMModi #RahulGandhi
    தேனி:

    தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 18-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

    அதே தினத்தன்று தமிழகம், புதுச்சேரியில் காலியாக உள்ள 19 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.

    வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடந்தது. மார்ச் 29-ந்தேதி வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

    தமிழக தேர்தல் களத்தில் மொத்தம் 845 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் 65 பேர் பெண்கள் ஆவார்கள்.

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி. தினகரன் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் இடையே 5 முனைப்போட்டி நடைபெறுகிறது.

    தேர்தல் பிரசாரம் ஓய்வதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளது. எனவே அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் முதல் கட்ட பிரசாரத்தை முடித்துள்ளனர். அதே போல் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி சென்னை மற்றும் நாகர்கோவிலில் பிரசாரத்தை முடித்துள்ளார்.



    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகின்றனர். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 20-ந் தேதி முதல் மாவட்டம் தோறும் பிரசாரம் நடத்தி வருகிறார்.

    இதே போல் கூட்டணி கட்சி தலைவர்களும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான தலைவர்கள் தங்களது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்து விட்டனர்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி, ராகுல் 2-ம் கட்ட பிரசாரத்துக்காக தமிழகத்துக்கு வர உள்ளனர். தற்போதைய தகவல்படி மோடி 2 தடவையும், ராகுல் ஒரு தடவையும் தமிழ்நாட்டுக்கு வர உள்ளனர்.

    மோடி 9 மற்றும் 13-ந் தேதிகளிலும், ராகுல் 12-ந்தேதியும் தமிழகம் வருகிறார்கள். அவர்கள் இருவரும் தேனி தொகுதியை குறிவைத்து பிரசாரம் செய்ய இருப்பதால் தமிழக தேர்தல் களத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், அ.ம.மு.க. சார்பில் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வனும் போட்டியிடுகிறார்கள்.

    இதனால் தேனி தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. அதோடு அங்கு தேர்தல் களமும் சூடு பிடித்துள்ளது. வெற்றியை தட்டிப் பறிக்க 3 வேட்பாளர்களிடமும் கடும் சவால் ஏற்பட்டுள்ளது.

    தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேனியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி வருகிற 12-ந்தேதி பிரசாரம் செய்ய உள்ளார்.

    இதற்காக தேனி நகர் பைபாஸ் ரோடு புது பஸ்நிலையம் செல்லும் சாலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு ராகுல்காந்தி பேசுகிறார். காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் வேட்பாளர் இளங்கோவன் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுக்கூட்டம் நடக்க உள்ள இடத்தை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    ராகுல் பிரசாரம் செய்துவிட்டு செல்லும் அடுத்த நாளே அதாவது 13-ந் தேதி பிரதமர் மோடி ஆண்டிப்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அப்போது தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், ஆண்டிப்பட்டி சட்டமன்ற அ.தி.முக. வேட்பாளர் லோகிராஜன், பெரியகுளம் அ.தி.மு.க. வேட்பாளர் மயில்வேல், ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

    இதற்காக ஆண்டிப்பட்டி அருகே எஸ்.ரெங்கநாதபுரம் பிரிவில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் போட்டி பிரசாரம் செய்ய உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தலைவர்கள் வருகையையொட்டி தேனி மாவட்டத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். #LokSabhaElections2019 #PMModi #RahulGandhi

    தேனி பாராளுமன்ற தொகுதியில் தான் யாரையும் போட்டியாக கருதவில்லை என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்வோகன் தெரிவித்தார். #LSPolls #Congress #EVKSElangovan
    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று மனுத்தாக்கல் செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேனி மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகளை அறிந்து அதனை நிறைவேற்ற பாடுபடுவேன். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக மதுரை-போடி அகல ரெயில் பாதை திட்டப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை மேற்கொண்ட 4 காண்டிராக்டர்கள் ஓடி விட்டனர்.

    கடைசியாக பணி செய்த ஆந்திராவைச் சேர்ந்த காண்டிராக்டர் ஒருவர் தன்னிடம் அதிக அளவு கமி‌ஷன் கேட்பதாக என்னிடம் கூறினார். தேனி மாவட்ட மக்களின் நீண்ட கால பிரச்சனையை கருத்தில் கொண்டு நான் வெற்றி பெற்ற 6 மாதத்தில் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த பாடுபடுவேன்.


    தேனி தொகுதியில் நான் யாரையும் போட்டியாக கருதவில்லை. தற்போது பிஞ்சிலேயே பழுத்த பழம் நிறைய உள்ளது. நான் மரத்திலேயே பழுத்த பழம்.

    இந்த தொகுதிக்கு புது முகம் என்று என்னை கூறுகின்றனர். நடிகர் நடிகைகளில்தான் புதுமுகம் உண்டு. நான் அரசியலில் பல ஆண்டுகளாக பணி செய்துள்ளேன். நான் வெற்றி பெற்றால் தேனி மாவட்டத்தை சுற்றுலா தலமாக்குவேன். அதோடு மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Congress #EVKSElangovan
    தேனி தொகுதியை பொறுத்தவரை பெரிய போட்டியாக கருதவில்லை. அத்தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். #evkselangovan #congress #parliamentelection

    மதுரை:

    தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ‌மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.‌ அவர் கூறியதாவது:-

    தேனி தொகுதியை பொறுத்தவரை பெரிய போட்டியாக கருதவில்லை. தேனி மாவட்ட மக்களுக்கு பா.ஜ.க ஆட்சியின் மூலம் பல கஷ்டங்கள் தான் ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தை பொறுத்த வரையில் அ.தி.மு.க., பா.ஜ.க கட்சிகள் கூட்டணியை தோற்கடிக்க முடிவெடுத்துள்ளனர்.

    ஆகவே நான் தேனி தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெறுவேன், காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் உற்சாகமாக இருக்கிறார்கள்.

    நான் ஈரோடு, திருப்பூரில் வேட்பாளராக நிற்க விரும்பினேன். ஆனால் தோழமைக் கட்சிகளுக்கு அந்த தொகுதிகளை வழங்க வேண்டிய சூழல் அமைந்ததால் காங்கிரஸ் தலைமை என்னை தேனி தொகுதியில் போட்டியிட கேட்டுக் கொண்டது.

    எனக்கும், எங்கள் குடும்பத்துக்கும் தமிழக மக்களுக்கும் உள்ள தொடர்பானது இறுக்கமானது.

    அதனால் தமிழ்நாட்டில் எந்தத் தொகுதியில் நின்றாலும் எனக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    தேனி தொகுதி என்பது அ.தி.மு.க.வின் கோட்டை என்று கருதுபவர்களுக்கு அதைப்பற்றி எந்தக் கருத்தும் இல்லை.

    ஜெயலலிதாவை நான் மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளேன், ஆனால் அரசியல் ரீதியாக மட்டும் தான் விமர்சித்துள்ளேன்.

    தனிப்பட்ட முறையில் ஒருமையில் அவரை விமர்சித்ததே கிடையாது. அரசியலில் ஜெயலலிதாவை நான் பல இடங்களில் பல நேரங்களில் விமர்சித்து இருந்தாலும் ஒரு பெண் சாதனையாளர் என்ற முறையில் எனக்கு ஜெயலலிதாவைப் பற்றி மிகுந்த மரியாதை உள்ளது.


    கூட்டணி தலைவர்களை சந்தித்து அவர்களிடம் நேரம் கேட்டு நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்.

    என் அருமை தம்பி ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் தேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக உள்ள ரவீந்திரநாத்குமார் எனக்கு தேனி மக்களையும், அங்கு நடக்கும் பஞ்சாயத்துக்களும் தெரியாது என்று விமர்சித்துள்ளார்.

    எனக்கு பஞ்சாயத்து தெரியாமல் இருக்கலாம். ஆனால் கட்டப்பஞ்சாயத்துக்கு நான் வரமாட்டேன். தொகுதியில் பல பிரச்சினைகள் உள்ளன, வைகை அணை தூர்வாறும் பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை உள்ளது.

    அது மட்டுமில்லாமல் தேனி மாவட்டத்தை சிறந்த சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது, இது போன்ற காரியங்களில் தான் என்னை ஈடுபடுத்திக் கொள்வேனே தவிர மற்ற எந்த வித பஞ்சாயத்திலும் ஈடுபடமாட்டேன்.

    தேனி தொகுதி மக்களுக்கு அவர்கள் எதிர்பார்ப்பதை விட மிகச்சிறப்பாக செய்வேன். நியூட்ரினோ திட்டமாக இருந்தாலும் சரி, வேறு பல மத்திய அரசு திட்டங்கள் ஆக இருந்தாலும் சரி மக்களுக்கு பாதிப்பாக இருக்கும், விவசாய நிலங்கள் பாதிப்படையும் திட்டமாக இருந்தால் அவற்றை தடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #evkselangovan #congress #parliamentelection

    தேனி தொகுதியில் தன்னை எதிர்த்து தினகரனே நின்றாலும் கவலை இல்லை என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் கூறினார். #LSPolls #TheniConstituency
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் அ.ம.மு.க. வேட்பாளர்களின் 2-வது பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தேனி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகதோப்பில் உள்ள குலதெய்வமான பேச்சியம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு தரிசனம் முடிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தரிசனம் செய்தார்.

    அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தேனி தொகுதியில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

    பதில்:- தேனி தொகுதியில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேனி மட்டுமல்ல 40 எம்.பி. தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும்.



    கே:- தங்கதமிழ்செல்வன் அ.ம.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் உங்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமா?

    ப:- என்னை எதிர்த்து டிடிவி தினகரனே நின்றாலும் எங்களுக்கு கவலையில்லை. அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.  #LSPolls  #TheniConstituency
    தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். மகனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரசாரத்தை தொடங்கினார். #LSPolls #TheniConstituency #OPS
    அலங்காநல்லூர்:

    தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாலமேடு அருகே உள்ள வலையபட்டி மஞ்சமலை சுவாமி கோவிலில் ஓ.பி.எஸ். சாமி கும்பிட்டார்.

    தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

    பின்னர் ஓ.பன்னீர்செல்வம் திறந்த வேனில் பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மகனுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. சார்பில் தகுதியான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை நிச்சயம் மக்கள் ஏற்றுக்கொண்டு வெற்றி பெறச் செய்வார்கள். தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்போம்.

    ராஜகண்ணப்பன் ஒரு கட்சியில் இருப்பதும், பதவி கிடைக்காவிடில் விலகுவதும் வாடிக்கை. அ.தி.மு.க.வில் எந்தவித உட்கட்சி பூசலும் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் வெற்றி பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #TheniConstituency #OPS

    கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெற உள்ளதால் தேனி தொகுதி வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என அனைத்து கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #ParliamentElection #Theniconstituency
    தேனி:

    17-வது மக்களவை தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மதுரை சித்திரை திருவிழாவின் தேரோட்டம் நடைபெற உள்ளதால் வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    அதேபோல் தேனி தொகுதியிலும் வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என அனைத்து கட்சி பிரதிநிதிகளும் மாவட்ட கலெக்டர், பல்லவி பல்தேவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கையில், மதுரையை போலவே தேனி மாவட்டத்திலும் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவிலில் ஏப்ரல் 19-ந் தேதி சித்ரா பவுர்ணமி விழா நடைபெறுகிறது.

    இதற்காக முதல் நாளே தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். இதனால் வாக்குப்பதிவு பாதிக்கப்படும். 2 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின்போது பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள். இரு மாநில எல்லையில் இக்கோவில் அமைந்துள்ளதால் பிரச்சினையை தவிர்க்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இதுபோன்ற சூழ்நிலையில் தேர்தல் நடைபெற்றால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். எனவே தேனி பாராளுமன்ற தேர்தல் தேதியை ஒத்திவைக்க வேண்டும் என்றனர்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    சித்ரா பவுர்ணமி விழா 19-ந் தேதிதான் நடக்கிறது. அதற்கு முதல் நாளான 18-ந் தேதி வாக்குப்பதிவு முடிந்து விடும். எனவே அதற்கும் தேர்தலை தள்ளி வைப்பதற்கும் சம்பந்தம் இருப்பதாக ஏற்றுக்கொள்ள முடியாது. இருந்தபோதும் அனைத்து கட்சியினர் தெரிவித்த கருத்துக்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் இதுகுறித்து பரிசீலனை செய்து உரிய முடிவு எடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #ParliamentElection #Theniconstituency

    பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் விருப்ப மனு வாங்கியுள்ளார். #ADMK #OPS #Ravindranathkumar
    தேனி:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனு வாங்கும் பணி அ.தி.மு.க.வில் நேற்று தொடங்கியது.

    கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விருப்ப மனு வழங்கும் பணியை துவக்கி வைத்தனர்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் தேனி தொகுதிக்கும், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மத்திய சென்னை தொகுதிக்கும், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன் ராமநாதபுரம், வேலூர் தொகுதிக்கும் விருப்ப மனுக்கள் வாங்கிச் சென்றனர்.

    முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, முக்கூர் சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜலட்சுமி, வடசென்னை மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்பட 250-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனுக்களை பெற்றனர்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    நான் கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து படிப்படியாக கட்சி பொறுப்புக்கு வந்தவன். அம்மா எனக்கு தேனி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பதவியை தந்து அழகு பார்த்தார். அதில் திறம்பட பணியாற்றியதால் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

    கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நான் நன்கு அறிமுகம் ஆனவன்.


    பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட விருப்பப்பட்டேன். எனது முடிவை தந்தையிடம் தெரிவித்தேன். அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை.

    அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் விருப்ப மனு வாங்கிக் கொள்ளலாம் என்றார்.

    நான் இதுவரை பல்வேறு தேர்தல்களில் கழக வேட்பாளர்களின் வெற்றிக்காக பணியாற்றிய அனுபவம் உண்டு. இந்த முறை நான் தேனி தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். கட்சி அனுமதித்தால் களம் இறங்குவேன். வெற்றிக் கனியை சமர்ப்பிப்பேன்.

    எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். கட்சித் தலைமை எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #OPS #Ravindranathkumar
    ×