search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teachers day"

    • மாணவிகள் ஆசிரியர்களுக்கு ரோஜா பூ வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
    • ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பள்ளிகளில் இன்று ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைபள்ளியில் மாணவிகள் ஆசிரியர்களுக்கு ரோஜா பூ வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதேப்போல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். உடுமலை, பல்லடம், தாராபுரம், காங்கயம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.  

    • உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட வீரமாமுனிவர் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
    • பள்ளியில் சேவையாற்றி வரும் ஆசிரியர்களை பெருமை சேர்க்கும் விதமாக சால்வை அணிவித்து ஆசிரியர்களின் சேவையை பாராட்டி பேசினார்.

    புதுச்சேரி, செப்.5-

    உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட வீரமாமுனிவர் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ. நேரு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பள்ளியில் சேவையாற்றி வரும் ஆசிரியர்களை பெருமை சேர்க்கும் விதமாக சால்வை அணிவித்து ஆசிரியர்களின் சேவையை பாராட்டி பேசினார். '

    விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை வேலம்மாள், ஆசிரியர்கள் மாணிக்கவாசகம், ஜோஸ்வின்நிர்மலா, முத்துசெல்வம், பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் குப்புசாமி, ஆசிரியர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் அப்பகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்கள் ராமலிங்கம், சிவராஜ், வேலாயுதம், கைலாஷ், சாமிநாதன், பழனி, தமிழ், ராஜா, தமிழ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் பணி சிறப்பாக அமைந்தால் மட்டுமே, நாடு தான் எதிர்பார்க்கும் கல்வி அறிவு வளர்ச்சியின் முழு பயனையும் அடைந்திட முடியும்.
    • எக்காலத்திற்கும் எந்நாட்டு ஆசிரியர்களுக்கும் ஏற்புடைய இந்த சிறப்பு தகுதிகளை, குணநலன்களை ஆசிரிய சமுதாயம் முழுமையாக பெற்றிடுவது மிகவும் அவசியம்.

    சங்ககாலம் முதற்கொண்டே கல்விக்கும், கல்வி அறிவில் உயர்ந்த புலவர் பெருமக்கள் உள்ளிட்டோரை, நாடாண்ட மன்னன் முதல் சாதாரண குடிமக்கள் வரை அனைவரும் போற்றி, அரவணைத்து வந்ததை நம் சங்க இலக்கியங்கள் மூலம் அறிய முடிகிறது.

    புறநானூற்று பாடலில், பாண்டிய மன்னன் ''ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்'' கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பொருள் செலவு மட்டுமல்லாமல் மற்றைய தியாகங்களும் செய்தும் கல்வியை கற்றிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இது அக்காலத்தில் தமிழர்கள் கல்விக்கு கொடுத்து வந்த முக்கியத்துவத்தை தெளிவாக உணர்த்துகிறது.

    கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் பணி சிறப்பாக அமைந்தால் மட்டுமே, நாடு தான் எதிர்பார்க்கும் கல்வி அறிவு வளர்ச்சியின் முழு பயனையும் அடைந்திட முடியும். சங்க காலத்தில் எழுதப்பட்ட இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கு பிறகு இன்றளவும் நீர்மையுடன் நிலைத்து நிற்கும் பவணந்தி முனிவரால் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இலக்கண நூல் 'நன்னூல்' ஆகும். இதில் ஆசிரியர்கள் எப்படிப்பட்ட திறமைகள், குணநலன்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை மிகத் தெளிவாக வரையறுத்து கூறுவது மிகுந்த போற்றுதலுக்குரியது ஆகும்.

    ஆசிரியர் என்பவர் கொள்கை மேன்மை உடையவராகவும், கற்ற கல்வியில், கற்பிக்கும் கல்வியில் தெளிந்த ஞானம் பெற்றவராகவும், தன் எண்ணத்திற்கு வலிமை சேர்க்கும் கோட்பாடுகளை தொகுத்துக் கட்டுரையாக வரையும் வல்லமை பெற்றவராகவும், மலர் போன்ற மென்மை குணம் உடையவராகவும், உலக நடப்புகள் யாவும் அறிந்தவராகவும், ஒழுக்கத்தில் உயர்ந்த குணநலன்கள் அமைய பெற்றவராகவும் இருந்திட வேண்டும் என்று, ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டிய பண்பு நலன்கள் நன்னூல் வரையறுத்துக் கூறியிருப்பது என்றென்றும் போற்றுதற்குரியது. எக்காலத்திற்கும் எந்நாட்டு ஆசிரியர்களுக்கும் ஏற்புடைய இந்த சிறப்பு தகுதிகளை, குணநலன்களை ஆசிரிய சமுதாயம் முழுமையாக பெற்றிடுவது மிகவும் அவசியம்.

    உலகத்தின் தலைசிறந்த தத்துவ மேதை, ரஷியாவில் இந்தியாவின் தூதுவர், நாட்டின் குடியரசு தலைவர் (1962) என பன்முக சிறப்புகளை பெற்ற டாக்டர் ராதா கிருஷ்ணன், சென்னை மாநிலக் கல்லூரியில் தத்துவ பேராசிரியராக பணியாற்றி, மாணவ சமுதாயத்தின் உயர்விற்கு தொண்டாற்றியதன் காரணமாக அவர் பிறந்த செப்டம்பர் 5-ந் தேதியை மத்திய அரசு ''ஆசிரியர் தினமாக'' கடைபிடித்து வருகிறது.

    இந்த இனிய நாளில் ''நன்னூல்'' ஆசிரியர் கூறிய இலக்கணத்தை ஏற்று, மாணவர்கள் கல்வியில், ஒழுக்கத்தில், வாழ்வின் அனைத்து நிலைகளிலும் உயர்வு பெற்றிடும் வகையிலே ஆசிரியர்கள் நல்வழி காட்டியாக இருந்து அர்ப்பணிப்பு உணர்வோடு தொண்டாற்றிட வேண்டும்.

    • ஆரம்ப காலங்களில் குருகுல கல்விமுறை இருந்தது. இதில் மாணவர்கள், குருவின் இல்லத்திற்கே சென்று பயின்றனர்.
    • பெற்றெடுக்காத பல குழந்தைகளுக்கு தாயாக, தோழியாக, வழிகாட்டியாக இருப்பவர்கள் ஆசிரியர்களே.

    தலைப்பாகையும், கைப்பிரம்பும் ஓர் ஆசிரியரின் அடையாளமாய் காணப்பட்டது ஒரு காலம். இன்றோ கணிப்பொறியும், நவீன உத்திகளும் ஆசிரியரின் இடத்தை ஆக்கிரமித்துள்ளன. அன்று புளியங்கொட்டையை கொண்டு 'அ' போட பழகியது குழந்தை. இன்றோ கணிப்பொறியின் முன் அமர்ந்து அலங்கார ஓசையுடன் 'A' போட பழகுகிறது குழந்தை. இது காலத்தின் மாற்றம்.

    ஆரம்ப காலங்களில் குருகுல கல்விமுறை இருந்தது. இதில் மாணவர்கள், குருவின் இல்லத்திற்கே சென்று பயின்றனர். குரு என்பவர் தெய்வத்திற்கு நிகரானவர்களாக கருதப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சென்று பயின்று வரக்கூடிய பள்ளி என்ற ஓர் அமைப்பு தோன்றியது. சுண்ணாம்பு கட்டியும், கரும்பலகையும் பிரதானமாக கருதப்பட்டது. வாய்மொழியாக ஆசிரியர் கற்பிப்பதும், அதை செவிவழியாய் மாணவர்கள் கேட்பதுமாய் இருந்தது.

    இந்த நிலையும் மாறி, வண்ணப்படங்கள், கையால் செய்த மாதிரிகள் கொண்டு கற்பித்து பெரும் மாற்றம் ஏற்பட்டது. இந்த மாற்றமும் காலப்போக்கில் மாறியது. மாற்றத்தின் விளைவாய் கணிப்பொறிவழி கல்வி ஏற்பட தொடங்கியது. வகுப்பறையிலேயே குறுந்தகடுகள் மூலம் கற்பிக்கும் நிலை உருவாகியுள்ளது. இன்றைய இணையத்தின் வளர்ச்சிக்கு இணையாக எதுவும் இல்லை. நூலகத்தில் மணிக்கணக்கில், நாட்கணக்கில் தேடித்தேடி சில விஷயங்களை பிடிப்போம். ஆனால் கணினியில் வலைவீசி தேடுபவர்க்கு வலைத்தளங்களில் எதுவும் சிக்காமல் இருப்பதில்லை.

    சமூக வலைதளங்கள் வேறு பல்வேறு நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளன. அவை நேரத்தை கலாசாரத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளன என்பதையும், மனித உறவுகளையே குறைத்துவிடுகின்றன என்பதனையும் எண்ணிப்பார்க்க இயலாமல் இல்லை. ஒரு புறம் வளர்ச்சி, மறுபுறம் கலாசார சீரழிவு. இதில் எதை ஏற்பது. எதை தவிர்ப்பது என்பதில், காய்ச்சிய இரும்பையும் கையில் பிடிக்கும் துணிச்சலுள்ள இளைஞர் சமுதாயத்தில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

    இங்குதான் தலைகாட்டுகிறார் ஆசிரியர். காய்ச்சிய இரும்பை எப்படியும் வளைக்கலாம், அதை லாவகமாக பக்குவமாக மெருகேற்றி வளைக்கலாம் என்பதை கற்பிக்க முற்படுகிறார் ஆசிரியர். ஆசிரியர் என்பவர் உன்னத ஸ்தானத்துக்கு உரியவர் என்பதை நிரூபிக்கிறார். தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆசிரியர்களின் முக்கியத்துவம் சில நேரங்களில் குறைந்துவிட்டதுபோல் தோன்றலாம். சில நேரங்களில் ஆசிரியர்களுக்கு மாற்றாக தொழில்நுட்ப வளர்ச்சி வளர்ந்துவிட்டதுபோல் மாயையும் உருவாக்கலாம். ஆனால் மிகவும் கூர்ந்து நோக்கும்போது ஆசிரியர் இச்சாதனங்களுக்கு உதவி செய்யும் ஒரு சாதனமாகவே காட்சி தருகிறார்.

    இந்த ஆசிரியர் என்ற உன்னத மனிதரின் இடத்தை வேறு எந்த வளர்ச்சியாலும் பிடிக்க முடியாது என்பது முற்றிலும் உண்மை. ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு மட்டுமே தாயாக இருக்கிறார். ஆனால் பெற்றெடுக்காத பல குழந்தைகளுக்கு தாயாக, தோழியாக, வழிகாட்டியாக இருப்பவர்கள் ஆசிரியர்களே.

    மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற உயர்ந்த நிலையில் உள்ள ஆசிரியர்கள் என்றுமே யாரும் எட்டிப்பிடிக்க முடியாத உன்னதமான, உயர்வான இடத்திலேயே செயல்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. நேற்றைய ஆசிரியரும், இன்றைய ஆசிரியரும், நாளைய ஆசிரியரும், மனித குலத்தை பொறுத்தவரை அற்புதமான நெறியாளர் ஸ்தானத்திற்கு உரியவர்! அதை எந்த விஞ்ஞானமும் மாற்றிட இயலாது. வாழ்வில் அனைத்தும் நெறிப்படுத்த வல்லாரே ஆசிரியர் பெருமக்கள். இதை உணர்த்தும் வண்ணமே டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினம் இன்று ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்.
    சேலம்:

    சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்வாணி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பொன்னாடை அணிவித்தார். பின்னர் கடந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கி கலெக்டர் ரோகிணி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-



    தற்போது நாங்கள் மேடையில் இருப்பதற்கு முழு காரணம் ஆசிரியர்கள் தான். அதே போன்று மாணவிகளாகிய நீங்கள் வரும் காலத்தில் மேடைக்கு வர காரணமாக இருப்பவர்களும் ஆசிரியர்கள் தான். ஆசிரியர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதை நிறைவேற்ற மாணவ-மாணவிகள் முழு முயற்சி செய்ய வேண்டும்.

    மாணவர் பருவம் மிக முக்கியமானது. ஒவ்வொரு மனிதனுக்கும் முதல் ஆசிரியர் அம்மாவாக இருந்தாலும், கல்வி கற்று கொடுப்பவர்கள் ஆசிரியர்கள் தான். அதிக மதிப்பெண்கள் பெறவும், நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுப்பவரும் ஆசிரியர் தான். எனவே ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு மாணவ-மாணவிகள் சிறந்த முறையில் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

    ஆசிரியர் மற்றும் பெற்றோர் எதிர்பார்ப்பை மாணவ-மாணவிகள் நிறைவேற்ற வேண்டும். நான் (கலெக்டர்) ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை அரசு பள்ளியில் தான் படித்தேன். அதே போன்று என்ஜினீயரிங் படிப்பும் அரசு கல்லூரியில் தான் படித்தேன்.

    தற்போது அரசு பணியில் உள்ளேன். மாணவ-மாணவிகள் அதிகம் படிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்க வேண்டும். அரசு பள்ளி உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவர் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-மாணவிகளிடம் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மணிவண்ணன் நன்றி கூறினார். முன்னதாக நேற்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியைகளுக்கு, மாணவிகள் பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். 
    கரூரில் உள்ள பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் நேற்று ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது ஆசிரியர் களுக்கு பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி மாணவ, மாணவிகள் அசத்தினர்.
    கரூர்:

    ஆசிரியராக பணியாற்றி சிறந்த கல்வியாளராக திகழ்ந்து ஜனாதிபதியாக பதவி வகித்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று ஆசிரியர் தினத்தையொட்டி கரூர் பசுபதிபாளையம் அருகே கொளந்தாகவுண்டனூரில் உள்ள தேவி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாணவ, மாணவிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    பின்னர் தங்களது குருவான ஆசிரியர்களை வணங்கி அவர்களுக்கு பேனா உள்பட பல்வேறு பரிசுகளை வழங்கி அசத்தினர். ஆசிரியர் தினத்தையொட்டி வகுப்பறை, பள்ளி வளாகம், நாம் வாழும் குடியிருப்பு பகுதி உள்ளிட்டவற்றை தூய்மையாக வைத்து கொள்வது குறித்த கருத்துகளை மாணவர்கள் நாடகம் மூலம் வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராஜா மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் கரூர் கிளை சார்பில் கரூர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. தேர்வு நெறியாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இயற்பியல் துறை பேராசிரியர் குணசேகரன் வரவேற்று பேசினார். இதில், கல்லூரி முதல்வர் ஜோதிவெங்கடேஷ்வரன் கலந்து கொண்டு பேசுகையில், கல்வி பயிலும் மாணவர்கள் வெறும் பாடத்தை படிப்பதோடு மட்டும் நின்று விடாமல் சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும். தற்போதைய நவீன உலகில் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்டவை மாணவர்களையும், இளைஞர்களையும் ஆட்கொண்டிருக்கிறது. எனவே, மாணவர்கள் பலரும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக மாறி வருகின்றனர். எனவே அவர்களை நல்வழிப்படுத்துவது ஆசிரியர்களின் கடமையாகும்.

    வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில் விவசாயம் சார்ந்த படிப்புகளில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது நீதிபோதனைகளுடன் கூடிய கதையை எடுத்துக்கூறி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்துறை தலைவர் மாரியம்மாள், பேராசிரியர்கள் ராதாகிருஷ்ணன், கார்த்திகேயன், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல, கரூரில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளிலும் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது கல்வி பயிலும் மாணவர்களிடையே ஆர்வத்தை தூண்டும் வகையில் டாக்டர் ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக் கப்பட்டது 
    சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கல்லாதவர்களே இல்லை எனும் நிலையை அதிமுக அரசு உருவாக்கி வருகிறது என தெரிவித்தார். #TeachersDay #EdappadiPalaniswami #ADMK
    சென்னை:

    சென்னை கலைவாணர் அரங்கில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி , கருவறை, ஆசிரியர் உள்ள வகுப்பறை இரண்டும் முக்கியமானது. மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க நிதி ஒதுக்கப்படும். ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    புதிய பாடத்திட்டங்களை சிறப்பாக கற்பிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது .

    ஆசிரியர்கள் பாடம் நடத்துபவராக மட்டும் இருக்கக் கூடாது. அதையும் தாண்டி மாணவர்களுக்காக உழைக்க வேண்டும். பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். கல்லாதவர்களே இல்லை என்னும் நிலையை அதிமுக தலைமையிலான அரசு உருவாக்கி வருகிறது என தெரிவித்தார்.

    மேலும், விழாவில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், இந்தியாவிலேயே தமிழகம் தான் கல்வியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. கூடாநட்பை உதறி தள்ள வேண்டும். என்றார். 

    இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், அக்டோபர் இறுதிக்குள் 3,000 பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும் எனதெரிவித்தார்.  #TeachersDay #EdappadiPalaniswami #ADMK
    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று விருதுகளை வழங்கினார். #NationalTeachersAwards
    புதுடெல்லி:

    சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    தமிழகத்தில் இருந்து கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஸதி, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.


    இந்நிலையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

    தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது. #NationalTeachersAwards
    இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நிலையில், ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #TeachersDay
    புதுடெல்லி:

    முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் நாள், ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். “நமது சிறந்த ஆசான்கள் நமது தேசத்தை கட்டமைக்க நமக்கு வழிகாட்டட்டும்; உலகம் முழுவதும் நல்லறிவு, சமாதானம், இணக்கம் தழைத்தோங்க ஆசிரியர்கள் உதவ வேண்டும்” என்று ராம்நாத் கோவிந்த் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் இந்த சிறந்த நாளில் ஆசிரிய சமூகத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இளம் மனங்களை வடிவமைப்பதிலும் தேசத்தை கட்டமைப்பதிலும் ஆசிரியரிகளின் பங்களிப்பு முக்கியமானது. நமது முன்னாள் ஜனாதிபதியும் சிறந்த ஆசிரியருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான இன்று அவரை நாம் வணங்குவோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

    தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 45 ஆசிரியர்களை நேற்று சந்தித்த பிரதமர் மோடி, அவர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து சிறிது நேரம் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது. #TeachersDay

    ஆசிரியர் தின விருதுகளைப் பெறும் ஆசிரியர்களுக்கும், பண்பட்ட சமுதாய உணர்வுகளை உருவாக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஆசிரியர் சமுதாயத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். #TeachersDay #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

    கல்வி வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி, நாட்டின் முன்னேற்றத்திற்கு வித்திடும் அறிவுசார்ந்த இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு தி.மு.க. சார்பில் இதயம் நிறைந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சமுதாய மறுமலர்ச்சி, சாதி பேதமற்ற சமத்துவ உணர்வு, மத பேதமற்ற மானிட சமுதாயத்தின் மாண்பு அனைத்திற்கும் தேவையானது ஆசிரியர்கள் நடத்தும் கல்விப்புரட்சி என்பதை நானறிவேன்.

    ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை தரமான கல்வியை வழங்கிட தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, அறிவு மணிகளைக் கோர்த்தெடுத்து வருங்கால தலைமுறையை உருவாக்கும் மாமணிகளாகத் திகழும் தியாக உணர்வுமிக்க ஆசிரியர்களை இந்த நாடே ஓரணியில் நின்று மனமார வாழ்த்துகிறது; மதித்துப் பாராட்டிக் கொண்டிருக்கிறது.

    ஆகவே, அந்த பாராட்டுதலில் தி.மு.க.வும் இணைந்து, இன்றைய தினம் ஆசிரியர் தின விருதுகளைப் பெறும் ஆசிரியர் பெருமக்களை வாழ்த்தி, பண்பட்ட சமுதாய உணர்வுகளை உருவாக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஆசிரியர் சமுதாயத்திற்காக அவர்களின் சீரிய நலன்களுக்காக தி.மு.க. எந்நாளும் துணை நிற்கும் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #TeachersDay #MKStalin
    தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 45 ஆசிரியர்களை இன்று சந்தித்த பிரதமர் மோடி அவர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்ததோடு, சிறிது நேரம் கலந்துரையாடினார். #PMModi #NationalTeachersAward #TeachersDay
    புதுடெல்லி:

    சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான, செப்டம்பர் 5-ஆம் தேதி, ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் நாளை நடைபெறும் விழாவில் கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு வழங்கவுள்ளார். 

    இதற்கு முன்னர், நாடு முழுவதும் 300-க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்த விருதின் முக்கியத்துவம் கருதி, தற்போது ஆண்டுக்கு 45 ஆசிரியர்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தின் கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் ஆர்.சதியும் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

    இந்நிலையில், விருதுக்கு தேர்வான 45 ஆசிரியர்களை இன்று சந்தித்த பிரதமர் மோடி, அவர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார். மேலும், அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரும் உடனிருந்தார். 
    நாடு முழுவதும் ஆசிரியர் தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி புதுவை ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #TeachersDay
    புதுச்சேரி:

    நாடுமுழுவதும் ஆசிரியர் தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது.

    இதனையொட்டி புதுவை ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    நற்கல்வி நற்சமுதாயத்தை உருவாக்குகிறது. இதை கருத்தில்கொண்டு புதுவை அரசு ஆண்டுதோறும் 15 சதவீதத்திற்கும் அதிகமாக நிதியை கல்விக்காக செலவு செய்கிறது. ஆசிரியர்கள் வருங்கால சமுதாயத்தை உருவாக்கும் உன்னத சேவையை செய்து வருகின்றனர்.

    மாணவர்களின் கல்வித்திறன் மேம்படுத்துவது மட்டுமின்றி அவர்களை நல்வழியில் செம்மைப்படுத்தி மெருகேற்றும் மிக முக்கிய பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உள்ளது.

    தலைசிறந்த விஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல்கலாம் தன்னை ஒரு ஆசிரியராக நினைவு கூர்வதையே விரும்புவதாக தெரிவித்தது ஆசிரியர் பணியின் மேன்மைக்கு சான்று.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆசிரியர் பணியை மேற்கொண்டுள்ள ஆசிரியர்கள் அனைவரையும் கவுரவித்து நினைவுகூறும் பொருட்டு செப்டம்பர் 5-ம் நாள் முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    இந்நன்னாளில் ஆசிரியர் சமுதாயம் எல்லா வளமும் பெற உளமாற வாழ்த்துகிறேன். ஆசிரியர் பணி என்றென்றும் சிறக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TeachersDay
    ×