search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஆசிரியர்களை போற்றி பாதுகாத்த தமிழகம்

    • கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் பணி சிறப்பாக அமைந்தால் மட்டுமே, நாடு தான் எதிர்பார்க்கும் கல்வி அறிவு வளர்ச்சியின் முழு பயனையும் அடைந்திட முடியும்.
    • எக்காலத்திற்கும் எந்நாட்டு ஆசிரியர்களுக்கும் ஏற்புடைய இந்த சிறப்பு தகுதிகளை, குணநலன்களை ஆசிரிய சமுதாயம் முழுமையாக பெற்றிடுவது மிகவும் அவசியம்.

    சங்ககாலம் முதற்கொண்டே கல்விக்கும், கல்வி அறிவில் உயர்ந்த புலவர் பெருமக்கள் உள்ளிட்டோரை, நாடாண்ட மன்னன் முதல் சாதாரண குடிமக்கள் வரை அனைவரும் போற்றி, அரவணைத்து வந்ததை நம் சங்க இலக்கியங்கள் மூலம் அறிய முடிகிறது.

    புறநானூற்று பாடலில், பாண்டிய மன்னன் ''ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்'' கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பொருள் செலவு மட்டுமல்லாமல் மற்றைய தியாகங்களும் செய்தும் கல்வியை கற்றிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இது அக்காலத்தில் தமிழர்கள் கல்விக்கு கொடுத்து வந்த முக்கியத்துவத்தை தெளிவாக உணர்த்துகிறது.

    கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் பணி சிறப்பாக அமைந்தால் மட்டுமே, நாடு தான் எதிர்பார்க்கும் கல்வி அறிவு வளர்ச்சியின் முழு பயனையும் அடைந்திட முடியும். சங்க காலத்தில் எழுதப்பட்ட இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கு பிறகு இன்றளவும் நீர்மையுடன் நிலைத்து நிற்கும் பவணந்தி முனிவரால் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இலக்கண நூல் 'நன்னூல்' ஆகும். இதில் ஆசிரியர்கள் எப்படிப்பட்ட திறமைகள், குணநலன்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை மிகத் தெளிவாக வரையறுத்து கூறுவது மிகுந்த போற்றுதலுக்குரியது ஆகும்.

    ஆசிரியர் என்பவர் கொள்கை மேன்மை உடையவராகவும், கற்ற கல்வியில், கற்பிக்கும் கல்வியில் தெளிந்த ஞானம் பெற்றவராகவும், தன் எண்ணத்திற்கு வலிமை சேர்க்கும் கோட்பாடுகளை தொகுத்துக் கட்டுரையாக வரையும் வல்லமை பெற்றவராகவும், மலர் போன்ற மென்மை குணம் உடையவராகவும், உலக நடப்புகள் யாவும் அறிந்தவராகவும், ஒழுக்கத்தில் உயர்ந்த குணநலன்கள் அமைய பெற்றவராகவும் இருந்திட வேண்டும் என்று, ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டிய பண்பு நலன்கள் நன்னூல் வரையறுத்துக் கூறியிருப்பது என்றென்றும் போற்றுதற்குரியது. எக்காலத்திற்கும் எந்நாட்டு ஆசிரியர்களுக்கும் ஏற்புடைய இந்த சிறப்பு தகுதிகளை, குணநலன்களை ஆசிரிய சமுதாயம் முழுமையாக பெற்றிடுவது மிகவும் அவசியம்.

    உலகத்தின் தலைசிறந்த தத்துவ மேதை, ரஷியாவில் இந்தியாவின் தூதுவர், நாட்டின் குடியரசு தலைவர் (1962) என பன்முக சிறப்புகளை பெற்ற டாக்டர் ராதா கிருஷ்ணன், சென்னை மாநிலக் கல்லூரியில் தத்துவ பேராசிரியராக பணியாற்றி, மாணவ சமுதாயத்தின் உயர்விற்கு தொண்டாற்றியதன் காரணமாக அவர் பிறந்த செப்டம்பர் 5-ந் தேதியை மத்திய அரசு ''ஆசிரியர் தினமாக'' கடைபிடித்து வருகிறது.

    இந்த இனிய நாளில் ''நன்னூல்'' ஆசிரியர் கூறிய இலக்கணத்தை ஏற்று, மாணவர்கள் கல்வியில், ஒழுக்கத்தில், வாழ்வின் அனைத்து நிலைகளிலும் உயர்வு பெற்றிடும் வகையிலே ஆசிரியர்கள் நல்வழி காட்டியாக இருந்து அர்ப்பணிப்பு உணர்வோடு தொண்டாற்றிட வேண்டும்.

    Next Story
    ×