search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் தினம்"

    • குழந்தைகள் கிருஷ்ணர்- ராதை வேடம் அணிந்து நடனமாடினர்.
    • விளையாட்டுப் போட்டிகளில் சிவசக்தி வித்யாலயா பள்ளி மாணவர்கள் பதக்கங்கள் பெற்றனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தை அடுத்த ஆவுடையானுார் அருகே உள்ள பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தினவிழா மற்றும் கிருஷ்ண ஜெயந்தி தின விழா கொண்டாடப்பட்டது.

    பள்ளி முதல்வர் நித்யா தினகரன் தலைமை தாங்கினார். மாணவி சுதர்சினி வரவேற்று பேசினார். மாணவி வைஷ்ணவி ஆசிரியர் தின விழா கொண்டாடுவதன் நோக்கத்தை எடுத்து கூறினார். 10-ம் வகுப்பு மாணவிகள் பள்ளி ஆசிரியைகள் எவ்வாறு சிறந்த மாணவர்களை உருவாக்குகிறார்கள் என்பதை நாடகம் மூலம் எடுத்து கூறினர்.

    தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குழந்தைகள் கிருஷ்ணர்- ராதை வேடம் அணிந்து நடனமாடினர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. முன்னதாக திசையன்விளை வி.எஸ்.ஆர். கல்விக்குழுமம் நடத்திய 4 மாவட்டங்களுக்கு இடையேயான கபாடி போட்டியில் பள்ளி மாணவர்கள் 0-14 மற்றும் யு-19 பிரிவில் விளையாடி வெற்றி கோப்பையை கைப்பற்றினர். மேலும் கோவில்பட்டியில் வித்யாபாரதி நடத்திய பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் சிவசக்தி வித்யாலயா பள்ளி மாணவர்கள் பதக்கங்கள் பெற்றனர்.

    சுரண்டை எஸ்.ஆர். பள்ளியில் நடைபெற்ற பல்வேறு கலை-விளையாட்டு போட்டிகளிலும் மாணவர்கள் திறம்பட பங்கேற்று வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விழாவின்போது பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் மாணவர்களால் ஆசிரியைகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டி களில் ஆசிரியைகள் உற்சாக மாக கலந்து கொண்டனர்.

    முடிவில் மாணவி ஆஸ்மி நன்றி கூறினார்.

    • எங்களுக்கெல்லாம் ஆசிரியராக நான் பார்த்தவர் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
    • அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நெல்லை:

    வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளையொட்டி நெல்லை டவுன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு மாலை அணிவித்தார்.

    இதில் கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, நெல்லை சப்-கலெக்டர் ஷேக் அயூப், பாளை யூனியன் சேர்மன் தங்கபாண்டியன், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி, தாசில்தார் வைகுண்டம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கதிரவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய சுதந்திரப் போராட்ட வீர வரலாற்றில் மறைக்க முடியாத, மறக்க முடியாத ஒரு பெயராக திகழ்ந்தது வ.உ.சி. அவரது 150-வது பிறந்தநாளில் பல்வேறு சிறப்புகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தார்.நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள மணிமண்டபத்தை சிறப்புற அழகு செய்ய ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    மணிமண்டபத்தை மேம்படுத்திடும் வகையிலும், இளைஞர்களுக்கு உந்து சக்தியாக போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் பகுதிகளாக மணிபண்டபங்கள் திகழ வேண்டும் என்பதற்காக போட்டி தேர்வில் ஈடுபடும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக சிறப்பு செய்துள்ளார்.

    எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் விடுதலை போராட்ட வீரர்களையும், அவர்களது தியாகங்களையும் போற்றி பாராட்டும் அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது. எங்களுக்கெல்லாம் ஆசிரியராக நான் பார்த்தவர் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவரிடம் பாடம் பெற்ற மாணவர்களாக அத்தனை பேரும் நாங்கள் இங்கு உள்ளோம்.

    அவர் தனக்காக இல்லாமல், பிறருக்காக தமிழ் சமுதாயத்திற்காக ஆசிரியராக திகழ்ந்தவர். எத்தனையோ பேரை உருவாக்கியவர்கள் ஆசிரியர்கள். ஒவ்வொரு ஆசிரியரை பற்றியும் ஒவ்வொருவருக்கு நல்ல நினைவுகள் பல உண்டு. இந்த தருணத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேசிய ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள்.
    • திறன்மிகு பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆசிரியர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் 'பாரதம்' என்று குறிப்பிட்டு உள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தேசிய ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது இளம் மனங்களின் திறனையும் குணநலன்களையும் வடிவமைத்து வலிமை மற்றும் திறன்மிகு பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • மாணவச் செல்வங்களை அறிவாற்றல் கொண்டவர்களாய் வளர்த்தெடுத்து வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்நாளெல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கே கல்வித்துறை ஆசிரியர்கள்.
    • கல்வியுடன் இணைந்து உயரிய பண்பாட்டையும் அறநெறிகளையும் ஒழுக்கத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மாணவ சமுதாயத்துக்குக் கற்றுத்தரும் அறிவுப் பெற்றோராக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.

    சென்னை :

    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்! தாய் தந்தைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்கள். மாணவச் செல்வங்களை அறிவாற்றல் கொண்டவர்களாய் வளர்த்தெடுத்து வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்நாளெல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கே கல்வித்துறை ஆசிரியர்கள். கல்வியுடன் இணைந்து உயரிய பண்பாட்டையும் அறநெறிகளையும் ஒழுக்கத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மாணவ சமுதாயத்துக்குக் கற்றுத்தரும் அறிவுப் பெற்றோராக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தன்னை உருக்கி அறிவூட்டும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்னும் நல்லாசிரியர் விருதாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • விருது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

    காஞ்சிபுரம்:

    முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதா கிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ந்தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் அன்றைய தினம் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்னும் நல்லாசிரியர் விருதாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குரிய விருது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

    அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருது பெறுபவர்களின் விவரம் வருமாறு:-

    புழுதிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சங்கர், மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தி.வி.லதா, அத்திவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சு.மீனாட்சி, பாப்பாநல்லூர் ஆர்.சி. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர். சுகந்தி, மெல்ரோசாபுரம் சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கிரேஸ் பெட்ரீ ஷியா மாலினி,

    செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ம.சச்சி தானந்தம், காரணை புதுச்சேரி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ப.இரா. சூரியகலா, மானாம்பதி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ச.நாகராஜி, ஊரப்பாக்கம் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ந.புவனேஸ்வரி ஆகியோருக்கு மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், வல்லக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் அ.ஷேக் தலைமை அகமது, வாலாஜாபாத் ஒன்றியம் பூதேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சி. சுந்தர ராசன்,

    குன்றத்தூர் ஒன்றியம், சிக்கராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கீதா, கீழ்க்கதிர்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சி.மழலை நாதன், வாலாஜாபாத் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரா. சொர்ணலட்சுமி,

    குன்றத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ச.ஆ.வசந்தி, ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் எஸ்.பி.சோமசுந்தரம், காஞ்சிபுரம் மானாம்பதி அரசு மேல்நிலைப்பள்ளி தொழில் கல்வி ஆசிரியர் அ.சுந்தரராஜன், குன்றத்தூர் லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை நூருல் குதாயா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    • டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த வாலாஜா அரசு பள்ளி தற்போது ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது.
    • சுதந்திரத்திற்கு பிறகு 1949-ம் ஆண்டு தேசிய கொடி ஏற்றுவதற்காக தூண் அமைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றியுள்ளனர்.

    ராணிப்பேட்டை:

    முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன். இவரது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    டாக்டர் ராதாகிருஷ்ணன் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் 1888-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி பிறந்தார்.

    அப்போது தமிழகத்தின் முதல் நகராட்சியான வாலாஜாவில் அரசு பள்ளி தரம் வாய்ந்ததாக இருந்தது.

    டாக்டர் ராதாகிருஷ்ணன் வாலாஜா அரசு பள்ளியில் சேர்ந்தார். இதற்காக அவர் வாலாஜாவில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்து பள்ளி படிப்பை முடித்தார்.

    டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த வாலாஜா அரசு பள்ளி தற்போது ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது.

    இந்த பள்ளி 120 ஆண்டுகளை கடந்தும் திறமைமிக்க மாணவர்களை உருவாக்கி வருகிறது .

    இந்த பள்ளியில் மு.வரதராசனார் முன்னாள் தலைமைச் செயலர் பத்மநாபன், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் உள்ளிட்ட சாதனையாளர்கள் படித்துள்ளனர்.

    இந்த அரசு பள்ளி 1867-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தால் அந்த காலத்திலேயே மிகத் தரம் வாய்ந்த பர்மா தேக்குகளால் மேற்தளம் மாடிபடிக் கட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன .

    மிகப் பெரிய வாணிப நகரமாக விளங்கிய வாலாஜாவில் பல வியாபாரிகளின் பிள்ளைகள் இந்த பள்ளிக்கூடத்தில் கல்வி கற்பதை மிகவும் பெருமையாக கருதுகின்றனர்.

    கடந்த 1920-ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் திவான் பகதூராகவும் கவுன்சில் உறுப்பினராகவும் இருந்த ராஜகோபாலாச்சாரியார் முயற்சியினால் எச். வடிவில் பெரிய அளவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    சுதந்திரத்திற்கு பிறகு 1949-ம் ஆண்டு தேசிய கொடி ஏற்றுவதற்காக தூண் அமைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றியுள்ளனர்.

    தற்போது பழமை வாய்ந்த இந்த பள்ளியில் உள்ள கட்டிடங்கள் சிதிலமடைந்து உள்ளன. சில கட்டிடங்கள் இடித்து விழும் நிலையில் உள்ளன.

    ஓடுகள் சரிந்தும், சுவர்கள் சேதமடைந்து காணப்படுகிறது.

    நாளை இந்த பள்ளியில் ஆசிரியர் தின விழா கோலாகலமாக கொண்டாடவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

    இடியும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    • ஆசிரியர் ராமச்சந்திரன் பள்ளிக்கு தினமும் வரும்போது மாணவர்களின் சீருடை அணிந்தே வருவார்.
    • தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு திருக்குறளை கற்று கொடுத்து, திருக்குறளின் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் விதைத்து வருகிறார்.

    ஆசிரியராக பணியை தொடங்கி நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். அவரது நினைவாக அவருடைய பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 5-ந்தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    மாணவர்களின் எதிர்காலத்தை வளமுடைய தாக்கவும், அர்ப்பணிப்பு உணர்வோடும் செயல்படும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ந் தேதி மத்திய அரசு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

    தொடக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளியில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து 6 ஆசிரியர்களை தமிழக பள்ளி கல்வித்துறை பரிந்துரை செய்தது.

    அவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம் கீழாம்பல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் கே.ராமச்சந்திரன் என்பவரும் ஒருவராவார். இறுதியில் அவர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

    தமிழகத்தில் இருந்து இவர் மட்டுமே நல்லாசிரியராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நல்லாசிரியர் விருதை வழங்கினார்.

    கொரோனா காலத்தில் அரசு பள்ளியில் படித்த குழந்தைகளின் கல்வி தடைபட்டது. இதையடுத்து அவர்களுக்கு கல்வி கிடைக்கும் வகையில் ஆசிரியர் ராமச்சந்திரன் தனது சொந்த செலவில் செல்போன்கள் வாங்கி கொடுத்து உதவி செய்தார்.

    மேலும் தான் பணிபுரியும் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் யூடியூப்பில் தனி கணக்கு தொடங்கி மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்த வழி செய்துள்ளார். அதுமட்டுமின்றி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு திருக்குறளை கற்று கொடுத்து, திருக்குறளின் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் விதைத்து வருகிறார்.

    மேலும் தனது கிராமத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு டி.என்.பி.எச்.பி. போட்டி தேர்வுக்கு பயிற்சி வழங்கி கிராமத்து இளைஞர்களை அரசு ஊழியர்களாக்கும் முயற்சியை முன்னெடுத்து வருகிறார். இதன் காரணமாகவே இவருக்கு நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.

    நல்லாசிரியர் விருது பெற்ற ராமச்சந்திரனுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ஆசிரியர் ராமச்சந்திரன் பள்ளிக்கு தினமும் வரும்போது மாணவர்களின் சீருடை அணிந்தே வருவார். தானும் ஒரு மாணவன் தான் என்பதை வெளிக்காட்டும் வகையிலும், மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையே இடைவெளி இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாகவும் அவர் பள்ளி சீருடை அணிந்து வகுப்பு எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

    இந்த நிலையில் ஜனாதிபதியிடம் நல்லாசிரியர் விருது வாங்கும் போதும் அவர் பள்ளி சீருடை அணிந்தே வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆசிரியர் ராமச்சந்திரன் ஜனாதிபதியிடம் நல்லாசிரியர் விருது வாங்கும் வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு, பாராட்டு தெரிவித்துள்ளார்.

    • இளம் மனங்களில் கல்வியின் மகிழ்ச்சியை பரப்பும் கடின உழைப்பாளிகளான ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
    • முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.

    புதுடெல்லி:

    ஆசிரியர் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    இளம் மனங்களில் கல்வியின் மகிழ்ச்சியை பரப்பும் கடின உழைப்பாளிகளான ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

    முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மாணவிகள் ஆசிரியர்களுக்கு ரோஜா பூ வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
    • ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பள்ளிகளில் இன்று ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைபள்ளியில் மாணவிகள் ஆசிரியர்களுக்கு ரோஜா பூ வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதேப்போல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். உடுமலை, பல்லடம், தாராபுரம், காங்கயம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.  

    • கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் பணி சிறப்பாக அமைந்தால் மட்டுமே, நாடு தான் எதிர்பார்க்கும் கல்வி அறிவு வளர்ச்சியின் முழு பயனையும் அடைந்திட முடியும்.
    • எக்காலத்திற்கும் எந்நாட்டு ஆசிரியர்களுக்கும் ஏற்புடைய இந்த சிறப்பு தகுதிகளை, குணநலன்களை ஆசிரிய சமுதாயம் முழுமையாக பெற்றிடுவது மிகவும் அவசியம்.

    சங்ககாலம் முதற்கொண்டே கல்விக்கும், கல்வி அறிவில் உயர்ந்த புலவர் பெருமக்கள் உள்ளிட்டோரை, நாடாண்ட மன்னன் முதல் சாதாரண குடிமக்கள் வரை அனைவரும் போற்றி, அரவணைத்து வந்ததை நம் சங்க இலக்கியங்கள் மூலம் அறிய முடிகிறது.

    புறநானூற்று பாடலில், பாண்டிய மன்னன் ''ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்'' கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பொருள் செலவு மட்டுமல்லாமல் மற்றைய தியாகங்களும் செய்தும் கல்வியை கற்றிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இது அக்காலத்தில் தமிழர்கள் கல்விக்கு கொடுத்து வந்த முக்கியத்துவத்தை தெளிவாக உணர்த்துகிறது.

    கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் பணி சிறப்பாக அமைந்தால் மட்டுமே, நாடு தான் எதிர்பார்க்கும் கல்வி அறிவு வளர்ச்சியின் முழு பயனையும் அடைந்திட முடியும். சங்க காலத்தில் எழுதப்பட்ட இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கு பிறகு இன்றளவும் நீர்மையுடன் நிலைத்து நிற்கும் பவணந்தி முனிவரால் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இலக்கண நூல் 'நன்னூல்' ஆகும். இதில் ஆசிரியர்கள் எப்படிப்பட்ட திறமைகள், குணநலன்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை மிகத் தெளிவாக வரையறுத்து கூறுவது மிகுந்த போற்றுதலுக்குரியது ஆகும்.

    ஆசிரியர் என்பவர் கொள்கை மேன்மை உடையவராகவும், கற்ற கல்வியில், கற்பிக்கும் கல்வியில் தெளிந்த ஞானம் பெற்றவராகவும், தன் எண்ணத்திற்கு வலிமை சேர்க்கும் கோட்பாடுகளை தொகுத்துக் கட்டுரையாக வரையும் வல்லமை பெற்றவராகவும், மலர் போன்ற மென்மை குணம் உடையவராகவும், உலக நடப்புகள் யாவும் அறிந்தவராகவும், ஒழுக்கத்தில் உயர்ந்த குணநலன்கள் அமைய பெற்றவராகவும் இருந்திட வேண்டும் என்று, ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டிய பண்பு நலன்கள் நன்னூல் வரையறுத்துக் கூறியிருப்பது என்றென்றும் போற்றுதற்குரியது. எக்காலத்திற்கும் எந்நாட்டு ஆசிரியர்களுக்கும் ஏற்புடைய இந்த சிறப்பு தகுதிகளை, குணநலன்களை ஆசிரிய சமுதாயம் முழுமையாக பெற்றிடுவது மிகவும் அவசியம்.

    உலகத்தின் தலைசிறந்த தத்துவ மேதை, ரஷியாவில் இந்தியாவின் தூதுவர், நாட்டின் குடியரசு தலைவர் (1962) என பன்முக சிறப்புகளை பெற்ற டாக்டர் ராதா கிருஷ்ணன், சென்னை மாநிலக் கல்லூரியில் தத்துவ பேராசிரியராக பணியாற்றி, மாணவ சமுதாயத்தின் உயர்விற்கு தொண்டாற்றியதன் காரணமாக அவர் பிறந்த செப்டம்பர் 5-ந் தேதியை மத்திய அரசு ''ஆசிரியர் தினமாக'' கடைபிடித்து வருகிறது.

    இந்த இனிய நாளில் ''நன்னூல்'' ஆசிரியர் கூறிய இலக்கணத்தை ஏற்று, மாணவர்கள் கல்வியில், ஒழுக்கத்தில், வாழ்வின் அனைத்து நிலைகளிலும் உயர்வு பெற்றிடும் வகையிலே ஆசிரியர்கள் நல்வழி காட்டியாக இருந்து அர்ப்பணிப்பு உணர்வோடு தொண்டாற்றிட வேண்டும்.

    • ஆரம்ப காலங்களில் குருகுல கல்விமுறை இருந்தது. இதில் மாணவர்கள், குருவின் இல்லத்திற்கே சென்று பயின்றனர்.
    • பெற்றெடுக்காத பல குழந்தைகளுக்கு தாயாக, தோழியாக, வழிகாட்டியாக இருப்பவர்கள் ஆசிரியர்களே.

    தலைப்பாகையும், கைப்பிரம்பும் ஓர் ஆசிரியரின் அடையாளமாய் காணப்பட்டது ஒரு காலம். இன்றோ கணிப்பொறியும், நவீன உத்திகளும் ஆசிரியரின் இடத்தை ஆக்கிரமித்துள்ளன. அன்று புளியங்கொட்டையை கொண்டு 'அ' போட பழகியது குழந்தை. இன்றோ கணிப்பொறியின் முன் அமர்ந்து அலங்கார ஓசையுடன் 'A' போட பழகுகிறது குழந்தை. இது காலத்தின் மாற்றம்.

    ஆரம்ப காலங்களில் குருகுல கல்விமுறை இருந்தது. இதில் மாணவர்கள், குருவின் இல்லத்திற்கே சென்று பயின்றனர். குரு என்பவர் தெய்வத்திற்கு நிகரானவர்களாக கருதப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சென்று பயின்று வரக்கூடிய பள்ளி என்ற ஓர் அமைப்பு தோன்றியது. சுண்ணாம்பு கட்டியும், கரும்பலகையும் பிரதானமாக கருதப்பட்டது. வாய்மொழியாக ஆசிரியர் கற்பிப்பதும், அதை செவிவழியாய் மாணவர்கள் கேட்பதுமாய் இருந்தது.

    இந்த நிலையும் மாறி, வண்ணப்படங்கள், கையால் செய்த மாதிரிகள் கொண்டு கற்பித்து பெரும் மாற்றம் ஏற்பட்டது. இந்த மாற்றமும் காலப்போக்கில் மாறியது. மாற்றத்தின் விளைவாய் கணிப்பொறிவழி கல்வி ஏற்பட தொடங்கியது. வகுப்பறையிலேயே குறுந்தகடுகள் மூலம் கற்பிக்கும் நிலை உருவாகியுள்ளது. இன்றைய இணையத்தின் வளர்ச்சிக்கு இணையாக எதுவும் இல்லை. நூலகத்தில் மணிக்கணக்கில், நாட்கணக்கில் தேடித்தேடி சில விஷயங்களை பிடிப்போம். ஆனால் கணினியில் வலைவீசி தேடுபவர்க்கு வலைத்தளங்களில் எதுவும் சிக்காமல் இருப்பதில்லை.

    சமூக வலைதளங்கள் வேறு பல்வேறு நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளன. அவை நேரத்தை கலாசாரத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளன என்பதையும், மனித உறவுகளையே குறைத்துவிடுகின்றன என்பதனையும் எண்ணிப்பார்க்க இயலாமல் இல்லை. ஒரு புறம் வளர்ச்சி, மறுபுறம் கலாசார சீரழிவு. இதில் எதை ஏற்பது. எதை தவிர்ப்பது என்பதில், காய்ச்சிய இரும்பையும் கையில் பிடிக்கும் துணிச்சலுள்ள இளைஞர் சமுதாயத்தில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

    இங்குதான் தலைகாட்டுகிறார் ஆசிரியர். காய்ச்சிய இரும்பை எப்படியும் வளைக்கலாம், அதை லாவகமாக பக்குவமாக மெருகேற்றி வளைக்கலாம் என்பதை கற்பிக்க முற்படுகிறார் ஆசிரியர். ஆசிரியர் என்பவர் உன்னத ஸ்தானத்துக்கு உரியவர் என்பதை நிரூபிக்கிறார். தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆசிரியர்களின் முக்கியத்துவம் சில நேரங்களில் குறைந்துவிட்டதுபோல் தோன்றலாம். சில நேரங்களில் ஆசிரியர்களுக்கு மாற்றாக தொழில்நுட்ப வளர்ச்சி வளர்ந்துவிட்டதுபோல் மாயையும் உருவாக்கலாம். ஆனால் மிகவும் கூர்ந்து நோக்கும்போது ஆசிரியர் இச்சாதனங்களுக்கு உதவி செய்யும் ஒரு சாதனமாகவே காட்சி தருகிறார்.

    இந்த ஆசிரியர் என்ற உன்னத மனிதரின் இடத்தை வேறு எந்த வளர்ச்சியாலும் பிடிக்க முடியாது என்பது முற்றிலும் உண்மை. ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு மட்டுமே தாயாக இருக்கிறார். ஆனால் பெற்றெடுக்காத பல குழந்தைகளுக்கு தாயாக, தோழியாக, வழிகாட்டியாக இருப்பவர்கள் ஆசிரியர்களே.

    மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற உயர்ந்த நிலையில் உள்ள ஆசிரியர்கள் என்றுமே யாரும் எட்டிப்பிடிக்க முடியாத உன்னதமான, உயர்வான இடத்திலேயே செயல்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. நேற்றைய ஆசிரியரும், இன்றைய ஆசிரியரும், நாளைய ஆசிரியரும், மனித குலத்தை பொறுத்தவரை அற்புதமான நெறியாளர் ஸ்தானத்திற்கு உரியவர்! அதை எந்த விஞ்ஞானமும் மாற்றிட இயலாது. வாழ்வில் அனைத்தும் நெறிப்படுத்த வல்லாரே ஆசிரியர் பெருமக்கள். இதை உணர்த்தும் வண்ணமே டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினம் இன்று ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    • காலத்தால் அழிக்க முடியாத அத்தகைய கல்வி செல்வத்தை மாணவ செல்வங்களுக்கு அள்ளித் தருபவர்கள் ஆசிரியர்களே.
    • 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு பயன்படும் வகையில் “நான் முதல்வன்“ என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஆசிரியர் தினத்தையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    அறிவு ஒளியூட்டி அறியாமை இருள் அகற்றும் ஆசிரியப் பேரினமே, உங்கள் யாவருக்கும், என் இதயம் நிறைந்த இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள். ஒரு சிறந்த நாடு, எப்படித் திகழவேண்டும் என்பதற்கு இலக்கணம் கூற வந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர், "தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு" என்கிறார். இக்குறட்பாவிலுள்ள 'தக்கார்' என்னும் சொல்லுக்கு ஒழுக்க நெறி தவறாமல் வாழ்வோர் என்று உரையாசிரியர்கள் பொருள் காண்பர்.

    ஆனால் 'தக்கார்' என்று சுட்டப் பெறுவோர் "ஆசிரியர்'' என்று பொருள் காண நான் விழைகின்றேன். ஏனெனில், தமக்குரிய நெறியிலிருந்து வழுவாது, பிறழாது தாமும் வாழ்ந்து, வளரும் இளம் தலைமுறையினரையும் அந்நெறிப்படி வாழக் கற்றுக் கொடுக்கும் பொறுப்புமிக்கவர்களாக இருப்பவர் ஆசிரியர்களே. மனிதர்களை-மதிவாணர்களாக்குவதும், மாமேதைகளாக்குவதும் ஏன் மனிதர்களை மனிதர்களாக்குவதும் கல்விதான். காலத்தால் அழிக்க முடியாத அத்தகைய கல்வி செல்வத்தை மாணவ செல்வங்களுக்கு அள்ளித் தருபவர்கள் ஆசிரியர்களே.

    அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்கவும், பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்க்கவும், அவ்வாறு சேர்க்கப்பட்ட குழந்தைகளை இடைநிற்றல் ஏதுமின்றி முழுமையாகத் தொடரவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற கற்றல் அடைவுகளை உறுதி செய்யவும், ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சிகளை அளித்து, அவர்தம் திறன்களை வளர்க்கும் நோக்கோடு தமிழ்நாடு அரசு 2022-23-ம் ஆண்டு பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.36,895.89 கோடியை ஒதுக்கியுள்ளது.

    கொரோனா பெருந்தொற்றினால் மாணவர்களிடையே உருவான கற்றல் இழப்புகளை ஈடு செய்ய, 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அவர்தம் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே 2 லட்சம் தன்னார்வலர்களைக்கொண்டு, கடந்த ஆண்டு அக்டோபர் முதல் "இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தினை" அரசு செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்திற்கென சுமார் ரூ.163 கோடி இதுவரை செலவிடப்பட்டுள்ளது. மேலும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு பயன்படும் வகையில் "நான் முதல்வன்" என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இதுமட்டுமல்லாமல், எதிர்வரும் 2025-ம் ஆண்டுக்குள், 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து குழந்தைகளும் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்ணறிவு திறன்களை பெறும் நோக்கோடு, 2021-22-ம் ஆண்டில் "எண்ணும் எழுத்தும் இயக்கம்" தொடங்கப்பட்டு, பல்வேறு செயல்பாடுகளுக்கென ரூ.66.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம், 18 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும், 3 சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து ரூ.25 ஆயிரம் ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் "கவிமணி விருது" வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பள்ளி மாணவர்களுக்கு தமிழ்மொழி திறனறி தேர்வு நடத்தி, ஆண்டுதோறும் 1,500 பேர் தேர்வு செய்யப்பட்டு, 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், மாணவர்கள் என சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் பயன்பெறும் வண்ணம் மதுரையில் "முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம்" அமைய உள்ளது. நாட்டின் எதிர்கால சொத்துக்களாம் இளைய தலைமுறையை, நன் முத்துக்களாக உருவாக்கம் பெரும் பொறுப்புக்கு சொந்தக்காரர்களாகிய ஆசிரிய பேரினத்தை அரசும், நாட்டோரும், நல்லோரும் மதித்து போற்றுவதன் அடையாளமே இந்த ஆசிரியர் தின விழா கொண்டாட்டம். வகுப்பறை அனுபவங்களின் மூலம் இடையறாது பணி செய்து மென்மேலும் திறம் பெற்று சிறந்த ஆசிரியர்களாய் என்றும் சீர்பெற்று விளங்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆசிரியர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ×