என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ண ஜெயந்தி"

    • கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி இஸ்கான் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
    • ஸ்ரீ ராதாகிருஷ்ணருக்கு பால், நெய், தேன் மற்றும் பழச்சாறுகளால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    திருவான்மியூர்:

    கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் உள்ள பல கோவில்களில் இன்று மாலை கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து இன்று காலையில் இருந்தே இஸ்கான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.

    கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி இஸ்கான் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆன்மிகம், இசை மற்றும் பக்தி நிகழ்ச்சிகள் களை கட்டியது. முன்னதாக நேற்று மாலையில் சந்தியா ஆரத்தி நடந்தது. இரவு 10.30 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ ராதாகிருஷ்ணருக்கு பால், நெய், தேன் மற்றும் பழச்சாறுகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு, மகா ஆரத்தி நடந்தது.

     

    பின்னர் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மங்கள ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பாகவதம் வகுப்பு, குரு பூஜை மற்றும் அழகாக அலங்கரிக்கப்பட்ட தெய்வங்களின் தரிசனம் நடைபெற்றது. இன்று நாள் முழுவதும் கீர்த்தனை நிகழ்ச்சிகள் நடக்கிறது. கிருஷ்ணரின் அவதாரத்தைக் கொண்டாடும் இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான இனிப்பு வகைகள், பலகாரங்கள் ஆகியவற்றை செய்து நைவேத்தியமாக படைக்க வேண்டும்.
    • அஷ்டமி நாளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்தியாவில் மிக கோலாகலமாகக் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி. பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தையே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடி மகிழ்கிறோம். கோகு

    லாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி போன்ற பல பெயர்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

    கிருஷ்ணர் அவதரித்தது, துவாபர யுகத்தில் ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியில் என சொல்லப்படுகிறது. இவர் தேவகிக்கும், வசுதேவருக்கும் எட்டாவது குழந்தையாக அவதரித்தார். இதனால் ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி நாளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

    ஆனால் இந்த ஆண்டு ஆடி மாதத்திலேயே கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. அதாவது, ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் தொடங்கும் நாளான ஆகஸ்டு 16-ந்தேதி (சனிக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

    ஆகஸ்டு 16-ந்தேதி அதிகாலை 1.41 மணி தொடங்கி, அன்று இரவு 11.13 மணி வரை அஷ்டமி திதி உள்ளது. கார்த்திகை நட்சத்திரத்துடன் இணைந்து இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா அமைந்துள்ளது.

    ஆகஸ்டு 14-ந் தேதி வியாழக்கிழமையே வீட்டை சுத்தம் செய்து, ஆகஸ்டு 15-ந் தேதி வெள்ளிக்கிழமையே வீட்டை அலங்கரித்து, பூஜைக்கு தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான இனிப்பு வகைகள், பலகாரங்கள் ஆகியவற்றை செய்து நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

    கிருஷ்ணரின் சிலை அல்லது படத்தை அழகிய, வாசனை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பிறகு குழந்தை கிருஷ்ணரை வீட்டிற்குள் அழைப்பதற்காக பச்சரிசி மாவினால் கிருஷ்ணரின் பாதங்களை, வீட்டு வாசல் தொடங்கி பூஜை அறையில் கண்ணன் சிலை அல்லது படம் வைத்திருக்கும் இடம் வரை வரைய வேண்டும். கிருஷ்ணருக்கு உரிய மந்திரங்கள், சுலோகங்கள் ஆகியவற்றை சொல்லி வழிபட வேண்டும்.

    • காக்கும் கடவுளாம் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளை 'கிருஷ்ண ஜெயந்தி' என்று கொண்டாடப்படுகிறது.
    • மக்கள் அனைவருக்கும் எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    காக்கும் கடவுளாம் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளை 'கிருஷ்ண ஜெயந்தி' என்றும்; 'கோகுலாஷ்டமி' என்றும் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் இந்த நன்னாளில், மக்கள் அனைவருக்கும் எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    குழப்பத்தையும், தடுமாற்றத்தையும் தவிர்த்து, தெளிந்த நீரைப்போல் மனதை நிலைநிறுத்தி, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால், ஒருவர் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று எல்லா சுகங்களும், மன நிம்மதியும் கிடைக்கப் பெற்றவராய் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடலாம்' என்கிற கிருஷ்ண பகவானின் கீத உபதேசத்தை நாளும் மனதில்கொண்டு, கிருஷ்ண பகவான் அவதரித்த இத்திருநாளில், ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி, தர்மத்தை நிலைநாட்டிட உறுதியேற்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஸ்ரீகிருஷ்ணபாதம் கூறிக்கொண்டே மாக்கோலமிட்டு வரவேற்கலாம்.
    • கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம்.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று தன்னை அழைக்கும் பக்தர்களின் வீட்டிற்கு கண்ணன் வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    எனவே கிருஷ்ணஜெயந்தி அன்று வீட்டை சுத்தப்படுத்தி அலங்கரித்து குழந்தை கண்ணனை வரவேற்கும் விதத்தில் வீட்டு வாசலில இருந்து பூஜை அறை வரையில் சின்னக்கண்ணன் நடந்து வருவது போல் அவனது பாதச்சுவடுகளை ஸ்ரீகிருஷ்ணபாதம் கூறிக்கொண்டே மாக்கோலமிட்டு வரவேற்கலாம்.

    இதனால் கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம். ஆயர்பாடியில் கண்ணனை வரவேற்க சித்திரக்கோலம் (ரங்கோலி), மலர் அலங்காரம், பூக்கோலமிடுவர். அதை நமது இல்லங்களிலும் செய்து கிருஷ்ணரை வரவேற்க வேண்டும். இதனால் கண்ணனே தன் திருப்பாதங்களை பதித்து நடந்து வந்து பூஜை அறையில் நாம் வைத்துள்ள நைவேத்திய பட்சணங்களை ஏற்றுக் கொள்கிறார் என்பதாகும்.

    • வாக்கு கொடுத்தபடி சிறையில் பிறந்த அனைத்து குழந்தைகளையும் கம்சனிடம் ஒப்படைத்தார், வசு தேவர்.
    • இறுதியில் தன் தாய் மாமனான கம்சனை கொன்று சிறையில் இருந்த தன் தாய் - தந்தையரை மீட்டார்.

    காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் முக்கியமான பத்து அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணர் அவதரித்த நாளையே 'கிருஷ்ண ஜெயந்தி' என்று கொண்டாடுகிறோம். இந்த பண்டிகை இந்தியா முழுவதும் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.

    கம்சன் என்ற மன்னன் மதுரா நகரை ஆண்டு வந்தான். இவன் மக்களை கொடுமைப்படுத்தி, பல பாவங்களை செய்தான். கம்சன், தன் சகோதரியான தேவகியை வசுதேவருக்கு திருமணம் செய்து கொடுத்தான். ஒரு நாள் கம்சன், இருவரையும் தனது தேரில் அழைத்து செல்லும் போது, ஒரு அசரீரி கேட்டது. ''கம்சா... உன் சகோதரியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை உன்னைக் கொல்லும்'' என்று ஒலித்தது.

    இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கம்சன், தன் சகோதரி என்றும் பாராமல் தேவகியை கொல்ல முயன்றான். அப்போது வசுதேவர், ''எங்களுக்கு பிறக்கும் குழந்தையால் தானே உங்கள் உயிருக்கு ஆபத்து. எங்களுக்கு பிறக்கும் அனைத்து குழந்தையையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன்'' என்று உறுதி அளித்தார். இதையடுத்து இருவரையும் சிறையில் அடைத்தான் கம்சன்.

    வாக்கு கொடுத்தபடி சிறையில் பிறந்த அனைத்து குழந்தைகளையும் கம்சனிடம் ஒப்படைத்தார், வசு தேவர். இவ்வாறு பிறந்த ஏழு குழந்தைகள் கம்சனால் கொல்லப்பட்டன. இந்த நிலையில் 8-வது முறையாக தேவகி கர்ப்பமானாள். இந்த குழந்தையையும் கம்சன் கொன்று விடுவான் என்று பயந்த வசுதேவர், விஷ்ணுவிடம் குழந்தையை காக்கும்படி மன்றாடி வேண்டினார். அன்று இரவு வசுதேவனின் கனவில் தோன்றிய விஷ்ணு, ''உனக்கு பிறக்க போகும் ஆண் குழந்தையை, அதே நாளில் பிறக்கும் எனது தீவிர பக்தனான நந்தகோபனின் குழந்தைக்கு பதிலாக மாற்றி வைத்து, அந்த பெண் குழந்தையை எடுத்து வா'' என்று கூறினார்.

    சிறையில் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரம் அஷ்டமி திதியில் நள்ளிரவில் எட்டாவது குழந்தையாக அவதரித்தார் கிருஷ்ணர். கிருஷ்ணரின் மகிமையால் சிறையின் கதவுகள் திறந்தன. காவலாளிகள் மயக்கம் அடைந்தனர். வசுதேவர் குழந்தையை எடுத்து கொண்டு வெளியேறினார். மழை பெய்து யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது வசுதேவருக்கு ஆற்றை கடக்க யமுனை பாதை அமைத்து கொடுத்தது. வசுதேவர் குழந்தையை தன் தலை மேல் வைத்து ஆற்றை கடந்தார். அப்போது ஐந்து தலை நாகம் குழந்தைக்கு குடையாக வந்தது.

    வசுதேவர் கோகுலத்தை அடைந்ததும் நந்தகோபனின் வீட்டுக் கதவுகள் திறந்து இருந்தன. மெதுவாக தனது குழந்தையை அங்கு வைத்துவிட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்து கொண்டு சிறைச்சாலையை வந்தடைந்தார், வசுதேவர். சிறைச்சாலையில் நுழைந்ததும் சிறை காவலாளிகள் மயக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டனர். பின்பு வசுதேவருக்கு குழந்தை பிறந்திருப்பதை கம்சனிடம் தெரிவித்தனர்.

    உடனே விரைந்து வந்த கம்சன், ''என்னை கொல்லப் போவது ஒரு பெண் குழந்தையா'' என்று சிரித்தபடி, அந்த பெண் குழந்தையை கையில் எடுத்து கல்லில் தூக்கி எறிந்தான். ஆனால் அந்த குழந்தை, ''உன்னை கொல்ல பிறந்த குழந்தை கோகுலத்தில் வளர்ந்து வருகிறது. காலம் வரும்போது உன்னை கொல்வான்'' என்று கூறி மாயமாக மறைந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கம்சன், தனது பணியாட்களை அனுப்பி கோகுலத்தில் கிருஷ்ணர் இருப்பதை உறுதி செய்தான். பிறகு அந்த குழந்தையை கொல்ல பூதகி என்ற அரக்கியை அனுப்பினான். அந்த அரக்கி தன் மார்பில் விஷத்தை தடவி, கிருஷ்ணருக்கு பால் கொடுப்பது போல் கொல்ல நினைத்தாள். ஆனால் கிருஷ்ணர் அந்த அரக்கியின் மூச்சுக் காற்றை நிறுத்தி கொன்றார்.

    இதை அறிந்த கம்சன் கோபம் கொண்டு, ஷகாட்சுரா என்ற அரக்கனை அனுப்பினான். அந்த அரக்கன் வண்டியின் சக்கரமாக மாறி, கிருஷ்ணரை சக்கரத்தால் நசுக்கி கொல்ல நினைத்தான். ஆனால் சக்கரத்தை எட்டி உதைத்து அவனை கொன்றார், கிருஷ்ணர். இவ்வாறு பல அரக்கர்களை அனுப்பி கிருஷ்ணரை கொல்ல நினைத்த கம்சனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவன் அனுப்பிய அனைத்து அரக்கர்களையும் குழந்தை பருவத்திலேயே கொன்றார் கிருஷ்ணர். கோகுலத்தில் கிருஷ்ணர் கோபியர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டார். வெண்ணெய் திருடனாக பல குறும்புத்தனங்கள் செய்து கோகுலத்தின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தார். இறுதியில் தன் தாய் மாமனான கம்சனை கொன்று சிறையில் இருந்த தன் தாய் - தந்தையரை மீட்டார்.

    கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

    கிருஷ்ண ஜெயந்தி அன்று, வாசலில் இருந்து வீட்டுக்குள் வரை குழந்தையின் பாத சுவடுகளை வரைவார்கள். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அன்றைய தினம் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடங்கள் அணிவித்து மகிழ்வார்கள்.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வீட்டை சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலம் இடுவார்கள். வீட்டில் மாவிலையால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்து, பல வகையான பலகாரங்கள் தயார் செய்து கிருஷ்ணரை வழிபாடு செய்வார்கள். அனைத்து வைணவ கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதில் கலந்துகொண்டு வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்கும். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணர் வரலாற்றையும், பெருமையையும் காதால் கேட்டாலே போதும் பல புண்ணியங்கள் வந்துசேரும்.

    • கிருஷ்ணரை வழிபடுவதால், மனதில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும்.
    • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

    கிருஷ்ணரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை வழிபடுவதால், வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, கல்வி, ஞானம் மற்றும் செல்வ வளம் பெருகும் என்று நம்பப்படுகிறது. மேலும், கர்ம வினைகள் நீங்கி, துன்பங்கள் விலகி, குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

    மகிழ்ச்சியும், அமைதியும்:

    கிருஷ்ணரை வழிபடுவதால், மனதில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். தீய எண்ணங்கள் நீங்கி, நேர்மறை எண்ணங்கள் பெருகும்.

    கல்வி மற்றும் ஞானம்:

    கிருஷ்ணர், அறிவின் வடிவமாக கருதப்படுகிறார். அவரை வழிபடுவதன் மூலம், கல்வி மற்றும் ஞானம் மேம்படும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

    செல்வ வளம்:

    கிருஷ்ணரை வழிபடுவதன் மூலம், செல்வ வளம் பெருகும். வீட்டில் உள்ளவர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

    கர்ம வினைகள் நீங்கும்:

    கிருஷ்ணரை வழிபடுவதன் மூலம், முந்தைய கர்ம வினைகளால் ஏற்பட்ட துன்பங்கள் நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

    குடும்பத்தில் சுபிட்சம்:

    கிருஷ்ணரை வழிபடுவதன் மூலம், குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

    துன்பங்கள் நீங்கும்:

    கிருஷ்ணரை வழிபடுவதன் மூலம், தீராத நோய்கள் நீங்கும் மற்றும் துன்பங்கள் விலகும். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை வழிபடுவதால், மேற்கூறிய பலன்களைப் பெறலாம்.

    • பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டுக்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும்.
    • கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை வீட்டில் குழந்தைகளுடன் கொண்டாடும் போது கிருஷ்ணரின் கதைகளைச் சொல்லி வழிபட்டால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர்.

    நம் பாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாக கலாச்சாரம், பண்பாட்டை பேணிக் காக்கும் வகையில் பல உற்சவங்கள், பண்டிகைகள், விரதங்கள், திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நம்மை வாழ வைக்கும் இறைவனுக்கும், இயற்கை சக்திகளுக்கும் நன்றியையும் பிரார்த்தனையும் சமர்ப்பிக்கின்றனர்.

    அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர்-தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார். பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் கிருஷ்ணன் காட்சியளித்தான்.

    கிருஷ்ண அவதாரம் இந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுக்கும் உபதேசங்களே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையானது. பகவத் கீதையில் அர்ச்சுனனுக்கு அருளிய உபதேசங்களுடன் இந்திய தத்துவ சாரங்களின் அடிப்படைகளை ஒன்று கலந்து கொடுக்கப்பட்டுள்ள நூல் பகவத் கீதையாகும்.

    பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டுக்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும். அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தியன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம். அன்று பல கோவில்களில் உறியடித் திருவிழா நடைபெறும்.

    கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து, மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், அவல், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து வழிபடுவர். அந்த நீல வண்ணக் கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய மனதார வேண்டி பிரார்த்தனை செய்கின்றோம்.

    கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை வீட்டில் குழந்தைகளுடன் கொண்டாடும் போது கிருஷ்ணரின் கதைகளைச் சொல்லி வழிபட்டால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். ராஜதந்திரம் அதிகரிக்கும், அரசியல் சாணக்கியத் தன்மை அதிகரிக்கும். பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்திசாலித்தனம் கூடும். எளிமையாகவும், சுருக்கமாகவும், புரிந்து கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும்.

    குழந்தை பாக்யம் இல்லாதவர்கள், புதுமணத் தம்பதியர், கருவுற்றிருக்கும் தாய்மார்கள் தங்களுக்கு புக்தி, யுக்தி, அறிவு ஆற்றல், ஆயுள், ஆரோக்யம் மிக்க சற்புத்திர பாக்யத்தை அருள வேண்டும் என்று அந்த ஆலிலைக் கண்ணனிடம் நெஞ்சுருகி பிரார்த்தனை செய்து கொண்டால் ஜாதகத்தில் உள்ள புத்திர தோஷம், புத்திர தடை போன்றவை நிவர்த்தியாகி சற்புத்திர பாக்கியத்தை பகவான் கிருஷ்ணன் அருள்வார்.

    நாமும் கிருஷ்ண ஜெயந்தி அன்று நம் வீடுகளில் கண்ணனை அழைத்து வழிபட்டு ஏராளமான பலன்களைப் பெற்றிடுவோம்.

    • உறியடி திருவிழா வட இந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை காலத்தில் கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது.
    • உறியடி என்பது... குறிப்பிட்ட உயரத்தில் கட்டப்பட்டு இருக்கும் மஞ்சள் கலந்த நீரால் நிரப்பப்பட்ட பானையை உடைப்பது.

    உறியடி திருவிழா வட இந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை காலத்தில் கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் ஆங்காங்கே உறியடி திருவிழாவை நடத்துகிறார்கள். திருவண்ணாமலையில் அடி அண்ணாமலையில் இந்த தடவை 3-வது ஆண்டாக உறியடி விழா நடக்கிறது. மற்றபடி தமிழக கிராமங்களில் கோவில் விழாக்களில் உறியடி நிகழ்ச்சி நடைபெறுவதுண்டு.

    உறியடி என்பது... குறிப்பிட்ட உயரத்தில் கட்டப்பட்டு இருக்கும் மஞ்சள் கலந்த நீரால் நிரப்பப்பட்ட பானையை உடைப்பது.

    உறியடி விழாவில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள். போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களிடம் ஆளுக்கு ஒரு கம்பை கொடுத்து விடுவார்கள். அந்த கம்பை பயன்படுத்தி அவர்கள் உறியில் கட்டி தொங்க விடப்பட்ட பானையை உடைக்க வேண்டும்.

    ஆனால், எளிதாக பானையை உடைத்து விட முடியாது. ஒவ்வொருவராக ஓடி வந்து பானையை உடைக்க முயற்சிக்க வேண்டும். அவ்வாறு பானையை அடிக்க கம்பை ஓங்கும்போது பானையை மேல் நோக்கி, கீழே நோக்கி என்று ஒருவர் கயிற்றால் இழுத்துக் கொண்டு இருப்பார். இதனால் குறி தவறி, பானையை எளிதில் உடைக்க முடியாமல் போய்விடும். அதையும் தாண்டி பானையை உடைப்பவருக்கு பரிசு வழங்கப்படும்.

    சில இடங்களில் குறிப்பிட்ட உயரத்தில் பானையை கட்டி வைத்திருப்பார்கள். அதை இளைஞர்கள் ஒரு குழுவாக சேர்ந்து, ஒருவர் மீது ஒருவர் ஏறிச்சென்று உடைப்பார்கள். பானையை உடைத்த இளைஞர் குழுவுக்கு பரிசு வழங்கப்படும்.

    இதேபோல், உறியடி பானையை உடைக்க வருபவரின் கண்களை துணியால் கட்டி, அவரது கையில் ஒகு கம்பையும் கொடுத்து, பானையை உடைக்கச் சொல்வதும் உண்டு.

    இப்படி உறியடி விழா பல வகைகளாக நடக்கும்.

    இந்த விழா அழகான தத்துவம் ஒன்றை நமக்கு எடுத்துரைக்கின்றது. பானை என்பது பரம்பொருள், அது எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறது. பரம்பொருளை அடைய வேண்டும் என்ற ஆசையில் தான் மனித வாழ்க்கை ஆரம்பம் ஆகிறது.

    ஆனால் நடுவில் பல அலைக்கழிப்புகளுக்கு ஆளாகி பல ஜீவன்கள் இறைவனை அடைய முடியாமல் போய் விடுகின்றன. ஆனால், இறைவனை அடைய வேண்டும் என்ற குறிக்கோளோடு உறுதியாகச் செயல்பட்டு, அகங்காரம் என்னும் பானையை உடைத்து விட்டால், இறையருள் எனும் பரிசு நமக்கு கிடைத்து விடும்.

    • மழைக்கு வருணன் தலைவன், அவனுக்கு இந்திரன் தலைவன், அதனால் அவனை வழிபடுகிறோம் என்றனர் ஆயர்கள்.
    • கண்ணன் இது இந்திரன் செயல் என்று அறிந்து கோவர்த்தனை மலையையே குடையாகப் பிடித்தான்.

    கிருஷ்ணருக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் கோவர்த்தன கிரி மேய்ச்சல் நிலமாக பயன்பட்டது. அதன் சாரலிலே அவர்கள் நித்தம் திரிந்து விளையாடினர். ஒரு நாள் ஆயர்கள் கூட்டம் கூட்டமாய் திரண்டு சென்று கொண்டிருந்தனர்.

    எங்கே போகிறீர்கள்? என்று கிருஷ்ணர் கேட்க, பொங்கல் இட, இந்திரனுக்கு வழிபாடு செய்ய செல்கிறோம் என்றனர்.

    ஞாயிறு, திங்கள், மழைநீர் இவற்றையே வழிபடுவது வழக்கம். இவற்றை விட்டுவிட்டு இந்திரனை வழிபடுவது புதுமையாய் இருக்கிறது என்றான் கண்ணன்.

    மழைக்கு வருணன் தலைவன், அவனுக்கு இந்திரன் தலைவன், அதனால் அவனை வழிபடுகிறோம் என்றனர் ஆயர்கள்.

    பசுவே நாம் வழிபட வேண்டிய தெய்வம், செய்யும் தொழிலே தெய்வம் என்பது தெரியாதா என்று கேட்டான் கண்ணன்.

    அவர்கள் அவன் சொல்லியதை ஏற்றுக்கொண்டனர். எந்தத்தெய்வத்தின் பெயரும் கூறாமல் பொங்கல் இட்டுத்தம் பசுக்களை மதித்து வழிபட்டனர். இந்திரன் இதனை அறிந்து கோபம் கொண்டான். ஆயர்களை அடக்குவதற்காகக் கடுமையாக மழை தொடர்ந்து பெய்ய செய்தான். இடியும் மின்னலும் உடன் சேர்ந்தன. ஆயர்களும் பசுக்களும் தவிப்புக்குள்ளானார்கள்.

    கண்ணன் இது இந்திரன் செயல் என்று அறிந்து கோவர்த்தனை மலையையே குடையாகப் பிடித்தான். அதன் நிழலில் கன்றுகளும், பசுக்களும், இடையர் சிறுவர்களும், பெரியோர்களும் தஞ்சம் அடைந்தனர்.

    கண்ணனின் பேராற்றலைக் கண்டு வியந்த இந்திரன் தரைக்கு வந்து கண்ணனை வணங்கித்தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். கண்ணனை அவன்தன் தம்பியாக ஏற்றுக்கொண்டான். அதனால், கண்ணனுக்கு உப இந்திரன் என்ற பெயர் வழங்கலாயிற்று, பசுக்களைக் காத்தமையின் கோவிந்தன் என்னும் பெயரும் நிலைத்துவிட்டது. துன்பம் வரும்போது அனைவரும் கோவிந்தன் பெயரைச் சொல்லி அழைப்பதும் வழக்கமாகி விட்டது.

    • உன்னை எவரேனும் ஏளனம் செய்து சிரித்தால், அதை ஒரு பொருட்டாகக் கருதாதே.
    • எல்லா உயிரிலும் நான் உள்ளேன், என்னுள் எல்லா உயிரினங்களும் உள்ளன.

    ஸ்ரீகிருஷ்ணர் வழங்கிய ஒப்பற்ற உபதேசங்களை கவனத்துடன் கேளுங்கள்.

    ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார் "உன்னை எவரேனும் ஏளனம் செய்து சிரித்தால், அதை ஒரு பொருட்டாகக் கருதாதே, உடல் உணர்வை மறந்து விடு. அவமானத்தைத் தாங்கிக்கொள். மண்ணில் சாஷ்டாங்கமாக விழுந்து, மிக அற்பமாகக் கருதுகின்ற நாய், கழுதை மற்றும் சண்டாளனைக் கூட நமஸ்காரம் செய். எல்லா உயிரிலும் நான் உள்ளேன், என்னுள் எல்லா உயிரினங்களும் உள்ளன. என்னைச் சரணாகதி அடைந்துவிடு. எனக்காகவே எல்லா கர்மங்களையும் செய். பற்றுகளிலிருந்து விலகி விடு. தடையில்லாத, தடுமாற்றம் இல்லாத பக்தியினை என் மீது வை. எனது புகழ்பாடு".

    • இப்போதெல்லாம் ஏழைகளை, நண்பனாக ஏற்றுக்கொள்ளவே தயங்குகின்றனர். ஆனால் கண்ணன் அப்படியல்ல.
    • கண்ணன் தன்படுக்கையில் இருந்து எழுந்து ஓடோடிச்சென்று வரவேற்றான்.

    எல்லாரும் கண்ணனின் திருவடிகளை வணங்குவார்கள். ஆனால் கண்ணன் ஒரு பக்தரின் கால்களை தடவியே கொடுத்துள்ளான். அந்த பாக்கியம் பெற்றவர் குசேலர்.

    இப்போதெல்லாம் ஏழைகளை, நண்பனாக ஏற்றுக்கொள்ளவே தயங்குகின்றனர். ஆனால் கண்ணன் அப்படியல்ல. எப்போதோ தன்னுடன் படித்த ஏழை குசேலரை அவன் மறக்கவில்லை. தன்னைக்காண குசேலர் வந்துள்ளார் எனத்தெரிந்ததும், கண்ணன் தன்படுக்கையில் இருந்து எழுந்து ஓடோடிச்சென்று வரவேற்றான். இத்தனைக்கும் அவன் துவாரகாபுரிக்கு மன்னன்.

    குசேலரின் திருவடியை வணங்கினான். கால்கள் தேய இவ்வளவு தூரம் நடந்து வந்தாயா? எனக்கேட்டு, உனது திருவடிகள் இவ்வளவு தூரம் நடந்ததால் காய்த்துப்போய் விட்டதே! என்று சொல்லி அவற்றை வருடினான்.

    கண்ணணின் அன்பை கண்ட குசேலர் மெய்மறந்து போனார்.

    இப்படிப்பட்ட நண்பனிடம் தனக்கென எதுவும் கேட்காமலேயே திரும்பினார் குசேலர்.

    • யமுனைக்கரையில் உள்ள ஆயர்பாடியில் கண்ணன், குழந்தையாக இருந்தபோது வெண்ணெய் திருடி உண்பான்.
    • கண்ணா! நான் மோட்சம் பெற காரணமாக இருந்த இந்த தாழிக்கும் விமோசனம் கொடு! என்றான். கண்ணன், தாழிக்கும் விமோசனம் கொடுத்தான்.

    நமக்கு உதவி செய்தவர்களை என்றுமே மறக்கக்கூடாது என்பதற்கு கண்ணன் கற்றுத்தரும் ஒரு நிகழ்ச்சி.

    யமுனைக்கரையில் உள்ள ஆயர்பாடியில் கண்ணன், குழந்தையாக இருந்தபோது வெண்ணெய் திருடி உண்பான். ஒருமுறை வெண்ணெய் திருடியபோது அவனை யசோதை பார்த்து விட்டாள். கையும் களவுமாக சிக்கியதால், அவளிடம் அடிவாங்கப் பயந்து தப்பி ஓடினான். ததிபாண்டன் என்ற நண்பனின் வீட்டுக்குள் சென்று விஷயத்தைச் சொன்னான். ததிபாண்டன் ஒரு தாழியை அவன் மீது கவிழ்த்து வைத்துவிட்டான்.

    கண்ணனை தேடிய யசோதை அங்கு வந்தாள். ததிபாண்டனிடம் விசாரித்தபோது, கண்ணன் இங்கு வரவில்லையே என்று சொல்லி விட்டான். யசோதை சென்ற பிறகு. கண்ணன் தன்னை மூடிவைத்திருந்த தாழியை எடுக்கச் சொன்னான். ஆனால், ததிபாண்டன் மறுத்துவிட்டான்.

    அவன் கண்ணனிடம், கண்ணா! நீ தெய்வம் என்பதை நான் அறிவேன் எனக்கு நீ பிறப்பற்ற நிலையைத் தந்தால்தான் உன்னை விடுவேன் என்றான்.

    கண்ணனும், சரி! நீ கேட்டதைத் தந்துவிட்டேன். என்னை விடு! என்றான்.

    ×