என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krishna Jayanti"

    • கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி இஸ்கான் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
    • ஸ்ரீ ராதாகிருஷ்ணருக்கு பால், நெய், தேன் மற்றும் பழச்சாறுகளால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    திருவான்மியூர்:

    கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் உள்ள பல கோவில்களில் இன்று மாலை கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து இன்று காலையில் இருந்தே இஸ்கான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.

    கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி இஸ்கான் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆன்மிகம், இசை மற்றும் பக்தி நிகழ்ச்சிகள் களை கட்டியது. முன்னதாக நேற்று மாலையில் சந்தியா ஆரத்தி நடந்தது. இரவு 10.30 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ ராதாகிருஷ்ணருக்கு பால், நெய், தேன் மற்றும் பழச்சாறுகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு, மகா ஆரத்தி நடந்தது.

     

    பின்னர் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மங்கள ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பாகவதம் வகுப்பு, குரு பூஜை மற்றும் அழகாக அலங்கரிக்கப்பட்ட தெய்வங்களின் தரிசனம் நடைபெற்றது. இன்று நாள் முழுவதும் கீர்த்தனை நிகழ்ச்சிகள் நடக்கிறது. கிருஷ்ணரின் அவதாரத்தைக் கொண்டாடும் இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • வாக்கு கொடுத்தபடி சிறையில் பிறந்த அனைத்து குழந்தைகளையும் கம்சனிடம் ஒப்படைத்தார், வசு தேவர்.
    • இறுதியில் தன் தாய் மாமனான கம்சனை கொன்று சிறையில் இருந்த தன் தாய் - தந்தையரை மீட்டார்.

    காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் முக்கியமான பத்து அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணர் அவதரித்த நாளையே 'கிருஷ்ண ஜெயந்தி' என்று கொண்டாடுகிறோம். இந்த பண்டிகை இந்தியா முழுவதும் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.

    கம்சன் என்ற மன்னன் மதுரா நகரை ஆண்டு வந்தான். இவன் மக்களை கொடுமைப்படுத்தி, பல பாவங்களை செய்தான். கம்சன், தன் சகோதரியான தேவகியை வசுதேவருக்கு திருமணம் செய்து கொடுத்தான். ஒரு நாள் கம்சன், இருவரையும் தனது தேரில் அழைத்து செல்லும் போது, ஒரு அசரீரி கேட்டது. ''கம்சா... உன் சகோதரியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை உன்னைக் கொல்லும்'' என்று ஒலித்தது.

    இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கம்சன், தன் சகோதரி என்றும் பாராமல் தேவகியை கொல்ல முயன்றான். அப்போது வசுதேவர், ''எங்களுக்கு பிறக்கும் குழந்தையால் தானே உங்கள் உயிருக்கு ஆபத்து. எங்களுக்கு பிறக்கும் அனைத்து குழந்தையையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன்'' என்று உறுதி அளித்தார். இதையடுத்து இருவரையும் சிறையில் அடைத்தான் கம்சன்.

    வாக்கு கொடுத்தபடி சிறையில் பிறந்த அனைத்து குழந்தைகளையும் கம்சனிடம் ஒப்படைத்தார், வசு தேவர். இவ்வாறு பிறந்த ஏழு குழந்தைகள் கம்சனால் கொல்லப்பட்டன. இந்த நிலையில் 8-வது முறையாக தேவகி கர்ப்பமானாள். இந்த குழந்தையையும் கம்சன் கொன்று விடுவான் என்று பயந்த வசுதேவர், விஷ்ணுவிடம் குழந்தையை காக்கும்படி மன்றாடி வேண்டினார். அன்று இரவு வசுதேவனின் கனவில் தோன்றிய விஷ்ணு, ''உனக்கு பிறக்க போகும் ஆண் குழந்தையை, அதே நாளில் பிறக்கும் எனது தீவிர பக்தனான நந்தகோபனின் குழந்தைக்கு பதிலாக மாற்றி வைத்து, அந்த பெண் குழந்தையை எடுத்து வா'' என்று கூறினார்.

    சிறையில் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரம் அஷ்டமி திதியில் நள்ளிரவில் எட்டாவது குழந்தையாக அவதரித்தார் கிருஷ்ணர். கிருஷ்ணரின் மகிமையால் சிறையின் கதவுகள் திறந்தன. காவலாளிகள் மயக்கம் அடைந்தனர். வசுதேவர் குழந்தையை எடுத்து கொண்டு வெளியேறினார். மழை பெய்து யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது வசுதேவருக்கு ஆற்றை கடக்க யமுனை பாதை அமைத்து கொடுத்தது. வசுதேவர் குழந்தையை தன் தலை மேல் வைத்து ஆற்றை கடந்தார். அப்போது ஐந்து தலை நாகம் குழந்தைக்கு குடையாக வந்தது.

    வசுதேவர் கோகுலத்தை அடைந்ததும் நந்தகோபனின் வீட்டுக் கதவுகள் திறந்து இருந்தன. மெதுவாக தனது குழந்தையை அங்கு வைத்துவிட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்து கொண்டு சிறைச்சாலையை வந்தடைந்தார், வசுதேவர். சிறைச்சாலையில் நுழைந்ததும் சிறை காவலாளிகள் மயக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டனர். பின்பு வசுதேவருக்கு குழந்தை பிறந்திருப்பதை கம்சனிடம் தெரிவித்தனர்.

    உடனே விரைந்து வந்த கம்சன், ''என்னை கொல்லப் போவது ஒரு பெண் குழந்தையா'' என்று சிரித்தபடி, அந்த பெண் குழந்தையை கையில் எடுத்து கல்லில் தூக்கி எறிந்தான். ஆனால் அந்த குழந்தை, ''உன்னை கொல்ல பிறந்த குழந்தை கோகுலத்தில் வளர்ந்து வருகிறது. காலம் வரும்போது உன்னை கொல்வான்'' என்று கூறி மாயமாக மறைந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கம்சன், தனது பணியாட்களை அனுப்பி கோகுலத்தில் கிருஷ்ணர் இருப்பதை உறுதி செய்தான். பிறகு அந்த குழந்தையை கொல்ல பூதகி என்ற அரக்கியை அனுப்பினான். அந்த அரக்கி தன் மார்பில் விஷத்தை தடவி, கிருஷ்ணருக்கு பால் கொடுப்பது போல் கொல்ல நினைத்தாள். ஆனால் கிருஷ்ணர் அந்த அரக்கியின் மூச்சுக் காற்றை நிறுத்தி கொன்றார்.

    இதை அறிந்த கம்சன் கோபம் கொண்டு, ஷகாட்சுரா என்ற அரக்கனை அனுப்பினான். அந்த அரக்கன் வண்டியின் சக்கரமாக மாறி, கிருஷ்ணரை சக்கரத்தால் நசுக்கி கொல்ல நினைத்தான். ஆனால் சக்கரத்தை எட்டி உதைத்து அவனை கொன்றார், கிருஷ்ணர். இவ்வாறு பல அரக்கர்களை அனுப்பி கிருஷ்ணரை கொல்ல நினைத்த கம்சனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவன் அனுப்பிய அனைத்து அரக்கர்களையும் குழந்தை பருவத்திலேயே கொன்றார் கிருஷ்ணர். கோகுலத்தில் கிருஷ்ணர் கோபியர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டார். வெண்ணெய் திருடனாக பல குறும்புத்தனங்கள் செய்து கோகுலத்தின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தார். இறுதியில் தன் தாய் மாமனான கம்சனை கொன்று சிறையில் இருந்த தன் தாய் - தந்தையரை மீட்டார்.

    கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

    கிருஷ்ண ஜெயந்தி அன்று, வாசலில் இருந்து வீட்டுக்குள் வரை குழந்தையின் பாத சுவடுகளை வரைவார்கள். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அன்றைய தினம் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடங்கள் அணிவித்து மகிழ்வார்கள்.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வீட்டை சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலம் இடுவார்கள். வீட்டில் மாவிலையால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்து, பல வகையான பலகாரங்கள் தயார் செய்து கிருஷ்ணரை வழிபாடு செய்வார்கள். அனைத்து வைணவ கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதில் கலந்துகொண்டு வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்கும். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணர் வரலாற்றையும், பெருமையையும் காதால் கேட்டாலே போதும் பல புண்ணியங்கள் வந்துசேரும்.

    • பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டுக்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும்.
    • கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை வீட்டில் குழந்தைகளுடன் கொண்டாடும் போது கிருஷ்ணரின் கதைகளைச் சொல்லி வழிபட்டால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர்.

    நம் பாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாக கலாச்சாரம், பண்பாட்டை பேணிக் காக்கும் வகையில் பல உற்சவங்கள், பண்டிகைகள், விரதங்கள், திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நம்மை வாழ வைக்கும் இறைவனுக்கும், இயற்கை சக்திகளுக்கும் நன்றியையும் பிரார்த்தனையும் சமர்ப்பிக்கின்றனர்.

    அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர்-தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார். பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் கிருஷ்ணன் காட்சியளித்தான்.

    கிருஷ்ண அவதாரம் இந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுக்கும் உபதேசங்களே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையானது. பகவத் கீதையில் அர்ச்சுனனுக்கு அருளிய உபதேசங்களுடன் இந்திய தத்துவ சாரங்களின் அடிப்படைகளை ஒன்று கலந்து கொடுக்கப்பட்டுள்ள நூல் பகவத் கீதையாகும்.

    பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டுக்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும். அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தியன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம். அன்று பல கோவில்களில் உறியடித் திருவிழா நடைபெறும்.

    கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து, மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், அவல், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து வழிபடுவர். அந்த நீல வண்ணக் கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய மனதார வேண்டி பிரார்த்தனை செய்கின்றோம்.

    கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை வீட்டில் குழந்தைகளுடன் கொண்டாடும் போது கிருஷ்ணரின் கதைகளைச் சொல்லி வழிபட்டால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். ராஜதந்திரம் அதிகரிக்கும், அரசியல் சாணக்கியத் தன்மை அதிகரிக்கும். பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்திசாலித்தனம் கூடும். எளிமையாகவும், சுருக்கமாகவும், புரிந்து கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும்.

    குழந்தை பாக்யம் இல்லாதவர்கள், புதுமணத் தம்பதியர், கருவுற்றிருக்கும் தாய்மார்கள் தங்களுக்கு புக்தி, யுக்தி, அறிவு ஆற்றல், ஆயுள், ஆரோக்யம் மிக்க சற்புத்திர பாக்யத்தை அருள வேண்டும் என்று அந்த ஆலிலைக் கண்ணனிடம் நெஞ்சுருகி பிரார்த்தனை செய்து கொண்டால் ஜாதகத்தில் உள்ள புத்திர தோஷம், புத்திர தடை போன்றவை நிவர்த்தியாகி சற்புத்திர பாக்கியத்தை பகவான் கிருஷ்ணன் அருள்வார்.

    நாமும் கிருஷ்ண ஜெயந்தி அன்று நம் வீடுகளில் கண்ணனை அழைத்து வழிபட்டு ஏராளமான பலன்களைப் பெற்றிடுவோம்.

    • அரிசி மாவை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும்.
    • வெல்லத்தை இளம் பாகாக்கி கீழே இறக்கி அரிசி மாவு, தேங்காய், எள்ளை சேர்த்து நன்றாக கிளறவும்.

    தேவையான பொருட்கள்:

    அரிசி மாவு - 1 ஆழாக்கு

    உளுந்து மாவு - 2 ஸ்பூன்

    தேங்காய் - 1 துண்டு

    வெல்லம் - 1 கப்

    எள் - 1/2 ஸ்பூன்

    எண்ணெய் (தேவையான அளவு)

    செய்முறை:

    * அரிசி மாவை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும்.

    * பிறகு எள்ளையும் வறுக்கவும்.

    * தேங்காயை சிறு சிறு பல்லாக வெட்டி நெய்யில் வறுக்கவும்.

    * வெல்லத்தை இளம் பாகாக்கி கீழே இறக்கி அரிசி மாவு, தேங்காய், எள்ளை சேர்த்து நன்றாக கிளறவும்.

    * எண்ணெய் காய வைத்து வெல்லமாவை சிறு உருண்டையாக (முழு நெல்லிக்காய் அளவு) உருட்டி பொரித்து எடுக்கவும்.

    • கிருஷ்ணருக்குப் பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று.
    • அந்த அவல் லட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

    தேவையானப் பொருட்கள்

    அவல் - 1 கப்

    பொட்டுக் கடலை (உடைத்தக் கடலை) - 1/2 கப்

    முந்திரி - 6

    திராட்சை - 6

    ஏலப்பொடி

    பால் - அரை கப்

    சர்க்கரை - 1 கப்

    நெய்

    தேங்காய் துருவல் - 2 கப்

    செய்முறை

    அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து தனித்தனியே வெறுமனே வறுத்து பொடித்து வைத்தக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவல், காய்ந்த திராட்சையை வறுத்து பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் பொடித்து வைத்துக் கொள்ளவும்.

    அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலப்பொடி, பால், நெய் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவில் லட்டுக்களை செய்து கொள்ளுங்கள்.

    உங்கள் வீட்டில் கிருஷ்ணருக்குப் பிடித்த அவல் லட்டுக்கள் தயார்.

    • நவநீதகிருஷ்ணன் கோவிலில் உள்ள மூலவர் சிறு குழந்தை வடிவில் காட்சி அளிக்கிறார்.
    • மூலஸ்தான விக்ரகத்தை ஸ்ரீபழனிநாச்சி முத்துசுவாமிகள் சித்தர் பிரதிஷ்டை செய்தார்.

    மதுரை மாநகரில் பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு புராணத்தை உள்ளடக்கி இருக்கின்றன. அதேநேரத்தில் சில சமூகத்தினர் தங்களது இஷ்ட தெய்வத்தை பிரதிஷ்டை செய்தும், வணங்கியும் வந்தனர்.

    அந்த தெய்வங்களுக்கு பிற்காலத்தில் பெரிய அளவில் ஆலயங்கள் கட்டப்பட்டு வழி வழியாக வழிபட்டும் வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சிறப்பு பெற்ற கோவில்தான் வடக்குமாசி வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீராமஸ்வாமி ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோவில் ஆகும்.

    இக்கோவில் குறித்து கோவில் அர்ச்சகர் ஒருவர் கூறியதாவது:-

    தேரோடும் வீதியான வடக்கு மாசி வீதியிலே இக்கோவில் அமையப்பெற்றுள்ளது. இக் கோவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு யாதவ பெருமக்களால் நிர்மாணிக்கப்பட்ட தாகும். மூலஸ்தான விக்ரகத்தை ஸ்ரீபழனிநாச்சி முத்துசுவாமிகள் என்னும் சித்தர் தற்போதுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்து விட்டு சமாதியாகி விட்டார். அவரது சமாதியான தினத்தை இன்றளவும் யாதவப் பெருமக்கள் குருபூஜையாக ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாணத்தன்று நடத்துகிறார்கள்.

    முன்னொரு காலத்தில் இந்த பகுதி நந்தவனமாக இருந்தது. அந்த நந்தவனத்திலேயே ஒரு கம்பத்தடியில் ஸ்ரீ ஆஞ்சநேயர், கோவில் கொண்டிருந்தார். இதன் அருகே தான் மூலஸ்தான விக்ரகம் இருந்தது. அப்போது அதற்கு கம்பந்தடி கிருஷ்ணன் என்ற நாமம் இருந்தது.

    பூம்புகாரில் இருந்து மதுரை வந்த கோவலனையும், கண்ணகியையும் இங்குள்ள வடக்கு மாசி வீதி இடைச்சேரி பெண்ணான மாதரி தான் ஆதரித்ததாகவும், சிலப்பதிகாரத்தில் இருந்து தெரியவருகிறது. மேலும் இடைசேரி பெண்களால் ஸ்ரீநவநீதகிருஷ்ணனை முன்னிருத்தி பாடப்பெற்ற தாகவும் கூறப்படுகிறது.

    இந்த நவநீதகிருஷ்ணன் கோவிலின் உபகோவிலான ராமாயண சாவடி கோவிலும் இவ்வீதியில்தான் உள்ளது. பாண்டிய மன்னரிடம் கண்ணகி கோபம் கொண்டு, அங்கிருந்து வந்து கண்ணகி இளைப்பாரிய இடமும் இந்த ராமாயண சாவடி கோவில்தான்.

    ராமன் சன்னதி, விநாயகர் சன்னதி, தண்டபாணி சன்னதி, நாச்சிமுத்து, கருப்பண சாமி சன்னதி ஆகிய துணை கோவில்களையும் கொண்டுள்ளது.

    வடக்கு பார்த்து உள்ள ஸ்ரீராமஸ்வாமி நவநீதகிருஷ்ணன் கோவிலில் உள்ள மூலவர் சிறு குழந்தை வடிவிலான கிருஷ்ணராக காட்சி அளிக்கிறார். கலை நயத்துடன் கற்களால் கட்டப்பட்ட இக்கோவிலின் 10 தூண்களிலும் கிருஷ்ணரின் தசாவாதார காட்சிகளும் பொறிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீநவநீத கிருஷ்ணன் தொட்டில் கட்டும் பிரார்த்தனைக்கு இணங்கி பிள்ளை செல்வத்தை அருள்கிறார். எனவே குழந்தை வரம் வேண்டுவோர் தினசரி வந்து வழிபட்டால் பலன் உண்டு.

    இதேபோல வெண்ணை, வெள்ளி கொலுசு வாங்கி கொடுத்து பிரார்த்தனை செய்வோருக்கு மன இன்னல்களை போக்கி எண்ணங்களை நிறைவேற்றி வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இத்திருக்கோவிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி உற்சவத்தின்போது 10 நாட்கள் பகல் பத்து, ராப்பத்து திருவிழா நடைபெறும். அப்போது 10 நாட்களும் ஸ்ரீகண்ணபிரான் ராமாயண சாவடிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இக்கோவிலில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தினசரி தீர்த்தங்களும், பிரசாதங்களும் வழங்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு சொந்தமான பசுமாட்டை கோவிலுக்கு கொண்டு வந்து தினமும் பூஜை நடத்தப்படுவது சிறப்பாகும்.

    ராமாயண சாவடி ஸ்ரீராமர் சன்னதியில் ஸ்ரீராமநவமி உற்சவத்தன்று சீதா திருக்கல்யாணம் வெகுசிறப்பாக நடத்தப்படுவது வழக்கம்.

    ஆயிரம் வீட்டு யாதவர்களுக்கு சொந்தமான ஸ்ரீராமஸ்வாமி, ஸ்ரீநவநீத கிருஷ்ணன் சுவாமி தேவஸ்தானம் யாதவ பெருமக்களால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நவநீதகிருஷ்ணன் இரண்டு கைகளிலும் வெண்ணையுடன் சிரித்த முகத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
    • புத்திரதோஷம் உள்ளவர்கள் வெண்ணெய், சர்ககரை பொங்கல், அவல் படைத்து வழிபட்டால் பலன் கிடைக்கும்

    மதுரையில் எத்தனையோ கிருஷ்ணன் கோவில்கள் இருந்தாலும் பந்தடி 5-வது தெருவில் (விளக்குத்தூண் அருகே) உள்ள நவநீதகிருஷ்ணன் கோவிலுக்கு தனி சிறப்பு உண்டு.

    சுமார் 500 வருடங்களுக்கு முன்பு இக்கோவில் கட்டப்பட்டதாகும். இந்த கோவிலில் மூலவர் நவநீதகிருஷ்ணன் ஆவார். மகாலட்சுமி அம்மனும் இங்கு உள்ளது. எத்தனையோ திருவிழாக்கள் நடந்தாலும் இந்த கோவிலில் கோகிலாஷ்டமி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, விநாயகர் சதுர்த்தி விழாக்கள் மிகவும் பிரசித்தம். இவற்றையெல்லாம் பின்பற்றும் வகையில் நடக்கும் விழா கிருஷ்ணஜெயந்தி விழா என்றால் மிகையில்லை.

    இக்கோவிலின் முன்பு மண்டபத்தில் மகா கணபதி உள்ளார். சன்னதி முன்பக்கம் இடது புறம் ஆஞ்நேயரும், வலதுபுறம் கருடாழ்வாரும் உள்ளனர். இங்கு அருள்பாலிக்கும் நவநீதகிருஷ்ணன் இரண்டு கைகளிலும் வெண்ணையுடன் சிரித்த முகத்துடன் பாலகனாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நவநீதகிருஷ்ணன் வீதி உலா செல்வது கிடையாது. ஒவ்வொரு ரோகினி நட்சத்திரத்திலும் சாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது.

    கிருஷ்ணர் பிறந்த தினமான கோகுலாஷ்டமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படும். மறுநாள் மாலையில் பகவத்கீதை பாராயணம் நடக்கிறது. புத்திரதோஷம் உள்ளவர்கள் இவருக்கு வெண்ணெய், சர்ககரை பொங்கல், அவல் படைத்து வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.

    இந்த கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீநிவாசா மீது தொடர்ந்து 3 மாதங்கள் சூரிய ஒளி விழுவது சிறப்பு அம்சமாகும். தினமும் காலையில் கிருஷ்ணருக்கு பூஜை செய்யும்போது 27 நட்சத்திர தீபம் மற்றும் 108 தீபம் ஏற்றி தூபம் காட்டுகின்றனர்.

    இந்த கோவிலில் கண்டகி நதியில் கிடைத்த சாளக்கிராம கற்கள் இருக்கின்றன. சாளகிராமம் மற்றும் ஜடாரிக்கு தினமும் பாலாபிஷேகம் நடக்கிறது. இந்த தரிசனம் காண்போருக்கு வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    பொதுவாக பெருமாள் கோவில்களில் நவக்கிரக சன்னதி வைக்கப்படுவதில்லை. கண்ணன், காளிங்கன் என்ற நாகத்திற்கு முக்தி கொடுத்து அதன் மீது நின்று ஆடியவர் என்பதால் இங்கு ராகு, கேது கிரகங்கள் மட்டும் சிலை வடிவில் உள்ளன.

    • குழந்தை வடிவில், இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்ற கோலத்தில்கிருஷ்ணர் காட்சி தருகிறார்.
    • காவல் தெய்வமான பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார்.

    குழந்தை வரம் வேண்டி வழிபடும் பக்தர்கள் கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலை போன்று குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் குழந்தை ரூபத்தில் அருள்பாலிக்கும் கிருஷ்ணர் சிறப்பு வாய்ந்தவராக திகழ்கிறார்.

    இக்கோவிலின் மூலஸ்தானத்தில் கிருஷ்ணர் குழந்தை வடிவில், இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். அப்போது சுவாமி விசேஷ அலங்காரத்தில் தத்ரூபமாக குழந்தை போலவே காட்சியளிப்பார்.

    மறுநாள் உறியடி உற்சவம் நடக்கும். உற்சவர் ராஜகோபாலர் ருக்மிணி மற்றும் சத்யபாமாவுடன் காட்சி தருகிறார்.

    மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த போது, அவரது குழந்தை பருவத்தில் கிருஷ்ணர் என்றும், பசுக்களை மேய்க்கும் இளைஞனாக இருந்த போது ராஜகோபாலர் என்றும் அழைக்கப்பெற்றார்.

    இதன் அடிப்படையில் இங்கு மூலவராக கிருஷ்ணரையும், உற்சவராக ராஜ கோபாலரையும் வடித்துள்ளனர். மூலஸ்தானம் எதிரில் உள்ள கொடிமரத்தைச் சுற்றிலும், அஷ்டதிக் பாலகர்களின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

    முன்மண்டபத்தில் கருடாழ்வார் இருக்கிறார். நம்மாழ்வார், பெரியாழ்வார், விஸ்வக்சேனர் ஒரே சன்னதியில் காட்சி தருகின்றனர்.

    பிரகாரத்திலுள்ள காவல் தெய்வமான பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார்.பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் இருக்கும் பகுதி ஆதித்தவர்ம மகாராஜா ஆட்சி காலத்தில் அவரது எல்கைக்கு உட்பட்டு இருந்தது.

    குருவாயூரப்பனின் பக்தரான இவர், தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் குருவாயூரப்பனுக்கு கோவில் எழுப்ப ஆசைப்பட்டார். அவ்வேளையில் கிருஷ்ணர், கையில் வெண்ணெயுடன் குழந்தை கண்ணனாக அவனது கனவில் காட்சி தந்தார். குறிப்பிட்ட இடத்தில், தனக்கு கோவில் எழுப்பும்படி கூறினார்.

    அதன்படி கோவில் கட்டிய மன்னன், தான் கனவில் கண்ட வடிவத்திலான கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தான். சுவாமிக்கு நவநீத கிருஷ்ணர் (நவநீதம் என்றால் வெண்ணெய்) என திருநாமம் சூட்டினான்.

    இக்கோவிலில் தினமும் காலை 5.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, குழந்தை கிருஷ்ணரை வெள்ளி தொட்டிலில் கிடத்தி, தாலாட்டு பாடி பூஜிக்கின்றனர்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு கிருஷ்ணருக்கு வெண்ணெய் காப்பு செய்வித்து, பால்பாயாசம், உன்னியப்பம், பால், பழம், அரிசிப்பொரி, வெண்ணெய், அவல், சர்க்கரை படைக்கின்றனர். சித்திரை பிரம்மோற் சவத்தின் நான்காம் நாளில் கிருஷ்ணர் கையில் வெண்ணெய் பானையுடன், வெண்ணெய்த்தாழி உற்சவம் காண்கிறார்.

    இவ்விழாவின் ஏழாம் நாளில் இவர் இந்திர வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் விசேஷமாக நடக்கும். சித்ரா பவுர்ணமியன்று கிருஷ்ணர், இங்குள்ள பழையாற்றுக்கு சென்று ஆராட்டு வைபவம் காண்பார்.

    ஆடி கடைசி சனிக்கிழமையன்று இவருக்கு புஷ்ப அபிஷேகம் நடக்கிறது. அன்று மூலஸ்தானம் முழுவதும் மலர்களால் நிரப்பி, சுவாமியின் முகம் மட்டுமே தெரியும்படியாக அலங்கரிப்பர். இவ்வேளையில் சுவாமியை தரிசித்தால் மன நிம்மதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    • தென்னிந்தியாவிலேயே இந்த சிலை பெரிய சிலை என கூறப்படுகிறது.
    • கிருஷ்ணர் கோவில் அருகில் கலிகண்ட மகாதேவர் சிவன் கோவில் உள்ளது.

    குமரி மாவட்டம் கருங்கல் உள்ள திப்பிறமலையில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் கிருஷ்ணர் சிலை 13 அடி உயரம் கொண்டது.

    தென்னிந்தியாவிலேயே இந்த சிலை பெரிய சிலை என கூறப்படுகிறது. இது தன்னை பெற்றெடுத்த தாய், தந்தையருக்கு கருவில் இருக்கும்போதே விஸ்வரூப காட்சி அளித்த நிலையாகும். எனவே இந்த கோவில் கருமாணித்தாழ்வார் ஸ்ரீகிருஷ்ணன் கோவில் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

    கிருஷ்ணர் சிலை முற்காலத்தில் தானாக வளர்ந்ததாகவும், இப்போதுள்ள கோவில் மூன்றாவது தடவையாக பிரித்து கட்டப்பட்டதாகவும், தானாக வளர்ந்து கொண்டிருந்த இந்த சிலையை முற்காலத்தில் பூஜை செய்து வந்த பூசாரி குறைபடுத்தி சிலையின் வளர்ச்சியை நிறுத்தியதாகவும் கதை ஒன்று சொல்கிறது.

    நம்பிக்கையுடன் வேண்டுவோருக்கு வேண்டுதலை நிறைவேற்றி சகல ஐஸ்வரியங்களையும் கிருஷ்ணர் அள்ளி அள்ளி தருவதாக அங்குள்ள பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.

    கிருஷ்ணர் கோவில் அருகில் கலிகண்ட மகாதேவர் சிவன் கோவில் உள்ளது. சுயம்புலிங்கமாக காட்சி அளிக்கும் சிவன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு இரண்டு கைகளையும் உயர்த்தி அருள்பாலிப்பதாக தேவபிரசன்ன தகவல்கள் கூறுகின்றன.

    சிவனை வழிபட்டு விட்டு இங்குள்ள 9 கிளைகளுடன் கூடிய அரசமரத்தை 9 முறை வலம் வந்தால் 9 கிரக தோஷங்களும் நீங்கி பாவங்களில் இருந்து விடுபடலாம் என சிவனடியார்கள் கூறு கிறார்கள்.

    அடுத்ததாக அங்கு நிற்கும் ஆல மரத்தடியில் வன சாஸ்தாவும் அருள்பாலிக்கிறார். இந்த 3 கோவில்களும் 3100 வருடங்கள் பழமையானவை என கூறப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு செய்யப்படும் பூரண சந்தன காப்பு அலங்காரம் கண்கொள்ளா காட்சி ஆகும். அன்றைய தினம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    • கிருஷ்ண பகவான் ருக்மணி, சத்ய பாமாவுடன் காட்சி அளிக்கிறார்.
    • திருமாங்கல்ய தோஷ நிவர்த்திக்கு உரிய திருத்தலமாகும்.

    புதுவை முத்தியால்பேட்டை தெபேசன்பேட் வீதியில் வேணுகோபாலசுவாமி கோவில் உள்ளது. இங்கு கிருஷ்ண பகவான் ருக்மணி, சத்ய பாமாவுடன் காட்சி அளிக்கிறார்.

    நெசவு தொழில் செய்து வந்த பத்மசாலிய சமூகத்தினர் இதை உருவாக்கினர். முதலில் மூலிகைகளாலும் தங்க இழைகளாலும் உருவாக்கப்பட்ட கிருஷ்ணனின் படங்கள் வைக்கப்பட்டு இங்கு பஜனை நடந்து வந்தது. பின்னர் 1922-ல் வேணுகோபால சுவாமியாக சிலை அமைக்கப்பட்டது.

    இங்கு பத்மசாலியர்களின் குலதெய்வமான பாவண மகரிஷி மற்றும் அவரது மனைவி பத்ராவதி அம்மை ஆகியோருக்கும் சிலை உள்ளது. சந்தான கிருஷ்ணனின் உருவமான குழந்தை கிருஷ்ணனுக்கும் இங்கு சிலை வழங்கப்பட்டுள்ளது.

    ஆஞ்சநேயருக்கு என தனி சன்னிதி உள்ளது. தமிழ், தெலுங்கு புத்தாண்டு நாட்களில் இங்கு விஷேச பூஜை நடைபெறும். ஆடி பூரம், பங்குனி மாத ராமநவமி, மார்கழி மாத ஏகாதசி அனுமன் ஜெயந்தி நாட்களிலும் இங்கு விசேஷ பூஜைகளை காண பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.

    கிருஷ்ணஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு வெண்ணெய் தாழி அலங்காரம் செய்யப்பட்டு உறியடி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் இங்கு நடக்கிறது. மாசிமாத தீர்த்த வாரியில் வேணுகோபால சுவாமி உற்சவரும் கலந்து கொள்கிறார்.

    இந்த கோவில் திருமாங்கல்ய தோஷ நிவர்த்திக்கு உரியது ஆகும். மேலும் இங்கு சந்தான கிருஷ்ணரும் அருள்பாலிப்பதால் குழந்தை வரமும் வழங்கும் கோயில் என்கிற ஐதீகமும் உள்ளது. இங்கு உள்ள ஆஞ்சநேய சுவாமி நவக்கிரக தோஷ நிவர்த்தி வழங்குகிறார்.

    • மருதூர் கிருஷ்ணரை தரிசித்தால் பிறப்பற்ற வாழ்வை அருள்வார்.
    • குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் திரட்டுப்பால் செய்து வழிபாடுகிறார்கள்.

    நெல்லையில் இருந்து சீவலப்பேரி செல்லும் சாலையில் உள்ளது மருதூர். இங்கு புகழ் பெற்ற நவநீத கிருஷ்ணர் கோவில் உள்ளது. மருதூர் அணைக்கட்டின் அருகே தாமிரபரணி கரையில் இந்த கோவில் அமைந்துள்ளது. கண்ணன் வெண்ணை திருடி உண்டதால் கோபம் அடைந்த யசோதா, கண்ணனை உரலில் கட்டிப்போட்டாள். அந்த உரலை கண்ணன் இழுத்தப்படி சென்றான்.

    அப்போது இரு மருத மரங்களுக்கிடையே உரல் சிக்கிக் கொண்டது. கண்ணன் கைகள் பட்டதும் மருத மரங்களாக இருந்த குபேரன் மகன்கள் நளகூபன், மணிக்ரீவன் சாபவிமோசனம் பெற்றனர். அவர்கள் மருத மரங்கள் உள்ள ஊர்களில் எல்லாம் கிருஷ்ணர் காட்சி தர கேட்டுக் கொண்டார். அந்த ஐதீகத்தின் அடிப்படையில் மருதூரில் கிருஷ்ணர் ஆலயம் அமைந்துள்ளது.

    இங்கு மூலவர் நவநீதகிருஷ்ணன் 4 அடி உயரத்தில் சிரித்த முகத்துடன் கேட்டவருக்கு கேட்டவரம் தருபவராக நின்று அருள்பாலிக்கிறார். அருகே இரண்டடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன கிருஷ்ணர் இரண்டு வயது பாலகனாக அரை சலங்கையுடன், இருகைகளிலும் வெண்ணெய் ஏந்தி சிறு தொந்தி வயிற்றுடன் அருள் பாலிக்கிறார்.

    எதிரில் நாலடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன கருடாழ்வார், பக்தர்களின் குறைதீர்க்கும் கிருஷ்ணன் அழைக்கும் குரலுக்கு ஓடி வர தயாராக நிற்கிறார். குறிப்பாக ஏகாதசி விரதம் இருந்து மருதூர் கிருஷ்ணரை தரிசித்தால் பிறப்பற்ற வாழ்வை அருள்வார்.

    குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய விசேஷ நாட்களில் இத்தலத்திற்கு வந்து தாமிரபரணி ஆற்றில் நீராடி விட்டு கிருஷ்ணரை தரிசித்து, பால்பாயாசம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கிருஷ்ணர் தன்னைப்போலவே ஒரு அழகான குழந்தை பிறக்க வரம் அளித்திடுவார் என்பது ஐதீகம்.

    விட்டிலாபுரம் பாண்டுரங்கன்

    நெல்லை மாவட்டம் விட்டிலாபுரத்தில் பாண்டுரங்கன் ஆலயம் உள்ளது.இங்கு சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோயிலின் முன்பக்கம் 16 கால் மண்டபம். அடுத்து பெரிய மண்டபத்தில் பலிபீடமும், கொடிமரமும் அமைந்துள்ளது. கோபுரத்தை விட உயரமாக காட்சிதருகிறது இக்கொடிமரம். மேற்கு நோக்கிய கருடாழ்வார் சன்னதியைத் தாண்டி சென்றால் கருவறை உள்ளது.

    அதில் நான்கடி உயரத்தில் நின்ற கோலத்தில் இடுப்பில் கை வைத்தபடி, கருணைப்பார் வையால் காத்து ரட்சிக்கும் பாண்டுரங்க விட்டலேஸ்வரர், அருகே பாமா, ருக்மணி காட்சியளிக்கின்றனர். கருவறைக்கு முன்னால் உற்சவர் நான்கு திருக்கரத்துடன் பாமா, ருக்மணி, பூமாதேவி, ஸ்ரீதேவி, நீளாதேவியுடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் பாமா, ருக்மணி, சேனை முதல்வர், உடையவர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதி உள்ளது.

    ருக்மணி சன்னதியில் அற்புதமாக வேலைப்பாடுகள் அமைந்துள்ளது. இசை, நாட்டியம் இவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் அரங்கேற்றத்திற்கு முன் இங்குள்ள பாண்டுரங்கனை வழிபடுகிறார்கள். திருமணம் வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் திரட்டுப்பால் செய்து வழிபாடு செய்கிறார்கள்.

    குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க பால்பாயாசம் படைத்து வழிபடுகிறார்கள்.16ம் நூற்றாண்டில் விஜயநகரப்பேரரசின் தமிழகப்பிரதிநிதியாக விட்டலராயன் என்ற விட்டல தேவன் ஆட்சி செய்தார். இவருக்கு பண்டரிபுரம் பாண்டுரங்கன் மீது அதிக ஈடுபாடு இருந்தது.

    இவரது கனவில் பாண்டுரங்கன் தோன்றி வடக்கில் இருப்பது போல தென்னகத்தில் உனது இருப்பிடத்திலும் அருள்பாலிக்க உள்ளேன். எனவே தாமிரபரணி ஆற்றில் புதைந்து கிடக்கும் எனது விக்ரகத்தை எடுத்து கோயில் கட்டி வழிபடு,'' எனக் கூறி மறைந்தார். பாண்டுரங்கன் கூறியது போலவே ஆற்றில் இருந்து விக்ரகம் எடுக்கப்பட்டது.

    ஆற்றில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் தன் பெயரால் விட்டலாபுரம் என்ற நகரை உருவாக்கி, நகரின் நடுவே கோயில் கட்டி விக்ரக பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இவரது திருப்பணியில் மகிழ்ந்த பாண்டுரங்கன் இவர் முன் தோன்றி `வேண்டிய வரம் கேள்,' என்றார்.

    விட்டலராயனும், `பெருமாளே! தங்கள் சன்னதியை நாடி வரும் பக்தர்களின் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பெருக வேண்டும். உனது சன்னதிக்கு வந்து பாடி நிற்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களை தந்தருள வேண்டும்,' என வேண்டினார். தன்னலமற்ற இந்த வேண்டுதலை ஏற்ற பெருமாள், அன்றில் இருந்து இத்தலத்தில் கேட்டவருக்கு கேட்டவரம் தந்து அருள்பாலித்து வருகிறார்.

    • நான்கு அவதாரங்கள் சங்குசக்கரத்துடன் காட்சியளிக்கின்றன.
    • தும்பிக்கையாழ்வார் என்ற நாமத்தோடு விநாயகர் பன்னிரு ஆழ்வார்களுடன் அமைந்துள்ளார்.

    நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே வீரகேரளம்புதூரில் நவநீதகிருஷ்ணன் சுவாமி கோவில் உள்ளது. `நவநீதம்' என்றால் "வெண்ணெய்" எனப்பொருள். கிருஷ்ணருக்கு பிடித்தது வெண்ணை. இதனால் அவர் நவநீத கிருஷ்ணர் என பெயர் பெற்றார்.

    இந்த கோவில் கர்ப்பகிரஹத்தில் "ஸ்ரீ நவநீதகிருஷ்ணன்" இரு திருக்கரங்களிலும் வெண்ணெய் ஏந்தியவாறு புன்முறுவலுடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

    கற்பூர ஆரத்தியின்போது அவரது திருமுகத்தில் தவழும் புன்னகை அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும். கர்ப்ப கிரஹத்தின் முன்பு உள்ள மண்டபத்தில் "ஸ்ரீ தேவி, பூமாதேவி நாச்சியார்கள்" சமேதராக "ஸ்ரீ நவநீதகிருஷ்ணன்" அருள்பாலித்து வருகிறார்.

    கர்ப்பகிரஹத்தின் மேலே செப்புக்கலசத்துடன் கூடிய விமானம் உள்ளது. இவ்விமானத்தில் "கிழக்கு முகமாக ஸ்ரீநவநித கிருஷ்ணனும், தெற்கு முகமாக ஸ்ரீ தட்சிணா மூர்த்தியும், மேற்கு முகமாக ஸ்ரீ யோக நரசிம்மரும்,வடக்கு முகமாக ஸ்ரீ பிரம்மாவும்" எழுந்தருளியுள்ளனர்.

    இத்தலத்தில் பெருமாளின் பத்து அவதாரங்களும் உள்ளனர். மச்சவதாரம், கூர்மவதாரம், வராகவதாரம், நரசிம்மவதாரம் ஆகிய நான்கு அவதாரங்கள் சங்குசக்கரத்துடன் காட்சி அளிக்கின்றன. வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், ராம அவதாரம் வில்லன்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், கிருஷ்ணவதாரம் கையில் வெண்ணையுடனும் இருக்கின்றன.

    கல்கி அவதாரம் கையில் கேடயமும், வாளும் ஏந்தியிருக்கிறது. இந்து மதத்தில் நல்ல உடல்நலத்திற்காக வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் தன்வந்திரி ஒன்றாகும். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் இந்த வடிவம் , தசாவதாரத்திற்குள் சேருவதில்லை. பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தன்வந்திரி (தனிக்கோயிலில்) காணப்படுகிறார்.

    இந்து மத வேதங்கள் மற்றும் புராணங்கள் தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுகிறது.

    இங்கு இத்திருக்கோயிலின் தன்வந்திரி பகவான் தனி சன்னதியில் உள்ளார். பிரணவ சொரூபியான விநாயகப்பெருமான் தும்பிக்கையாழ்வார் என்ற நாமத்தோடு ஆலயத்தில் பன்னிரு ஆழ்வார்களுடன் அமைந்துள்ளார்.வைணவத்தை வாழவைத்த ராமானுஜர் தனி சன்னதியில் உள்ளார். உற்சவமூர்த்திக்கு எதிரில் "பெரிய திருவடி"என்றழைக்கப்படும் "ஸ்ரீ கருடாழ்வார்" பெருமாளை நோக்கி கைகூப்பி வணங்கிய நிலையில் எழுந்தருளி உள்ளார்.

    உற்சவர் எழுந்தருளி உள்ள மண்டபத்தின் வடக்குத் தூணில் "சிறிய திருவடி" என்று போற்றப்படும் "ஸ்ரீ ஆஞ்சநேயர்" அருள்பாலிக்கிறார்.பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பாக கொடியேற்றமும் உத்திரம் அன்று தேரோட்டம் நடைபெறுகிறது. மொத்தம் பதினொரு நாட்கள் திருவிழா நடைபெறும்.

    தை பொங்கல் மறுநாள் பாரிவேட்டையும்,தசராவில் பத்து நாட்களுக்கு கொலு வைபவும் ,வைகுண்ட ஏகாதசியில் சொர்க்க வாசல் திறப்பு விழாவும் ,கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் அன்று சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். தமிழ் மாதம் கடைசி சனிக்கிழமையும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். வாரத்தில் புதன், வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய அனைத்து விழாக்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய விசேஷ நாட்களில் இத்தலத்திற்கு வந்து அருகில் உள்ள சிற்றாற்றில் நீராடி விட்டு கிருஷ்ணரை தரிசித்து, பால்பாயாசம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கிருஷ்ணர் தன்னைப்போலவே ஒரு அழகான குழந்தை பிறக்க வரமளித்திடுவார் என்பது ஐதீகம்.

    இந்த கோவிலில் தல விருட்சமாக நெல்லி மரம் உள்ளது.

    ×