search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meenakshi Thirukalyanam"

    • முருகப்பெருமான் தனது இருப்பிடமான திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்டார்.
    • பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் புறப்பட்டார்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரையில் மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்கு சென்ற திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பூப்பல்லக்கில் ஊர் திரும்பினார். தங்கை மீனாட்சிக்கு, சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்துக் கொடுத்த பவளக்கனி வாய்பெருமாளும் தன் இருப்பிடம் வந்தார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 12-ந்தேதி முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 21-ந் தேதி மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடந்தது. அதில் மீனாட்சி அம்மனின் அண்ணனாக பவளக்கனிவாய் பெருமாள் இருந்து சுந்தரேசுவரருக்கு மீனாட்சி அம்மனை தாரை வார்த்து கொடுத்தார்.

    இதனையொட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து கடந்த 20-ந்தேதி மாலை 5 மணியளவில் மேள தாளங்கள் முழங்க பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டு மதுரைக்கு வந்தார்.

    இதேவேளையில் முருகப்பெருமான் தனது தாய், தந்தை (மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்காக) புறப்பட்டு மதுரைக்கு வந்தார்.

    பின்னர் 21-ந் தேதி நடைபெற்ற திருக்கல்யாணம் வைபவத்தில் பங்கேற்று அருள்பாலித்தனர். நேற்று மாலை 5 மணி வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தங்கி இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் மதுரை நகைக்கடை வீதியில் இருந்து மேள தாளங்கள் முழங்க வாசனை கமழும் வண்ண மலர்களான பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தனது இருப்பிடமான திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்டார்.

    இதே வேளையில் பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் புறப்பட்டார். மீனாட்சி பள்ளம், ஜெய்ஹிந்த்புரம், பழங்காநத்தம், பைக்கரா பசுமலை வழியாக வழிநெடுகிலுமாக அமைக்கப்பட்டு இருந்த திருக்கண் மற்றும் மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தப்படியே இரவில் திருப்பரங்குன்றம் வந்தடைந்து தன் இருப்பிடம் சென்றார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தது.

    • உலகப்புகழ்பெற்றது சித்திரை திருவிழா.
    • கள்ளழகர் வருகையால் மதுரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறது.

    மதுரை:

    கோவில் மாநகர் என்ற பெருமைக்குரிய மதுரை மாநகரில் சித்திரை முதல் பங்குனி வரை அனைத்து மாதங்களிலும் திருவிழா நடைபெறும். இந்த விழாக்களில் உலகப்புகழ்பெற்றது சித்திரை திருவிழா. வரலாற்று சிறப்புமிக்க விழாவும்கூட..

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து இந்த விழா நடக்கிறது. அதாவது சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த ஒற்றுமை பெருவிழாவாக சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 8-ந் தேதி முகூர்த்தக்கால் ஊன்றி திருவிழா ஆரம்பமானது.

    மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 19-ந்தேதி பட்டாபிஷேகமும், 20-ந்தேதி திக்கு விஜயமும் நடந்தன. மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், நேற்று காலை தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றன.

    சித்திரை திருவிழாவுக்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை மதுரையை நோக்கி புறப்பட்டார்.

    பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் பகுதிகளில் உள்ள மண்டபங்களில் எழுந்தருளி நேற்று காலை 6 மணி அளவில் மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வந்தார்.

    அங்கு கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அழகர்வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, கள்ளழகரை வர்ணித்து பாடல்கள் பாடி அதிர்வேட்டுகள் முழங்க எதிர்கொண்டு வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட் வழியாக வழிநெடுகிலும் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். கள்ளழகர் வருகையால் மதுரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறது.

     நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். நள்ளிரவில் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்து கொண்டு வரப்பட்ட மாலை, கள்ளழகருக்கு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்தவாறே ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அதன்பின் 3 மணிக்கு வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார்.

    இன்று அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க உள்ளார். முன்னதாக வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்க எழுந்தருளி உள்ளார். இதனைத்தொடர்ந்து காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.

    அந்த உன்னத காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்துள்ளனர்.

     வைகை ஆற்றில் நேற்று இரவு முதலே பக்தர்கள் கூட தொடங்கினர். கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய கள்ளழகரை வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தீப்பந்தம் ஏந்தியும், தோலினால் செய்த பைகளில் தண்ணீரை நிரப்பி பீய்ச்சி அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கள்ளழகர் வைகையில் இறங்கியபின், இன்று பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபம் செல்கிறார். அங்கு பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

    அப்போது கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் எழுந்தருள்கிறார்.

    அங்கு நாளை (புதன்கிழமை) அதிகாலை 6 மணிக்கு ஏகாந்த சேவையும், பக்தி உலாவும் நடக்கின்றன. காலை 9 மணியளவில் திருமஞ்சனமாகி அங்கிருந்து சேஷவாகனத்தில் புறப்பட்டு பகல் 11 மணிக்கு வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.

    பின்பு மாலை 3 மணிக்கு கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். பிற்பகல் 3.30 மணிக்கு அனுமன் கோவிலில் அங்கப்பிரதட்சணம் நடக்க உள்ளது.

    அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு இரவு 12 மணி முதல் விடிய, விடிய தசாவதார காட்சி நடக்கிறது. அப்போது அழகர் தசாவதாரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    தொடர்ந்து 25-ந்தேதி காலை 6 மணிக்கு மோகினி அவதார கோலத்துடன் உலா வருகிறார். அதன்பின் பகல் 12 மணிக்கு அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் எழுந்தருள்கிறார்.

    இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகிறார். நள்ளிரவுக்குபின் 2.30 மணிக்கு கள்ளழகர் பூப்பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    26-ந்தேதி காலை 8.50 மணிக்கு கருப்பணசுவாமி கோவிலில் பிரியாவிடை பெற்று வையாழியானவுடன் அழகர்மலைக்கு புறப்படுகிறார்.

    அன்று இரவு அப்பன்திருப்பதியில் திருவிழா நடக்கிறது. தொடர்ந்து 27-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் அழகர்மலையில் இருப்பிடத்தை அடைகிறார்.

    • நவநீதகிருஷ்ணன் கோவிலில் உள்ள மூலவர் சிறு குழந்தை வடிவில் காட்சி அளிக்கிறார்.
    • மூலஸ்தான விக்ரகத்தை ஸ்ரீபழனிநாச்சி முத்துசுவாமிகள் சித்தர் பிரதிஷ்டை செய்தார்.

    மதுரை மாநகரில் பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு புராணத்தை உள்ளடக்கி இருக்கின்றன. அதேநேரத்தில் சில சமூகத்தினர் தங்களது இஷ்ட தெய்வத்தை பிரதிஷ்டை செய்தும், வணங்கியும் வந்தனர்.

    அந்த தெய்வங்களுக்கு பிற்காலத்தில் பெரிய அளவில் ஆலயங்கள் கட்டப்பட்டு வழி வழியாக வழிபட்டும் வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சிறப்பு பெற்ற கோவில்தான் வடக்குமாசி வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீராமஸ்வாமி ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோவில் ஆகும்.

    இக்கோவில் குறித்து கோவில் அர்ச்சகர் ஒருவர் கூறியதாவது:-

    தேரோடும் வீதியான வடக்கு மாசி வீதியிலே இக்கோவில் அமையப்பெற்றுள்ளது. இக் கோவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு யாதவ பெருமக்களால் நிர்மாணிக்கப்பட்ட தாகும். மூலஸ்தான விக்ரகத்தை ஸ்ரீபழனிநாச்சி முத்துசுவாமிகள் என்னும் சித்தர் தற்போதுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்து விட்டு சமாதியாகி விட்டார். அவரது சமாதியான தினத்தை இன்றளவும் யாதவப் பெருமக்கள் குருபூஜையாக ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாணத்தன்று நடத்துகிறார்கள்.

    முன்னொரு காலத்தில் இந்த பகுதி நந்தவனமாக இருந்தது. அந்த நந்தவனத்திலேயே ஒரு கம்பத்தடியில் ஸ்ரீ ஆஞ்சநேயர், கோவில் கொண்டிருந்தார். இதன் அருகே தான் மூலஸ்தான விக்ரகம் இருந்தது. அப்போது அதற்கு கம்பந்தடி கிருஷ்ணன் என்ற நாமம் இருந்தது.

    பூம்புகாரில் இருந்து மதுரை வந்த கோவலனையும், கண்ணகியையும் இங்குள்ள வடக்கு மாசி வீதி இடைச்சேரி பெண்ணான மாதரி தான் ஆதரித்ததாகவும், சிலப்பதிகாரத்தில் இருந்து தெரியவருகிறது. மேலும் இடைசேரி பெண்களால் ஸ்ரீநவநீதகிருஷ்ணனை முன்னிருத்தி பாடப்பெற்ற தாகவும் கூறப்படுகிறது.

    இந்த நவநீதகிருஷ்ணன் கோவிலின் உபகோவிலான ராமாயண சாவடி கோவிலும் இவ்வீதியில்தான் உள்ளது. பாண்டிய மன்னரிடம் கண்ணகி கோபம் கொண்டு, அங்கிருந்து வந்து கண்ணகி இளைப்பாரிய இடமும் இந்த ராமாயண சாவடி கோவில்தான்.

    ராமன் சன்னதி, விநாயகர் சன்னதி, தண்டபாணி சன்னதி, நாச்சிமுத்து, கருப்பண சாமி சன்னதி ஆகிய துணை கோவில்களையும் கொண்டுள்ளது.

    வடக்கு பார்த்து உள்ள ஸ்ரீராமஸ்வாமி நவநீதகிருஷ்ணன் கோவிலில் உள்ள மூலவர் சிறு குழந்தை வடிவிலான கிருஷ்ணராக காட்சி அளிக்கிறார். கலை நயத்துடன் கற்களால் கட்டப்பட்ட இக்கோவிலின் 10 தூண்களிலும் கிருஷ்ணரின் தசாவாதார காட்சிகளும் பொறிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீநவநீத கிருஷ்ணன் தொட்டில் கட்டும் பிரார்த்தனைக்கு இணங்கி பிள்ளை செல்வத்தை அருள்கிறார். எனவே குழந்தை வரம் வேண்டுவோர் தினசரி வந்து வழிபட்டால் பலன் உண்டு.

    இதேபோல வெண்ணை, வெள்ளி கொலுசு வாங்கி கொடுத்து பிரார்த்தனை செய்வோருக்கு மன இன்னல்களை போக்கி எண்ணங்களை நிறைவேற்றி வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இத்திருக்கோவிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி உற்சவத்தின்போது 10 நாட்கள் பகல் பத்து, ராப்பத்து திருவிழா நடைபெறும். அப்போது 10 நாட்களும் ஸ்ரீகண்ணபிரான் ராமாயண சாவடிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இக்கோவிலில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தினசரி தீர்த்தங்களும், பிரசாதங்களும் வழங்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு சொந்தமான பசுமாட்டை கோவிலுக்கு கொண்டு வந்து தினமும் பூஜை நடத்தப்படுவது சிறப்பாகும்.

    ராமாயண சாவடி ஸ்ரீராமர் சன்னதியில் ஸ்ரீராமநவமி உற்சவத்தன்று சீதா திருக்கல்யாணம் வெகுசிறப்பாக நடத்தப்படுவது வழக்கம்.

    ஆயிரம் வீட்டு யாதவர்களுக்கு சொந்தமான ஸ்ரீராமஸ்வாமி, ஸ்ரீநவநீத கிருஷ்ணன் சுவாமி தேவஸ்தானம் யாதவ பெருமக்களால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×