search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி-கல்லூரிகளில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்
    X

    பள்ளி-கல்லூரிகளில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்

    கரூரில் உள்ள பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் நேற்று ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது ஆசிரியர் களுக்கு பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி மாணவ, மாணவிகள் அசத்தினர்.
    கரூர்:

    ஆசிரியராக பணியாற்றி சிறந்த கல்வியாளராக திகழ்ந்து ஜனாதிபதியாக பதவி வகித்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று ஆசிரியர் தினத்தையொட்டி கரூர் பசுபதிபாளையம் அருகே கொளந்தாகவுண்டனூரில் உள்ள தேவி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாணவ, மாணவிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    பின்னர் தங்களது குருவான ஆசிரியர்களை வணங்கி அவர்களுக்கு பேனா உள்பட பல்வேறு பரிசுகளை வழங்கி அசத்தினர். ஆசிரியர் தினத்தையொட்டி வகுப்பறை, பள்ளி வளாகம், நாம் வாழும் குடியிருப்பு பகுதி உள்ளிட்டவற்றை தூய்மையாக வைத்து கொள்வது குறித்த கருத்துகளை மாணவர்கள் நாடகம் மூலம் வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராஜா மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் கரூர் கிளை சார்பில் கரூர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. தேர்வு நெறியாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இயற்பியல் துறை பேராசிரியர் குணசேகரன் வரவேற்று பேசினார். இதில், கல்லூரி முதல்வர் ஜோதிவெங்கடேஷ்வரன் கலந்து கொண்டு பேசுகையில், கல்வி பயிலும் மாணவர்கள் வெறும் பாடத்தை படிப்பதோடு மட்டும் நின்று விடாமல் சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும். தற்போதைய நவீன உலகில் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்டவை மாணவர்களையும், இளைஞர்களையும் ஆட்கொண்டிருக்கிறது. எனவே, மாணவர்கள் பலரும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக மாறி வருகின்றனர். எனவே அவர்களை நல்வழிப்படுத்துவது ஆசிரியர்களின் கடமையாகும்.

    வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில் விவசாயம் சார்ந்த படிப்புகளில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது நீதிபோதனைகளுடன் கூடிய கதையை எடுத்துக்கூறி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்துறை தலைவர் மாரியம்மாள், பேராசிரியர்கள் ராதாகிருஷ்ணன், கார்த்திகேயன், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல, கரூரில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளிலும் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது கல்வி பயிலும் மாணவர்களிடையே ஆர்வத்தை தூண்டும் வகையில் டாக்டர் ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக் கப்பட்டது 
    Next Story
    ×