search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tasmac shop"

    • டாஸ்மாக் கடைகளில், சாதாரண நாட்களில் 80 ஆயிரம் முதல் 95 ஆயிரம் பெட்டி ‘பீர்’ விற்பனை ஆகும்.
    • ‘பீர்’ விற்பனை மட்டும், ரூ.29 கோடியே 92 லட்சத்துக்கு நடந்துள்ளது.

    சென்னை:

    வெப்பம் வாட்டி வதைத்து வரும் சூழலில், டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் முதல் தேர்வாக 'கூலிங் பீர்'தான் இருந்து வருகிறது. வழக்கமாக கோடை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகமாக இருக்கும்.

    அந்த வகையில் நடப்பாண்டில் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகமாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பெரும்பாலான மதுப்பிரியர்கள் 'பீர்' வாங்கி குடிக்கின்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் 'பீர்' விற்பனை அதிகரித்துள்ளது.

    டாஸ்மாக் கடைகளில், சாதாரண நாட்களில் 80 ஆயிரம் முதல் 95 ஆயிரம் பெட்டி 'பீர்' விற்பனை ஆகும். ஆனால் இப்போது 1 லட்சத்து 36 ஆயிரம் பெட்டி 'பீர்' விற்பனை செய்யப்பட்டு வருவதாக டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    அந்த வகையில் பார்க்கும் போது இது வழக்கமான நாட்களில் விற்பனை ஆகும் 'பீர்' பாட்டில்களைவிட 44 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 'பீர்' விற்பனை அதிகரித்து இருப்பதால், டாஸ்மாக் நிறுவனத்துக்கான வருவாயும் உயர்ந்திருக்கிறது. அதாவது ரூ.20 கோடி விற்பனை அதிகரித்துள்ளது.

    உதாரணமாக, நேற்று முன்தினம் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, கோவை மண்டலம் என மொத்தம் தமிழ்நாட்டில் 162 கோடியே 83 லட்சத்துக்கு மதுப்பாட்டில்கள் விற்பனை ஆகி இருந்தது.

    இதில் 'பீர்' விற்பனை மட்டும், ரூ.29 கோடியே 92 லட்சத்துக்கு நடந்துள்ளது. அதாவது, மொத்த விற்பனை விலையில் 18 சதவீதம் பீர் விற்பனைதான் இருக்கிறது.

    • டாஸ்மாக் ஊழியரை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே ருக்மணிபாளையத்தில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக பால சுப்பிரமணியன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் 4 பேர் கொண்ட கும்பல் இலவசமாக மதுபானம் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு அந்த விற்பனையாளர் கொடுக்க முடியாது என கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து விற்பனையாளர் பாலசுப்ரமணியனின் தலையில் தாக்கியுள்ளனர்.

    அதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் பீரிட்டு வெளி வந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் பாலசுப்ரமணியனை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    மேலும், இதுகுறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மர்ம கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டதாக மன்னார்குடி அடுத்த சொக்கனானவூர் கிராமத்தை சேர்ந்த அருள்முருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும், தாக்குதலில் ஈடுபட்ட நெடுவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த திவ்யராஜ், அதே பகுதியை சேர்ந்த அஜித் மற்றும் சொக்கனானவூர் கிராமத்தை சேர்ந்த சரத் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். டாஸ்மாக் ஊழியரை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • டாஸ்மாக் கடைகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பீர் விற்பனை அதிகரித்து வருகிறது.
    • கடந்த 3 நாட்களாக பீர் கேட்டால் இல்லை என்ற பதில் தான் வருகிறது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை வட்டாரத்தில் ஈங்கூர், வெள்ளோடு, பெருந்துறை ஆர்.எஸ். உட்பட 14 இடங்களில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படுகிறது.

    தற்போது கோடை வெயில் வெழுத்து வாங்குவதாலும், 109 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருப்பதாலும், டாஸ்மாக் கடைகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பீர் விற்பனை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் சென்னிமலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் திடீரென பீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக பீர் கேட்டால் இல்லை என்ற பதில் தான் வருகிறது. இதனால் குடிமகன்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பல கடைகளில் தேடி அழைந்தும் பீர் கிடைக்காத விரக்தியில் சரக்கு குடித்து செல்கின்றனர்.

    மேலும் டாஸ்மாக் கடைகளில் உயர் ரக சரக்குகள் வரவு அதிகரித்துள்ளதாலும், "குடிமகன்கள்" விரும்பும் சரக்குகள் கிடைப்பதில்லை. குடிமகன்கள் விரும்பி கேட்கும் பிராண்டுகள் படிப்படியாக குறைந்து விட்டன.

    விலை அதிகரிப்பு உள்ள சரக்குகள் தான் கிடைக்கின்றன. என்ற குற்றசாட்டுகள் நீண்ட நாட்களாக உள்ள நிலையில், தற்போது பீர் பிரியர்களும் குளு குளு பீர் வகைகள் கிடப்பதே இல்லை என குறைபட்டு கொள்கின்றனர்.

    டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுபாடு இன்றி கிடைக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிமகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.
    • கடந்த ஆண்டு டின் பீர் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.

    திருச்சி:

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரிக்கிறது. பொதுவாக அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படும் கத்தரி வெயில் காலமான மே மாதத்தில் தான் வெயிலின் உக்கிரம் இந்த அளவுக்கு இருக்கும். ஆனால் முன்பாகவே மேலும் தாக்கம் கடுமையாக உள்ளது.

    அதிலும் திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தினமும் வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் வெப்ப தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை அதிகம் நாடி வருகின்றனர்.

    ஆனால் மது பிரியர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஜில் பீர் அதிகம் குடிக்க தொடங்கியுள்ளனர். இதனால் டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் ஜில் பீர் விற்பனை 2 மடங்காக அதிகரித்து உள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஜில் பீருக்காக கூட்டம் அலை மோதுகிறது.

    இதுபற்றி திருச்சி மண்டல டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த 2 மாதங்களில், பீர் விற்பனை 8 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மாயிலாடுதுறை, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 18 ஆயிரம் பீர் பெட்டிகள் விற்பனை ஆகியுள்ளது.

    வருகிற மே மாதத்தில் விற்பனை 18 முதல் 20 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கிறோம். மேலும், கடந்த ஆண்டு டின் பீர் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது 8 டிப்போக்களிலும் தேவைக்கு ஏற்ப பீர் பாட்டில்கள் வழங்கப்படுகின்றன.

    பாராளுமன்றத் தேர்தல் கட்டுப்பாடுகள் காரணமாக சில நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் விற்பனை மந்தமாக இருந்தது. தற்போது விற்பனை சூடு பிடித்துள்ளது என தெரிவித்தார்.

    திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மேற்பார்வையாளர் கூறும் போது, சமீபத்தில் சாதாரண பீர் பாட்டில்களின் விலை ரூ.170லிருந்து ரூ.230 ஆக உயர்ந்துள்ளது. விலை உயர்ந்தாலும் அது விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பகலில் பீர் விற்பனை அதிகமாக நடக்கிறது என்றார்.

    • சுட்டெரிக்கும் சூரியனைப்போல், சூரியக் கட்சியும் அதிக அளவில் ஊழல் செய்கிறது என டாக்டர் பாரிவேந்தர் விமர்சித்தார்.
    • தொகுதி மக்கள் எதிர்பார்க்கிற அத்தனை தேவைகளும் உறுதியாக நிறைவேற்றித் தரப்படும் என டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.

    இந்திய ஜனநாயகக் கூட்டணியில், IJK சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி பரப்புரை மேற்கொண்டு, தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில் வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, வண்ண பேப்பர்கள் மற்றும் பூக்கள் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே உரையாற்றிய அவர், 2019 தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின்படி, ரெங்கநாதபுரத்தில் இருந்து 2 மாணவர்கள் இலவச உயர் கல்வி திட்டத்தில் பட்டதாரிகளாகினர் என தெரிவித்தார். தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற உடன், இப்பகுதிக்கு ரேசன் கடை கட்டித் தரப்படும் என்றும், நீர்த்தேக்க தொட்டி, அமைக்கப்படும் எனவும் அவர் வாக்குறுதி அளித்தார். விவசாய களம் மற்றும் மயானபாதை சீர்படுத்தி தரப்படும் என்றும், கால்நடை மருந்தகம், விளையாட்டு மைதானம் ஆகியவை அமைத்து தரப்படும் என்றும் பாரிவேந்தர் உறுதி அளித்தார். தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து, இளைஞர்களை சீரழிப்பதாகவும் குற்றஞ்சாட்டிய பாரிவேந்தர், தமிழகத்தில் ஊழல், லஞ்சம் பெருகி விட்டதாக விமர்சித்தார். ஊழல் கட்சிகளிலிருந்து வருபவர்களுக்கு ஊழல் மட்டும் தெரியும், அது அவர்களுக்கு பழக்கமாகிவிட்டது எனச் சாடிய டாக்டர் பாரிவேந்தர், நல்லவர்களை சிந்தித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதனைத்தொடர்ந்து, வேங்கடத்தானூர் கிராமத்திற்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, வன்ண பேப்பர்கள் தூவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு குழுமியிருந்த பொதுமக்களிடையே பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதி மக்களுக்கு செய்த நற்பணிகள் குறித்து புத்தகமாக வழங்கியிருப்பதாக தெரிவித்தார். வேங்கடத்தானூருக்கு MP நிதியிலிருந்து 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டி கொடுத்திருப்பதாக தெரிவித்த டாக்டர் பாரிவேந்தர், மக்கள் தேவைகளை நிறைவேற்றியதில் மன நிறைவாக இருப்பதாக கூறினார். பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளாக ஊழல், லஞ்சம் இல்லாத சிறப்பான ஆட்சியை நடத்தினார் என்றும், தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் ஊழலில் பழக்கப்பட்டவர்கள் என்றும் கூறினார். ஒட்டுக்கு பணம் கொடுப்பதற்காக ஊழல் செய்யும் திராவிட திருவாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். சுட்டெரிக்கும் சூரியனைப்போல், சூரியக் கட்சியும் அதிக அளவில் ஊழல் செய்கிறது என டாக்டர் பாரிவேந்தர் விமர்சித்தார்.

    துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செங்காட்டுப் பட்டி கிராமத்தில் வாக்கு சேகரித்த டாக்டர் பாரிவேந்தர், தனது சொந்த நிறுவனங்கள் மூலம் கிடைத்த வருவாயிலிருந்து 118 கோடி ரூபாய் செலவு செய்து, ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரிகளாக ஆக்கியதாகவும், இந்தியாவில் எந்த MP-யம் இதுபோல் செய்ததில்லை எனவும் குறிப்பிட்டார். மோடியின் சிறப்பான ஆட்சியால் இந்தியா பெருமையடைவதாகப் பேசிய டாக்டர் பாரிவேந்தர், திமுக என்றாலே லஞ்சம், ஊழல்தான் என சாடினார். நல்லவர்களை தேர்ந்தெடுக்க தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என பாரிவேந்தர் கேட்டுக்கொண்டார்.


    இதனைத்தொடர்ந்து, கீரம்பூர் பகுதிக்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், பெரம்பலூர் தொகுதியில் ரயில்வே திட்டம் நிச்சயமாக கொண்டு வரப்படும் என்றும், அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் தெரவித்தார். பிரதமர் மோடியை உலக நாடுகள் Boss என அழைப்பதாக பாரிவேந்தர் புகழாரம் சூட்டினார். கடந்த முறை அளித்த வாக்குறுதிகளை முழுவதுமாக நிறைவேற்றிவிட்டு, தற்போது மீண்டும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க வந்திருப்பதாக டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.

    துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புத்தனாம்பட்டி கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, மாலை அணிவித்து. வாணவேடிக்கை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த மக்களிடையே உரையாற்றிய அவர், கடந்த முறை போன்று, இந்தத் தேர்தலிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஊழல் கட்சியிலிருந்து வரும் நபரை புறக்கணித்துவிட்டு, மக்கள் சேவையாற்றும் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். தொகுதி மக்கள் எதிர்பார்க்கிற அத்தனை தேவைகளும் உறுதியாக நிறைவேற்றித் தரப்படும் என டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார்.

    • டாஸ்மாக் கடை அருகே பஸ் நிறுத்தம் உள்ளது.
    • குடிமகன்களால் பல்வேறு தொந்தரவுகளை எங்கள் பகுதி மக்கள் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம்.

    ஈரோடு:

    தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்களது நீண்ட கால பிரச்சனைகளை நிறைவேற்றாததை கண்டித்து ஆங்காங்கே மக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு சூரம்பட்டி பகுதியில் உள்ள திரு.வி.க. வீதி பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை கண்டித்தும், அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தியும் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு போர்டு வைத்து உள்ளனர்.

    மேலும் அதன் மேல் பகுதியில் கருப்பு கொடி கட்டி உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    ஈரோடு சூரம்பட்டி திரு.வீ.க. வீதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். சூரம்பட்டி காந்தி ஜி மெயின் ரோட்டில் வலது புறம் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. எங்கள் பகுதி ஜனத்தொகை அதிகம் உள்ள நெருக்கடியான பகுதியாகும்.

    இங்கு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். டாஸ்மாக் கடை அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. மேலும் குழந்தைகள் நல மருத்துவமனையும் அமைந்துள்ளது.

    டாஸ்மாக் கடையில் மது அருந்த வருபவர்கள் ஆங்காங்கே குடித்து விட்டு வாந்தி எடுத்து ரோட்டில் படுத்துக் கிடக்கின்றனர். சிலர் அலங்கோலமான நிலையில் உள்ளனர். இந்த பகுதியை கடந்து செல்ல பள்ளி மாணவ- மாணவிகள், பெண்கள் கடும் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் மது பாட்டில்களை ரோட்டில் போட்டு உடைத்தும் சென்று விடுகின்றனர். குடிமகன்களால் பல்வேறு தொந்தரவுகளை எங்கள் பகுதி மக்கள் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம்.

    எனவே உடனடியாக இந்த மதுபான கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஏற்கனவே பலமுறை மனு அளித்தோம். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. டாஸ்மாக் கடையை அகற்றாததை கண்டித்து வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் திரு.வீ.க பகுதிக்கு உடனடியாக சென்று அப்பகுதி மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை யில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுபாட்டில்களுக்கு கூடுதல் விலை வசூலிப்பதை தடுக்க உதவும் என்று அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
    • சென்னையில் பல கடைகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதி இல்லை,

    சென்னை:

    டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதி ஏற்படுத்த வேண்டும் என மது பிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் பேரில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட எல்லையில் உள்ள 132 டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் வாங்குபவர்களிடம் பே.டி.எம். கியூஆர் கோடு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் பணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு மதுப்பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இது மதுபாட்டில்களுக்கு கூடுதல் விலை வசூலிப்பதை தடுக்க உதவும் என்று அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


    இதேபோல் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் சுமார் 1000 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஆனால் சென்னையில் பல கடைகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதி இல்லை என்று மதுப்பிரியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுக்கடைகளில் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பது தடுக்கப்படும் என்று நம்பி இருந்தோம். ஆனால் சென்னையில் பல கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை இருந்தும் அதை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பது தொடர்பாக அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • மதுபானக் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
    • பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இயங்கிவரும் மதுபானக் கடைகள்.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்த 28 வது வார்டில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டும் ஆறு மதுபானக் கடைகள் இயங்கி வருவதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் நாள் தோறும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    மதுக்கடைகள் திறக்கப்படும் நேரம் தொடங்கி வார்டு முழுவதுமே மது குடிப்பவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால், வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுவதாகவும், இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் மதுபானக் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதியில் வசிக்கும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இயங்கிவரும் மதுபானக் கடைகளைக் கணக்கெடுத்து அவற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுப்பதோடு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர் காலத்தை சிதைக்கும் போதைப் பொருட்களின் தாராள நடமாட்டத்தை இனியாவது தீவிர சோதனையின் மூலம் கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளு மாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் 2 மாதத்தில் கடை மாற்றப்படும் என கடை முன்பாக சிறிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.
    • மதுபான கடைக்கான உரிமம் தேதி நிறைவடைந்த பின்பும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி கொங்கு மெயின் ரோடு இஎஸ்ஐ., மருத்துவமனை அருகில் உள்ள ரங்கநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைக்கு எதிராக அப்பகுதி பொது மக்கள் பலமுறை போராட்டம் நடத்தி வந்தனர்.

    கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி மாவட்ட கலெக்டரிடமும் இது குறித்து மனு அளித்திருந்தனர். தொடர் போராட்டத்தின் காரணமாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் 2 மாதத்தில் கடை மாற்றப்படும் என கடை முன்பாக சிறிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.

    தற்போது அந்த அறிவிப்பு பலகையை பார் உரிமையாளர் கழற்றி வீசி விட்டு தொடர்ந்து அந்த கடையை நடத்தி வருவதாகவும் மதுபான கடைக்கான உரிமம் தேதி நிறைவடைந்த பின்பும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    எனவே அச்சுறுத்தலாக இருந்து வரும் அந்த மதுபான கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

    • ஓட்டல்களில் உள்ள மதுபார்களை கண்டிப்பாக மூட வேண்டும்.
    • மதுபானம் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள், கிளப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை கலெக்டர் ரஷ்மிசித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு நாள் வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை), குடியரசு தினம் 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இந்த 2 நாட்களில் தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள், கிளப்புகள், ஓட்டல்களில் உள்ள மதுபார்களை கண்டிப்பாக மூட வேண்டும். விதிமுறைகளை மீறி இந்த 2 நாட்களிலும் மதுபானம் விற்பனை செய்யும் சில்லரை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள், கிளப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • டாஸ்மாக் நிறுவனம் மதுக்கடைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
    • அனைத்து கடை பணியாளர்கள் மீதும் தற்காலிக பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மதுபான பார்களில் சட்டத்துக்கு புறம்பாக கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

    இதை தடுக்க டாஸ்மாக் நிறுவனம் மதுக்கடைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களில் (பார்) மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.


    இச்செயல் டாஸ்மாக் நிறுவனத்தின் விதியை மீறிய செயலாகும். மதுக் கூடங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு 'டாஸ்மாக்' கடை பணியாளர்கள் மதுபானங்களை கொடுக்கக் கூடாது.

    டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்களை மதுக் கூடத்திற்கு கொடுத்து விற்றால் சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர் உள்ளிட்ட அனைத்து கடை பணியாளர்கள் மீதும் தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்ட்) உள்ளிட்ட கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செஞ்சிக் கோட்டை முழுமையான சுற்றுலா தலமாக மாற்றி அமைக்கப்படும்.
    • மோடிக்கு, நீங்கள் 39-க்கு 39 எம்.பி.க்களை தமிழ்நாட்டில் கொடுக்க வேண்டும்.

    செஞ்சி:

    பா.ஜ.க.வின் என் மண், என் மக்கள் நடை பயணம் செஞ்சியில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு செஞ்சி பேரூராட்சியில் இருந்து திருவண்ணாமலை சாலையில் உள்ள இந்தியன் வங்கி வரை நடைபயணம் மேற்கொண்டார்.

    அவருக்கு வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமானவர்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்தனர். செஞ்சி கூட்ரோட்டில் அண்ணாமலைக்கு கிரேன் மூலம் ஆள் உயர மாலை அணிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து திருவண்ணாமலை சாலையில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசினார். அவர் பேசியதாவது;-

    தமிழகத்தில் இருக்கக்கூடிய அம்மன் தலங்களில் எல்லாம் மிகவும் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி குடிகொண்டுள்ள ஊருக்கு நாங்கள் வந்திருக்கிறோம். 122-வது தொகுதியாக செஞ்சிக்கு வந்திருக்கிறோம். மற்ற இடங்களில் பார்த்த அதே எழுச்சி செஞ்சியில் இருப்பதை உணர்கிறோம்.

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மறுபடியும் மூன்றாவது முறையாகவும், தமிழகத்தில் 2026-ல் பா.ஜ.க.வும் முதன் முறையாக வரவேண்டும் என்று நினைக்கக்கூடிய உங்களுடைய உத்வேகம் புரிகிறது. பிரசித்தி பெற்ற செஞ்சிக்கோட்டை 830 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. இன்றும் சிறிய சேதம் கூட இல்லாமல் முழுமையாக இருக்கக்கூடிய கோட்டையாகும்.

    ராஜா தேசிங்குவின் படைத்தளபதியாக இருந்த மகமத்கான், அண்ணன் தம்பிகளாக வாழ்ந்த இந்த ஊர், இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருந்ததாகும். ஆனால் இன்றைக்கு மனிதர்களை மதத்தால் பிளவு படுத்தி அதை வைத்து அரசியல் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    தி.மு.க. என்றால் குறுநில மன்னர் ஆட்சி என்பதை விட ஒரு படி மேலே போய் அமைச்சர் செஞ்சி மஸ்தான் குடும்ப அரசியல் செய்து கொண்டிருக்கிறார். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் கட்டாயமாக டாஸ்மாக் கடை மூடப்படும். அதற்கு பதில் கள்ளுக்கடை திறக்கப்படும். பனை மரத்தையும், தென்னை மரத்தையும் அதில் வரக்கூடிய பொருட்களை முழுமையாக பயன்படுத்தினால் ஒரு லட்சம் கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வருமானம் வரும்.

    இந்த தொகுதியில் 2021-ல் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? செஞ்சி கோட்டை சுற்றுலா மையமாக அறிவிக்கப்படும். அனந்தபுரத்தில் அரசு பணிமனை அமைக்கப்படும். நந்தன் கால்வாய் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். மேல் களவாய் தரைப்பாலம், மேம்பாலமாக மாற்றி அமைக்கப்படும். வேளாண் கல்லூரி அமைக்கப்படும் போன்ற பல்வேறு வாக்குறுதிகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செஞ்சிக் கோட்டை முழுமையான சுற்றுலா தலமாக மாற்றி அமைக்கப்படும். நந்தன் கால்வாய் திட்டம் முழுமையாக செயல்படுத்தி கொடுக்கப்படும்.

    எனவே வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவில் 400 இடங்களில் வெற்றி பெற போகும் மோடிக்கு, நீங்கள் 39-க்கு 39 எம்.பி.க்களை தமிழ்நாட்டில் கொடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

    ×