search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tambaram"

    தாமிரபரணி புஷ்கரம் திருவிழாவை முன்னிட்டு தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    சென்னை:

    தாமிரபரணி புஷ்கரம் திருவிழாவை முன்னிட்டு தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    * நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06040) வருகிற அக்டோபர் 12 மற்றும் 14-ந்தேதி மதியம் 2 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    * நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06044), வருகிற 16-ந்தேதி மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    *நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(06042), வருகிற 14-ந்தேதி மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    * நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06046), வருகிற 17-ந்தேதி மதியம் 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    * தாம்பரம்-நெல்லை சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06039), வருகிற 11-ந்தேதி மற்றும் நவம்பர் 13-ந்தேதி மாலை 5.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    * தாம்பரம்-நெல்லை சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06043), வருகிற 15-ந்தேதி இரவு 7.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    *தாம்பரம்-நெல்லை சுவிதா சிறப்பு ரெயில் (82625), வருகிற 16-ந்தேதி மாலை 5.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது. 
    காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் அ.தி.மு.க. அரசின் ஊழலை கண்டித்து பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகிறார். #PMK #Ramadoss
    தாம்பரம்:

    காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் அ.தி.மு.க. அரசின் ஊழலை கண்டித்து இன்று மாலை தாம்பரம் சண்முகம் ரோட்டில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

    கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகிறார். மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, மாவட்ட செயலாளர் விநாயகம், துணை பொதுச் செயலாளர் இரா.வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். #PMK #Ramadoss

    செங்கல்பட்டு - தாம்பரம் இடையே இன்று மாலை வரை மின்சார ரெயில்கள் இயங்காது என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    செங்கல்பட்டு - தாம்பரம் இடையே உள்ள வண்டலூர் மற்றும் கூடுவாஞ்சேரி வழித்தடத்தில் பாலம் கட்டும் பணி நடப்பதால் காலை 8.25 மணி முதல் மாலை 6.40 மணி வரை 10 மணி நேரம் மின்சார ரெயில்கள் இயங்காது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 

    மாலைக்கு பின்னர் வழக்கமான சேவை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திருவள்ளூரில் இருந்து தாம்பரத்துக்கு இடையே மீண்டும் மாநகர பஸ் இயக்கப்படுமா? என்பது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார். #Minister #MRVijayabaskar
    சென்னை:

    தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது தி.மு.க. உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர் தொகுதி) துணை கேள்வி எழுப்பினார். அப்போது அவர் பேசும்போது, ‘ திருவள்ளூரில் இருந்து தாம்பரம் வரை 566 ஏ என்ற எண் கொண்ட 5 நகர பஸ்கள் நாள்தோறும் 10 நடைகள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த 6 மாதகாலமாக அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டு, திருவள்ளூரில் இருந்து பூந்தமல்லி வரை 597 ஏ என்ற எண் கொண்ட பஸ்கள் தான் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூரில் இருந்து தாம்பரத்துக்கு வேலைநிமித்தமாக ஏழை-எளிய மக்களுக்கும், படிப்புநிமித்தமாக மாணவர்களும் சென்று கொண்டிருக்கக் கூடிய இந்த வேளையில் 6 மாதகாலமாக நிறுத்தப்பட்டதை மாற்றி திருவள்ளூரில் இருந்து தாம்பரம் வரை மீண்டும் பஸ்கள் இயக்கப்படுமா?’ என்று கேட்டார்.

    அதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதில் அளித்து பேசும்போது ‘அந்த வழித்தடத்தில் பயணிகளின் அடர்வினை ஆய்வு செய்து, தேவை இருந்தால் பஸ்களை மீண்டும் இயக்குவதற்கு அரசு ஆவன செய்யும்’ என்று தெரிவித்தார். #Minister #MRVijayabaskar
    தாம்பரத்தில் ரூ.2 லட்சம் கேட்டு கார் டிரைவர் கடத்திய 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    சென்னை தாம்பரம் சேலையூரை சேர்ந்தவர் முகமதுசபீர் (வயது 32). கார் டிரைவர்.

    இவர் திருமுல்லைவாயிலை சேர்ந்த சாமுவேல் எபினேசர் என்பவரின் காரை லீசுக்கு எடுத்து ஓட்டி வருகிறார்.

    லீசுக்கான பணத்தை அவர் கொடுக்கவில்லை. மேலும் மாத தவணையும் செலுத்தாமல் ஏமாற்றி வந்தார். சாமுவெல் எபினேசர் பலமுறை கேட்டும் முகமதுசபீர் பணம் கொடுக்கவில்லை.

    இதையடுத்து அவரை கடத்திச் சென்று பணம் பறிக்க முடிவு செய்தார். நேற்று இரவு சாமுவேல் எபினேசர், அவரது நண்பர்கள் வண்ணாரப்பேட்டை கணேசமூர்த்தி, திருமுல்லைவாயல் சரவணன், வேங்கைவாசல் அப்துல், சந்தோ‌ஷபுரம் முகமதுஅலி, ஜெயபிரகாஷ், கிழக்கு தாம்பரம் முகமது சகால் ஆகியோர் காரில் முகமதுசபீர் வீட்டுக்கு சென்றனர்.

    வீட்டில் இருந்த அவரை 7 பேரும் காரில் கடத்திச் சென்றனர். அத்துடன் லீசுக்கு விட்ட காரையும் எடுத்துச் சென்றனர்.

    பின்னர் கடத்தல் கும்பல் முகமது சபீரின் தாயாருக்கு போன் செய்து ரூ.2 லட்சம் கொடுத்தால்தான் உங்கள் மகனை விடுவோம் என்று மிரட்டினார்கள். இதுகுறித்து அவர் சேலையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக புறநகர் போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் காரையும், 7 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். முகமது சபீரை மீட்டனர். 7 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முன்பதிவு இல்லாத 16 பெட்டிகளுடன் தாம்பரம்-நெல்லை இடையே புதிய ரெயில் சேவை நேற்று தொடங்கியது. கோவில்பட்டி, சாத்தூர், வாஞ்சிமணியாச்சியில் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சென்னை:

    சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு முன்பதிவு இல்லாத ‘அந்த்யோதயா’ எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று கடந்த 2016-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி முன்னோட்டமாக கடந்த 2017-ம் ஆண்டு புத்தாண்டு அன்று தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயிலாக ‘அந்த்யோதயா’ ரெயில் இயக்கப்பட்டது. பயணிகள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்ததால், தினசரி ரெயிலாக இயக்கப்படும் என்று தேதி குறிப்பிட்டு அறிவிப்பு வெளியானது. ஆனால் திடீரென்று அந்த அறிவிப்பு ரத்தானது.

    இந்தநிலையில் தாம்பரம் ரெயில் நிலையம் ரூ.40.4 கோடி செலவில் 3-வது முனையமாக உருவாக்கப்பட்டது. இதையொட்டி தாம்பரம்- நெல்லை இடையே முன்பதிவு இல்லாத ‘அந்த்யோதயா’ எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை 8-ந்தேதி தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்தது.

    அதன்படி தாம்பரம் ரெயில் முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் ‘அந்த்யோதயா’ ரெயில் சேவை தொடக்க விழா சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தின் 8-வது நடைமேடையில் நேற்று மாலை நடைபெற்றது.

    இந்த விழாவுக்கு மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன், நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார்.

    அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குலசேத்திரா வரவேற்று பேசினார். சென்னை கோட்ட மேலாளர் நவீன் குலாட்டி நன்றி கூறினார்.

    மத்திய இணை மந்திரிகள் ராஜென் கோஹெய்ன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து வைத்து ‘அந்த்யோதயா’ ரெயில் சேவையை தொடங்கி வைத்தனர். இதையடுத்து அந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து நெல்லையை நோக்கி புறப்பட்டு சென்றது.

    ரெயில் 4.30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. விழா தாமதாக தொடங்கியதாலும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் பேசியதாலும் ரெயில் தாமதமாக 5.05 மணிக்கு புறப்பட்டது.

    தொடக்க விழா என்பதால் ‘அந்த்யோதயா’ ரெயில் வண்ண மலர்கள், மா இலை, பலூன்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    ‘பயோ’ கழிப்பறை, எல்.இ.டி. விளக்கு, புதிய வர்ணம், சோலார் மேற்கூரை, மெத்தை இருக்கை என ரெயிலின் உள்புற பகுதி அமைந்திருக்கிறது. எனவே பயணிகள் புதுவித அனுபவத்துடன் மகிழ்ச்சியாக பயணம் மேற்கொண்டனர்.

    முன்பதிவு இல்லாத 16 பெட்டிகளில் 10 பெட்டிகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மற்ற பெட்டிகளில் சில பயணிகள் மட்டும் இருந்தனர். லக்கேஜ் பெட்டி உள்பட 2 பெட்டிகள் தனியாக உள்ளன.

    சென்னையில் பணி மற்றும் வியாபாரம் நிமித்தமாக தென்மாவட்ட மக்கள் தங்கி உள்ளனர். குறிப்பாக தாம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். எனவே தாம்பரம்- நெல்லை புதிய ரெயில் சேவைக்கு தென்மாவட்ட மக்கள் அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக சிலர் கூறும்போது, ‘தாம்பரம் ரெயில் நிலையம் 3-வது முனையமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது நெல்லைக்கு ரெயில் இயக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ரெயிலை விருத்தாசலம், அரியலூர் வழியாக இயக்கினால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

    கோவில்பட்டி, சாத்தூர், வாஞ்சி மணியாச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லாது என்ற அறிவிப்பு ஏமாற்றத்தை தருகிறது. நெல்லை, முத்துநகர் போன்ற அதிவிரைவு ரெயில்களே அந்த ரெயில் நிலையங்களில் நின்று செல்கின்றன. எனவே விரைவு ரெயிலான அந்த்யோதயாவும் அந்த ரெயில் நிலையங்களில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
    சென்னை சென்டிரல், எழும்பூரை அடுத்து தாம்பரம் மூன்றாவது முனையமாக இன்று திறக்கப்பட்டதுடன், நெல்லைக்கு முழுவதும் முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட அந்த்யோதயா ரெயில் தொடங்கப்பட்டது. #SouthernRailway
    சென்னை:

    சென்னையில் சென்டிரல், எழும்பூர் என இரண்டு ரெயில் முனையங்கள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக தாம்பரம் ரெயில் நிலையம் முனையமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. ரூ.49 கோடி செலவில் அதற்கான பணிகள் சில ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், இன்று மூன்றாவது முனையத்தை மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜன் கோஹைன் தொடங்கி வைத்தார்.

    மேலும், தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு முழுவதும் முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட அந்த்யோதயா ரெயிலையும் மந்திரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்றனர்.

    16 முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட இந்த ரெயில் எல்.இ.டி விளக்கு, செல்போன்கள் சார்ஜ் செய்யும் வசதிகளை கொண்டிருக்கும். இன்று மட்டும் 5.30 மணிக்கு புறப்பட்ட இந்த ரெயில், நாளை முதல் நள்ளிரவு 12.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக செல்லும் ரெயில் மாலை 3.30 மணியளவில் நெல்லைக்கு சென்றடையும். வாரத்தில் திங்கள் தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும் இந்த ரெயிலில் ரூ.240 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தாம்பரம்-நெல்லை இடையே அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை மத்திய மந்திரிகள் இன்று தொடங்கி வைக்கின்றனர். #AntyodayaTrain
    சென்னை:

    சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு அடுத்தபடியாக தாம்பரம் ரெயில் நிலையத்தை 3-வது முனையமாக்கும் பணிகள் ரூ.40.4 கோடியில் நடந்தது. இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இருமார்க்கத்திலும் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே கடந்த சில மாதங்களுக்கு தேதியை அறிவித்தது. ஆனால் திடீரென்று அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. இதனால் தென்மாவட்ட பயணிகள் மத்தியில் ஏமாற்றமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. தெற்கு ரெயில்வே மீது விமர்சனங்களும் கிளம்பின.

    இந்தநிலையில் தாம்பரம்-நெல்லை இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட உள்ளது. மேலும் தாம்பரம் ரெயில் முனையமும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.

    தாம்பரம் ரெயில் முனையம் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் தாம்பரம்-நெல்லை இடையே அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடக்க விழா இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில் மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன், நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கின்றனர். மேலும் புதிய ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர்.

    இந்த விழாவுக்கு தமிழக அரசின் போக்குவரத்துத்துறை மந்திரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலை வகிக்க உள்ளார். சிறப்பு விருந்தினர்களாக அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், தாம்பரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    தொடக்க விழாவான இன்று மட்டும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை சந்திப்பை நாளை(சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சென்றடையும்.

    நாளை(சனிக்கிழமை) முதல் தாம்பரத்தில் இருந்து தினசரி இரவு 12.30 மணிக்கு ரெயில் இயக்கப்படும். அன்றைய தினம் மதியம் 3.30 மணிக்கு நெல்லை சந்திப்பை சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து மாலை 5.30 மணிக்கு ரெயில் புறப்படும். தாம்பரம் ரெயில் நிலையத்தை மறுநாள் காலை 9.45 மணிக்கு வந்து சேரும்.

    இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். அனைத்தும் அமரும் இருக்கை வசதி கொண்டவை. முன்பதிவு செய்யாமல் பயணிக்கலாம்.

    முன்னதாக கோவை ரெயில் நிலையத்தில் கோவை-பெங்களூரு கே.எஸ்.ஆர். இடையே இரட்டை அடுக்கு வசதி கொண்ட உதய் விரைவு ரெயில் சேவை தொடக்க விழா இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. விழாவில் மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன், மத்திய நிதி மற்றும் கப்பல்த்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கோவை-பெங்களூரு இடையிலான புதிய ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைக்கின்றனர்.

    திங்கட்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் உதய் விரைவு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி கோவையில் இருந்து காலை 5.45 மணிக்கு ரெயில் இயக்கப்படும். பெங்களூருவை அன்றைய தினம் மதியம் 12.40 மணிக்கு சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு ரெயில் புறப்படும். கோவை ரெயில் நிலையத்தை இரவு 9 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம் மற்றும் கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×