என் மலர்

  செய்திகள்

  முன்பதிவு செய்யாமல் பயணிக்கலாம்: தாம்பரம் - நெல்லை இடையே அந்த்யோதயா ரெயில் சேவை
  X

  முன்பதிவு செய்யாமல் பயணிக்கலாம்: தாம்பரம் - நெல்லை இடையே அந்த்யோதயா ரெயில் சேவை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாம்பரம்-நெல்லை இடையே அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை மத்திய மந்திரிகள் இன்று தொடங்கி வைக்கின்றனர். #AntyodayaTrain
  சென்னை:

  சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு அடுத்தபடியாக தாம்பரம் ரெயில் நிலையத்தை 3-வது முனையமாக்கும் பணிகள் ரூ.40.4 கோடியில் நடந்தது. இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இருமார்க்கத்திலும் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே கடந்த சில மாதங்களுக்கு தேதியை அறிவித்தது. ஆனால் திடீரென்று அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. இதனால் தென்மாவட்ட பயணிகள் மத்தியில் ஏமாற்றமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. தெற்கு ரெயில்வே மீது விமர்சனங்களும் கிளம்பின.

  இந்தநிலையில் தாம்பரம்-நெல்லை இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட உள்ளது. மேலும் தாம்பரம் ரெயில் முனையமும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.

  தாம்பரம் ரெயில் முனையம் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் தாம்பரம்-நெல்லை இடையே அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடக்க விழா இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

  தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில் மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன், நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கின்றனர். மேலும் புதிய ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர்.

  இந்த விழாவுக்கு தமிழக அரசின் போக்குவரத்துத்துறை மந்திரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலை வகிக்க உள்ளார். சிறப்பு விருந்தினர்களாக அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், தாம்பரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

  தொடக்க விழாவான இன்று மட்டும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை சந்திப்பை நாளை(சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சென்றடையும்.

  நாளை(சனிக்கிழமை) முதல் தாம்பரத்தில் இருந்து தினசரி இரவு 12.30 மணிக்கு ரெயில் இயக்கப்படும். அன்றைய தினம் மதியம் 3.30 மணிக்கு நெல்லை சந்திப்பை சென்றடையும்.

  மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து மாலை 5.30 மணிக்கு ரெயில் புறப்படும். தாம்பரம் ரெயில் நிலையத்தை மறுநாள் காலை 9.45 மணிக்கு வந்து சேரும்.

  இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். அனைத்தும் அமரும் இருக்கை வசதி கொண்டவை. முன்பதிவு செய்யாமல் பயணிக்கலாம்.

  முன்னதாக கோவை ரெயில் நிலையத்தில் கோவை-பெங்களூரு கே.எஸ்.ஆர். இடையே இரட்டை அடுக்கு வசதி கொண்ட உதய் விரைவு ரெயில் சேவை தொடக்க விழா இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. விழாவில் மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன், மத்திய நிதி மற்றும் கப்பல்த்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கோவை-பெங்களூரு இடையிலான புதிய ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைக்கின்றனர்.

  திங்கட்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் உதய் விரைவு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி கோவையில் இருந்து காலை 5.45 மணிக்கு ரெயில் இயக்கப்படும். பெங்களூருவை அன்றைய தினம் மதியம் 12.40 மணிக்கு சென்றடையும்.

  மறுமார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு ரெயில் புறப்படும். கோவை ரெயில் நிலையத்தை இரவு 9 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம் மற்றும் கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

  மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  Next Story
  ×