search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக ஸ்டாலின்"

    • தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் தமிழ்நாட்டை வளப்படுத்தும் திட்டங்களாக மட்டுமல்ல, இந்தியாவுக்கான வழிகாட்டும் திட்டங்களாக அமைந்து வருகின்றன.
    • பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில், கவர்னர்களின் மூலமாக குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவுகளை மீண்டும் சட்டசபையில் மறுஆய்வு செய்து நிறைவேற்றிடும் அரசின் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது:-

    "மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதாக இல்லை" என்றார் புரட்சியாளர் மா சே துங். காய்ச்சல், தொண்டை வலி காரணமாக சில நாட்கள் வீட்டில் நான் ஓய்வெடுத்து வந்தாலும், எனது உடல்நலனைவிட இந்த மாநிலத்து மக்கள் நலன்-தாய்த்தமிழ் நாட்டின் நலன், நூற்றாண்டு கண்ட இந்த சட்டப் பேரவை நலன் தான் அதைவிட முக்கியம் என்ற மன உறுதியோடு உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்.

    கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் நம்மை, இந்திய அரசியல் சட்டம் வழங்கிய அதிகாரத்தின் மையமாக இருந்து சட்டமியற்றும் இந்த சட்டமன்றத்தை தடுக்கும் சக்தி ஒன்று முளைக்குமானால், இந்தச் சூழ்நிலை என்பது இந்திய ஜனநாயகத்தை மிக மோசமான வகையில் கொண்டு செலுத்திவிடும் என்ற அச்சத்துடன் தான் உங்கள் முன்னால் நிற்கிறேன்.

    தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வருகிறோம்.

    சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் காத்தல் ஆகிய கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு, எண்ணற்ற மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை இதே சட்டமன்றத்தில் அறிவித்துச் செயல்படுத்தி வருவதை இன்றைய தினம் அனைத்துத் தரப்பினரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் தமிழ்நாட்டை வளப்படுத்தும் திட்டங்களாக மட்டுமல்ல, இந்தியாவுக்கான வழிகாட்டும் திட்டங்களாக அமைந்து வருகின்றன.

    இத்தகைய சூழ்நிலையைக் கெடுக்கும் வகையில் என்றுகூடச் சொல்ல மாட்டேன்; தடுக்கும் வகையில் சில இடையூறுகள் இருக்கின்றன என்பதையும் இந்த மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள்.

    * ஒன்றிய அரசின் சில இடையூறுகள்

    இவை மட்டும் இல்லாமல் இருந்தால் இன்னும் பல திட்டங்களை எங்களால் செய்து காட்ட முடியும் என்று இதே மாமன்றத்தில் ஓராண்டுக்கு முன்னதாக நான் குறிப்பிட்டதையும் நினைவூட்டக் கடமைப்பட்டு உள்ளேன்.

    இடையூறுகள் என்று நான் சொன்னதன் விளைவாகத்தான் இந்தச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டியதாக உள்ளது.

    பொதுவாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டங்கள், முக்கிய நிகழ்வுகளுக்காகவும், முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காகவும் கூட்டப்படுவது வழக்கம்.

    அதேபோல் நாம் இன்றைக்கு கூட்டியிருக்கும் சிறப்புக் கூட்டம், அவசர, அவசியம் கருதி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியும், ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தின் அடிப்படையிலும், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியும் கூட்டப்பட்டுள்ளது.

    மக்களாட்சித் தத்துவத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழும் இந்தச் சட்டமன்றப் பேரவையில் நாம் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல் இருந்தார் ஆளுநர்.

    "i withhold assent" அதாவது, தான் அனுமதியை நிறுத்திவைத்துள்ளதாகக் குறிப்பிட்டு, நாம் இங்கு நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளை கடந்த 13.11.2023 அன்று திருப்பி அனுப்பி வைத்திருக்கின்றார். கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ள சட்டமுன்வடிவுகளை நாம் இங்கே மீண்டும் நிறைவேற்றி, அவரது ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைக்க இருக்கிறோம். அதற்காகத்தான் இன்றைக்கு இந்தச் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

    மக்களாட்சித் தத்துவத்தின் படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மைமிக்க ஒரு அரசால், மாநில நலன் கருதி சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் தர வேண்டியது கவர்னரின் கடமை. அவருக்கு அதில் சட்டரீதியாக அல்லது நிர்வாக ரீதியாக ஏதேனும் தெளிவுரை தேவைப்பட்டால், அதனை அவர் அரசிடம் கோரலாம். அதனை அரசு வழங்க வேண்டும். அந்த வகையில் இதற்கு முந்தைய சில நிகழ்வுகளில் அவர் எழுப்பிய சில வினாக்களுக்கு முறையாக எழுத்து மூலமாகவும், சம்மந்தப்பட்ட அரசு செயலர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோர் நேரிலும் விளக்கம் அளித்து உள்ளனர்.

    எந்த ஒரு நிகழ்விலும் அவர் கோரிய விளக்கங்கள் அவருக்கு வழங்கப்படாமல் இருந்ததில்லை. இந்தச் சூழ்நிலையில் அவர் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில், சட்டமன்றப் பேரவையினால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சில சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி வழங்காமல் திருப்பி அனுப்பி வைத்திருப்பது என்பது தமிழ்நாட்டு மக்களையும், இந்தச் சட்டமன்றத்தையும் கவர்னர் அவமதிக்கின்றார் என்றுதான் பொருளாகும்.

    10 சட்டமுன்வடிவுகள் உள்ளிட்ட 12 சட்டமுன்வடிவுகள் மற்றும் வேறு சில கோப்புகளுக்கும் இவர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது சட்டவிரோதம் ஆகும்! ஜனநாயக விரோதம் ஆகும்! மக்கள் விரோதம் ஆகும்! மனச்சாட்சி விரோதம் ஆகும்! அனைத்திற்கும் மேலாக இந்த சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு எதிரானதாகும்!

    தமிழ்நாட்டுக்கு கவர்னராக இருப்பவர், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்க வேண்டும்; தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஒன்றிய அரசிடம் அவருக்கு இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டுக்கான நிதியை வாங்கித் தருவதற்கு முயற்சிக்கலாம்; ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையைப் பெற்றுத் தரலாம்; எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு உரிய நிதியை வாங்கித் தரலாம்; புதிய ரெயில்வே திட்டங்களைப் பெற்றுத் தரலாம்; மாநில ஆட்சிக்கும், ஒன்றிய அரசுக்கும் பாலமாக இருக்கலாம். ஆனால், இதில் எதையும் செய்யாமல், மாநில அரசின் திட்டங்களுக்கு எவ்வாறு முட்டுக்கட்டை போடலாம் என நாள்தோறும் யோசித்து யோசித்து செயல்பட்டு வருகிறார்.

    தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் திராவிடக் கொள்கை, சமத்துவம், சமூகநீதி, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை ஆகியவை மக்களின் மனங்களில் இருப்பது அவருக்கு ஏற்கவியலாத ஒன்றாக உள்ளது.

    பொதுமேடைகளில் அவர் நமது தமிழ்ப்பண்பாடு, இலக்கியம் மற்றும் சமூக அமைப்பிற்கு எதிரான கருத்துகளையும் தெரிவித்து வருகிறார். தெரிவித்துக் கொண்டும் வருகிறார்.

    அவர் தெரிவிக்கும் கருத்துகளை வைத்துப் பார்க்கும்போது, அவருக்கும் தமிழ்நாடு சட்ட மன்றத்துக்குமான பிரச்சனை என்பது நாம் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களில் மட்டுமல்ல; சமூகநீதியாகவும் இருக்கிறது. அதனால்தான் முடிந்தளவு அனைத்து வகையிலும் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

    கவர்னரிடம் தேங்கிக் கிடக்கும் அனைத்துக் கோப்புகள், சட்ட முன்வடிவுகள் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு, உச்சநீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.

    தமிழ்நாடு அரசு எடுத்துரைத்த வாதங்களைக் கவனித்துக் கேட்ட உச்சநீதிமன்றம், கவர்னரின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்த கருத்துகள், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கிடைத்த முதற்கட்ட வெற்றியாகும். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் இத்தருணத்தில், கவர்னர் அவசர அவசரமாக 10 சட்டமுன்வடிவுகளுக்கு எவ்வித ஒப்புதலும் வழங்காமல், கடந்த 13-11-2023 அன்று கோப்புகளைத் திருப்பி அனுப்பியுள்ளார்.

    இந்திய அரசமைப்புச் சட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்குத்தான் முழு அதிகாரமும் முதன்மையும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 200-இன்படி, இந்தச் சட்டமுன்வடிவுகளை மீண்டும் பரிசீலித்து, ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கும் அதிகாரம் இந்த மாமன்றத்திற்குத் தான் உள்ளது.

    அந்த அடிப்படையில் தான், இந்த 10 சட்ட முன் வடிவுகளும் இன்றைக்கு உங்கள் முன் வைக்கப்பட்டு உள்ளது.

    ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, இந்திய நாடு இதுவரை கண்டிராத முன்னோடித் திட்டங்களை நிறைவேற்றி, மக்களின் எண்ணங்களில் இடம் பிடித்துள்ளது திராவிட முன்னேற்றக் கழக அரசு.

    இதனை அரசியல் ரீதியாக சகித்து கொள்ள இயலாத சிலர், அரசு நிர்வாகத்தை முடக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆளுநர் என்ற உயர்ந்த பதவியின் மூலமாக அரசியல் செய்ய விரும்புகிறார்கள்.

    கவர்னர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும் அது இருக்கும் வரை மக்களாட்சித் தத்துவத்துக்கு அடங்கி இருக்க வேண்டியது தான் மரபு ஆகும். பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில், கவர்னர்களின் மூலமாக குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.

    தெரிந்ததை அவர் செய்கிறார். செய்துவிட்டுப் போகட்டும். ஆனால் நாம் எப்போதும் சட்டத்தின் வழி நடப்பவர்கள். எனவே, அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 200-ன்படி அவர் எந்தக் காரணமும் குறிப்பிடாமல் திருப்பி அனுப்பி வைத்துள்ள 10 சட்டமுன்வடிவுகளையும் நிறைவேற்றித் தருமாறு நூற்றாண்டு கண்ட இச்சிறப்புமிக்க சட்டமன்றப் பேரவையின் உறுப்பினர்களை தங்கள் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் மழை நீர் வடிகால் பணிகள் எவ்வளவு முடிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
    • பொதுமக்கள் தரும் மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய பணிகள் வேகமாக நடைபெற வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரில் சென்று அந்தந்த மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள், சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார்.

    அந்த வகையில் நேற்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களின் ஒருங்கிணைந்த 2 நாள் கள ஆய்வுக்கூட்டம் நேற்று மறைமலைநகரில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை பற்றி ஆய்வு மேற்கொண்டார். இதில் 3 மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சட்டம்-ஒழுங்கை பேணி காத்து, குற்றச் சம்பவங்கள் நடைபெறாத வகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

    இந்த கூட்டம் முடிந்ததும் மறைமலைநகரில் உள்ள வெல்கம் ஓட்டலில் இரவு தங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் மீண்டும் மறைமலைநகரில் கலெக்டர்கள், அதிகாரிகளுடன் கள ஆய்வு கூட்டம் நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தா.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன், காந்தி ஆகியோரும் பங்கேற்றனர். இவர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாவட்ட கலெக்டர்கள் ராகுல்நாத் (செங்கல்பட்டு), கலைச் செல்வி மோகன் (காஞ்சிபுரம்), பிரபு சங்கர் (திருவள்ளூர்), ரஷ்மி சித்தார்த் ஜகடே (சென்னை), சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளர் டாரேஸ் அகமது, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரிகள், ஆர்.டி.ஓ.க்கள், பி.டி.ஓ.க்கள், நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகள் என 4 மாவட்டங்களின் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்று பேசினார். இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்க உரை நிகழ்த்தினார். அதன் பிறகு ஒவ்வொரு மாவட்ட வாரியாக, பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.

    ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது. என்னென்ன பணிகள் நிலுவையில் உள்ளது. அந்த பணிகள் எப்போது முடிவடையும் என்பதை விரிவாக ஆய்வு செய்தார்.

    இது தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தங்களது மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளை எடுத்துரைத்தனர்.

    முடிவடையாத பணிகள் என்னென்ன காரணத்தால் நிலுவையில் உள்ளது என்ற காரணங்களையும் விளக்கினார்கள். மாதம் ரூ.1000 வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு பேர் பயன் அடைந்துள்ளனர்? இதில் நிராகரிக்கப்பட்டவர் எவ்வளவு பேர் மேல்முறையீடு செய்திருந்தனர்? அவர்களது மனு மீது கள ஆய்வு நடத்தப்பட்டு மீண்டும் எவ்வளவு பேருக்கு ரூ.1000 வழங்கப்பட உள்ளது ஆகிய விவரங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். அதற்கு ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் விளக்கம் அளித்தனர்.

    வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் மழை நீர் வடிகால் பணிகள் எவ்வளவு முடிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

    அரசு அறிவிக்கும் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் மக்களை சென்றடையும் வகையில் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் காலதாமதமின்றி பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

    பொதுமக்கள் தரும் மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய பணிகள் வேகமாக நடைபெற வேண்டும். அதை ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    • மாவட்டங்களில் ஊராட்சி மணி அழைப்பு மையத்தின் தொடர்பு அலுவலராக மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • ஊராட்சி மணி அழைப்பு மைய நிகழ்ச்சி விரைவில் தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக 'ஊராட்சி மணி' அழைப்பு மையம் புதிதாக அமைக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் விதமாக 155340 என்ற மைய அழைப்பு எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மாவட்டங்களில் ஊராட்சி மணி அழைப்பு மையத்தின் தொடர்பு அலுவலராக மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஊராட்சி மணி மையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக அடிப்படை விவரங்களை தெரிவிக்கும் வகையில் கூடுதல் இயக்குனரால் சமீபத்தில் காணொலி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

    'ஊராட்சி மணி' அழைப்பு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ந்தேதி திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் இப்போது வேறு தேதிக்கு நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதனால் ஊராட்சி மணி அழைப்பு மைய நிகழ்ச்சி விரைவில் தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சமத்துவமும், வளர்ச்சியும், ஒற்றுமையும் நிறைந்த இந்தியாவை மீட்டெடுக்க நாம் அனைவரும் உறுதியேற்கிற நாளாக இந்த ஓணத் திருநாள் அமையட்டும்!
    • நம் தென்னாட்டு மக்கள் காட்டிய முற்போக்கு அரசியல் பாதையில் ஒட்டுமொத்த இந்தியாவும் பயணிக்கும் ஆண்டாக வருகிற ஆண்டு திகழட்டும்!

    சென்னை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கேரள மக்கள் அனைவராலும் எழுச்சியோடும் ஒற்றுமையோடும் கொண்டாடப்படும் அறுவடைப் பெருவிழாவாம் ஓணம் திருநாளை முன்னிட்டு மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் எனது ஓணம் வாழ்த்துகள்!

    ஓணத்திருநாள் அன்று, தமிழ்நாட்டில் மலையாள மொழி பேசும் மக்கள் நிறைந்து வாழும் மாவட்டங்களான கன்னியாகுமரி கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களுக்கு 2006-ஆம் ஆண்டும், தலைநகர் சென்னைக்கு 2007ஆம் ஆண்டும் கழக ஆட்சியில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதுதான் விடுமுறை அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    அறுவடைத் திருநாளாக மட்டுமல்லாமல் வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட திராவிட மன்னனான மாவேலியைக் கேரள மக்கள் அன்போடு வரவேற்கும் விழாவாகவும் குறியீட்டளவில் ஓணம் கொண்டாடப்படுகிறது. இத்தகைய ஓணம் திருநாள் சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சியிலும் "மாயோன் மேய ஓண நன்னாள்" எனச் சிறப்புடன் பாடப்பட்டிருக்கிறது. இவ்வாறு திராவிடப் பண்பாட்டுடன் பிரிக்க முடியாது, இரண்டறக் கலந்துள்ள ஓணத்தையும் விட்டுவைக்காமல், ஒரு தரப்பினர் 'வாமன ஜெயந்தி" என அதன் அடையாளத்தைப் பறிக்க முயல்கிறார்கள். கேரள மக்களே இத்தகைய குயுக்தி முயற்சிகளைப் புறக்கணிப்பார்கள்.

    மக்களைப் பிளவுபடுத்தி, அதில் குளிர்காய நினைக்கும் சுயநல வஞ்சகர்கள் வீழ்ந்துபடும் ஓணமாக வரும் ஓணம் அமையும் வகையில் நாட்டு மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள்.

    சமத்துவமும், வளர்ச்சியும், ஒற்றுமையும் நிறைந்த இந்தியாவை மீட்டெடுக்க நாம் அனைவரும் உறுதியேற்கிற நாளாக இந்த ஓணத் திருநாள் அமையட்டும்! நம் தென்னாட்டு மக்கள் காட்டிய முற்போக்கு அரசியல் பாதையில் ஒட்டுமொத்த இந்தியாவும் பயணிக்கும் ஆண்டாக வருகிற ஆண்டு திகழட்டும்!

    திராவிட மொழிக் குடும்பத்தின் உடன்பிறப்புகளான கேரள மக்கள் அனைவருக்கும் மீண்டுமொருமுறை எனது ஓணம் நல்வாழ்த்துகள்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுரை தத்தநேரியை சேர்ந்த ராஜேந்திரன் திருப்பதி விலாஸ் என்ற பெயரில் மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்து வருகிறார்.
    • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள புதுமண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிக்கு 2 கோடி ரூபாய் வழங்குவதாக ராஜேந்திரன் உறுதியளித்துள்ளார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில், பல்வேறு சமூகப் நலப் பணிகளை ஆற்றி வரும் மதுரை தத்தநேரியை சேர்ந்த சுயதொழில் புரிந்து வரும் ராஜேந்திரனை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது, அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடு, சால்வை அணிவித்து கருணாநிதியின் உருவச் சிலையையும் வழங்கி சிறப்பித்தார்.

    மதுரை தத்தநேரியை சேர்ந்த ராஜேந்திரன் திருப்பதி விலாஸ் என்ற பெயரில் மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்து வருகிறார். சமூகப் நலப் பணிகளில் ஆர்வம் கொண்ட அவர், மதுரை மாநகராட்சி, திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை 1 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அமைத்து தந்துள்ளார்.

    மேலும், இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி, கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றை 71 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் அமைத்து தந்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள புதுமண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிக்கு 2 கோடி ரூபாய் வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

    சமூக அக்கறையோடு தொண்டாற்றி வரும் ராஜேந்திரனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி, அவரது சமூகப் நலப்பணிகள் தொடர்ந்திட வாழ்த்தினார்.

    • 150 முதல் 200 கிராம் காலை உணவு மற்றும் 100 கிராம் காய்கறியுடன் கூடிய சாம்பார் வழங்க வேண்டும்.
    • காலை உணவுத்திட்டம் தொடங்கிய பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் குறைந்து உள்ளது.

    சென்னை:

    முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அரசு தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.

    மாணவ-மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வர வேண்டும். ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குதல், வருகையை அதிகரித்தல் போன்ற நோக்கத்திற்காக இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    காலை உணவுத்திட்டம் தொடங்கிய பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் குறைந்து உள்ளது. காலை உணவாக காய்கறிகள் சேர்த்து ஊட்டச்சத்துடன் வழங்கப்படுகிறது. திங்கட்கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா வழங்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை காய்கறி சாம்பாருடன் ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடியும் புதன் கிழமை காய்கறி சாம்பாருடன் ரவா பொங்கல், வெண்பொங்கல் வழங்கப்படுகிறது.

    வியாழக்கிழமை காய்கறி சாம்பாருடன் சேமியா உப்புமா, அரிசி உப்புமா, ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா வினியோகிக்கப்படுகிறது. வெள்ளிக் கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா காய்கறி கிச்சடி, ரவா கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி வழங்கப்பட்டு வருகிறது.

    ஒரு மாணவருக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப்பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி அல்லது ரவை, கோதுமை ரவை, சேமியா வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் உள்ளூரில் அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள், சாம்பாருக்கான பருப்பு 15 கிராம், உள்ளூரில் கிடைக்கக் கூடிய காய்கறிகள் சேர்க்க வேண்டும்.

    150 முதல் 200 கிராம் காலை உணவு மற்றும் 100 கிராம் காய்கறியுடன் கூடிய சாம்பார் வழங்க வேண்டும். ஒரு வாரத்தில் குறைந்தது. 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்ககூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்பார் என்று தெரியவந்துள்ளது.
    சென்னை:

    பிரதமர் மோடி நாளை மாலை நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் சென்னை வருகிறார்.

    சென்னை விமான நிலையத்தில் அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்கிறார்கள்.

    அப்போது எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்பார் என்று தெரியவந்துள்ளது.

    இதையடுத்து பிரதமர் மோடியுடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே சந்தித்து பேசக்கூடும் என்று தெரிகிறது.

    அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால்,உண்மையான ஆன்மிகவாதிகள் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    ஆத்தூர்:
    திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம்,
    சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள செல்லியம்பாளையத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என அறிவித்த போது, இதற்கு வாய்ப்பே இல்லை என்றார்கள். ஆட்சிக்கு வந்த உடனே பெட்ரோல் விலையை திமுக அரசு குறைத்தது. 

    மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை குறைக்கும் போது, மாநில வரியும் குறையும். திமுக அரசின் திட்டங்களால் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் பணவீக்கம் குறைவாக உள்ளது. 

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அறநிலையத்துறையின் மூலம் கோயில்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 

    ரூ.2,500 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் திமுக ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளது. உண்மையான ஆன்மிகவாதிகள் திமுகவை ஆதரிக்க வேண்டும். 

    அதிமுக ஆட்சியில் ஒரே ஒரு முறை மட்டும்தான் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு சரியாக ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இயற்கை திமுக ஆட்சிக்கு கொடுத்த வரத்தால், இந்தாண்டும் மே மாதமே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. 

    ஆட்சியில் இருந்த போது எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டத்திற்கும், தொகுதிக்கும் கூட எதையும் செய்யவில்லை. ஊர்ந்து கொண்டிந்த தமிழ்நாட்டை, ஓராண்டில் திமுக அரசு தலை நிமிர வைத்திருக்கிறது. வீழ்ச்சியுற்று இருந்த தமிழ்நாடு, இன்று எழுச்சியுற்றுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இனிய தோழரும், கேரள முதல்-அமைச்சருமான பினராயி விஜயனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறி இருப்பதாவது:-

    என் இனிய தோழரும், கேரள முதல்-அமைச்சருமான பினராயி விஜயனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    பிளவுப்படுத்தும் சக்திகளுக்கு எதிராக போராடவும், நாட்டின் ஒற்றுமைக்காக கேரளா தனது வலிமையைக் காட்டவும் வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மார்க்சிஸத்தின் தலை மாணாக்கர், அனைவர் நலனையும் விரும்புபவர் கேரள முதல்வர், வயதுக்கு மரியாதையைக் கூட்டுபவர், என் இனிய நண்பர் பினராயி விஜயனுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்து.
    டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மேட்டூர் அணையில் இருந்து மதகுகளை இயக்கி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார்.
    மேட்டூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை, திருவாரூர், நாகை உள்பட 12 டெல்டா மாவட்டங்களின் பாசனத்தேவைக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.

    அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் மூலம் டெல்டா பாசனத்துக்குட்பட்ட 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

    அணையின் நீர்மட்டம் 95 அடிக்கு மேல் இருக்கும்போது வழக்கமான நாளில் தண்ணீர் திறக்கப்படும். இந்த நிலையில் நடப்பு ஆண்டு கோடை காலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பி, மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து கொண்டே வந்தது.

    இன்று காலை 8 மணிக்கு அணையின் நீர்மட்டம் 117.76 அடியை (மொத்த கொள்ளளவு 120 அடி) எட்டியது. அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 508 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 117 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அணை ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

    இதனை தொடர்ந்து டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24-ந்தேதி) காலை மேட்டூர் அணையில் இருந்து மதகுகளை இயக்கி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் அணையில் இருந்து சீறிப்பாயும் தண்ணீர் மீது மலர்கள் தூவி வரவேற்றார்.

    அப்போது அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    காவிரி டெல்டா பாசனத்தில் குறுவை சாகுபடியில் சுமார் 4 லட்சம் ஏக்கர் பயன்பெறுகிறது. தொடர்ந்து அடுத்த ஆண்டு (ஜனவரி) 28-ந் தேதி வரை 250 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்த தண்ணீர் சம்பா, தாளடி என முப்போக விளைச்சலுக்கும் பயன்படுத்தப்படும்.

    மேட்டூர் அணை கட்டப்பட்டு 88 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக குறித்த காலமான ஜூன் 12-ந் தேதி அன்று 18 ஆண்டுகளும், ஜூன் 12-ந் தேதிக்கு முன்னதாகவே 10 ஆண்டுகளும், காலதாமதமாக 60 ஆண்டுகளும் தண்ணீர் திறந்துவிட ப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    குறுவை பாசனம் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களில் 4 லட்சத்து 91 ஆயிரத்து 600 ஏக்கர் நிலமும், கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரத்து 800 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். குறுவை சாகுபடிக்கு முன் கூட்டியே தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்


    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியை தாண்டி உள்ளது.
    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஜுன் 12-ந்தேதி காவிரி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். தற்போது நீர் இருப்பு 117அடிக்கும் அதிகமாக உள்ளதால் வழக்கத்திற்கு முன்னதாகவே டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு தண்ணீரை திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ‘அதன்படி நாளை (24-ந்தேதி) காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை காவிரியில் பாசனத்திற்கு திறந்து வைக்கிறார். இதற்காக தனி விமானத்தில் சென்னையில் இருந்து சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு இன்று மாலை வருகிறார்.

    பின்னர் கார் மூலம் மேட்டூருக்கு செல்லும் அவருக்கு சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் தீவட்டிப்பட்டியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்காக அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் இருந்த படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து தொப்பூர் வழியாக மேச்சேரிக்கு செல்லும் அவருக்கு மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மேச்சேரி பஸ் நிலையம் அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து மேட்டூர் செல்லும் அவர் இரவில் அங்கு ஓய்வு எடுக்கிறார்.

    நாளை காலை 10 மணிக்கு மேட்டூர் அணைக்கு சென்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரியில்  தண்ணீரை திறந்து வைக்கிறார். தொடர்ந்து அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை பூ தூவி வரவேற்கிறார். இதில் அரசியல் கட்சியினர், அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

    பின்னர் குஞ்சாணடியூர், நங்கவள்ளி, இரும்பாலை மற்றும் சேலம் மாநகர் புறவழி சாலை, வாழப்பாடி வழியாக ஆத்தூருக்கு செல்கிறார். அங்கு மாலை 4 மணியளவில் செல்லியம்பாளையத்தில் நகர்புற அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெறும் தமிழக அரசின் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டததில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
     
    இதற்கான ஏற்பாடுகளை சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம்  117 அடியை தாண்டி உள்ளது.

    மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 117.28 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 12 ஆயிரத்து 777 கன அடியாக இருந்த நிலையில் குடிநீருக்காக 1500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் நாளை தண்ணீரை திறந்து விடப்படும் நிலையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனை அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தண்ணீரை திறந்து விடும் அணை பகுதி, மேடை அமைப்பையும் பார்வையிட்டார். அப்போது கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் கிறிஸ்துராஜ்  உள்பட பலர் உடன் இருந்தனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி தமிழக சட்ட ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. பிரவின்குமார்  அபினவு, எஸ்.பி. ஸ்ரீஅபினவ்  தலைமையில் 2200 போலீசாரும், மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா தலைமையில் 800 போலீசாரும் என 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
    இத்திட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்டம் அமைக்க தோட்டக்கலை பயிர்சாகுபடிக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க, முதல் வேளாண்மை நிதி நிலை அறிக்கையை வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த போது, ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். 

    இச்சீரிய திட்டத்தின் கீழ், அனைத்து கிராமங்களும் ஒட்டுமொத்த வளர்ச்சியடைந்து தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற வேண்டும் என்பதே நோக்கமாகும்.

    முதலைமைச்சரின் பத்தாண்டு தொலைநோக்கு திட்டமான 11.75 இலட்சம் எக்டேர் நிலங்களை கூடுதலாக சாகுபடிக்கு கொண்டு வருதல். இருபோக சாகுபடி பரப்பினை 20 இலட்சம் எக்டராக உயர்த்துதல், உணவு தானியங்கள் மற்றும் தேங்காய், பருத்தி, சூரியகாந்தி,  நிலக்கடலை பயிர்களின் ஆக்கத் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தல் ஆகிய தொலை நோக்குத் திட்டங்களை அடைந்திடும் வகையில்  கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப் படுகிறது. 

    2021-22ஆம் ஆண்டில் 1,997 கிராமப் பஞ்சாயத்துக்களில் செயல்படுத்தப் படவுள்ள இத்திட்டத்தின் கீழ், தென்னங்கன்றுகள், பயறுவகை விதைகள், தெளிப்பான்கள், வீட்டுத் தோட்டம் அமைக்க காய்கறி தொகுப்புகள், தோட்டக்கலை பயிர்சாகுபடிக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.

    பழக்கூடைகள் மற்றும் ட்ரம், பழச்செடிகள், மரக்கன்றுகள் தொகுப்புகள், தரிசு நிலத் தொகுப்புகளில் ஆழ்துளை/குழாய்க்கிணறு அமைத்தல், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் கிணறு அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல், சிறுபாசன குளங்கள், குளங்கள், ஊரணிகள், வரத்து கால்வாய்கள் தூர்வாருதல் போன்ற செயல்பாடுகள் இக்கிராமப் பஞ்சாயத்துக்களிலும் செயல்படுத்தப்படும்.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு தரிசு தொகுப்பிற்குட்பட்ட விவசாய சங்க உறுப்பினர்களுக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்திட பணி ஆணை வழங்கினார்.

    தென்னங்கன்றுகள், தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்திட ஊக்கத்தொகை, வரப்பு ஒரங்களில் பழச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நட்டிட மரக்கன்றுகள், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் கிணறு அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைப்பதற்கான பணி ஆணை வழங்கினார். 

    மேலும் பண்ணைக் குட்டை அமைப்பதற்காக ஆணை, அக்ரி கிளினிக் அமைக்க ஆணை ஆகியவற்றை வழங்கினார். 

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×