search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காலை உணவு திட்டத்தில் மாற்றம்: உள்ளூரில் விளையும் காய்கறிகளுடன் சிறுதானிய உணவு வாரத்தில் 2 நாட்கள் வழங்க ஏற்பாடு
    X

    காலை உணவு திட்டத்தில் மாற்றம்: உள்ளூரில் விளையும் காய்கறிகளுடன் சிறுதானிய உணவு வாரத்தில் 2 நாட்கள் வழங்க ஏற்பாடு

    • 150 முதல் 200 கிராம் காலை உணவு மற்றும் 100 கிராம் காய்கறியுடன் கூடிய சாம்பார் வழங்க வேண்டும்.
    • காலை உணவுத்திட்டம் தொடங்கிய பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் குறைந்து உள்ளது.

    சென்னை:

    முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அரசு தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.

    மாணவ-மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வர வேண்டும். ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குதல், வருகையை அதிகரித்தல் போன்ற நோக்கத்திற்காக இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    காலை உணவுத்திட்டம் தொடங்கிய பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் குறைந்து உள்ளது. காலை உணவாக காய்கறிகள் சேர்த்து ஊட்டச்சத்துடன் வழங்கப்படுகிறது. திங்கட்கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா வழங்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை காய்கறி சாம்பாருடன் ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடியும் புதன் கிழமை காய்கறி சாம்பாருடன் ரவா பொங்கல், வெண்பொங்கல் வழங்கப்படுகிறது.

    வியாழக்கிழமை காய்கறி சாம்பாருடன் சேமியா உப்புமா, அரிசி உப்புமா, ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா வினியோகிக்கப்படுகிறது. வெள்ளிக் கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா காய்கறி கிச்சடி, ரவா கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி வழங்கப்பட்டு வருகிறது.

    ஒரு மாணவருக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப்பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி அல்லது ரவை, கோதுமை ரவை, சேமியா வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் உள்ளூரில் அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள், சாம்பாருக்கான பருப்பு 15 கிராம், உள்ளூரில் கிடைக்கக் கூடிய காய்கறிகள் சேர்க்க வேண்டும்.

    150 முதல் 200 கிராம் காலை உணவு மற்றும் 100 கிராம் காய்கறியுடன் கூடிய சாம்பார் வழங்க வேண்டும். ஒரு வாரத்தில் குறைந்தது. 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்ககூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×