search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sathyamangalam"

    சத்தியமங்கலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் காரில் வந்தவர்களிடம் ரூ.1¾ லட்சம் பறிமுதல் செய்தனர். #LSPolls
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சத்தியமங்கலம் அருகே தொப்பம்பாளையம் நால்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி தீனதயாளன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    இதில் ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் 3 பேர் இருந்தனர். கூடலூரில் இருந்து ஈரோட்டில் நடக்கும் மாட்டு சந்தைக்கு இவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

    அவர்களிடம் நடத்திய சோதனையில் பிரதீஸ் குமார் என்பவரிடம் ரூ.60 ஆயிரம், எல்டாஸ்பால் என்பவரிடம் ரூ.52 ஆயிரம் மற்றும் தினேஷ் (31) என்பவரிடம் ரூ.56800 என ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 300-ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    மாட்டு சந்தைக்கு வந்த வியாபாரிகளான இவர்களிடம் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அந்த பணத்தை சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். #LSPolls

    சத்தியமங்கலத்தில் இன்று 2 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கடும் பனிப் பொழிவும், குளிரும், வாட்டி எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை சத்தியமங்கலம், பண்ணாரி, அத்தாணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை 4 மணிக்கு திடீர் மழை பெய்தது.

    இந்த மழை தொடர்ந்து 6 மணி வரை 2 மணி நேரம் கொட்டியது. இந்த மழையால் ரோட்டில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த திடீர் மழையால் சத்தியமங்கலம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பனி காலம் முடிந்து வெயில் அடிக்க ஆரம்பிக்கும் தருணத்தில் மழை பெய்தது. மக்களை குதூகலப்படுத்தி உள்ளது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வானில் இருந்து பூமியே நோக்கி வந்த நெருப்பு பந்தால் பரபரப்பு ஏற்பட்டது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை விடிய-விடிய சாரல் மழை பெய்தது.

    சத்தியமங்கலத்தில் நேற்று இரவு முதல் விடிய பரவலாக பெய்த மழை இன்று காலை 9 மணி வரை பெய்து கொண்டிருந்தது.

    சத்தியமங்கலம் அய்யப்பன் நகரை சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனது வீட்டு மாடியில் நேற்று இரவு நின்று கொண்டிருந்தார். மழையும் தூறிக் கொண்டிருந்தது.

    திடீரென வானை பார்த்த அவருக்கு ஆச்சரியம் அளித்தது. வானின் உச்சியில் இருந்து தரையை நோக்கி சிறிய பந்து வடிவில் நெருப்பு பந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.

    உடனே அந்த நெருப்பு பந்தை தனது செல்போனில் படம் எடுத்தார். இவரைப்போல் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் இந்த நெருப்பு பந்தை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். அது எங்கே நமது பகுதியில் விழுந்து விடுமோ.. எனவும் பயந்தனர்.

    ஆனால் அந்த நெருப்பு பந்து சத்தியமங்கலம் வனப்பகுதியான திம்பம் மலை காட்டில் விழுந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து சத்தியமங்கலம் வனத்துறையினரிடம் கேட்டபோது, “நெருப்பு பந்து பூமியை நோக்கி விழுந்ததாக சத்தியமங்கலம் பகுதியில் பலர் பார்த்து உள்ளனர். அந்த நெருப்பு பந்து சத்தியமங்கலம் வனப்பகுதியில் விழுந்ததாகவும் கூறினர். அப்படி வனப்பகுதியில் விழுந்திருக்கலாம். இதனால் வனப்பகுதியில் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை. மழை வேறு பெய்து வருகிறது. பூமியில் விழுந்து அணைந்திருக்கலாம்” என்று கூறினர்.

    இந்த நெருப்பு பந்து சம்பவம் சத்தியமங்கலம் சுற்று வட்டாரப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சத்தியமங்கலம் அருகே ஆற்று மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் தலைமையில் போலீசார் சதுமுகையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது நடுப்பாளையத்தில் இருந்து சதுமுகை நோக்கி ஒரு டிராக்டர் வந்தது. அதனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த டிராக்டரில் ஆற்று மணல் இருந்தது. அந்த மணல் ஆற்றில் இருந்து அனுமதியின்றி கடத்தி வரப்பட்டதாகும்.

    அந்த மணலை கொண்டு வருவதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. இதையடுத்து அந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    டிராக்டரை ஓட்டி வந்த சதுமுகை, நடுப்பாளையத்தை சேர்ந்த ரவியை (வயது 43) போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தினர். டிராக்டரில் 1 யூனிட் ஆற்று மணல் இருந்தது. அந்த மணலுடன் டிராக்டர் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    சத்தியமங்கலம் பவானி ஆற்றில் வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்வதால் அருகே இருக்கும் பல ஊர்களில் உள்ள சுமார் 500 வீடுகளில் தண்ணீர் புகுந்து உள்ளது.
    சத்தியமங்கலம்:

    தென்மேற்கு பருவ மழை மீண்டும் பலமாக கொட்டி வருவதால் கர்நாடகம், கேரளாவில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான ஊட்டி மலை பகுதி மற்றும் கேரள மாநில வன எல்லையில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனால் பவானிசாகர் அணைக்கு கடந்த 2 நாட்களாக வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. வரலாறு காணாத வகையில் தண்ணீர் வரத்தால் பவானிசாகர் அணை நிரம்பியது. இதை தொடர்ந்து அணைக்கு வரும் 40 ஆயிரம் கன அடி தண்ணீரும் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி பவானி ஆற்றங்கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 2 நாட்களாகவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி சத்தியமங்கலம் பவானி ஆற்றில் இருகரைகளையும் தாண்டி வெள்ளம் சீறிப்பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது. இதனால் சத்தியமங்கலம் அருகே உள்ள அரசூர், தொட்டாம்பாளையம் மற்றும் ஆலத்துக்கோம்பை, நஞ்சை ஊத்துக்குளி உள்பட பல ஊர்களில் உள்ள சுமார் 500 வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

    தொட்டாம்பாளையத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் முக்கால் பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் உள்ள பொருட்கள் துணி மணிகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டன.

    சத்தியமங்கலம் அருகே ஆலத்துக்கோம்பை பகுதியில் பவானி ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து ரோட்டிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி வேன் இன்று காலை 7 மணியளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வரச்சென்றது. ரோட்டில் தண்ணீர் ஓடியதால் டிரைவர் அதில் வேனை இயக்கினார். ஆனால் டிரைவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிய வேன் பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கி ஒரு புறமாக கவிழ்ந்து மூழ்கியபடி சாய்ந்து நின்றது.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் - பதட்டமும் ஏற்பட்டது. பொதுமக்கள் துணையுடன் அந்த வேன் மீட்கப்பட்டது.

    பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வந்திருந்தால் விபரீதம் ஆகி இருக்கும்.

    இதேபோல் பவானி நகரில் பாலக்கரை, சின்னாற்று பாலம், பூ மார்க்கெட் பகுதியில் சுமார் 50-வீடுகளில் தண்ணீர் புகுந்தது. அந்த வீடுகளில் வசித்த மக்கள் பவானி அரசு மாணவிகள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் பள்ளி பாளையத்தில் காவிரி ஆற்று வெள்ளம் 500-க்கும் மேற்படட வீடுகளை சூழ்ந்து உள்ளது. 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. அப்பகுதி மக்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    காவிரி மற்றும் பவானி ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மாவட்ட கலெக்டர் பிரபாகர் கரையோர பகுதி மக்களுக்கு அறிவுரை கூறி வருகிறார். அவர் பல்வேறு இடங்களுக்கு ரோந்து சென்று பொதுமக்களை சந்தித்து அரசு ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கூறி வருகிறார்.
    சத்தியமங்கலம் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் அதிரடிப்படை வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அன்னூர் கவுண்டர் தோட்டம் அய்யன் சாலை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 36).

    இவர் சத்தியமங்கலம் அதிரடிப்படை பிரிவில் போலீஸ்காரராக பணி புரிந்து வந்தார். நேற்று இரவு 10.30 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் கடை வீதிக்கு வந்தார். பிறகு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    மேட்டுப்பாளையம் ரோடு திருநகர் காலனி பகுதியில் சென்ற போது அவருக்கு முன்னால் கோணமூலை பகுதியை சேர்ந்த கண்ணன் (17) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திடீரென கண்ணன் வலது புறமாக திரும்பினார்.

    அப்போது அவருக்கு பின்னால் வந்த கார்த்திகேயன் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.

    இந்த விபத்தில் கார்த்திகேயன் கீழே விழுந்ததில் அவரது தலை, முகம், தாடையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்பட்டார்.

    ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இவரது மனைவி பெயர் கவிதா, அரசுபள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். 1 மகனும், 1 மகளும் உள்ளனர்.

    விபத்தில் படுகாயம் அடைந்த கண்ணன் கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    வாழ பிடிக்கவில்லை.. என் சாவுக்கு யாரும் காரணம் அல்ல என்று கடிதம் எழுதி வைத்து விட்டு நிதிநிறுவன அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.

    சத்தியமங்கலம்:

    கரூர் மாவட்டம் அரவாக்குறிச்சியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 28). இவர் தனது பெற்றோருடன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திருநகர் காலனியில் வசித்து வந்தார்.

    கார்த்தி நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில நாட்களாக அவர் சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் கார்த்தி தனது வீட்டில் பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தற்கொலை செய்வதற்கு முன் அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் “வாழ பிடிக்கவில்லை. என் சாவுக்கு யாரும் காரணம் அல்ல” என்று எழுதி இருந்தார்.

    கார்த்தி என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார்? பண நெருக்கடியில் தற்கொலை செய்து கொண்டாரா? என்று தெரியவில்லை.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    சத்தியமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளும் டிராக்டரும் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    சத்தியமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் ரகீம்ஷேட். இவரது மகன் முகமது அனாஸ் (வயது 22).

    ஈரோடு பெருந்துறை ரோடு, கே.சி.பி. தோட்டத்தை சேர்ந்தவர் ‌ஷகின் அலி. இவரது மகன் முகமது மசூத் அலி (21). இவர்கள் 2 பேரும் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு மாணவர்கள்.

    இவர்கள் நேற்று மோட்டார் சைக்கிளில் கல்லூரியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை முகமது மசூத் அலி ஓட்டினார்.

    சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் உள்ள தனியார் மண்டபம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த டிராக்டரும், மோட்டார் சைக்கிளும் மோதின.

    இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் முகமது அனாஸ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்திய 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சத்தியமங்கலம்:

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற போராட்டங்கள் நடந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று காலை தூத்துக்குடியில் நடந்த போலீசாரின் துப்பாக்கி சூட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் நடந்தது.

    சத்தியமங்கலம் பஸ் நிலையம் எதிரே அந்த கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

    இதனால் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சத்தியமங்கலம் போலீசார் ஸ்டாலின் குணசேகரன் உள்பட 32 பேரை கைது செய்தனர்.

    ×