search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானி ஆற்றில் வெள்ளம் -  சத்தியமங்கலத்தில் 500 வீடுகளில் தண்ணீர் புகுந்தது
    X

    பவானி ஆற்றில் வெள்ளம் - சத்தியமங்கலத்தில் 500 வீடுகளில் தண்ணீர் புகுந்தது

    சத்தியமங்கலம் பவானி ஆற்றில் வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்வதால் அருகே இருக்கும் பல ஊர்களில் உள்ள சுமார் 500 வீடுகளில் தண்ணீர் புகுந்து உள்ளது.
    சத்தியமங்கலம்:

    தென்மேற்கு பருவ மழை மீண்டும் பலமாக கொட்டி வருவதால் கர்நாடகம், கேரளாவில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான ஊட்டி மலை பகுதி மற்றும் கேரள மாநில வன எல்லையில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனால் பவானிசாகர் அணைக்கு கடந்த 2 நாட்களாக வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. வரலாறு காணாத வகையில் தண்ணீர் வரத்தால் பவானிசாகர் அணை நிரம்பியது. இதை தொடர்ந்து அணைக்கு வரும் 40 ஆயிரம் கன அடி தண்ணீரும் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி பவானி ஆற்றங்கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 2 நாட்களாகவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி சத்தியமங்கலம் பவானி ஆற்றில் இருகரைகளையும் தாண்டி வெள்ளம் சீறிப்பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது. இதனால் சத்தியமங்கலம் அருகே உள்ள அரசூர், தொட்டாம்பாளையம் மற்றும் ஆலத்துக்கோம்பை, நஞ்சை ஊத்துக்குளி உள்பட பல ஊர்களில் உள்ள சுமார் 500 வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

    தொட்டாம்பாளையத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் முக்கால் பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் உள்ள பொருட்கள் துணி மணிகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டன.

    சத்தியமங்கலம் அருகே ஆலத்துக்கோம்பை பகுதியில் பவானி ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து ரோட்டிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி வேன் இன்று காலை 7 மணியளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வரச்சென்றது. ரோட்டில் தண்ணீர் ஓடியதால் டிரைவர் அதில் வேனை இயக்கினார். ஆனால் டிரைவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிய வேன் பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கி ஒரு புறமாக கவிழ்ந்து மூழ்கியபடி சாய்ந்து நின்றது.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் - பதட்டமும் ஏற்பட்டது. பொதுமக்கள் துணையுடன் அந்த வேன் மீட்கப்பட்டது.

    பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வந்திருந்தால் விபரீதம் ஆகி இருக்கும்.

    இதேபோல் பவானி நகரில் பாலக்கரை, சின்னாற்று பாலம், பூ மார்க்கெட் பகுதியில் சுமார் 50-வீடுகளில் தண்ணீர் புகுந்தது. அந்த வீடுகளில் வசித்த மக்கள் பவானி அரசு மாணவிகள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் பள்ளி பாளையத்தில் காவிரி ஆற்று வெள்ளம் 500-க்கும் மேற்படட வீடுகளை சூழ்ந்து உள்ளது. 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. அப்பகுதி மக்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    காவிரி மற்றும் பவானி ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மாவட்ட கலெக்டர் பிரபாகர் கரையோர பகுதி மக்களுக்கு அறிவுரை கூறி வருகிறார். அவர் பல்வேறு இடங்களுக்கு ரோந்து சென்று பொதுமக்களை சந்தித்து அரசு ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கூறி வருகிறார்.
    Next Story
    ×