search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "perambalur"

    பெரம்பலூர் மாவட்டங்களில் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    பெரம்பலூர்:

    தீபாவளி பண்டிகையின் போது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி தமிழ்நாட்டில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு நேரம் நிர்ணயித்தது. இந்த உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோளும் விடுத்திருந்தது.

    தீபாவளி அன்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ. ஆயிரம் அபராதம் அல்லது இரண்டு சேர்த்து விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் போலீசார் சார்பில் இதுதொடர்பாக கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தீபாவளி அன்று பெரம்பலூர் கணபதி நகரில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி மதியம் பட்டாசு வெடித்ததாக, அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 35), சங்கர்(22) ஆகிய 2 பேர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி அன்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறியும், தமிழக அரசு பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவும், பின்பாகவும் பட்டாசு வெடித்ததாகவும் பாடாலூர், அரும்பாவூர், கை.களத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா 2 பேர் மீதும், மங்களமேடு, வி.கைகாட்டி, குன்னம் ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா ஒருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக மொத்தம் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக பெரம்பலூர், அரியலூர் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
    பெரம்பலூர்:

    தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் புத்தாடைகளை வாங்குவதற்காகவும், இனிப்பு வகைகள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ்தெரு, சூப்பர் பஜார், பள்ளிவாசல் தெரு, பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதியபடி இருக்கிறது. இதனால் அந்தப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியிலும், தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரையிலான சாலையில் திடீரென பட்டாசு கடைகள், இனிப்பு கடைகள் ஏராளமாக ஆரம்பிக்கப்பட்டு விற்பனை தொடங்கியுள்ளது. மேலும் ஜவுளிக்கடைகளிலும் புது ஆடை வாங்குவதற்காக கூட்டம் அலைமோதுகிறது.

    பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தரைக் கடைகளாக ஜவுளிக்கடைகள் ஏராளமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கு வியாபாரிகள் ஆடைகளை கூவி, கூவி... விற்பனை செய்கின்றனர். அவர்களிடம் பொதுமக்கள் பேரம் பேசி ஆடைகளை வாங்கி சென்றதை காணமுடிந்தது. தீபாவளி பண்டிகைக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதால் சிலர் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியோடு பொருட்களை வாங்கி செல்கின்றனர். வெளியூரில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்தில் தங்கியிருந்து வேலை செய்பவர்கள் தீபாவளிக்காக முன்னதாக விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு செல்வதால் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பெரம்பலூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதே போல் அரியலூர் புதுமார்க்கெட் வீதி, எம்.பி.கோவில் தெரு, சின்னகடை தெரு, பெரியகடை தெரு உள்ளிட்ட முக்கிய கடைவீதிகளில் ஜவுளி எடுப்பதற்காகவும், தீபாவளிக்கு பொருட்கள் வாங்குவதற்காகவும் மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது. மக்களின் கூட்டத்தை பயன்படுத்தி பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கடைவீதிகளில் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் ஆங்காங்கே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்வையிட்டு போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். 
    பெரம்பலூரில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகளின் 500 படைப்புகள் இடம் பெற்றிருந்தன.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் பள்ளிக்கல்வித்துறை மற்்றும் மத்திய அரசின் கல்வி திட்டம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல், கணிதம், அறிவியல் கண்காட்சி தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தலைமை தாங்கி அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.



    இதில் தானியங்கி சிக்னல், ராக்கெட் தொழில்நுட்பம், கழிவுநீர் சுத்திகரிப்பு, ஆக்வா தொழில்நுட்பத்தில் பயிர்சாகுபடி மற்றும் மீன்வளர்ப்பு, மருத்துவகுணங்கள் கொண்ட தாவரங்கள், தானியங்கள், வேதிவினைகள், ஆர்க்கிமிடிஸ் கோட்பாடு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, காடுகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து ஏறத்தாழ 500 படைப்புகள் அமைக்கப்பட் டிருந்தன. இதில் இப்பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவர்கள் அஜீத்-முகிலன் ஹைடிராலிக் கருவிகளை கொண்டு உருவாக்கிய நடமாடும் நாற்காலி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து பாராட்டுகளை பெற்றது.

    கண்காட்சியில் முதன்மை கல்வி அதிகாரி அருள் அரங்கன், பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட கல்வி அதிகாரிகள் அம்பிகாபதி, செந்தமிழ்ச்செல்வி, தந்தை ரோவர் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவனங்களின் தலைவர் வரதராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் மற்றும் ஆசிரியர்கள், நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளின் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். 
    பெரம்பலூர் மற்றும் அரியலூரில் வருகிற 19 மற்றும் 20-ந்தேதி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
    அரியலூர்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தூய்மை இந்தியா திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். மேலும் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிவதோடு, வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் பெரம்பலூர் -அரியலூரில் வருகிற 19 மற்றும் 20-ந்தேதி கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி 19-ந்தேதி காலை 7மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் கவர்னர் பின்னர் கார் மூலம் பெரம்பலூர் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அதன் பின்னர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.

    மதிய உணவுக்கு பின்னர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதோடு, பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார். பின்னர் பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார். பின்னர் கார் மூலம் அரியலூர் விருந்தினர் மாளிகைக்கு சென்று இரவு தங்குகிறார். மறுநாள் 20-ந்தேதி காலை 10 மணிக்கு அரியலூரில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார். இதையடுத்து அரசு துறை அதிகாரிகளுடன் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். மதிய உணவுக்கு பிறகு பொது மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

    அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி முகமை, நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் மத்திய, மாநில அரசுகளின் நிதிகள் முறையாக செலவிடப்பட்டுள்ளதா? ஏரி, குளங்கள், நீர்வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரப்பட்டுள்ளதா ?பாலங்கள், சாலைகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா? என்றும், அரசு சிமெண்ட் ஆலையில் ரூ.200 கோடியில் நடைபெறும் விரிவாக்க பணிகள் குறித்தும், அரியலூர் பெரம்பலூர் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் குறித்தும் ஆய்வு செய்கிறார்.

    பின்னர் இரவு 8 மணியளவில் கார் மூலம் திருச்சி சென்று விமானம் மூலம் சென்னை செல்கிறார். பெரம்பலூர், அரியலூர் மாவட்ட பகுதிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வருவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
    பெரம்பலூரில் 2-வது நாளாக நடந்த தட்டச்சு தேர்வில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என மொத்தம் 661 பேர் கலந்து கொண்டு தட்டச்சு செய்தனர்.
    பெரம்பலூர்:

    தமிழ்நாடு தொழில்நுட்ப துறை நடத்தும் தட்டச்சு தேர்வு பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனத்தின் பொதிகை பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று முன்தினம் தமிழ், ஆங்கில மொழியில் ஜூனியர் கிரேடில் 4 பிரிவுகளுக்கும், சீனியர் கிரேடில் ஒரு பிரிவுக்கும் நடைபெற்ற தட்டச்சு தேர்வில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என மொத்தம் 952 பேர் பங்கேற்றனர்.

    அதே கல்லூரியில் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்து தட்டச்சு தேர்வுநடந்தது. இதில் தமிழ், ஆங்கில மொழியில் ஜூனியர் கிரேடில் ஒரு பிரிவுக்கும், சீனியர் கிரேடில் 3 பிரிவுகளுக்கும், உயர் வேகத்தேர்வு 2 பிரிவுகளுக்கும், ஜூனியர் கிரேடில் 2 பிரிவுகளுக்கும் நடத்தப்பட்ட தட்டச்சு தேர்வில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என மொத்தம் 661 பேர் கலந்து கொண்டு தட்டச்சு செய்தனர். 
    பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து மனித சங்கிலி இயக்கம் புதிய பஸ்நிலைய பகுதியில் நேற்று மாலை நடந்தது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து மனித சங்கிலி இயக்கம் புதிய பஸ்நிலைய பகுதியில் நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை தலைமை தாங்கினார். இதில் சிறிது தூரம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைகளை கோர்த்து மனித சங்கிலியாக நின்றனர். அப்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் ரவுடிகள் பார்ட்டி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் போதையில் இருந்த சிலர் பாட்டில்கள், கற்களை வீசியதில் பொதுமக்கள் காயம் அடைந்தனர்.
    பெரம்பலூர்:

    சென்னை சூளைமேடு பகுதியில் பிரபல ரவுடி பினு தனது கூட்டாளிகளுடன் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ரவுடி பினு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையாகி தற்போது தலைமறைவாகி விட்டார்.

    அதேபோல் பெரம்பலூரில் பார்ட்டி கொண்டாடிய ரவுடிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் பொதுமக்கள் தாக்கப்பட்டனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    பெரம்பலூர் துறைமங்கலம் கே.கே.நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் மற்றும் லாட்ஜ் உள்ளது. இந்த ஓட்டலில் கே.கே. நகர் மற்றும் இலங்கை அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்த ரவுடிகள் சிலர் பார்ட்டி நடத்துவதற்கு நேற்று அறை எடுத்துள்ளனர். அங்கு பிரியாணி விருந்துடன் மது குடித்த அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

    இதனால், ஓட்டல் மாடியில் கிடந்த பழைய பொருட்கள் மற்றும் கற்களை கொண்டு, சுற்றி இருந்த வீடுகளின் மீது சரமாரியாக வீசியுள்ளனர். தொடர்ந்து, உருட்டு கட்டை, கற்களை கொண்டு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

    நள்ளிரவு நேரத்தில் நடந்த சம்பவத்தால் பயந்து போன பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் தகராறில் ஈடுபட்டவர்களிடம் கேட்டபோது, அவர்களையும் ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

    இதில் லாட்ஜ் அருகேயுள்ள வீட்டில் வசித்து வரும் முருகேசன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. மேலும் பலர் தாக்குதலுக்கு உள்ளாகி காயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.

    இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். அரிவாள், உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களுடன் நின்றிருந்த ரவுடிகள் போலீசார் வருவதற்குள் தப்பியோடிவிட்டனர்.

    இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமித்தல் முகாம் அலுவலகத்தை (வீடு) முற்றுகையிட்டு, அதே இடத்தில் திருச்சியில் சாலையில் மறியலில் ஈடுபட முயற்சித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து அங்கு வந்த போலீசார் சம்பவத்தில் தொடர்புடையவர்களை இரவோடு இரவாக கைது செய்வதாக உறுதியளித்தனர். மேலும் சந்தேகத்தின் பேரில் 5 பேரை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இச்சம்பவத்தால் கே.கே.நகர், நியூகாலணி உள்ளிட்ட பகுதியில் நள்ளிரவு பதட்டமான சூழல் நிலவியது.
    பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.12.29 கோடி மதிப்பில் தார் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று கலெக்டர் சாந்தா தெரிவித்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் பாரத பிரதமர் கிராம சாலை திட்டத்தின் கீழ் பெரம்பலூர் தாலுகா செங்குணம் முதல் கவுல்பாளையம் வரை 1.2 கி.மீ. தூரத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதே போல், நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் அய்யலூர் குடிகாடு பகுதியில் தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில், பாரத பிரதமர் கிராம சாலைத்் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் பல்வேறு பகுதிகளில் ரூ.12.29 கோடி மதிப்பீட்டில் 10 தார் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் விவசாய பயன்பாட்டிற்கு தடுப்பணைகள் கட்டும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் இயற்கை வள மேம்பாட்டு பணிகளின் கீழ் மழை நீர் சேகரிப்பு மற்றும் மண் வளப்பாதுகாப்புப்பணிகளுக்காக ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள், புதிய குட்டை அமைத்தல், குட்டை ஆழப்படுத்துதல் மற்றும் பண்ணைக் குட்டை அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட மேலாளர் ஸ்ரீதர், வேளாண்மை துணை இயக்குனர் முருகன், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், வேளாண்மை உதவி இயக்குனர் பழனிசாமி, நீர்வடிப்பகுதி மேம்பாட்டுக் குழு உறுப்பினர் தேவேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, பெரம்பலூர் தாசில்தார் (பொறுப்பு) சிவக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் ஜாக்டோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    பெரம்பலூர்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழு அறிவித்த ஊதிய உயர்வில் 21 மாத நிலுவை தொகையினை உடனடியாக தமிழக அரசு வழங்கிட வேண்டும். 7-வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழு, ஆசிரியர் இயக்கங்களை அழைத்து கலந்துரையாடல் செய்ய வேண்டும். கல்வித்துறையை குழப்பத்தில் ஆக்கும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைகள் 56, 100, 101 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். பள்ளிக்கல்வி துறையில் ஆட்குறைப்பு என்ற அடிப்படையில் பணிநிரவல் மூலம் ஆசிரியர்களை பணிமாறுதல் செய்வதை கைவிட வேண்டும்.

    அரசு பொதுத்தேர்வு சுமையை கருத்தில் கொண்டு முதுநிலை ஆசிரியர்களை 11,12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ அமைப்பின் சார்பில், நேற்று காலை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் மாவட்ட தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் பிரபாகரன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை வரவேற்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் மகேந்திரன் பேசினார். இதில் தமிழக தமிழாசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ஜெயராமன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி-தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், தமிழக இடைநிலை மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட தலைவர் தேவேந்திரன், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் காந்தி, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலசந்தர் ஆகியோர் 10 அம்ச கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ அமைப்பின் இணைப்பு சங்கங்களில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் மரியதாஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆளவந்தார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு நியமித்துள்ள பணியாளர் சீர்திருத்த குழுவை ரத்து செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சர்பூன்னிசா, செல்வமணி, தியாகராஜன், வாசுகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சவீதா தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆளவந்தார், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் தயாளன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

    முடிவில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சின்னதுரை நன்றி கூறினார்.

    இதேபோல் வேப்பூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க குன்னம் வட்ட செயலாளர் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன், செந்தில், ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    பெரம்பலூரில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் இமயவரம்பன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ஆளவந்தார், துணை தலைவர் குமரிஆனந்தன், வட்ட இணை செயலாளர் மருதராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் பெரம்பலூரில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வஞ்சிரம் மீன் கிலோ ரூ.900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    பெரம்பலூர்:

    ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சென்னை, கடலூர், புதுக்கோட்டை, ராமேசுவரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்சி புத்தூர் மீன் மார்க்கெட்டுக்கு கடல் மீன்கள் உள்பட பல்வேறு வகையான மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து பெரம்பலூர் சிறு வியாபாரிகள் மீன்களை கொள்முதல் செய்து வந்து பெரம்பலூரில் விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    பெரம்பலூர் நகரில் உள்ள மீன் கடைகளில் கிலோ ரூ.150-க்கு விற்ற ரோகு வகை மீன் தற்போது ரூ.180-க்கும், கிலோ ரூ.170-க்கு விற்ற கட்லா மீன் ரூ.200-க்கும், கிலோ ரூ.170-க்கு விற்ற பாப்பு லெட் மீன் ரூ.180-க்கும், கிலோ ரூ.800-க்கு விற்ற வஞ்சிரம் மீன் ரூ.900-க்கும், கிலோ ரூ.300-க்கு விற்ற சீலா மீன் ரூ.350-க்கும் விற்கப்படுகிறது. மேலும் அயிலைபாறை மீன் கிலோ ரூ.250-க்கும், கொடுவா பாறை ரூ.250-க்கும், தேங்காய் பாறை ரூ.200-க்கும், நெத்திலி ரூ.250-க்கும், இறால் ரூ.300-க்கும், அயிலைசம்பா ரூ.120-க்கும், மத்தி ரூ.120-க்கும், சங்கரா ரூ.250-க்கும், பிளாச்சி ரூ.350-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கண்ணாடி பாறை கிலோ ரூ.350-க்கும், கிளி மீன் ரூ.300-க்கும், விறால் ரூ.500-க்கும், உயிர்மீன் (மயிலை) ரூ.150-க்கும், வாழை மீன் ரூ.350-க்கும், பால்சுறா, வஞ்சிரம் பாறை ரூ.400-க்கும், நண்டு ரூ.250-க்கும், புளூ நண்டு ரூ.450-க்கும், கடல் வவ்வால் ரூ.450-க்கும், கடல் விறால் ரூ.350-க்கும், கடல் கெழுத்தி ரூ.300-க்கும், அயிலை ரூ.250-க்கும், ஜிலேபி ரூ.130-க்கும், பங்கஸ் வகை மீன் ரூ.180-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    மீன்களின் விலை அதிகரித்தது குறித்து பெரம்பலூரை சேர்ந்த பெண் மீன் வியாபாரி ஒருவர் கூறுகையில், “தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் வருகிற 14-ந்தேதி மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இதனால் மீன்களின் வரத்து குறைந்துள்ளதால், அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கண்மாயில் பிடிக்கப்படும் கெண்டை, கட்லா மீன்களை மொத்த வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். அவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. மீன்பிடி தடைகாலம் முடிந்த பின்னரே மீன்களின் விலை கணிசமாக குறையும்” என்றார். இந்நிலையில் மீன் கடைகளுக்கு மீன் வாங்க வந்தவர்கள், மீன்கள் விலை அதிகமாக இருந்ததால் குறைந்த அளவில் மீன்களை வாங்கி சென்றனர். 
    சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பேருந்து பெரம்பலூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #PerambalurBusAccident

    விழுப்புரம்:

    சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி தனியார் பேருந்து ஒன்று நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து சென்னை - திருச்சி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பெரம்பலூர் அருகே சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்துக்குள்ளானது. 

    இதில் அந்த பேருந்தில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் ஒண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #PerambalurBusAccident
    ×