search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Governor banwarilal purohit"

    பெரம்பலூர் மற்றும் அரியலூரில் வருகிற 19 மற்றும் 20-ந்தேதி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
    அரியலூர்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தூய்மை இந்தியா திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். மேலும் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிவதோடு, வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் பெரம்பலூர் -அரியலூரில் வருகிற 19 மற்றும் 20-ந்தேதி கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி 19-ந்தேதி காலை 7மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் கவர்னர் பின்னர் கார் மூலம் பெரம்பலூர் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அதன் பின்னர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.

    மதிய உணவுக்கு பின்னர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதோடு, பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார். பின்னர் பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார். பின்னர் கார் மூலம் அரியலூர் விருந்தினர் மாளிகைக்கு சென்று இரவு தங்குகிறார். மறுநாள் 20-ந்தேதி காலை 10 மணிக்கு அரியலூரில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார். இதையடுத்து அரசு துறை அதிகாரிகளுடன் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். மதிய உணவுக்கு பிறகு பொது மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

    அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி முகமை, நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் மத்திய, மாநில அரசுகளின் நிதிகள் முறையாக செலவிடப்பட்டுள்ளதா? ஏரி, குளங்கள், நீர்வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரப்பட்டுள்ளதா ?பாலங்கள், சாலைகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா? என்றும், அரசு சிமெண்ட் ஆலையில் ரூ.200 கோடியில் நடைபெறும் விரிவாக்க பணிகள் குறித்தும், அரியலூர் பெரம்பலூர் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் குறித்தும் ஆய்வு செய்கிறார்.

    பின்னர் இரவு 8 மணியளவில் கார் மூலம் திருச்சி சென்று விமானம் மூலம் சென்னை செல்கிறார். பெரம்பலூர், அரியலூர் மாவட்ட பகுதிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வருவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
    தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு மரபுப்படி இருக்கை ஒதுக்கப்படாதது தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹிலா ரமானியிடம் டெலிபோனில் வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
    சென்னை:

    சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் மாளிகையில் நேற்று மாலை தேனீர் விருந்து நடைபெற்றது.

    தேனீர் விருந்துக்கு ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு தனியாக இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.

    விழாவில் கலந்து கொள்ள ஐகோர்ட்டு நீதிபதிகள் அனைவருக்கும் கவர்னர் மாளிகை அழைப்பு விடுத்து இருந்தது. அப்படி இருந்தும் தலைமை நீதிபதி வி.கே.தஹிலா ரமானியை தவிர்த்து ஐகோர்ட்டு நீதிபதிகள் யாரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை.

    இதனால் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் காலியாக இருந்தன. முன் வரிசையில் மட்டும் ஒருசில ஓய்வு பெற்ற நீதிபதிகள் அமர்ந்து இருந்தனர்.

    கடந்த 12-ந்தேதி கவர்னர் மாளிகையில் தலைமை நீதிபதி பதவியேற்பு விழா நடந்தது. இந்த விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு மரபுப்படி இருக்கை ஒதுக்கப்படவில்லை என்றும், அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகளின் இருக்கைகளுக்கு பின்னால் ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்ததாகவும் குறை கூறப்பட்டது.

    இதன் காரணமாகவே கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த சுதந்திர தின விழா மற்றும் தேனீர் விருந்தில் ஐகோர்ட்டு நீதிபதிகள் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில் தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு மரபுப்படி இருக்கை ஒதுக்கப்படாதது தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹிலா ரமானியிடம் டெலிபோனில் வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சுதந்திர தின விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    ஐகோர்ட்டில் நேற்று சுதந்திர தின விழா நிகழ்ச்சி முடிந்த பிறகு தலைமை நீதிபதி இந்த தகவலை நீதிபதிகளிடம் தெரிவித்ததாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

    அதோடு கவர்னரின் முதன்மை செயலாளர் ராஜகோபால் செவ்வாய்க்கிழமை தலைமை நீதிபதியை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

    மேலும் மரபு மீறல் தொடர்பாக அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார். இதை நீதிபதிகளிடம் தலைமை நீதிபதி தெரிவித்து இருக்கிறார்.

    இதை கேட்டு பெரும்பாலான நீதிபதிகள் திருப்தி அடைந்தனர். ஆனாலும் அவர்கள் கவர்னர் மாளிகையில் நடந்த தேனீர் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
    ×