search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதந்திர தின விழாவில் நீதிபதிகள் புறக்கணிப்பு- தலைமை நீதிபதியிடம் வருத்தம் தெரிவித்த கவர்னர்
    X

    சுதந்திர தின விழாவில் நீதிபதிகள் புறக்கணிப்பு- தலைமை நீதிபதியிடம் வருத்தம் தெரிவித்த கவர்னர்

    தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு மரபுப்படி இருக்கை ஒதுக்கப்படாதது தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹிலா ரமானியிடம் டெலிபோனில் வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
    சென்னை:

    சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் மாளிகையில் நேற்று மாலை தேனீர் விருந்து நடைபெற்றது.

    தேனீர் விருந்துக்கு ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு தனியாக இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.

    விழாவில் கலந்து கொள்ள ஐகோர்ட்டு நீதிபதிகள் அனைவருக்கும் கவர்னர் மாளிகை அழைப்பு விடுத்து இருந்தது. அப்படி இருந்தும் தலைமை நீதிபதி வி.கே.தஹிலா ரமானியை தவிர்த்து ஐகோர்ட்டு நீதிபதிகள் யாரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை.

    இதனால் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் காலியாக இருந்தன. முன் வரிசையில் மட்டும் ஒருசில ஓய்வு பெற்ற நீதிபதிகள் அமர்ந்து இருந்தனர்.

    கடந்த 12-ந்தேதி கவர்னர் மாளிகையில் தலைமை நீதிபதி பதவியேற்பு விழா நடந்தது. இந்த விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு மரபுப்படி இருக்கை ஒதுக்கப்படவில்லை என்றும், அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகளின் இருக்கைகளுக்கு பின்னால் ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்ததாகவும் குறை கூறப்பட்டது.

    இதன் காரணமாகவே கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த சுதந்திர தின விழா மற்றும் தேனீர் விருந்தில் ஐகோர்ட்டு நீதிபதிகள் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில் தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு மரபுப்படி இருக்கை ஒதுக்கப்படாதது தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹிலா ரமானியிடம் டெலிபோனில் வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சுதந்திர தின விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    ஐகோர்ட்டில் நேற்று சுதந்திர தின விழா நிகழ்ச்சி முடிந்த பிறகு தலைமை நீதிபதி இந்த தகவலை நீதிபதிகளிடம் தெரிவித்ததாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

    அதோடு கவர்னரின் முதன்மை செயலாளர் ராஜகோபால் செவ்வாய்க்கிழமை தலைமை நீதிபதியை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

    மேலும் மரபு மீறல் தொடர்பாக அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார். இதை நீதிபதிகளிடம் தலைமை நீதிபதி தெரிவித்து இருக்கிறார்.

    இதை கேட்டு பெரும்பாலான நீதிபதிகள் திருப்தி அடைந்தனர். ஆனாலும் அவர்கள் கவர்னர் மாளிகையில் நடந்த தேனீர் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
    Next Story
    ×