search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maha Shivratri"

    • சிவபெருமானை பூஜை செய்வது மோட்சத்தை வழங்கும் என்பது ஐதீகம்.
    • சதுர்த்தசி திதியில் வரும் சிவராத்திரியை, `மகா சிவராத்திரி' என்று வழிபடுகிறோம்.

    சக்தியை வழிபட நவராத்திரி என்னும் ஒன்பது இரவுகள் இருப்பது போல், சிவபெருமானை வழிபாடு செய்ய மகா சிவராத்திரி என்னும் ஒரு நாள் முக்கியமானதாக இருக்கிறது. இந்த நாளில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான 4 ஜாம வேளைகளில் சிவபெருமானை பூஜை செய்வது மோட்சத்தை வழங்கும் என்பது ஐதீகம்.

     மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முதல் கால பூஜை, இரவு 9 மணி முதல் இரவு 12 மணி வரை இரண்டாவது கால பூஜை, இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை மூன்றாம் கால பூஜை, அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை நான்காவது கால பூஜை. இதில் இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை லிங்கோத்பவ காலமாகும். இதை ஞாபகப்படுத்தும் விதமாக சிவாலயங்களில் கர்ப்பக் கிரக (வெளிப்புறத்தில்) கோஷ்டத்தில் லிங்கோத்பவர் மூர்த்தி காட்சி தருவதைப் பார்க்க முடியும்.

    சிவராத்திரியை ஐந்து வகையாக சொல்வார்கள். அது நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி. மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதியில் வரும் சிவராத்திரியை, `மகா சிவராத்திரி' என்று வழிபடுகிறோம்.

    அன்றைய தினம் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருந்து மாலை முதல் மறுநாள் காலை வரை நான்கு யாமங்களிலும் ஸ்ரீ ருத்ர மகா மந்திரங்களை சொல்லி,11 திரவியங்களால் (வாசனை தைலம், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்துவிட்டு, பின்னர் சுத்தமான நீர் கொண்டு அல்லது விபூதி கொண்டு அபிஷேகம் செய்யப்படும்) சிவபெருமானை அபிஷேகித்து வழிபடுவார்கள்.

     மகா சிவராத்திரி பிறந்த கதை

    ஒரு கிருத யுகத்தில் இந்திரன் தனது ஐராவதம் என்னும் யானை மீது ஏறி வந்துகொண்டிருந்தான். அப்போது துர்வாச முனிவர் தனக்கு மகாலட்சுமி அளித்த மாலையை, இந்திரனுக்கு கொடுத்தார். அதை இந்திரன் தன் கையால் வாங்காமல் தன் வாகனமாகிய ஐராவதத்தை வாங்கச் சொல்ல, யானையோ அந்த மாலையை அலட்சியமாக வாங்கி தன் காலில் போட்டு மிதித்தது. இதனால் கோபம் அடைந்த துர்வாச முனிவர், இந்திரன் தன் செல்வத்தை இழந்துபோவான் என்று சபித்தார். அதன்படி செல்வத்தை இழந்துபோன இந்திரன், பிரம்மதேவனிடம் சென்று முறையிட்டு, இழந்த செல்வத்தைப் பெற முயற்சித்தான். இந்திரன் பூஜித்த காலமே மகா சிவராத்திரி என்கிறார்கள்.

     அதே நேரத்தில் இன்னொரு கதையும் சொல்வார்கள். அசுரர்கள் இறந்து விட்டால் அவர்களுக்கு குருவாக இருக்கக்கூடிய சுக்ராச்சாரியார், தனக்கு தெரிந்த `மிருத்த சஞ்ஜீவினி' மந்திரத்தால் அவர்களை பிழைக்க வைத்து விடுவார். எனவே தேவர்கள், தாங்களும் இறக்காமல் இருக்க ஏதாவது வழி உண்டா என்று பிரம்மாவிடம் கேட்டனர். அதற்காக பாற்கடல் உள்ளிருக்கும் அமிர்தத்தை எடுக்க யோசனை கூறப்பட்டது. அதன்படி தேவர்கள் மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைய முற்பட்டனர். ஆனால் தேவர்களால் பாற்கடலைக் கடைய முடியவில்லை. எனவே துணைக்கு அசுரர்களையும் அழைத்தனர். அசுரர்களும், தேவர்களும் சேர்ந்து திருப்பாற் கடலைக் கடைவதாகவும், கிடைக்கும் அமிர்தத்தை பகிர்ந்து கொள்வதாகவும் முடிவு செய்யப்பட்டது.

    வாசுகி பாம்பின் தலைப் பகுதியை அசுரர்களும், வால் பகுதியை தேவர்களும் பிடித்து மந்தார மலையைக் கொண்டு பாற்கடலைக் கடையத் தொடங்கினர். அப்பொழுது பாற்கடலின் உள்ளிருந்து காமதேனு, கற்பக தரு, ஐராவதம், கவுஸ்துபம் என்ற மணி, லட்சுமி தேவி, சந்திரன் போன்றோர் வெளிவர ஆரம்பித்தனர். ஆனால் இவற்றிற்கெல்லாம் முன்பாக ஆலகாலம் என்ற விஷம் வெளிப்பட்டது. இதன் சக்தியால் அனைத்து உலகங்களும் வெப்பத்தில் தகித்தது. இதைக் கண்டு பார்வதி தேவி, பரமேஸ்வரனிடம் முறையிட்டார்.

    உடனே பரமேஸ்வரன் அந்த ஆலகால விஷத்தை எடுத்து உண்டார். உலகத்தையே காத்தருளும் சிவனை, ஆலகால விஷம் என்ன செய்து விட முடியும்? ஆனாலும் மயங்கி சரிவதுபோல் தோற்றம் கொண்டார், நீலகண்டர். இதைக் கண்ட தேவர்கள் பயந்து, "சுவாமி தாங்கள் கண் விழித்து எங்களை காக்க வேண்டும்" என்று பிரார்த்தனை செய்தனர். தேவர்கள் அவ்வாறு சிவபெருமானை பூஜித்த அந்த காலமே `மகா சிவராத்திரி' என்று அழைக்கப்படுகிறது.

     மகா சிவராத்திரி விரத பலன்

    முன்பொரு சமயம் வேதங்கள் நன்றாக கற்ற ஒரு அந்தணர், அவர் இல்லத்தில் கிளிகள் வளர்த்து வந்தார். கூண்டில் அடைத்து கிளி வளர்த்த தோஷத்தாலும், அதன் மேல் உள்ள பற்றாலும், இறக்கும் பொழுது கிளிகளின் நினைவாகவே இறந்தார். மறுஜென்மத்தில் அவர் வேடனாக பிறந்து, காட்டில் வேட்டையாடி தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். ஒரு முறை காட்டில் வேட்டையாட சென்றபோது, வேடனுக்கு எதுவும் கிடைக்கவில்லை.

    எனவே விலங்குகளைத் தேடி நீண்ட தூரம் காட்டிற்குள் சென்றுவிட்டான். இருள் சூழும் நேரம் ஆகிவிட்டதால் காட்டை விட்டு வெளியேற முடியவில்லை. அப்போது தாகம் எடுக்க, வில் -அம்புகளை தரையில் வைத்து விட்டு ஒரு குளத்தில் தண்ணீர் குடிக்க இறங்கினான்.

    அந்த வேளையில் வேடனை தாக்க ஒரு புலி பாய்ந்து வந்தது. இதனால் பதறிப்போன வேடன், வில்-அம்புகளை எடுக்க முடியாமல் அவசரமாக ஓடி பக்கத்தில் இருந்த மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டான். இரவு முழுவதும் புலி அந்த மரத்தை சுற்றி வந்தது.

    வேடனுக்கு கை, கால் எல்லாம் நடுக்கமாக இருந்தது. பசியால் தலை சுற்றியது. எதுவும் சாப்பிடாமல் இரவு முழுவதும் அந்த மரத்தின் கிளைகளைப் பற்றிய படியே இருந்தான். மறுநாள் பொழுது விடிந்ததும் கீழே பார்த்தபோது, புலி அங்கே இல்லை. இதையடுத்து வேடன் கீழே இறங்கி வந்தான். பல ஆண்டுகள் வாழ்ந்த அந்த வேடன் வயது முதிர்ச்சியால் இறந்தான்.

    அந்த வேடனின் ஆன்மா எமலோகம் சென்றது. அங்கே எமனிடம் `இந்த வேடனின் வாழ்வில் பாவங்கள் எதுவும் இல்லை' என்று சித்திரகுப்தன் கூறினார். தன் வாழ்நாளில் பல மிருகங்களை வேட்டையாடிய வேடனின் பாப கணக்கில் எதுவும் இல்லை என்றது, எமதர்மனுக்கு அதிர்ச்சியை அளித்தது.

    வேடன் செய்த புண்ணியம் என்ன என்று பார்க்க, முன்பு புலிக்கு பயந்து வேடன் ஏறி அமர்ந்தது, வில்வ மரம் ஆகும். அன்றைய தினம் மகா சிவராத்திரி. பயத்தில் கைகள் நடுங்க கிளைகளைப் பற்றி இருந்ததால், அந்த நடுக்கத்தில் வில்வ இலைகள் உதிர்ந்து கீழே விழுந்தன.

    வில்வ இலைகள் விழுந்த இடத்தில் ஒரு பழமையான சிவலிங்கம் மண்ணில் புதைந்திருந்தது. அந்த சிவலிங்கத்தின் மீது வில்வ இலைகள் விழுந்தன. மகா சிவராத்திரி அன்று சாப்பிடாமல், வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சனை செய்த புண்ணியம் வேடனுக்கு கிடைத்தது என்பதை எமதர்மனும், சித்திரகுப்தனும் அறிந்தனர். வாழ்நாள் முழுவதும் செய்த பாவங்களை கூட போக்கும் தன்மை கொண்டது, மகா சிவராத்திரி வழிபாடு.

    மகா சிவராத்திரி அன்று உபவாசம் இருத்தல் (சாப்பிடாமல் இருப்பது), பூஜை செய்வது, தூங்காது இருத்தல் ஆகியவை முக்கியமானவை. சிவராத்திரி அன்று உணவு தவிர்க்க முடியாதவர்கள், பால், பழம், வேகவைத்த பொருள் சாப்பிட்டு உபவாசம் இருக்கலாம். பகலிலும், இரவிலும் தூங்காமல் இருப்பது, புண்ணியத்தை தரும் சிவலிங்கத்தை பூஜிப்பது, சுவாமியை சிவாலயம் சென்று தரிசிப்பது மிக விசேஷமானது. 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி தொடங்கி 9-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணி வரை சிவராத்திரி தினம். அன்றைய தினம் இரவு கண் முழிப்பது மிக அவசியம். விளக்கேற்றுவதும், அபிஷேகப் பொருட்கள் கொடுப்பதும் மிகுந்த புண்ணியத்தை தரும்.

    மகா சிவராத்திரியில் சொல்ல வேண்டிய மந்திரம்

    அரிதிலும் அரிதான அனைவரும் ஜெபிக்க வேண்டிய மோட்சத்தைத் தரும் சிவ பஞ்சாட்சர மகா மந்திரம், 'ஓம் நமசிவாய'. இந்த மந்திரத்தை நம் சக்திக்கேற்றபடி 108 அல்லது 1008 முறை மகா சிவராத்திரி அன்று ஜெபிக்கலாம். சக்தி பஞ்சாட்சரி மந்திரம், `ஓம் ஹ்ரீம் நமசிவாய'. இதனையும் தங்களின் சக்திக்கேற்ப ஜெபிக்கலாம்.

    ஸ்ரீ குரு தாரக பஞ்சாட்சரி மந்திரம், 'ஓம் ஓங்காராய நம சிவாய, ஓம் நகாராய நமசிவாய, ஓம் மகாராய நமசிவாய, ஓம் சிகாராய நமசிவாய, ஓம் வகாராய நமசிவாய, ஓம் யகாராய நமசிவாய, ஓம் நம ஸ்ரீகுருதேவாய பரம புருஷாய ஸர்வ தேவதா வசீகராய ஸர்வாரிஷ்ட விநாசாய ஸர்வ துர்மந்த்ர ச்சேதனாய த்ரைலோக்யம் வசமானய ஸ்வாஹா' என்ற மந்திரத்தையும் உச்சரிக்கலாம்.

    • உபவாசம் இருந்து பட்ச சிவராத்திரியில் சிவபெருமானை வழிபட வேண்டும்.
    • சிவன் என்றால் மங்களம் என்று பொருள்.

    சிவபெருமானுக்கே உரிய சிவராத்திரி 5 வகையாக கூறப்பட்டு இருக்கிறது.

    முதலாவதாக நித்திய சிவராத்திரி:

    நித்திய சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச, சுக்லபட்ச சதுர்த்தசிகளில் வரும். மாதம் இரண்டாக வரும் நித்திய சிவராத்திரியை தொடர்ந்து 24 முறையும் அனுசரிக்க வேண்டும்.

    இரண்டாவதாக பட்ச சிவராத்திரி:

    தை மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் 13 நாட்கள் ஒரு நேரம் மட்டும் உணவு உண்டு 14-ம் நாளான சதுர்த்தசியில் முழு நேர உபவாசம் இருந்து பட்ச சிவராத்திரியில் சிவபெருமானை வழிபட வேண்டும்.

    மூன்றாவது மாத சிவராத்திரி:

    மாத சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் வரும். சித்திரை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமியில், வைகாசி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில், ஆனி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியில், ஆடி மாதம் கிருஷ்ணபட்ச பஞ்சமியில், ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் புரட்டாசி மாதம் சுக்லபட்ச திரயோதசியில், ஐப்பசி மாதம் சுக்லபட்ச துவாதசியில், கார்த்திகை மாதம் சுக்லபட்ச சப்தமியில், மார்கழி மாதம் சுக்லபட்ச சதுர்த்தசியில், தை மாதம் சுக்லபட்ச திருதியையில், மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில், பங்குனி மாதம் சுக்லபட்ச திருதியையில் வருவது மாத சிவராத்திரி என்றழைக்கப்படும்.

    நான்காவது யோக சிவராத்திரி:

    திங்கட்கிழமை அன்று பகல், இரவு முழுவதும் அமாவாசையாக பொருந்தி வந்தால் அது யோக சிவராத்திரி.

    ஐந்தாவது மகா சிவராத்திரி:

    பெரும்பாலான சிவராத்திரிகளை கூர்ந்து கவனித்தால் அவை சதுர்த்தசி திதியில் வருவது தென்படும். ஏன் அப்படி? அமாவாசைக்கோ பெளர்ணமிக்கோ முன்பு பதினான்காம் நாளாக வருவது சதுர்த்தசி. அந்த நாள் சிவனுக்குரியது என்பது சாஸ்திரங்கள் கூறும் செய்தியாகும்.

    ஒவ்வொரு தெய்வத்துக்கும் அவரவருக்கு ஏற்ற திதியை ஒதுக்கி வணங்கும் போது சிவனுக்கு ஒதுக்கப்பட்டது தான் சதுர்தசி. இந்த சதுர்தசி கிருஷ்ணபட்சமானால் மறுநாள் அமாவாசை அதே சுக்லபட்சமானால் மறுநாள் பெளர்ணமி. தொடக்கம் முடிவு இரண்டுமே அந்த சிவனால் தான் என்பதை உணர்த்தவே இந்த திதி சிவனுக்காக ஒதுக்கப்பட்டது. சிவன் என்றால் மங்களம் என்று பொருள். ராத்திரி என்றால் இரவு. எனவே மங்களகரமான இரவு என்று மகாசிவராத்திரியை சொல்லலாம்.

    எல்லா வகையான சிவராத்திரிகளிலும் மேலானதும் வருஷம் ஒரு முறை மட்டுமே வருவதும் அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி நல்வாழ்வை தருவதும், எல்லா நலன்களையும் தரக்கூடியதுமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருமை பெற்றது தான் மகா சிவராத்திரி.

    • கோவில் தரிசனம் கோடி புண்ணியம்.
    • மகா சிவராத்திரி அன்று 4 கால வேளைகளில் வழிபட வேண்டிய ஆலயங்கள்.

    கோவில் தரிசனம் கோடி புண்ணியம். வீட்டில் இருந்தே சிவராத்திரி அன்று சிவனை வழிபட்டாலும், சிவராத்திரி விழாக்களை நடத்தும் திருக்கோவில்களை தரிசிப்பது கூடுதல் பலனைத் தரும். மகா சிவராத்திரி அன்று 4 கால வேளைகளிலும் வழி படக்கூடிய 4 ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

     தென்குடி திட்டை

    பாவம் போக்கும் சிவராத்திரி அன்று கும்பகோணம்-தஞ்சாவூர் வழியில் உள்ள திட்டைத் திருக்கோவிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது. ஒரு யுக முடிவில் உயிரினங்கள் யாவும் அழிந்தன. உலகு நீரில் மூழ்கியபோது ஒரு திட்டையான இடத்தில் பரமசிவனும் பார்வதியும் வசிஷ்டேஸ்வரர், உலக நாயகியாகத் தோன்றி உலகைக் காத்தனர்.

    அந்த மேட்டுப் பகுதியே திட்டைத் திருத்தலமாகும். இங்கே குரு பகவானுக்கு தனிச் சன்னிதி உள்ளது. இத்தல மூலவர் மீது எப்போதும் நீர் விழுந்து கொண்டிருக்கும். இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரி அன்று முதல் கால பூஜையில் வழிபாடு செய்யலாம். தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தென்குடி திட்டை.

     தேவராயன் பேட்டை

    ஒரு பிரளய காலத்தில், ஒரு அரக்கன் பிரம்மனிடமிருந்து படைப்புத் தொழில் புரிவதற்கான வேதங்களைத் திருடிச்சென்று கடலுக்கு அடியில் மறைத்து விட்டான். திருமால் மச்சாவதாரம் (மீன்) எடுத்து, வேதங்களை மீட்டார். ஆனால் அசுரனைக் கொன்ற தோஷத்தின் காரணமாக அவரால் சுய உருவை அடைய முடியவில்லை.

    திருமால், தேவராயன் பேட்டையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, தோஷம் நீங்கி, சுயஉருவம் பெற்றார். இங்குள்ள மச்சபுரீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரியின் இரண்டாவது கால வேளை பூஜையில் வழிபடலாம். தென்குடி திட்டையில் இருந்து தேவராயன்பேட்டை சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

     பாபநாசம்

    ராவணன், கரன், மாரீசன் போன்ற அரக்கர்களை கொன்றதால், ராமபிரானுக்கு தோஷம் ஏற்பட்டது. ராமேஸ்வரத்தில் வழிபட்டாலும், முழுமையாக பாவம் நீங்கும் வகையில் பாபநாசம் ராமலிங்க சுவாமி கோவிலிலும் ராமபிரான் வழிபாடு செய்தார். இதற்காக அனுமனிடம் ஒரு சிவலிங்கம் கொண்டு வரச் சொன்னார். அனுமன் வர காலதாமதம் ஆனதால், சீதை ஆற்று மணலால் 107 சிவலிங்கம் செய்து, அவற்றிற்கு ராமன் பூஜை செய்து வழிபட்டார்.

    பின்பு அனுமன் கொண்டு வந்த சிவலிங்கமும் அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு, 108 சிவலிங்கங்களுக்கும் பூஜித்ததால், ராமரின் பாவம் முழுமையாக நீங்கியது. இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரியின் மூன்றாம் கால வேளை பூஜையில் பங்கேற்கலாம். தேவராயன்பேட்டையில் இருந்து பாபநாசம் திருத்தலம் சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

     திருவைகாவூர்

    வேடன் ஒருவன், காட்டில் மான் ஒன்றை வேட்டையாட முயன்றான். அந்த மான் தப்பி ஓடி, வில்வவனேஸ்வரர் கோவிலில் தஞ்சம் புகுந்தது. அங்கு தவத்தில் இருந்த முனிவர், மானுக்கு அபயம் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வேடன், முனிவரைத் தாக்க முயன்றான். முனிவர் சிவபெருமானை வணங்க, சிவன் ஒரு புலியை அனுப்பினார். புலி வேடனைத் துரத்தியது. புலிக்குப் பயந்து வில்வ மரத்தின் மீது ஏறினான். அன்றைய தினம் சிவராத்திரி.

    புலி மரத்தின் அடியிலேயே இருந்ததால், தூங்காமல் இருக்க மரத்தில் இருந்து வில்வ இலையை பறித்து கீழே போட்டுக் கொண்டே இருந்தான். வேடன் வில்வ இலையை கீழே போட்ட இடத்தில் சிவலிங்கம் ஒன்று இருந்தது. இதனால் மகா சிவராத்திரி அன்று, 4 கால வேளையிலும் தூங்காமல் இருந்து சிவனை பூஜித்த பலன் அவனுக்கு கிடைத்தது. இந்த நிகழ்வு நடந்த திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி அன்று நான்காம் கால வேளை பூஜையில் பங்கேற்று வழிபடலாம். பாபநாசத்தில் இருந்து திருவைகாவூர் திருத்தலம் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

    • பொங்கல் என்பது அறுவடைத் திருநாள்.
    • சத்குருவின் வழிகாட்டுதலில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இருவேறு சாதனாக்களும் விரதங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    ஆன்மீக பாதையில் பயணிப்பவர்களுக்கு உத்தராயண காலம் என்பது மிகவும் முக்கியமான காலம் . பூமியின் வடக்கு பாகத்தில், சூரியன் பயணிக்கும் 6 மாத காலகட்டத்தை உத்தராயணம் என்று குறிப்பிடுகிறோம்.

    அருளையும் ஞானத்தையும் உள்வாங்கிக் கொள்வதற்கு இது மிகச் சரியான நேரம். அதிலும் குறிப்பாக உத்தராயணத்தின் முதல் பாதி அதாவது மார்ச் மாதம் முடியும் வரை அதிகபட்சமான அருளைப் பெறுவதற்கு மிகச் சிறப்பான நேரம்.

    தட்சிணாயணம் தூய்மைப்படுத்துவதற்கானது. உத்தராயணம் ஞானமடைதலுக்கானது. இது உள்வாங்குதலுக்கான காலம், அருளைப் பெறுவதற்கும் ஞானமடைவதற்கும் உகந்தது, மற்றும் உச்சபட்ச தன்மையை எட்டுவதற்கான காலம் இந்த நேரத்தில் விவசாய அறுவடையும் நடைபெறுகிறது.

    பொங்கல் என்பது அறுவடைத் திருநாள். ஆகவே, இது உணவு தானியங்களை அறுவடை செய்வதற்கான காலம் மட்டுமன்றி, மனித ஆற்றலை அறுவடை செய்வதற்கும் உகந்த காலமாக இருக்கிறது. இப்படிப்பட்ட உத்தராயணத்தின் தொடக்கத்தில், விழிப்புணர்வுடன் அருளை உள்வாங்கும் தன்மையை மக்களிடம் அதிகரிப்பதற்காக ஈஷாவில் குறிப்பிட்ட ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அது தான் சிவாங்கா சாதனா. சத்குருவின் வழிகாட்டுதலில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இருவேறு சாதனாக்களும் விரதங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த சாதானாவில் இருக்கும் பெண்கள் 21 நாட்கள் விரதமிருந்து, மாலை அணிந்து மிக விசேஷமான தைப்பூச தினத்தன்று தேவி லிங்கபைரவியை தரிசித்து, தொழுது விரதத்தை பூர்த்தி செய்வார்கள். ஆண்களோ, 42 நாட்கள் விரதமிருந்து மஹாசிவராத்திரி இரவில் வெள்ளியங்கிரி மலையில் யாத்திரை செய்து மறுநாள் காலை தியானலிங்க வளாகத்தில் விரதத்தை நிறைவு செய்வார்கள். இந்த வாய்ப்பு அருள் தேடும் அனைவருக்கும்– ஈஷாவில் வகுப்பு செய்தோர், செய்யாதவர், எல்லோருக்கும் வழங்கப்படுகிறது.

    சிவாங்கா சாதனாவின் அடுத்த தீட்சை குறித்த கூடுதல் தகவல்களுக்கு +9183000 83111 என்ற எண்ணையும், info@shivanga.org என்கிற மின்னஞ்சலையும் தொடர்பு கொள்ளலாம் மேலும் சிவாங்கா சாதனாவில் பங்கேற்ற தன்னார்வலர்கள் ஆதியோகி ரத யாத்திரையிலும் பங்கேற்று வருகின்றனர். ஆதியோகி ரதயாத்திரையானது தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளது. இது மார்ச் 8 ஆம் தேதி மஹாசிவராத்திரி அன்று கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது .
    • ரதம் மதுரையை அடுத்து விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு செல்ல உள்ளது.

    மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவையிலிருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் மதுரை வந்தடைந்தது. இந்த ரதம் வரும் 26 - ஆம் தேதி வரை மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் வலம் வர உள்ளது.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு மதுரை செய்தியாளர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் தினேஷ்வர் பங்கேற்று கூறியதாவது:-

    கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது . இதையொட்டி தென்கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான யாத்திரை கோவையிலிருந்து நான்கு ஆதியோகி ரதங்களுடன் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கியது.

    அங்கிருந்து புறப்பட்ட ஒரு ஆதியோகி ரதம் பல்வேறு ஊர்களை கடந்து, 21 ஆம் தேதி இரவு மதுரையை வந்தடைந்தது. இந்த ரதம் திருப்பரங்குன்றம், ஆரப்பாளையம், திருமங்கலம், கூடல் நகர், அலங்காநல்லூர், அழகர் கோவில், மாட்டுத் தாவணி, பிபி குளம், மாசி வீதிகள் மற்றும் தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 26 ஆம் தேதி வரை வலம் வர உள்ளது.

    கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத மக்கள் தங்கள் ஊர்களிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளைப் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது.

    இந்த ரதம் மதுரையை அடுத்து விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு செல்ல உள்ளது.

    கோவையில் இருந்து புறப்பட்ட நான்கு ரதங்களும் ஒவ்வொரு திசையில் பயணித்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வலம் வந்த பின்னர் மஹா சிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடைய உள்ளது. ஆதியோகி திருமேனியுடன் கூடிய இந்த ரதங்கள் தமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் கி.மீ தூரம் பயணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு மஹாசிவராத்திரி விழா பொது மக்கள் கலந்து கொள்ளும் வகையில் மதுரையிலும் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவன் என்றால் மங்களம் என்று பொருள்.
    • சிவராத்திரி என்பது சிவனுக்கான இரவு.

    சிவராத்திரி என்பது சிவனுக்கான இரவு. அந்த சிவராத்திரி ஐந்து வகையாக கூறப்பட்டுள்ளது.

    1. நித்திய சிவராத்திரி:

    ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச, சுக்லபட்ச சதுர்த்தசிகளில் வருவது நித்திய சிவராத்திரி. இது போல் மாதம் இரண்டாக வரும் நித்திய சிவராத்திரியை தொடர்ந்து 24 முறையும் அனுசரிக்க வேண்டும்.

    2. பட்ச சிவராத்திரி:

    தை மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் 13 நாட்கள் ஒரு நேரம் மட்டும் உணவு உண்டு 14-ம் நாளான சதுர்த்தசியில் முழு நேர உபவாசம் இருப்பது பட்ச சிவராத்திரி.

    3. மாத சிவராத்திரி:

    ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் வருவது. சித்திரை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமியில், வைகாசி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில், ஆனி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியில், ஆடி மாதம் கிருஷ்ணபட்ச பஞ்சமியில், ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் புரட்டாசி மாதம் சுக்லபட்ச திரயோதசியில், ஐப்பசி மாதம் சுக்லபட்ச துவாதசியில், கார்த்திகை மாதம் சுக்லபட்ச சப்தமியில், மார்கழி மாதம் சுக்லபட்ச சதுர்த்தசியில், தை மாதம் சுக்லபட்ச திருதியையில், மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில், பங்குனி மாதம் சுக்லபட்ச திருதியையில் வருவது மாத சிவராத்திரி என்றழைக்கப்படும்.

    4. யோக சிவராத்திரி:

    சோமவார நாளன்று (திங்கட்கிழமை) பகல், இரவு முழுவதும் அமாவாசையாக பொருந்தி வந்தால் அது யோக சிவராத்திரி.

    5. மகா சிவராத்திரி:

    பெரும்பாலான சிவராத்திரிகளை கூர்ந்து கவனித்தால் அவை சதுர்த்தசி திதியில் வருவது தென்படும். ஏன் அப்படி? அமாவாசைக்கோ பெளர்ணமிக்கோ முன்பு பதினான்காம் நாளாக வருவது சதுர்த்தசி. அந்த நாள் சிவனுக்குரியது என்பது சாஸ்திரங்கள் கூறும் செய்தியாகும்.

    ஒவ்வொரு தெய்வத்துக்கும் அவரவர்க்கேற்ற திதியை ஒதுக்கி வணங்கும் போது சிவனுக்கு ஒதுக்கப்பட்டது தான் சதுர்த்தசி. இந்த சதுர்த்தசி கிருஷ்ணபட்சமானால் மறுநாள் அமாவாசை அதே சுக்லபட்சமானால் மறுநாள் பெளர்ணமி. தொடக்க முடிவு இரண்டுமே அந்த சிவனால் தான் என்பதை உணர்த்தவே இந்த திதி சிவனுக்காக ஒதுக்கப்பட்டது. சிவன் என்றால் மங்களம் என்று பொருள். ராத்திரி என்றால் இரவு. எனவே மங்களகரமான இரவு என்று மகாசிவராத்திரியை சொல்லலாம்.

    எல்லா வகையான சிவராத்திரிகளிலும் மேலானதும் வருஷம் ஒரு முறை மட்டுமே வருவதும் அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி நல்வாழ்வை தருவதும், எல்லா நலன்களையும் தரக்கூடியதுமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருமை பெற்றது தான் மகா சிவராத்திரி.

    5 வகை சிவராத்திரியையும் அனுஷ்டிக்கலாம். முடியாதவர்கள் அவசியம் வருஷம் ஒருமுறை வரும் மகா சிவராத்திரி அன்றாவது விரதம் இருக்க வேண்டும்.

    மகா சிவராத்திரியின் சிறப்பை வாதூலம் முதலான ஆகமங்களும், சிவபுராணம், கந்தபுராணம், பத்மபுராணம் முதலான புராணங்களும் கூறுகின்றன. சிவராத்திரி ஏன் கொண்டாடப்படுகின்றது என்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

    • திரிசூலத்துக்கு வேத மந்திரங்கள் முழங்க திரிசூல ஸ்நானம் செய்வித்தனர்.
    • அர்ச்சகர்களும், வேத பண்டிதர்களும் புனித நீராடினர்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 11-வது நாளான நேற்று காலை 9 மணியளவில் உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் கேடிக வாகனங்களில் திரிசூலத்துடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் பஞ்சமூர்த்திகளுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    ஆதி தம்பதியர்களுக்கு நடந்த சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவத்தைத் தொடர்ந்து ஜல விநாயகர் கோவில் அருகில் உள்ள வசந்த மண்டபத்தில் பிரதான அர்ச்சகர்கள் தலைமையில் வேத பண்டிதர்கள் கலச ஸ்தாபனம் செய்து சிறப்புப் பூஜைகள் நடத்தினர். அப்போது உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர் போன்ற சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, வசந்த உற்சவத்தை நடத்தினர்.

    மேலும் கோவில் வளாகத்தில் உள்ள திருமஞ்சன கோபுரம் அருகில் சூரிய புஷ்கரணியில் இருந்து புனித நீரை எடுத்து திரிசூலத்துக்கு வேத மந்திரங்கள் முழங்க திரிசூல ஸ்நானம் செய்வித்தனர். அப்போது கோவிலின் பிரதான அர்ச்சகர் தலைமையில் அர்ச்சகர்களும், வேத பண்டிதர்களும் புனித நீராடினர். அதைத்தொடர்ந்து மதியம் 12 மணியளவில் கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது. இரவு சிம்மாசனத்தில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அர்ச்சகரிடம் பட்டு வஸ்திரங்கள், சீர் வரிசை பொருட்களை சமர்ப்பணம் செய்தனர்.
    • இன்று சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அதையொட்டி திருப்பதி தேவஸ்தானம் சார்பாக அறங்காவலர் குழு தலைவரின் மனைவி சொர்ணலதாரெட்டி, முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி. தர்மாரெட்டி ஆகியோர் பட்டு வஸ்திரங்கள், சீர் வரிசை பொருட்களை சமர்ப்பணம் செய்தனர்.

    முன்னதாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு வந்த அவர்களை, அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, நிர்வாக அதிகாரி சாகர்பாபு ஆகியோர் வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

    ஊர்வலம் தொடங்கும் முன் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள தேவாங்குல மண்டபத்தில் அர்ச்சகர்கள் ஏ.வி.தர்மாரெட்டிக்கு தலைப்பாகை கட்டி, தலையில் ஒரு வெள்ளித்தட்டில் பட்டு வஸ்திரங்களை வைத்தனர். ஊர்வலமாக சென்ற அவர்கள் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அர்ச்சகரிடம் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தனர். அவர்களுக்கு கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.

    • சாமி வேடமிட்ட பக்தர்கள் நடனம் ஆடினர்.
    • நாதர் புஷ்கரணியில் தெப்போற்சவம் நடந்தது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை தேேராட்டம் நடந்தது.

    இதனையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவர்களான சிவன்-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. மேள, தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்க பெரிய தேரில் கங்காபவானி சமேத சோமசுந்தரமூர்த்தியும் சிறிய தேரில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் எழுந்தருளினர்.

    தேரோட்டத்தை ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ.பியப்பு.மதுசூதன்ரெட்டி, அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    கோவிலின் நான்கு மாடவீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில்காலை 11.30 மணியில் இருந்து மாலை 3.30 மணிவரை தேர்கள் பவனி வந்தன. தேரோட்டத்தின்போது பக்தர்கள் ஹர ஹர மகாதேவா சம்போ சங்கரா, ஜெய் ஜெய் காளி ஜெய் பத்ர காளி எனப் பக்தி கோஷம் எழுப்பினர்.

    தேர்களுக்கு முன்னால் கேரள செண்டைமேளம், மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. சாமி வேடமிட்ட பக்தர்கள் நடனம் ஆடினர். பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், கோலாட்டமும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

    தேரோட்டத்தின்போது கோவிலின் நான்கு மாடவீதிகளில் திரண்டு இருந்த பக்தர்கள் உப்பு, மிளகினை தேர்கள் மீது வீசி தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    நிறைவாக இரவு நிகழ்ச்சியாக 8 மணியளவில் நாதர் புஷ்கரணியில் தெப்போற்சவம் நடந்தது. தெப்பத்தேரில் எழுந்தருளிய உற்சவர்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    • திருவண்ணாமலை கோவில் ராஜகோபுரம் முன்பு நடந்தது
    • மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு ஏற்பாடு

    திருவண்ணாமலை:

    மகா சிவராத்திரியையொட்டி திருவண்ணாமலை மாவட்ட கிரிவல நாதஸ் வரம், தவில் இசை சங்கம் சார்பில் 41-ம் ஆண்டு இசை விழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு நேற்று நடைபெற்றது.

    சங்கத்தின் தலைவரான நாதஸ் வர கலைமாமணி பிச்சாண்டி தலை மையில் 108 நாதஸ்வர மற்றும் தவில் இசை கலைஞர்களின் இசை விழா நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய இசை விழா, 24 மணி நேரம் நடைபெற்று இன்று அதிகாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

    கவுரவத் தலைவர் பூபாலன், செயலாளர் ஏழுமலை, துணை கவுரவத் தலைவர் முருகேசன், துணை செயலாளர் கார்த்திகேயன், இணை தலைவர் பாலகணேசன் மற்றும் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்று, மங்கல இசை மற்றும் பல்வேறு ராகங்களில் வாசித்தனர். மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றன. இசை விழாவை, அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    • விடிய விடிய ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    • ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தாழம்பூவை சிவனுக்கு வைத்து வழிபடும் நிகழ்வு மற்றும் சிறப்பு தீபராதனை நடந்தது

    திருவண்ணாமலை:

    பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலாகும்.

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. திருமால் மற்றும் பிரம்மன் ஆகிய இருவரில் யார் பெரியவர் என போட்டி வந்த போது, நான் என்ற அகந்தை அடங்கினாலன்றி சிவ பரம்பொருளை காண முடியாது என்ற உண்மையை உலகிற்கும், திருமால் மற்றும் பிரம்மனுக்கு உணர்த்தும் வகையில் தனது அடியையும், முடியையும் யார் கண்டு வருகிறீர்களோ அவரே பெரியவர் என சிவபொருமான் கூறினார்.

    திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியை குடைந்து சென்றும், பிரம்மன் அன்னபட்சியாக உருவெடுத்து முடியைக்காணவும் உயரப்பறந்து சென்றார்.

    இருவரும் பல யூகங்களாக தேடியும் அடியையும், முடியையும் காண முடியாமல் தோல்வி அடைந்ததுடன் திருமால் தனது தவறை உணர்ந்து சிவனிடம் சென்று வழிபட்டார்.

    பிரம்மன் மேலும் பல யுகங்களாக சென்று முடியை காண முடியாத சூழலில் மேலிருந்து கீழே வந்த தாழம்பூவை பொய் சாட்சி சொல்ல வைத்தார்.

    இதனையறிந்த சிவபெருமான் நெருப்பு பிழம்பாக லிங்க வடிவாய் வெளியே வந்து அனைத்து தேவர்களுக்கும் நல்லாசி வழங்கியதுடன் பிரம்மனுக்கு பூலோகத்தில் கோவில்கள் இல்லை என்றும், பொய்சாட்சி கூறிய தாழம்பூ பூஜைக்குப் பயன்படாது என்று சாபம் அளித்து லிங்கோத்பவ மூர்த்தியாக காட்சியளித்தார். இந்த மகா சிவராத்திரி உருவான இடம் திருவண்ணாமலையாகும்.

    மகா சிவராத்தியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் சன்னதி பின்புறம் மேற்குத் திசையில் அமைந்துள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு நள்ளிரவில் 12 மணிக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், ருத்ராட்சம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் ஆராதனைகள் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தாழம்பூவை சிவனுக்கு வைத்து வழிபடும் நிகழ்வு மற்றும் சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது. இந்த சிவராத்திரி விழாவில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு லிங்கோத்பவரை தரிசனம் செய்து வழிபட்டனர்.

    அதிகாலை வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    • மகா சிவராத்திரியை முன்னிட்டு நீலகண்ட ஈஸ்வரன் அவதாரத்தில் ஆஞ்சநேயர் எழுந்தருளினார்.
    • மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்-மதுரை ரோட்டில் வரலாற்று சிறப்பு மிக்க பெத்தவநல்லூர் மாயூரநாதசுவாமி ஆலய வளாகத்தில் ஆதிவழிவிடும் விநாயகர் கோவில் உள்ளது. இங்கு மகாசிவராத்திரியையொட்டி அஷ்ட வரத ஆஞ்சநேயரின் விருப்பத்திற்கு இணங்க அவருடைய தோற்றத்தை சிவபெ ருமானுக்கே அர்ப்பணித்துக் கொண்டு சிவனாகவே காட்சியளித்த நீலகண்ட ஈஸ்வரனின் அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இரவு முழுவதும் சிவலாயங்களில் நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் அஷ்டவரத ஆஞ்சநேயருக்கு சிவன் அவதாரத்தில் சிவராத்திரி பூஜைகள் விடியவிடிய நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அனுமனை வணங்கி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×