search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 times Pooja"

    • சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள்.
    • திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மறுபிறவி கிடையாது.

    1. சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப்பொருளை தருகிறது.

    2. சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்து செல்ல உதவும்.

    3. சூரியன், முருகன், மன்மதன், இந்திரன், எமன், சந்திரன், குபேரன், அக்னி பகவான் ஆகியோர் முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றுள்ளனர்.

    4. சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம்.

    5. எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.

    6. சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவ, சிவ.... என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் நன்மை பெறுவார்.

    7. சிவராத்திரியன்று திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மறுபிறவி கிடையாது.

    8. சிவராத்திரி தினத்தன்று, தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும் தலங்களில் தரிசனம் செய்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம்.

    9. கஞ்சனூரில் ஒரே பிரகாரத்தில் அடுத்தடுத்து 2 தட்சிணாமூர்த்திகள் உள்ளனர். சிவராத்திரி அன்று இவர்களை வழிபட்டால், சிவஞானம் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    10. சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி என்று ஒரு கருத்து உண்டு.

    11. திருவதிகை தலத்தில் உள்ள வீராட்டானேஸ்வரரை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால் ஆணவம், கர்மம், மாயை ஆகிய மூன்றும் நீங்கும்.

    12. பண்டரிபுரத்தில் உள்ள பாண்டு ரங்கன் "சங்கர மற்றும் நாராயண" வடிவம் என்பார்கள். பாண்டுரங்கன் தலையில் கிரீடத்துக்கு பதில் "பாண லிங்கம்" இடம் பெற்றுள்ளது. சிவராத்திரி தினத்தன்று பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்வதில்லை. அவரும் அன்று சிவராத்திரி விரதம் இருப்பதாக சொல்கிறார்கள்.

    13. மகா சிவராத்திரி தினத்தன்று அபிஷேகத்துக்கு உரிய பொருட்களை வாங்கி ஆலயத்துக்கு கொடுப்பவர்கள் பரமானந்த நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம்.

    14. ஊத்துக் கோட்டை அருகில் உள்ள சுருட்டப் பள்ளியில் மட்டுமே சயன கோலத்தில் ஈசன் உள்ளார். சிவராத்திரி தினத்தன்று அங்கு ஈசனை வெள்ளி அங்கியில் தரிசனம் செய்யலாம்.

    15. சிவராத்திரி தினத்தன்று சிவபுராணம், தேவாரம் மற்றும் திருமுறைகள் படிப்பது மிகவும் நல்லது.

    16. திருவைகாவூர் ஈசனை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால், மரண பயம் நீங்கும்.

    17. கருட புராணம், கந்தபுராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் சிவராத்திரி மகிமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

    18. சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவ பூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.

    19. ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா குளியல் செய்த பலனும் தரவல்லது.

    20. சிவராத்திரியன்று கலச பூஜையுடன் லிங்கமும் வைத்து வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்.

    • பரமசிவனைப் போற்றி ஆராதிக்கும் சிறப்பான மாதங்களாகும்.
    • தேய்பிறையின் 14-வது நாள் சதுர்த்தசி திதியில் நிகழ்வதுதான் சிவராத்திரி.

    ராத்திரி என்ற பெயரோடு அழைக்கப்படும் விரதங்களில் சிவனை துதித்து வணங்கப்படும் விரதமே சிவராத்திரியாகும். சிவராத்திரி நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிவராத்திரிகள் பல இருந்தாலும் மாசி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் புண்ணிய தினமே மகாசிவராத்திரி ஆகும். மகேசனைப் போற்றி துதித்து அவன் அருளைப் பெற மகத்துவமிக்க மாதமாக கருதப்படுவது மாசி.

    சிராவணம் (ஆவணி) மற்றும் மாசியும் பரமசிவனைப் போற்றி ஆராதிக்கும் சிறப்பான மாதங்களாகும். அதிலும் மாசி என்ற சொல்லில் பொதிந்துள்ள பொருள் எப்படிப்பட்டது என்று பாருங்கள்.

    மா-இறைவன், சிம்மம், சிம்மராசி என்பதாகும். அசி-இருக்கிறாய். அதாவது இம்மாதம் முழுவதும் ஈசன் சிம்மராசியில் இருந்து அருள்பாலிப்பதால் மகேசனைப் போற்றி துதித்து அவன் ஆசி நாடுகின்ற மாதமாக விளங்குகிறது. மாதந்தோறும் தேய்பிறையின் 14-வது நாள் சதுர்த்தசி திதியில் நிகழ்வதுதான் சிவராத்திரி. அன்று நம் மனதை அலைக்கழிக்கும் மனோகாரகன் என அழைக்கப்படும் சந்திரன் கண்களுக்குத் தென்படாமல் சற்றே குறைய மறைந்தே இருக்கும். நம் மனம் அலை பாயாமல் ஒருமித்து இருப்பதற்கு அன்றைய நாள் சிவதியானம் மேற்கொள்வது மிக அவசியம் என ஞானியர் கூறியிருக்கின்றனர்.

    அப்படி செய்து, பிறவிச் சூழலில் இருந்து விடுபட்டு, சிவ பதவி பெற்றிட, மகேசனை வழிபடும் உன்னத நாள்தான் சிவராத்திரி.

    அம்பிகைக்கு நவ (ஒன்பது) ராத்திரி, அப்பனுக்கு ஓர் இரவு சிவராத்திரி என்பது மக்களிடம் புழங்கும் வழக்காடல் ஆகும். மாதந்தோறும் சிவராத்திரி உண்டு என்றாலும் மாசி மாதத்தில் வருவதே மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது.

    ஊழிக்காலத்துக்குப் பின், பிரபஞ்சத்துக்கு இழந்த சக்தியை அளிப்பதற்காக சிவன், தனக்குள் அதை அடக்கிக் கொள்கிறார். அவ்வாறு உலகம் சிவனிடம் ஒடுங்கிய நாளே 'சிவராத்திரி'. அன்று எல்லாமே சிவன்தான். வேறெதுவம் இல்லை. ஆனால் சிவனை விட்டு என்றுமே எப்போதுமே பிரியாதவளான உமையவள்.

    அன்றைய இரவு நேரத்தில் நான்கு ஜாமங்களிலும் சிவனாரை ஆகம முறைப்படி பூஜித்தாள். பொழுது புலர்ந்ததும் ஈசனை வணங்கிய அம்பிகை "சுவாமி தங்களை நான் பூஜித்த இந்த இரவு, சிவராத்திரி என உங்கள் பெயரால் அழைக்கப்பட வேண்டும்.

    அத்துடன் சிவராத்திரி அன்று சூரிய அஸ்தமனம் முதல், மறுநாள் காலை சூரிய உதயம் வரை தேவர்கள் உள்பட எல்லோரும் தங்களை பூஜிக்க வேண்டும். அப்படி பூஜிப்பவர்களுக்கு சர்வ மங்கலங்களுடன் முக்தியையும் தாங்கள் அருள வேண்டும்" என வரம் பெற்றாள்.

    அவ்வாறு அம்பிகை பூஜை செய்த மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி தினமே மகா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது. அன்று விரதம் இருந்து சிவபெருமானை மனமுருகி வழிபட்டால் குடும்பத்தில் மங்கல காரியங்கள் மளமளவென்று நடைபெறும்.

    இந்துக்களின் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை எண்ணி முழு நாளும் வழிபடும் சிறப்பான விரதம் இந்த சிவராத்திரி ஆகும்.

    அலை பாய்ந்து அவதிப்படும் மனிதனது ஐம்புலன்களும் ஓரிடத்தில் ஒடுங்கி பரமாத்மாவாகிய பரம் பொருளிடம் ஒடுங்கும் இந்த "ராத்திரி" மங்கலமான ஒளி சிந்தும் ராத்திரியாகும். நமது ஐம்புலன்களையும் அடக்கி இறைவனது சிந்தனையோடு இறையன்பில் மூழ்கியிருக்கும் போது இந்த உலகின் இடையூறுகள் நம்மை எதுவும் செய்வதில்லை.

    உலகினில் உள்ள எல்லா பொருட்களுமே மாயையிடம் ஒடுங்கும். அப்படி மகா சக்தியிடம் ஒடுங்கும் காலம் இருள் நிறைந்ததாக இருக்கும். இந்த காலம் மகா பிரளயம் என்று சொல்லப்படுகின்றது. உலகம் எத்தனை காலம் இருக்கின்றதோ அத்தனை காலமும் பிரளயமும் உண்டு". இந்த காலத்தில் தான் உமாதேவி நான்கு காலமும் சிவனைப் பூஜித்தார். முழுமுதற் கடவுளான சிவபெருமான் மனம் இறங்கி உமா தேவியை நோக்கி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

    அதற்கு அம்மையார் நான் தங்களை மனமுவந்து பூஜித்த இந்த நாள் சிவராத்திரி எனப்பெயர் பெற வேண்டும். இந்த தினத்தில் உங்களை முழு மனதோடும் பயபக்தியோடும் பூஜிப்பவர்கள் தங்கள் அருளினால் சகல பாக்கியங்களையும் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். இறைவனும் அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். அதனால் தான் சிவராத்திரி சிவ பூஜைக்கு சிறந்த நாளாகக் கொள்ளப்படுகின்றது.

    சிவராத்திரி பற்றி பல கதைகள் மூலமாகவும் சிவ ராத்திரி மகிமை கூறப்படுகின்றது. சிவராத்திரியன்று நான்கு ஜாமங்களுக்கும் தனித்தனியான பூஜை முறைகள் சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளன. அதை கடைப்பிடித்தால் அனைத்து பலன்களையும் பெற முடியும்.

    முக்கியமாக அன்று நாம் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது அபிஷேகம். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்குறியது. அடுத்தது லிங்கத்துக்குக் குங்குமம் அணி வித்தல். இது நல் இயல்புகளையும் பலன்களையும் குறிக்கிறது.

    மூன்றாவது பல்வேறு வகையான உணவுகளை சிவபெருமானுக்கு நைவேத்தியமாகப் படைக்கப் படுகிறது. இது வாழ்க்கையில் நீண்ட ஆயுளையும் நம்முடைய விருப்பங்களை எல்லாம் நிறைவேற்று வதையும் குறிக்கும். நான்காவதாக செய்ய வேண்டியது தீபம் ஏற்றுதல், இல் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை செல்வங்களையும் நமக்குக் கொடுக்கும். எண்ணெய் விளக்கேற்றுவதால் நமக்கு அவசியமாக தேவைப்படுகிற ஞானத்தை அடைய முடியும். வெற்றிலை வழங்குவதால் உலக இன்பங்களை எல்லாம் அனுபவித்து முழு திருப்தி அடைய முடியும்.

    சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரே ஒரு நேரம் மட்டும் சாப்பிட வேண்டும். சுத்தமான ஆடை உடுத்த வேண்டும். தூய்மையான மனதுடன் சிவனை வணங்க வேண்டும். அன்று இரவு முழுவதும் சிவனை நினைத்து மந்திரம் ஓதியோ, புராணங்களைப் படித்தோ உறங்க வேண்டும்.

    மறு நாள் அதிகாலையில் நல்ல சுத்தமான நீரில் குளித்து சூரிய உதயத்துக்கு முன்னாடி சிவ சிந்தனையுடன் கோவிலுக்கு போய் வணங்க வேண்டும். பகல் முழுவதும் உணவு எதுவும் தேவையில்லை. இரவிலும் மறுமுறை குளித்து, கோவிலில் நான்கு காலங்களிலும் நடைபெறும் பூஜைகளைக் கண்டு சிவனை வணங்கி இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும்.

    அவசியம் நாலுகால பூஜையையும், பார்க்க வேண்டும். அப்படி இல்லா விட்டாலும் கூட கடைசி 14 நாழிகையான லிங்கோத்பவ காலம் முழுவதுமாவது பஞ்சாட்சரம் சொல்லி வழிபட வேண்டியது அவசியம்.

    அபிஷேகம் எதற்காக செய்யப்படுறது?

    தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது. சிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவரோட உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம்.

    வெண்பொங்கல், வடை, அன்னம், தோசை போன்றவற்றை நிவேதனமாகப் படைக்க வேண்டும். சிவனுக்கு மிகவும் விருப்பமானது வில்வம், விலக்க வேண்டியது தாழம்பூ.

    மகா சிவராத்திரி அன்று தான் நான்கு சாமங்களிலும் ருத்திராபிஷேகம் செய்து வில்வத்தால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது இவ்வுலக சுகமும் மறுமையில் கைலாசமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகா சிவராத்திரியன்று ஐந்து சிறப்புகள் இணைந்து வருவது சிறப்பானது.
    • 300 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஜோதிட அதிசயம் என்கிறார்கள்.

    ஜோதிட சாஸ்திரங்களின்படி, இந்த ஆண்டு மகா சிவராத்திரி அன்று சர்வார்த்தி சித்தி யோகம், சிவ யோகம், திருவோண நட்சத்திரம், வெள்ளிக்கிழமை பிரதோஷம், மகா சிவராத்திரி என்ற ஐந்து சிறப்புகள் இணைந்து வருவது சிறப்பானது. இந்த நாளில் மகா சிவராத்திரி வருவது சிறப்பானது. இந்த மகா சிவராத்திரி நாளை தவற விடக்கூடாது. மகா சிவராத்திரி சுக்கிர வார பிரதோஷத்தில் வருவதால் பொருளாதாரச் சிக்கல்கள் தீர்ந்து செல்வ வளம் சேரும். மகா சிவராத்திரியில் விரதமிருந்து கண் விழித்து சிவதியானம் செய்திட எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.

    இந்த ஆண்டு மார்ச் 8-ந் தேதி வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. அன்று இரவு 8 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை 4 கால பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற உள்ளன. ஐந்து யோகங்கள் ஒன்று கூடும் சிறப்பு நிகழ்வும் ஜோதிட ரீதியாக நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இது 300 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஜோதிட அதிசயம் என்கிறார்கள்.

    சிவராத்திரி தினத்தன்று நடராஜர் உருவத்தில் சிவபெருமான் நடனம் ஆடியதாகக் கூறுவார்கள். இந்த நடனத் தோற்றம் இறைவனின் தத்துவத்தை உணர்ந்த பக்தன் உணர்ச்சியால் மெய்மறந்திருப்பதைப் பிரதிபலிக்கிறது.

    விழித்திருப்பது, தூங்குவது, ஆழ்ந்த தூக்கம் ஆகியவற்றை கடந்த நிலை வந்தால், மற்ற உணர்ச்சிகள் இந்த நிலையைப் பாதிக்காது. இந்த நிலையில் நித்தியஆனந்தத்தை உணருவதே உன்னதமானது. அதையே நடராஜரின் தோற்றம் பிரதிபலிக்கிறது. உடல் உள்ளம் ஆகியவற்றைச் சார்ந்த உணர்வுகளும், மனத்தின் எண்ணங்களும், புத்தியின் இயக்கமும் கட்டுப்படும் நிலையே பேரானந்தமானது. இதையே நடராஜரின் மெய் மறந்து கூத்தாடும் நிலையை உணர்த்துகிறது.

    நடராஜர் ஒரு காலை இருத்தியும், ஒரு காலை உயர்த்தியும் ஆடுவது, உலகப் பற்றுகளை மிதித்து அடக்கியும், உன்னதமான ஆன்மீக உணர்வுகளை உயர்த்தியும் வாழ்ந்தாலும் பேரானந்தம் தரும் என்பதை உணர்த்துகிறது. எனவே சிவராத்திரி தினத்தன்று மறக்காமல் நடராஜர் சன்னதியிலும் வழிபாடுகள் செய்ய வேண்டும்.

    • சிவபெருமானை பூஜை செய்வது மோட்சத்தை வழங்கும் என்பது ஐதீகம்.
    • சதுர்த்தசி திதியில் வரும் சிவராத்திரியை, `மகா சிவராத்திரி' என்று வழிபடுகிறோம்.

    சக்தியை வழிபட நவராத்திரி என்னும் ஒன்பது இரவுகள் இருப்பது போல், சிவபெருமானை வழிபாடு செய்ய மகா சிவராத்திரி என்னும் ஒரு நாள் முக்கியமானதாக இருக்கிறது. இந்த நாளில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான 4 ஜாம வேளைகளில் சிவபெருமானை பூஜை செய்வது மோட்சத்தை வழங்கும் என்பது ஐதீகம்.

     மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முதல் கால பூஜை, இரவு 9 மணி முதல் இரவு 12 மணி வரை இரண்டாவது கால பூஜை, இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை மூன்றாம் கால பூஜை, அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை நான்காவது கால பூஜை. இதில் இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை லிங்கோத்பவ காலமாகும். இதை ஞாபகப்படுத்தும் விதமாக சிவாலயங்களில் கர்ப்பக் கிரக (வெளிப்புறத்தில்) கோஷ்டத்தில் லிங்கோத்பவர் மூர்த்தி காட்சி தருவதைப் பார்க்க முடியும்.

    சிவராத்திரியை ஐந்து வகையாக சொல்வார்கள். அது நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி. மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதியில் வரும் சிவராத்திரியை, `மகா சிவராத்திரி' என்று வழிபடுகிறோம்.

    அன்றைய தினம் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருந்து மாலை முதல் மறுநாள் காலை வரை நான்கு யாமங்களிலும் ஸ்ரீ ருத்ர மகா மந்திரங்களை சொல்லி,11 திரவியங்களால் (வாசனை தைலம், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்துவிட்டு, பின்னர் சுத்தமான நீர் கொண்டு அல்லது விபூதி கொண்டு அபிஷேகம் செய்யப்படும்) சிவபெருமானை அபிஷேகித்து வழிபடுவார்கள்.

     மகா சிவராத்திரி பிறந்த கதை

    ஒரு கிருத யுகத்தில் இந்திரன் தனது ஐராவதம் என்னும் யானை மீது ஏறி வந்துகொண்டிருந்தான். அப்போது துர்வாச முனிவர் தனக்கு மகாலட்சுமி அளித்த மாலையை, இந்திரனுக்கு கொடுத்தார். அதை இந்திரன் தன் கையால் வாங்காமல் தன் வாகனமாகிய ஐராவதத்தை வாங்கச் சொல்ல, யானையோ அந்த மாலையை அலட்சியமாக வாங்கி தன் காலில் போட்டு மிதித்தது. இதனால் கோபம் அடைந்த துர்வாச முனிவர், இந்திரன் தன் செல்வத்தை இழந்துபோவான் என்று சபித்தார். அதன்படி செல்வத்தை இழந்துபோன இந்திரன், பிரம்மதேவனிடம் சென்று முறையிட்டு, இழந்த செல்வத்தைப் பெற முயற்சித்தான். இந்திரன் பூஜித்த காலமே மகா சிவராத்திரி என்கிறார்கள்.

     அதே நேரத்தில் இன்னொரு கதையும் சொல்வார்கள். அசுரர்கள் இறந்து விட்டால் அவர்களுக்கு குருவாக இருக்கக்கூடிய சுக்ராச்சாரியார், தனக்கு தெரிந்த `மிருத்த சஞ்ஜீவினி' மந்திரத்தால் அவர்களை பிழைக்க வைத்து விடுவார். எனவே தேவர்கள், தாங்களும் இறக்காமல் இருக்க ஏதாவது வழி உண்டா என்று பிரம்மாவிடம் கேட்டனர். அதற்காக பாற்கடல் உள்ளிருக்கும் அமிர்தத்தை எடுக்க யோசனை கூறப்பட்டது. அதன்படி தேவர்கள் மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைய முற்பட்டனர். ஆனால் தேவர்களால் பாற்கடலைக் கடைய முடியவில்லை. எனவே துணைக்கு அசுரர்களையும் அழைத்தனர். அசுரர்களும், தேவர்களும் சேர்ந்து திருப்பாற் கடலைக் கடைவதாகவும், கிடைக்கும் அமிர்தத்தை பகிர்ந்து கொள்வதாகவும் முடிவு செய்யப்பட்டது.

    வாசுகி பாம்பின் தலைப் பகுதியை அசுரர்களும், வால் பகுதியை தேவர்களும் பிடித்து மந்தார மலையைக் கொண்டு பாற்கடலைக் கடையத் தொடங்கினர். அப்பொழுது பாற்கடலின் உள்ளிருந்து காமதேனு, கற்பக தரு, ஐராவதம், கவுஸ்துபம் என்ற மணி, லட்சுமி தேவி, சந்திரன் போன்றோர் வெளிவர ஆரம்பித்தனர். ஆனால் இவற்றிற்கெல்லாம் முன்பாக ஆலகாலம் என்ற விஷம் வெளிப்பட்டது. இதன் சக்தியால் அனைத்து உலகங்களும் வெப்பத்தில் தகித்தது. இதைக் கண்டு பார்வதி தேவி, பரமேஸ்வரனிடம் முறையிட்டார்.

    உடனே பரமேஸ்வரன் அந்த ஆலகால விஷத்தை எடுத்து உண்டார். உலகத்தையே காத்தருளும் சிவனை, ஆலகால விஷம் என்ன செய்து விட முடியும்? ஆனாலும் மயங்கி சரிவதுபோல் தோற்றம் கொண்டார், நீலகண்டர். இதைக் கண்ட தேவர்கள் பயந்து, "சுவாமி தாங்கள் கண் விழித்து எங்களை காக்க வேண்டும்" என்று பிரார்த்தனை செய்தனர். தேவர்கள் அவ்வாறு சிவபெருமானை பூஜித்த அந்த காலமே `மகா சிவராத்திரி' என்று அழைக்கப்படுகிறது.

     மகா சிவராத்திரி விரத பலன்

    முன்பொரு சமயம் வேதங்கள் நன்றாக கற்ற ஒரு அந்தணர், அவர் இல்லத்தில் கிளிகள் வளர்த்து வந்தார். கூண்டில் அடைத்து கிளி வளர்த்த தோஷத்தாலும், அதன் மேல் உள்ள பற்றாலும், இறக்கும் பொழுது கிளிகளின் நினைவாகவே இறந்தார். மறுஜென்மத்தில் அவர் வேடனாக பிறந்து, காட்டில் வேட்டையாடி தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். ஒரு முறை காட்டில் வேட்டையாட சென்றபோது, வேடனுக்கு எதுவும் கிடைக்கவில்லை.

    எனவே விலங்குகளைத் தேடி நீண்ட தூரம் காட்டிற்குள் சென்றுவிட்டான். இருள் சூழும் நேரம் ஆகிவிட்டதால் காட்டை விட்டு வெளியேற முடியவில்லை. அப்போது தாகம் எடுக்க, வில் -அம்புகளை தரையில் வைத்து விட்டு ஒரு குளத்தில் தண்ணீர் குடிக்க இறங்கினான்.

    அந்த வேளையில் வேடனை தாக்க ஒரு புலி பாய்ந்து வந்தது. இதனால் பதறிப்போன வேடன், வில்-அம்புகளை எடுக்க முடியாமல் அவசரமாக ஓடி பக்கத்தில் இருந்த மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டான். இரவு முழுவதும் புலி அந்த மரத்தை சுற்றி வந்தது.

    வேடனுக்கு கை, கால் எல்லாம் நடுக்கமாக இருந்தது. பசியால் தலை சுற்றியது. எதுவும் சாப்பிடாமல் இரவு முழுவதும் அந்த மரத்தின் கிளைகளைப் பற்றிய படியே இருந்தான். மறுநாள் பொழுது விடிந்ததும் கீழே பார்த்தபோது, புலி அங்கே இல்லை. இதையடுத்து வேடன் கீழே இறங்கி வந்தான். பல ஆண்டுகள் வாழ்ந்த அந்த வேடன் வயது முதிர்ச்சியால் இறந்தான்.

    அந்த வேடனின் ஆன்மா எமலோகம் சென்றது. அங்கே எமனிடம் `இந்த வேடனின் வாழ்வில் பாவங்கள் எதுவும் இல்லை' என்று சித்திரகுப்தன் கூறினார். தன் வாழ்நாளில் பல மிருகங்களை வேட்டையாடிய வேடனின் பாப கணக்கில் எதுவும் இல்லை என்றது, எமதர்மனுக்கு அதிர்ச்சியை அளித்தது.

    வேடன் செய்த புண்ணியம் என்ன என்று பார்க்க, முன்பு புலிக்கு பயந்து வேடன் ஏறி அமர்ந்தது, வில்வ மரம் ஆகும். அன்றைய தினம் மகா சிவராத்திரி. பயத்தில் கைகள் நடுங்க கிளைகளைப் பற்றி இருந்ததால், அந்த நடுக்கத்தில் வில்வ இலைகள் உதிர்ந்து கீழே விழுந்தன.

    வில்வ இலைகள் விழுந்த இடத்தில் ஒரு பழமையான சிவலிங்கம் மண்ணில் புதைந்திருந்தது. அந்த சிவலிங்கத்தின் மீது வில்வ இலைகள் விழுந்தன. மகா சிவராத்திரி அன்று சாப்பிடாமல், வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சனை செய்த புண்ணியம் வேடனுக்கு கிடைத்தது என்பதை எமதர்மனும், சித்திரகுப்தனும் அறிந்தனர். வாழ்நாள் முழுவதும் செய்த பாவங்களை கூட போக்கும் தன்மை கொண்டது, மகா சிவராத்திரி வழிபாடு.

    மகா சிவராத்திரி அன்று உபவாசம் இருத்தல் (சாப்பிடாமல் இருப்பது), பூஜை செய்வது, தூங்காது இருத்தல் ஆகியவை முக்கியமானவை. சிவராத்திரி அன்று உணவு தவிர்க்க முடியாதவர்கள், பால், பழம், வேகவைத்த பொருள் சாப்பிட்டு உபவாசம் இருக்கலாம். பகலிலும், இரவிலும் தூங்காமல் இருப்பது, புண்ணியத்தை தரும் சிவலிங்கத்தை பூஜிப்பது, சுவாமியை சிவாலயம் சென்று தரிசிப்பது மிக விசேஷமானது. 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி தொடங்கி 9-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணி வரை சிவராத்திரி தினம். அன்றைய தினம் இரவு கண் முழிப்பது மிக அவசியம். விளக்கேற்றுவதும், அபிஷேகப் பொருட்கள் கொடுப்பதும் மிகுந்த புண்ணியத்தை தரும்.

    மகா சிவராத்திரியில் சொல்ல வேண்டிய மந்திரம்

    அரிதிலும் அரிதான அனைவரும் ஜெபிக்க வேண்டிய மோட்சத்தைத் தரும் சிவ பஞ்சாட்சர மகா மந்திரம், 'ஓம் நமசிவாய'. இந்த மந்திரத்தை நம் சக்திக்கேற்றபடி 108 அல்லது 1008 முறை மகா சிவராத்திரி அன்று ஜெபிக்கலாம். சக்தி பஞ்சாட்சரி மந்திரம், `ஓம் ஹ்ரீம் நமசிவாய'. இதனையும் தங்களின் சக்திக்கேற்ப ஜெபிக்கலாம்.

    ஸ்ரீ குரு தாரக பஞ்சாட்சரி மந்திரம், 'ஓம் ஓங்காராய நம சிவாய, ஓம் நகாராய நமசிவாய, ஓம் மகாராய நமசிவாய, ஓம் சிகாராய நமசிவாய, ஓம் வகாராய நமசிவாய, ஓம் யகாராய நமசிவாய, ஓம் நம ஸ்ரீகுருதேவாய பரம புருஷாய ஸர்வ தேவதா வசீகராய ஸர்வாரிஷ்ட விநாசாய ஸர்வ துர்மந்த்ர ச்சேதனாய த்ரைலோக்யம் வசமானய ஸ்வாஹா' என்ற மந்திரத்தையும் உச்சரிக்கலாம்.

    • கோவில் தரிசனம் கோடி புண்ணியம்.
    • மகா சிவராத்திரி அன்று 4 கால வேளைகளில் வழிபட வேண்டிய ஆலயங்கள்.

    கோவில் தரிசனம் கோடி புண்ணியம். வீட்டில் இருந்தே சிவராத்திரி அன்று சிவனை வழிபட்டாலும், சிவராத்திரி விழாக்களை நடத்தும் திருக்கோவில்களை தரிசிப்பது கூடுதல் பலனைத் தரும். மகா சிவராத்திரி அன்று 4 கால வேளைகளிலும் வழி படக்கூடிய 4 ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

     தென்குடி திட்டை

    பாவம் போக்கும் சிவராத்திரி அன்று கும்பகோணம்-தஞ்சாவூர் வழியில் உள்ள திட்டைத் திருக்கோவிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது. ஒரு யுக முடிவில் உயிரினங்கள் யாவும் அழிந்தன. உலகு நீரில் மூழ்கியபோது ஒரு திட்டையான இடத்தில் பரமசிவனும் பார்வதியும் வசிஷ்டேஸ்வரர், உலக நாயகியாகத் தோன்றி உலகைக் காத்தனர்.

    அந்த மேட்டுப் பகுதியே திட்டைத் திருத்தலமாகும். இங்கே குரு பகவானுக்கு தனிச் சன்னிதி உள்ளது. இத்தல மூலவர் மீது எப்போதும் நீர் விழுந்து கொண்டிருக்கும். இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரி அன்று முதல் கால பூஜையில் வழிபாடு செய்யலாம். தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தென்குடி திட்டை.

     தேவராயன் பேட்டை

    ஒரு பிரளய காலத்தில், ஒரு அரக்கன் பிரம்மனிடமிருந்து படைப்புத் தொழில் புரிவதற்கான வேதங்களைத் திருடிச்சென்று கடலுக்கு அடியில் மறைத்து விட்டான். திருமால் மச்சாவதாரம் (மீன்) எடுத்து, வேதங்களை மீட்டார். ஆனால் அசுரனைக் கொன்ற தோஷத்தின் காரணமாக அவரால் சுய உருவை அடைய முடியவில்லை.

    திருமால், தேவராயன் பேட்டையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, தோஷம் நீங்கி, சுயஉருவம் பெற்றார். இங்குள்ள மச்சபுரீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரியின் இரண்டாவது கால வேளை பூஜையில் வழிபடலாம். தென்குடி திட்டையில் இருந்து தேவராயன்பேட்டை சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

     பாபநாசம்

    ராவணன், கரன், மாரீசன் போன்ற அரக்கர்களை கொன்றதால், ராமபிரானுக்கு தோஷம் ஏற்பட்டது. ராமேஸ்வரத்தில் வழிபட்டாலும், முழுமையாக பாவம் நீங்கும் வகையில் பாபநாசம் ராமலிங்க சுவாமி கோவிலிலும் ராமபிரான் வழிபாடு செய்தார். இதற்காக அனுமனிடம் ஒரு சிவலிங்கம் கொண்டு வரச் சொன்னார். அனுமன் வர காலதாமதம் ஆனதால், சீதை ஆற்று மணலால் 107 சிவலிங்கம் செய்து, அவற்றிற்கு ராமன் பூஜை செய்து வழிபட்டார்.

    பின்பு அனுமன் கொண்டு வந்த சிவலிங்கமும் அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு, 108 சிவலிங்கங்களுக்கும் பூஜித்ததால், ராமரின் பாவம் முழுமையாக நீங்கியது. இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரியின் மூன்றாம் கால வேளை பூஜையில் பங்கேற்கலாம். தேவராயன்பேட்டையில் இருந்து பாபநாசம் திருத்தலம் சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

     திருவைகாவூர்

    வேடன் ஒருவன், காட்டில் மான் ஒன்றை வேட்டையாட முயன்றான். அந்த மான் தப்பி ஓடி, வில்வவனேஸ்வரர் கோவிலில் தஞ்சம் புகுந்தது. அங்கு தவத்தில் இருந்த முனிவர், மானுக்கு அபயம் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வேடன், முனிவரைத் தாக்க முயன்றான். முனிவர் சிவபெருமானை வணங்க, சிவன் ஒரு புலியை அனுப்பினார். புலி வேடனைத் துரத்தியது. புலிக்குப் பயந்து வில்வ மரத்தின் மீது ஏறினான். அன்றைய தினம் சிவராத்திரி.

    புலி மரத்தின் அடியிலேயே இருந்ததால், தூங்காமல் இருக்க மரத்தில் இருந்து வில்வ இலையை பறித்து கீழே போட்டுக் கொண்டே இருந்தான். வேடன் வில்வ இலையை கீழே போட்ட இடத்தில் சிவலிங்கம் ஒன்று இருந்தது. இதனால் மகா சிவராத்திரி அன்று, 4 கால வேளையிலும் தூங்காமல் இருந்து சிவனை பூஜித்த பலன் அவனுக்கு கிடைத்தது. இந்த நிகழ்வு நடந்த திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி அன்று நான்காம் கால வேளை பூஜையில் பங்கேற்று வழிபடலாம். பாபநாசத்தில் இருந்து திருவைகாவூர் திருத்தலம் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

    ×