search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிவராத்திரியில் வழிபட வேண்டிய ஆலயங்கள்
    X

    சிவராத்திரியில் வழிபட வேண்டிய ஆலயங்கள்

    • கோவில் தரிசனம் கோடி புண்ணியம்.
    • மகா சிவராத்திரி அன்று 4 கால வேளைகளில் வழிபட வேண்டிய ஆலயங்கள்.

    கோவில் தரிசனம் கோடி புண்ணியம். வீட்டில் இருந்தே சிவராத்திரி அன்று சிவனை வழிபட்டாலும், சிவராத்திரி விழாக்களை நடத்தும் திருக்கோவில்களை தரிசிப்பது கூடுதல் பலனைத் தரும். மகா சிவராத்திரி அன்று 4 கால வேளைகளிலும் வழி படக்கூடிய 4 ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    தென்குடி திட்டை

    பாவம் போக்கும் சிவராத்திரி அன்று கும்பகோணம்-தஞ்சாவூர் வழியில் உள்ள திட்டைத் திருக்கோவிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது. ஒரு யுக முடிவில் உயிரினங்கள் யாவும் அழிந்தன. உலகு நீரில் மூழ்கியபோது ஒரு திட்டையான இடத்தில் பரமசிவனும் பார்வதியும் வசிஷ்டேஸ்வரர், உலக நாயகியாகத் தோன்றி உலகைக் காத்தனர்.

    அந்த மேட்டுப் பகுதியே திட்டைத் திருத்தலமாகும். இங்கே குரு பகவானுக்கு தனிச் சன்னிதி உள்ளது. இத்தல மூலவர் மீது எப்போதும் நீர் விழுந்து கொண்டிருக்கும். இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரி அன்று முதல் கால பூஜையில் வழிபாடு செய்யலாம். தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தென்குடி திட்டை.

    தேவராயன் பேட்டை

    ஒரு பிரளய காலத்தில், ஒரு அரக்கன் பிரம்மனிடமிருந்து படைப்புத் தொழில் புரிவதற்கான வேதங்களைத் திருடிச்சென்று கடலுக்கு அடியில் மறைத்து விட்டான். திருமால் மச்சாவதாரம் (மீன்) எடுத்து, வேதங்களை மீட்டார். ஆனால் அசுரனைக் கொன்ற தோஷத்தின் காரணமாக அவரால் சுய உருவை அடைய முடியவில்லை.

    திருமால், தேவராயன் பேட்டையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, தோஷம் நீங்கி, சுயஉருவம் பெற்றார். இங்குள்ள மச்சபுரீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரியின் இரண்டாவது கால வேளை பூஜையில் வழிபடலாம். தென்குடி திட்டையில் இருந்து தேவராயன்பேட்டை சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    பாபநாசம்

    ராவணன், கரன், மாரீசன் போன்ற அரக்கர்களை கொன்றதால், ராமபிரானுக்கு தோஷம் ஏற்பட்டது. ராமேஸ்வரத்தில் வழிபட்டாலும், முழுமையாக பாவம் நீங்கும் வகையில் பாபநாசம் ராமலிங்க சுவாமி கோவிலிலும் ராமபிரான் வழிபாடு செய்தார். இதற்காக அனுமனிடம் ஒரு சிவலிங்கம் கொண்டு வரச் சொன்னார். அனுமன் வர காலதாமதம் ஆனதால், சீதை ஆற்று மணலால் 107 சிவலிங்கம் செய்து, அவற்றிற்கு ராமன் பூஜை செய்து வழிபட்டார்.

    பின்பு அனுமன் கொண்டு வந்த சிவலிங்கமும் அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு, 108 சிவலிங்கங்களுக்கும் பூஜித்ததால், ராமரின் பாவம் முழுமையாக நீங்கியது. இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரியின் மூன்றாம் கால வேளை பூஜையில் பங்கேற்கலாம். தேவராயன்பேட்டையில் இருந்து பாபநாசம் திருத்தலம் சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

    திருவைகாவூர்

    வேடன் ஒருவன், காட்டில் மான் ஒன்றை வேட்டையாட முயன்றான். அந்த மான் தப்பி ஓடி, வில்வவனேஸ்வரர் கோவிலில் தஞ்சம் புகுந்தது. அங்கு தவத்தில் இருந்த முனிவர், மானுக்கு அபயம் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வேடன், முனிவரைத் தாக்க முயன்றான். முனிவர் சிவபெருமானை வணங்க, சிவன் ஒரு புலியை அனுப்பினார். புலி வேடனைத் துரத்தியது. புலிக்குப் பயந்து வில்வ மரத்தின் மீது ஏறினான். அன்றைய தினம் சிவராத்திரி.

    புலி மரத்தின் அடியிலேயே இருந்ததால், தூங்காமல் இருக்க மரத்தில் இருந்து வில்வ இலையை பறித்து கீழே போட்டுக் கொண்டே இருந்தான். வேடன் வில்வ இலையை கீழே போட்ட இடத்தில் சிவலிங்கம் ஒன்று இருந்தது. இதனால் மகா சிவராத்திரி அன்று, 4 கால வேளையிலும் தூங்காமல் இருந்து சிவனை பூஜித்த பலன் அவனுக்கு கிடைத்தது. இந்த நிகழ்வு நடந்த திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி அன்று நான்காம் கால வேளை பூஜையில் பங்கேற்று வழிபடலாம். பாபநாசத்தில் இருந்து திருவைகாவூர் திருத்தலம் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

    Next Story
    ×