search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lorry strike"

    லாரிகள் வேலை நிறுத்தத்தால் புதுவை காய்கறி வியாபாரிகள் பலர் தங்கள் சொந்த வாகனங்களிலும், மினி வேன்களிலும் காய்கறிகளை எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    பெட்ரோல், டீசல் விலையை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டுவர வேண்டும்.

    ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்தில் புதுவை மாநில லாரி உரிமையாளர்களும் பங்கேற்றுள்ளனர். இன்று 6-வது நாளாக லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தால் புதுவையில் இயங்கும் 3 ஆயிரம் லாரிகள் இயங்கவில்லை. இவை அனைத்தும் மேட்டுப்பாளையம் போக்குவரத்து நகரிலும், கோரிமேடு எல்லைப்பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    புதுவைக்கு பெங்களூர், வேலூர், மேட்டுப்பாளையம், சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து காய்கறிகள் அதிகளவில் வரும். லாரி வேலை நிறுத்தத்தால் புதுவை காய்கறி வியாபாரிகள் பலர் தங்கள் சொந்த வாகனங்களிலும், மினி வேன்களிலும் காய்கறிகளை எடுத்து வருகின்றனர். இதனால் புதுவையில் காய்கறிகளுக்கு பெரியளவில் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

    ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் ஒரு சில காய்கறிகளுக்கு மட்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மினிவேன் மூலம் காய்கறிகள் மட்டுமின்றி பழங்கள், மளிகை பொருட்கள் ஆகியவையும் தடையின்றி கொண்டுவரப்படுகிறது. #tamilnews
    லாரிகள் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக அரசு பஸ்களில் இலவசமாக காய்கறிகளை எடுத்து செல்லலாம் என நீலகிரி கலெக்டர் அறிவித்துள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, லாரிகள் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக விவசாயிகள் தங்கள் பகுதிகளிலிருந்து விவசாய பொருட்களை சந்தைக்கு தினமும் எடுத்துச் செல்லவும் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பேருந்தில் எவ்வித கட்டணமுமின்றி எடுத்துச் செல்லலாம். கூடுதல் விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல அரசு பஸ் இதற்காக தனியாக வாடகைக்கு வழங்கப்படும் எனவும், மேலும் விவரங்களுக்கு அரசு போக்குவரத்துறையை தொடர்பு கொள்ளலாம் என அதில் அறிவித்துள்ளார். #tamilnews
    லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பதால் மதுரை மார்க்கெட்டுகளில் காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் விலை குறைந்துள்ளது. #LorryStrike
    மதுரை:

    நாடு முழுவதும் இன்று 6-வது நாளாக லாரிகள் ஸ்டிரைக் நீடித்து வருகிறது. இதனால் சரக்குகளை வெளிமாநிலத்துக்கு அனுப்புவதில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் 2,500-க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படாததால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவாசிய பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது.

    நாட்டு காய்கறிகள் வேன், சரக்கு ஆட்டோக்கள் முலம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய், மல்லி, கறிவேப்பிலை உள்ளிட்ட காய்கறிகள் வெளி மாநிலத்துக்கு அனுப்ப முடியாத தால் மார்க்கெட்டுகளில் குவிந்து கிடக்கிறது. இதனால் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

    ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மதுரைக்கு எடுத்துவரப்படும் பச்சை மிளகாய் வரத்து இல்லாததால் கடந்த வாரம் கிலோ ரூ. 25-க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் இன்று கிலோவுக்கு ரூ. 30 உயர்ந்து 55-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பதால் அத்தியவாசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  #LorryStrike



    தருமபுரி அருகே லாரிகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Lorrystrike

    தருமபுரி:

    லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இன்று 6-வது நாளாக அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 4500 லாரிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்தநிலையில் தருமபுரி வழியாக போராட்டத்தை மீறி இயக்கப்படும் லாரிகளை வழிமறித்து ஆதரவும் திரட்டி வந்தனர். நேற்று கோவையில் இருந்து வேலூருக்கு மோட்டார் சைக்கிளின் உதிரிபாகங்களை ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியை வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்த பெருமாள் என்பவர் ஒட்டி வந்தார்.

    லாரி தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பொன்னேரி என்ற பகுதிக்கு வந்தபோது திடீரென்று மர்ம நபர்கள் சிலர் கல்லை எடுத்து லாரியின் மீது வீசினர். இதில் டிரைவர் பெருமாள் மீது கல் விழுந்து அவரது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அவர் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மீண்டும் லாரியை எடுத்து கொண்டு சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

     


    இதுபோன்று ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து கேரளாவுக்கு அரிசி பாரம் ஏற்றி வந்த லாரியை நெல்லூரைச் சேர்ந்த சின்னா என்பவர் ஓட்டிவந்தார். லாரி தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை புறவடை பகுதிக்கு நேற்று மாலை வந்த போது மர்ம நபர்கள் சிலர் கல்லை எடுத்து லாரியின் மீது வீசினர். இதில் லாரியின் முன்பக்க கண்காடி உடைந்தது.

    குஜராத்தில் இருந்து சேலத்தை நோக்கி இரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை குஜராத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ஓட்டிவந்தார். அந்த லாரி அதியமான்கோட்டை புறவடை அருகே வந்தபோது மர்மநபர்கள் கல் வீசினர். இதில் லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

    இதுபோன்று ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மொய்னுதீன் (22) என்பவர் பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு கார்களை ஏற்றி சென்ற லாரி அதியமான்கோட்டை புறவடை அருகே வந்தபோது மர்ம நபர்கள் கல் எடுத்து வீசியதில் வண்டியின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

    வேலை நிறுத்த போராட்டத்தை மீறி செயல்படும் லாரிகள் மீது இதுபோன்று தாக்குதல் நடைபெறுகிறதா? என்று கோணத்தில் அதியமான் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    அதியமான்கோட்டை அருகே தொடர்ந்து 3 லாரிகளில் மர்ம நபர்கள் கல்வீசி சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் லாரி ஸ்டிரைக் 6-வது நாளாக நீடித்து வருவதால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். #LorryStrike
    நாமக்கல்:

    டீசல் விலை, சுங்கக்கட்டணம் 3-ம் நபர் விபத்து, காப்பீட்டு பிரீமியம் உயர்வு போன்றவற்றை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம், இன்று 6-வது நாளாக நீடித்து வருகிறது.

    இதில் தமிழகத்தில் உள்ள 4½ லட்சத்துக்கும் அதிகமான லாரிகள் பங்கேற்று உள்ளதால் சரக்கு போக்குவரத்து அடியோடு முடங்கியுள்ளது. மார்க்கெட்டுகள், லாரி புக்கிங் ஆபீசுகளில் பொருட்கள் மலைபோல் தேங்கி உள்ளது.

    இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்த ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    நாமக்கல்லில் சரக்கு ரெயில் மூலம் வந்த ரேசன் அரிசி, மக்காச்சோளம் மூட்டைகளையும் இறக்காமல் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மற்றொரு பிரிவினர் அந்த சரக்குகளை இறக்க முயன்றனர். இதற்கு நாமக்கல் லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் லாரிகளில் லோடு ஏற்றிய நிலையில் ரெயில்வே ஸ்டேசனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.



    6-வது நாளாக ஸ்டிரைக் நீடித்ததால் பெட்ரோல் பங்குகளில் டீசல் விற்பனை சரிந்துள்ளது. இதனால் நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் தினமும் 80 சதவீதம் டீசல் விற்பனை குறைந்துள்ளது.

    இது குறித்து நாமக்கல் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறுகையில், தினமும் 30 ஆயிரம் லிட்டர் டீசல் விற்பனை ஆகும். தற்போது தினமும் 8 ஆயிரம் மட்டுமே விற்பனை ஆகிறது. இதனால் எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதுடன், மத்திய-மாநில அரசுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறியதாவது:-

    லாரி ஸ்டிரைக் 6-வது நாளாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசு இதுவரை பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை. இது மெத்தன போக்கை காட்டுகிறது. இந்த ஸ்டிரைக்கால் லாரி உரிமையாளர்களுக்கு ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு 2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் லாரி தொழிலை நம்பி இருக்கும் டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொடர் போராட்டத்தால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் அத்தியாவசிய பொருள்கள் வரத்து குறைந்துள்ளதால் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்படும். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். ஸ்டிரைக் குறித்து அகில இந்திய மோட்டார் காரங்கிரஸ் மாநில நிர்வாகிகளை அழைத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #LorryStrike
    பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுப்பள்ள நிலையில் கடலூர் உழவர்சந்தைக்கு அரசு பஸ்கள் மூலம் நேற்று முதல் காய்கறிகள் வந்தது.
    கடலூர்:

    பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்கவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 6-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டம் நீடிக்கிறது.

    கடலூர் மாவட்டத்திலும் சுமார் 7 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதனால் வர்த்தகம் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் உற்பத்தியான பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்ட செல்ல முடியவில்லை. இதனால் பல தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன.

    கடலூர் மாவட்டத்துக்கு கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து அரிசி, பருப்பு, வெங்காயம், காய்கறிகள், பழங்கள் லாரிகளில் கொண்டுவரப்படும். லாரிகள் ஓடாததால் வெளி மாநிலங்களில் இருந்துவரும் காய்கறிகள் வரத்து அடியோடு நின்றது.

    இதைத்தொடர்ந்து கடலூர் உழவர்சந்தைக்கு அரசு பஸ்களில் நேற்று முதல் காய்கறிகள் வந்திறங்கின. எம்.புதூர், எஸ்.புதூர், வடலூர் போன்ற பகுதிகளில் இருந்து அரசு பஸ்களில் காய்கறிகள், வாழைத்தார்கள், பழங்கள் கொண்டுவரப்பட்டன.

    விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்து 500 லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.

    சென்னை கோயம்பேடு, ஒட்டன்சத்திரம், திண்டுக்கள் போன்ற பகுதிகளில் இருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு லாரிகளில் காய்கறிகள் கொண்டுவரப்படும். லாரி ஸ்டிரைக் காரணமாக காய்கறிகள் எதுவும் வரவில்லை. இதனால் காய்கறிகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

    மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்புகள் லாரிகள் மூலம் கேரளா, ஆந்திரா மாநிலங்களுக்கும் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். லாரி ஸ்டிரைக் காரணமாக மரக்காணம் பகுதியில் உப்புகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் டன் உப்புகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

    லாரிகள் ஓடாததால் உப்பளத்தில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். வேலை நிறுத்தம் காரணமக விழுப்புரம் மாவட்டத்தில் லாரி டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்களும் என 20 ஆயிரத்தும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    லாரி ஸ்டிரைக் தொடர்ந்து நீடிப்பதால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு அபாயம் ஏற்பட்டுள்ளது.
    லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலியால் ஈரோடு மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் இன்று(புதன்கிழமை)முதல் தங்களது உற்பத்தியை நிறுத்தி உள்ளனர். #LorryStrike

    ஈரோடு:

    லாரி உரிமையாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20-ந் தேதி முதல் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு மாவட்டத்திலும் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதனால் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் முடங்கியுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் பிரதான தொழிலாக ஜவுளித் தொழில் உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் இருந்து மேற்கு வங்காளம் கொல்கத்தா, ராஜஸ்தான் மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களுக்கு அதிகளவில் ஜவுளி துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

    லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக பலகோடி மதிப்பிலான ஜவுளிகள் குடோன்களில் தேக்கம் அடைந்து வருகின்றன.

    இதனை அடுத்து ஈரோடு மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் இன்று(புதன்கிழமை) முதல் தங்களது உற்பத்தியை நிறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் கூறியதாவது,-

    ஈரோட்டில் மாணிக்கம்பாளையம் வீரப்பன்சத்திரம், நாராயண வலசு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்ப்பட்டு வருகின்றன.

    இங்கு தினமும் ரூ.6 கோடி மதிப்பில் 20 லட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து நாட்களாக ரூ. 35 கோடி மதிப்பிலான துணிகளை வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. எனவே லாரிகள் வேலை நிறுத்தம் முடியும்வரை விசைத்தறி உற்பத்தியை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.

    இவர் அவர்கள் கூறினர்.

    தமிழக அரசின் இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டத்திற்கு ஈரோடு மாவட்டத்தில் இருந்து தான் அதிகளவில் வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. #LorryStrike

    6-வது நாளாக ஸ்டிரைக் நீடிப்பதால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ரூ.2 ஆயிரம் கோடி சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளது. #LorryStrike

    கோவை:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண் டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் 6-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. இதனால் கோவையில் இருந்து கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அனுப்பப்படும் காய்கறிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகளில் அனுப்பப்படும் சிமெண்ட், என்ஜினீயரிங் பொருட்கள் என ரூ.1000 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.

    ரெயில் மூலம் பார்சல்கள் அனுப்புவதால் ரெயில் நிலைய பிளாட்பார்ம்களில் சரக்குகள் குவிந்து கிடக்கிறது. மேட்டுப்பாளையம் காய்கறி மையத்தில் 110 டன் முட்டை கோஸ் தேக்கம் அடைந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    நாங்கள் தொழில் செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதால் 3 மாதத்துக்கு முன்பு வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து கடந்த 20-ந் தேதி தொடங்கினோம். ஆனால் மத்திய அரசு எங்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை.


    எங்களது அத்தியாவசிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நாளுக்கு நாள் ஆதரவு அதிகரிக்கிறது. எங்களுக்கு ஆதரவாக டீசல், பெட்ரோல் ஏற்றி செல்லும் லாரிகளும் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. போராட்டம் தொடர்வதால் எங்களுக்கு இதுவரை ரூ.200 கோடி நஷ்டமும், அரசுக்கு ரூ.1000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறி வருகிறது. எனவே மத்திய அரசு உரியமுறையில் பேச்சு வார்த்தை நடத்த முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர் சங்கத்தினர் இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் கலிய பெருமாள், செயலாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் ரூ.400 கோடி மதிப்புள்ள பனியன் தேக்கம் அடைந்துள்ளது. காங்கேயத்தில் தேங்காய் எண்ணெய், கொப்பரை உற்பத்தி ரூ.100 கோடிக்கும், அவினாசியில் ரூ.10 கோடி மதிப்புள்ள காடாத்துணி,

    அனுப்பர்பாளையத்தில் பாத்திரங்கள் ரூ.200 கோடிக்கும், ஊத்துக்குழி வெண்ணை, பல்லடத்தில் ரூ.25 கோடிக்கு கறிக்கோழிகள் என மாவட்டம் முழுவதும் ரூ.1000 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.

    இதே போல நீலகிரி மாவட்டத்தில் காய்கறிகள் தேங்கி அழுகி வருகின்றன. ரூ.30 கோடி அளவுக்கு தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrike

    லாரிகள் ஸ்டிரைக்கால் அத்தியாவசிய பொருட்கள் எவ்வித தங்குதடையுமின்றி பொதுமக்களுக்கு கிடைத்திட அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் லாரிகள் பொது வேலை நிறுத்தத்தினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்தார்.

    லாரி ஸ்டிரைக்யையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தை அலுவலர்களும் விவசாயிகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி உற்பத்தி செய்யும் அனைத்து காய்கறிகளையும் உழவர் சந்தைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யவேண்டும். அதே போன்று அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

    திருப்பூர் மாவட்டத்திற்கு மகாராஷ்ரா மாநிலத்திலிருந்து வரும் வெங்காயத்தை போலீஸ் கண்காணிப்புடன் கொண்டு வர வேளாண் வணிகத்துறை ஏற்பாடு செய்யவேண்டும். வேளாண் துணை இயக்குநர், வேளாண் வணிகம், தன்வசம் உள்ள அரசுத்துறை வாகனங்களை நீலகிரியிலிருந்து மலைக்காய்கறிகளை தங்குடையின்றி திருப்பூர் மாவட்டத்திற்கு கொண்டுவர ஏற்பாடு செய்து தரவேண்டும். உழவர் சந்தை நிர்வாக அலுவலர்கள் கூடுதல் வாகனம் தேவைப்படின் உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலரை தொடர்பு கொண்டு விவசாயிகள் காய்கறிகளை சிரமமின்றி கொண்டுவர பஸ் ஏற்பாடு செய்து கொடுத்திட வேண்டும்.

    மேலும், பொது விநியோக திட்டத்தின்கீழ் அத்தியாவசிய பொருட்கள் வரத்து மற்றும் விநியோகத்திற்கு கொண்டு செல்லுதல் ஆகிய பணிகள் தங்கு தடையின்றி நடைபெற்று வருவதை மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் அவர்கள் உறுதிபடுத்திட வேண்டும். இதனைத் தொடர்ந்து காண்காணித்து எந்தவித விடுபாடுமின்றி நுகர்வோருக்கு இடுபொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மண்டல மேலாளருக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    காவல்துறை ஊரகம் மற்றும் நகரப்பகுதிகளில் போதிய பாதுகாப்பு அளித்து வாகனங்கள் எந்த இடையூறுமின்றி இயக்க ஏற்பாடு செய்து தரவேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலர் 10 டன்னுக்கு உட்பட்ட சரக்கு வண்டி உரிமையாளர்கள் பிரதிநிதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து கூட்டம் நடத்தி வாகனம் தேவைப்படும் பகுதிகளுக்கு வாகனங்களை அனுப்ப ஏற்பாடு செய்து எரிபொருட்கள், காய்கறிகள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் எவ்வித தங்குதடையுமின்றி பொதுமக்களுக்கு கிடைத்திட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 5-வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் நீடிப்பதால் வேலூர் மாவட்டத்தில் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrike #vegetables

    வேலூர்:

    பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றுவது, வாட் வரியை குறைப்பது உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி நாடு தழுவிய லாரிகள் வேலை நிறுத்தம் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இதற்கு வேலூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன.

    வேலூர் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேலூர் மாநகரில் தினசரி ரூ.10 கோடி சரக்கு போக்குவரத்தும், மாவட்டத்தில் ரூ.10 கோடி சரக்கு போக்குவரத்தும் என மொத்தம் ஒரு நாளைக்கு ரூ.20 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    5-வது நாளாக லாரிகள் இன்றும் ஓடவில்லை. வேலை நிறுத்தம் நீடிப்பதால், வேலூர் மாவட்டத்தில் 5 நாட்களில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருள் வெளிமாநிலங்களில் இருந்து அதிகம் வருகின்றன. லாரிகள் வேலை நிறுத்ததால் லாரி டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என சுமார் 50 ஆயிரம் பேர் நேரடியாக வேலை இழந்துள்ளனர்.

    ‘குட்டி சிவகாசி’ எனப்படும் குடியாத்தத்தில் தீப்பெட்டி தொழில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. குடியாத்தம் பகுதியில் 15 பகுதி நேர எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும், 100-க்கும் குடிசை தீப்பெட்டி தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன. லாரிகள் வேலை நிறுத்தத்தால் பல கோடி மதிப்பு தீப்பெட்டிகள் தேக்கமடைந்துள்ளன.

    தொடர்ந்து உற்பத்தி செய்யும் பண்டல்களை வைக்கவும் தொழிற்சாலைகளில் இடமில்லை. மூலப்பொருள் வராததால் உற்பத்தி முடங்கி போகும் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும். இதேபோல் கைத்தறி லுங்கி உற்பத்தி, பீடித்தொழில், தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் என பலதரப்பட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    மேலும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தொடர்ந்து, லாரிகள் வேலை நிறுத்தம் நீடித்தால் விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.4 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrike
    திண்டுக்கல்:

    சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று 5-வது நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் பெருமளவு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய வியாபார சந்தையான ஒட்டன்சத்திரத்தில் இருந்து பெரும்பாலான ஊர்களுக்கு காய்கறிகள் அனுப்பவில்லை.

    திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை, அய்யலூர், வேடசந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. இந்த மில்களுக்கு தேவையான பஞ்சு மற்றும் நூல் வரவில்லை.

    மேலும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களையும் வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியவில்லை. இதனால் நூல்கள் தேக்கம் அடைந்துள்ளது. மூலப்பொருட்கள் வராததால் 3 சிப்டுகள் இயங்கி வந்த ஆலைகளில் தற்போது 2 சிப்டுகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். இதுதவிர வெளிமாநிலங்களில் இருந்து திண்டுக்கல் வரும் பருப்பு, மளிகை பொருட்கள், கட்டுமான பொருட்கள் ஆகியவை வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இத்தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கும் நிலையில் உள்ளனர்.

    கடந்த 4 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் சுமார் ரூ.4 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    காய்கறிகள், மலர்கள் ஆகியவை உரிய நேரத்தில் வெளியூர்களுக்கு அனுப்ப முடியாததால் அவை அழுகி விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் லாரிகள் போராட்டம் முடிவுக்கு வந்தால்தான் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என பல்வேறு தரப்பினரும் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். #LorryStrike
    லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் நாளை விடுமுறை அறிவித்துள்ளதால் சுமார் ரூ.2 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #LorryStrike
    ஒட்டன்சத்திரம்:

    தமிழகத்திலேயே மிகப்பெரிய காய்கறி சந்தை ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தையாகும். இங்கிருந்து கேரளா, மகாராஷ்ட்ரா, மும்பை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் காய்கறிகள் வியாபாரிகளால் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

    தற்போது நடைபெற்று வரும் லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் நாளை (25-ந்தேதி) விடுமுறை என காந்தி காய்கறி மார்க்கெட் உரிமையாளர் நல சங்கம் அறிவித்துள்ளது.

    இந்த போராட்டத்தில் லாரிகள் உரிமையாளர் நலச்சங்கம், வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம் ஆகிய சங்கங்கள் விடுமுறையில் பங்கேற்கும். நாளை நடைபெறும் கடை அடைப்பினால் சுமார் ரூ.2 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #LorryStrike

    ×