search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    6-வது நாளாக ஸ்டிரைக் - கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ரூ.2  ஆயிரம் கோடி சரக்குகள் தேக்கம்
    X

    6-வது நாளாக ஸ்டிரைக் - கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ரூ.2 ஆயிரம் கோடி சரக்குகள் தேக்கம்

    6-வது நாளாக ஸ்டிரைக் நீடிப்பதால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ரூ.2 ஆயிரம் கோடி சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளது. #LorryStrike

    கோவை:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண் டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் 6-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. இதனால் கோவையில் இருந்து கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அனுப்பப்படும் காய்கறிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகளில் அனுப்பப்படும் சிமெண்ட், என்ஜினீயரிங் பொருட்கள் என ரூ.1000 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.

    ரெயில் மூலம் பார்சல்கள் அனுப்புவதால் ரெயில் நிலைய பிளாட்பார்ம்களில் சரக்குகள் குவிந்து கிடக்கிறது. மேட்டுப்பாளையம் காய்கறி மையத்தில் 110 டன் முட்டை கோஸ் தேக்கம் அடைந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    நாங்கள் தொழில் செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதால் 3 மாதத்துக்கு முன்பு வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து கடந்த 20-ந் தேதி தொடங்கினோம். ஆனால் மத்திய அரசு எங்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை.


    எங்களது அத்தியாவசிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நாளுக்கு நாள் ஆதரவு அதிகரிக்கிறது. எங்களுக்கு ஆதரவாக டீசல், பெட்ரோல் ஏற்றி செல்லும் லாரிகளும் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. போராட்டம் தொடர்வதால் எங்களுக்கு இதுவரை ரூ.200 கோடி நஷ்டமும், அரசுக்கு ரூ.1000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறி வருகிறது. எனவே மத்திய அரசு உரியமுறையில் பேச்சு வார்த்தை நடத்த முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர் சங்கத்தினர் இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் கலிய பெருமாள், செயலாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் ரூ.400 கோடி மதிப்புள்ள பனியன் தேக்கம் அடைந்துள்ளது. காங்கேயத்தில் தேங்காய் எண்ணெய், கொப்பரை உற்பத்தி ரூ.100 கோடிக்கும், அவினாசியில் ரூ.10 கோடி மதிப்புள்ள காடாத்துணி,

    அனுப்பர்பாளையத்தில் பாத்திரங்கள் ரூ.200 கோடிக்கும், ஊத்துக்குழி வெண்ணை, பல்லடத்தில் ரூ.25 கோடிக்கு கறிக்கோழிகள் என மாவட்டம் முழுவதும் ரூ.1000 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.

    இதே போல நீலகிரி மாவட்டத்தில் காய்கறிகள் தேங்கி அழுகி வருகின்றன. ரூ.30 கோடி அளவுக்கு தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrike

    Next Story
    ×