search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் மாவட்டத்தில் லாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.4000 கோடி வர்த்தகம் பாதிப்பு
    X

    திண்டுக்கல் மாவட்டத்தில் லாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.4000 கோடி வர்த்தகம் பாதிப்பு

    லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.4 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrike
    திண்டுக்கல்:

    சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று 5-வது நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் பெருமளவு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய வியாபார சந்தையான ஒட்டன்சத்திரத்தில் இருந்து பெரும்பாலான ஊர்களுக்கு காய்கறிகள் அனுப்பவில்லை.

    திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை, அய்யலூர், வேடசந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. இந்த மில்களுக்கு தேவையான பஞ்சு மற்றும் நூல் வரவில்லை.

    மேலும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களையும் வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியவில்லை. இதனால் நூல்கள் தேக்கம் அடைந்துள்ளது. மூலப்பொருட்கள் வராததால் 3 சிப்டுகள் இயங்கி வந்த ஆலைகளில் தற்போது 2 சிப்டுகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். இதுதவிர வெளிமாநிலங்களில் இருந்து திண்டுக்கல் வரும் பருப்பு, மளிகை பொருட்கள், கட்டுமான பொருட்கள் ஆகியவை வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இத்தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கும் நிலையில் உள்ளனர்.

    கடந்த 4 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் சுமார் ரூ.4 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    காய்கறிகள், மலர்கள் ஆகியவை உரிய நேரத்தில் வெளியூர்களுக்கு அனுப்ப முடியாததால் அவை அழுகி விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் லாரிகள் போராட்டம் முடிவுக்கு வந்தால்தான் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என பல்வேறு தரப்பினரும் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். #LorryStrike
    Next Story
    ×