search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5-வது நாளாக லாரிகள் ஓடவில்லை - வேலூரில் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு
    X

    5-வது நாளாக லாரிகள் ஓடவில்லை - வேலூரில் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

    டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 5-வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் நீடிப்பதால் வேலூர் மாவட்டத்தில் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrike #vegetables

    வேலூர்:

    பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றுவது, வாட் வரியை குறைப்பது உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி நாடு தழுவிய லாரிகள் வேலை நிறுத்தம் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இதற்கு வேலூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன.

    வேலூர் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேலூர் மாநகரில் தினசரி ரூ.10 கோடி சரக்கு போக்குவரத்தும், மாவட்டத்தில் ரூ.10 கோடி சரக்கு போக்குவரத்தும் என மொத்தம் ஒரு நாளைக்கு ரூ.20 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    5-வது நாளாக லாரிகள் இன்றும் ஓடவில்லை. வேலை நிறுத்தம் நீடிப்பதால், வேலூர் மாவட்டத்தில் 5 நாட்களில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருள் வெளிமாநிலங்களில் இருந்து அதிகம் வருகின்றன. லாரிகள் வேலை நிறுத்ததால் லாரி டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என சுமார் 50 ஆயிரம் பேர் நேரடியாக வேலை இழந்துள்ளனர்.

    ‘குட்டி சிவகாசி’ எனப்படும் குடியாத்தத்தில் தீப்பெட்டி தொழில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. குடியாத்தம் பகுதியில் 15 பகுதி நேர எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும், 100-க்கும் குடிசை தீப்பெட்டி தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன. லாரிகள் வேலை நிறுத்தத்தால் பல கோடி மதிப்பு தீப்பெட்டிகள் தேக்கமடைந்துள்ளன.

    தொடர்ந்து உற்பத்தி செய்யும் பண்டல்களை வைக்கவும் தொழிற்சாலைகளில் இடமில்லை. மூலப்பொருள் வராததால் உற்பத்தி முடங்கி போகும் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும். இதேபோல் கைத்தறி லுங்கி உற்பத்தி, பீடித்தொழில், தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் என பலதரப்பட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    மேலும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தொடர்ந்து, லாரிகள் வேலை நிறுத்தம் நீடித்தால் விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    Next Story
    ×