search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தருமபுரி அருகே 4 லாரிகள் மீது கல்வீசி கண்ணாடிகள் உடைப்பு - டிரைவர் காயம்
    X

    தருமபுரி அருகே 4 லாரிகள் மீது கல்வீசி கண்ணாடிகள் உடைப்பு - டிரைவர் காயம்

    தருமபுரி அருகே லாரிகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Lorrystrike

    தருமபுரி:

    லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இன்று 6-வது நாளாக அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 4500 லாரிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்தநிலையில் தருமபுரி வழியாக போராட்டத்தை மீறி இயக்கப்படும் லாரிகளை வழிமறித்து ஆதரவும் திரட்டி வந்தனர். நேற்று கோவையில் இருந்து வேலூருக்கு மோட்டார் சைக்கிளின் உதிரிபாகங்களை ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியை வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்த பெருமாள் என்பவர் ஒட்டி வந்தார்.

    லாரி தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பொன்னேரி என்ற பகுதிக்கு வந்தபோது திடீரென்று மர்ம நபர்கள் சிலர் கல்லை எடுத்து லாரியின் மீது வீசினர். இதில் டிரைவர் பெருமாள் மீது கல் விழுந்து அவரது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அவர் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மீண்டும் லாரியை எடுத்து கொண்டு சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

     


    இதுபோன்று ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து கேரளாவுக்கு அரிசி பாரம் ஏற்றி வந்த லாரியை நெல்லூரைச் சேர்ந்த சின்னா என்பவர் ஓட்டிவந்தார். லாரி தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை புறவடை பகுதிக்கு நேற்று மாலை வந்த போது மர்ம நபர்கள் சிலர் கல்லை எடுத்து லாரியின் மீது வீசினர். இதில் லாரியின் முன்பக்க கண்காடி உடைந்தது.

    குஜராத்தில் இருந்து சேலத்தை நோக்கி இரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை குஜராத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ஓட்டிவந்தார். அந்த லாரி அதியமான்கோட்டை புறவடை அருகே வந்தபோது மர்மநபர்கள் கல் வீசினர். இதில் லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

    இதுபோன்று ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மொய்னுதீன் (22) என்பவர் பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு கார்களை ஏற்றி சென்ற லாரி அதியமான்கோட்டை புறவடை அருகே வந்தபோது மர்ம நபர்கள் கல் எடுத்து வீசியதில் வண்டியின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

    வேலை நிறுத்த போராட்டத்தை மீறி செயல்படும் லாரிகள் மீது இதுபோன்று தாக்குதல் நடைபெறுகிறதா? என்று கோணத்தில் அதியமான் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    அதியமான்கோட்டை அருகே தொடர்ந்து 3 லாரிகளில் மர்ம நபர்கள் கல்வீசி சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×