search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரி ஸ்டிரைக் எதிரொலி - கடலூர் உழவர்சந்தைக்கு அரசு பஸ்களில் காய்கறிகள் வந்தன
    X

    லாரி ஸ்டிரைக் எதிரொலி - கடலூர் உழவர்சந்தைக்கு அரசு பஸ்களில் காய்கறிகள் வந்தன

    பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுப்பள்ள நிலையில் கடலூர் உழவர்சந்தைக்கு அரசு பஸ்கள் மூலம் நேற்று முதல் காய்கறிகள் வந்தது.
    கடலூர்:

    பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்கவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 6-வது நாளாக வேலை நிறுத்தப்போராட்டம் நீடிக்கிறது.

    கடலூர் மாவட்டத்திலும் சுமார் 7 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதனால் வர்த்தகம் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் உற்பத்தியான பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்ட செல்ல முடியவில்லை. இதனால் பல தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன.

    கடலூர் மாவட்டத்துக்கு கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து அரிசி, பருப்பு, வெங்காயம், காய்கறிகள், பழங்கள் லாரிகளில் கொண்டுவரப்படும். லாரிகள் ஓடாததால் வெளி மாநிலங்களில் இருந்துவரும் காய்கறிகள் வரத்து அடியோடு நின்றது.

    இதைத்தொடர்ந்து கடலூர் உழவர்சந்தைக்கு அரசு பஸ்களில் நேற்று முதல் காய்கறிகள் வந்திறங்கின. எம்.புதூர், எஸ்.புதூர், வடலூர் போன்ற பகுதிகளில் இருந்து அரசு பஸ்களில் காய்கறிகள், வாழைத்தார்கள், பழங்கள் கொண்டுவரப்பட்டன.

    விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்து 500 லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.

    சென்னை கோயம்பேடு, ஒட்டன்சத்திரம், திண்டுக்கள் போன்ற பகுதிகளில் இருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு லாரிகளில் காய்கறிகள் கொண்டுவரப்படும். லாரி ஸ்டிரைக் காரணமாக காய்கறிகள் எதுவும் வரவில்லை. இதனால் காய்கறிகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

    மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்புகள் லாரிகள் மூலம் கேரளா, ஆந்திரா மாநிலங்களுக்கும் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். லாரி ஸ்டிரைக் காரணமாக மரக்காணம் பகுதியில் உப்புகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் டன் உப்புகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

    லாரிகள் ஓடாததால் உப்பளத்தில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். வேலை நிறுத்தம் காரணமக விழுப்புரம் மாவட்டத்தில் லாரி டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்களும் என 20 ஆயிரத்தும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    லாரி ஸ்டிரைக் தொடர்ந்து நீடிப்பதால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு அபாயம் ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×