search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lorry strike"

    லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. #LorryStrike

    ஒட்டன்சத்திரம்:

    பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    8-வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. இதனால் பெரும்பாலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்திலேயே மிகப் பெரிய காய்கறி மார்க்கெட்டான ஒட்டன்சத்திரத்தில் இருந்து தினசரி 100 டன்னுக்கு மேலாக காய்கறிகள் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

    லாரிகள் ஸ்டிரைக் காரணத்தால் விவசாயிகளிடம் இருந்து காய்கறிகள் வாங்குவதை வியாபாரிகள் நிறுத்தி விட்டனர். இதனால் ஏற்கனவே விவசாயிகளிடம் இருந்து வாங்கிய காய்கறிகள் வெளியூர்களுக்கு அனுப்ப முடியாமல் மூட்டை மூட்டையாக தேங்கி கிடக்கிறது.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து தினசரி 60 முதல் 70 டன் முருங்கைக்காய் பரோடா, பம்பாய், கல்கத்தா போன்ற நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். லாரிகள் மூலம் அனுப்ப முடியாத நிலை உள்ளதால் தற்போது கோயம்புத்தூர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    தினசரி 10 முதல் 20 டன் முருங்கைக்காய் மட்டுமே ரெயில் மூலம் அட்டைப் பெட்டிகளில் பேக்கிங் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. இதனால் முருங்கைக்காய் மூலம் மட்டும் தினசரி ரூ.2 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து வெளியூர்களுக்கு காய்கறிகள் அனுப்புவது குறைந்துள்ளதால் உள்ளூர் வியாபாரிகள் மட்டும் குறைந்த அளவு வாங்கிச் செல்கின்றனர். கடந்த வாரம் ரூ.220-க்கு விற்கப்பட்ட ஒரு பெட்டி தக்காளி தற்போது ரூ.150-க்கு விற்கப்படுகிறது. ரூ.500-க்கு விற்கப்பட்ட கத்தரி ரூ.300-க்கும், ரூ. 100-க்கு விற்கப்பட்ட இஞ்சி ரூ.70-க்கும், ரூ.70-க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் ரூ.50-க்கும் விற்பனையாகிறது.

    பெரும்பாலான காய்கறிகள் மார்க்கெட்டை விட்டு வெளியேறினால் சரி என்ற மனநிலையில் வியாபாரிகள் அதனை விற்று வருகின்றனர்.

    விவசாயிகளிடம் இருந்து வாங்கும் காய்கறிகளின் அளவு குறைந்துள்ளதால் பெருமளவு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் காய்கறிகளின் விலை மேலும் வீழ்ச்சியடையும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால் அதே நேரத்தில் வெளி சந்தையில் காய்கறிகள் விற்பனை கடுமையாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #LorryStrike

    லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக துறைமுக டிரெய்லர் லாரிகள் இன்று முதல் ஓடாது என்று சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது. #LorryStrike
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்ககட்டணம் வசூலிக்க வேண்டும். 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஒரு வார காலமாக லாரி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் டிரெய்லர் லாரிகளும் பங்கேற்க வேண்டும் என்று அந்த சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக சென்னை ராயபுரத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் டிரெய்லர் லாரிகள் சங்கத்தின் சார்பில் தலைவர் என்.மனோகரன், செயலாளர் எஸ்.ஆர்.ராஜா உள்பட நிர்வாகிகளும், அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் (தமிழ்நாடு) தலைவர் குமாரசாமி, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் உள்பட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு துறைமுக டிரெய்லர் லாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்தது. இதுதொடர்பாக அந்த சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.ராஜா நிருபர்களிடம் கூறும்போது, ‘எங்கள் சங்கத்தில் 6 ஆயிரம் டிரெய்லர் லாரிகளும், 2 ஆயிரம் டாரஸ் லாரிகளும் உள்ளன. லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக நாளை முதல்(இன்று) டிரெய்லர் லாரிகளும், டாரஸ் லாரிகளும் ஓடாது. இதனால் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் பாதிக்கப்படும்.’ என்றார்.

    மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின்(தமிழ்நாடு) தலைவர் எஸ்.ஆர்.குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 90 சதவீதம் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இதனால் கடந்த ஒரு வாரத்தில் ரூ.10 ஆயிரம் கோடி சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளது. மத்திய அரசுக்கு ரூ.3 ஆயிரம் கோடியும், லாரி உரிமையாளர்களுக்கு ரூ.1,500 கோடியும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுமூக தீர்வு காணும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தென் மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி தொழில் பிரதான தொழிலாக உள்ளது. கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன.



    லாரிகள் வேலைநிறுத்தத்தால், தீப்பெட்டி தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி பண்டல்களை வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. தீப்பெட்டி பண்டல்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, தூத்துக்குடி துறைமுகத்துக்கும் லாரிகளில் கொண்டு செல்ல முடியவில்லை.

    மேலும் தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களான மெழுகு, குச்சி, பொட்டாசியம் குளோரைடு, பாஸ்பரஸ், கந்தகம் போன்றவற்றையும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வர முடியவில்லை.

    இதனால் சுமார் 2 லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்து உள்ளன. தீப்பெட்டி தொழில் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் மூலம் ரூ.400 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் கோவில்பட்டி நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக, தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளதாலும், தீப்பெட்டி தயாரிக்க தேவையான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாலும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தீப்பெட்டி தொழிற்சாலைகளை மூடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம் கூறுகையில், “தீப்பெட்டி தொழிலில் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். எனவே, லாரி உரிமையாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி, லாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்றார்.  #LorryStrike
    லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். #LorryStrike #TNCM #Nitingadgari
    சென்னை:

    சுங்க கட்டணம், 3-ம் நபர் விபத்து காப்பீட்டு பிரிமியம் உயர்வு போன்றவற்றை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் நேற்று 7-வது நாளாக நீடித்தது. ஸ்டிரைக் காரணமாக அத்தியாவசியத் தேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    லாரி ஸ்டிரைக் தொடர்ந்து நீடித்தால் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும். 7-வது நாளாக லாரி ஸ்டிரைக் நீடிப்பதால் மதுரை மாவட்டத்தில் ரூ.400 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களை பாதிக்கிற வகையில் உள்ள லாரிகள் வேலை நிறுத்தத்தை உடனே முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என தமிழக முதல்வர் பழனிச்சாமி மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடும். வேலை நிறுத்தத்தில் சுமார் 4.5 லட்சம் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த வேலை நிறுத்தத்தால் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். #LorryStrike #TNCM #Nitingadgari
    லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ஈரோட்டில் பிரதான தொழில்கள் அனைத்தும் முடங்கிப் போய் வருகிறது. குறிப்பாக ஈரோடு மாட்டுசந்தையும் வெறிச்சோடி காணப்பட்டது.

    ஈரோடு:

    பெட்ரோல் டீசல் விலையை 3 மாதத்திற்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும் சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும். பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20-ந் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை இதனால் சுமார் ரூ. 350 கோடி வரை வர்த்தகம் முடங்கியுள்ளது. புடவை துணிமணிகள் வெளிமாநிலங்களுக்கு செல்ல முடியாமல் லாரி புக்கிங் ஆபீஸ் மற்றும் குடோன்களில் தேக்கம் அடைந்து வருகின்றன.

    லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ஈரோட்டில் பிரதான தொழில்கள் அனைத்தும் முடங்கிப் போய் வருகிறது. குறிப்பாக ஜவுளிகள் மஞ்சள் எண்ணெய் வித்துக்கள் காய்கறிகள் போன்ற தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் தற்போது கருங்கல்பாளையத்தில் நடந்த மாட்டு சந்தையும் இணைந்துள்ளது.

    ஈரோடு கருங்கல் பாளையத்தில் ஒவ்வொரு வியாழன் தோறும் மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.

    இந்த சந்தைக்கு வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவு வியாபாரிகள் வருவார்கள் குறிப்பாக மகாராஷ்டிரா குஜராத் ,கேரளா, மேற்கு வங்காளம் ,கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவு வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள்.

    இந்நிலையில் லாரிகள் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இன்று நடந்த மாட்டுச்சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் மாட்டுச்சந்தை களை இழந்து காணப்பட்டது. வியாபாரமும் பாதிக்கு பாதியாக குறைந்தது.

    இன்று 200 பசு மாடுகளும் 100 எருமை மாடுகளும் 200 வளர்ப்பு கன்றுகளும் விற்பனைக்கு வந்தன. அவை 16 ஆயிரம் முதல் 34 ஆயி ரம் வரை விற்பனையானது.

    இது குறித்து மாட்டு சந்தை மேலாளர் முருகன் கூறியதாவது.-

    கடந்த 2 வாரமாகவே மழை காரணமாக வெளி மாநில வியாபாரிகள் அதிகம் வரவில்லை. இந்நிலையில் லாரி உரிமையாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தம் காரணமாக. இன்று சந்தைக்கு குஜராத், கர்நாடகா, குஜராத், மேற்குவங்காளம் வியாபாரிகள் யாரும் வரவில்லை.

    ரூ.3 கோடி வரை மாட்டு சந்தையில் விற்பனை நடக்கும் .ஆனால் இன்று ரூ.1 கோடிக்கு மட்டுமே மாடுகள் விற்பனை ஆனது ரூ.2 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பூதப்பாடி விற்பனை கூடத்தில் ரூ.2 கோடி பருத்தி தேக்கம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் தமிழகம் மட்டுமின்றி கர்நாடக போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.

    இங்கு பருத்தி விற்பனை அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது இதனால் பருத்திக்கு புகழ் பெற்று வருகிறது விற்பனை கூட்டம்.

    இந்த வருட பருத்தி ஏலம் கடந்த மாதம் முதல் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்தியா முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் செய்வருவதால் சந்தையில் உள்ள பொருட்கள் தேக்கம் அடைந்து வருகிறது.

    நேற்று விற்பனை கூடத்தில் நடைபெற இருந்த பருத்தி ஏலம் நடைபெறவில்லை.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது கடந்த 10 நாட்களாக மிகவும் சிரமமப்பட்டு பருத்தி எடுத்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம் சுமார் 6 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மூட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    சுமார் 2 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்படும் இந்நிலையில் லாரி ஸ்டிரைக் கால் இந்த வார விற்பனை நிறுத்தப்பட்டது வாரா வாரம் விற்பனையை வைத்துதான் விவசாய கடன் மற்றும் ஆட்கள் கூலி ஆகியவற்றை கொடுத்து வந்தோம் இந்தவாரம் என்ன செய்வது என்றும் அரசு விரைந்து பேச்சு வார்த்தை நடத்தி லாரி ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கூறினர்.



    லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக நாளை முதல் தீப்பெட்டி ஆலைகளை மூடுவது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #lorrystrike
    கோவில்பட்டி:

    தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுரேஷ் கோவில்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூலம் தினமும் 600 தீப்பெட்டிகள் கொண்ட 2 லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மதிப்பு சுமார் ரூ.6 கோடியாகும்.

    கர்நாடகா, மகராஷ்டிரா, அசாம், பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம், ஜம்மு உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக கடுமையாக மழை பெய்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து வடமாநிலங்களுக்கு லாரிகள் செல்லவில்லை. தீப்பெட்டிகளுக்கான ஆர்டர்களும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில், கடந்த 20-ம் தேதி முதல் நாடு முழுவதும் டீசல் விலை உயர்வு கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மேலும், தீப்பெட்டி பண்டல்கள் தொழிற்சாலைகளிலும், லாரி ஷெட்டுகளிலும் சுமார் ரூ.75 கோடி முதல் ரூ.100 கோடி மதிப்பிலான தேங்கி கிடக்கின்றன.

    இதனால் தீப்பெட்டி தொழிற்சாலைகள் தொடர்ந்து வேலை நடத்த முடியாத நிலை உள்ளது. கடந்த ஓராண்டுக்கு மேலாகவே பகுதி இயந்திர தீப்பெட்டிக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதமாக குறைக்க, மாநில அரசு கேட்டுக்கொண்டும் மத்திய அரசு முன்வரவில்லை.

    இந்நிலையில், இயற்கை சீற்றங்கள், லாரிகள் வேலை நிறுத்தம், கூடுதல் ஜி.எஸ்.டி. போன்ற காரணங்களால் தீப்பெட்டி தொழில் சரிவை நோக்கி செல்கிறது. தீப்பெட்டி மூலப்பொருள் விற்பனையாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முடியாமலும், தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு கடந்த 2 வாரமாக சம்பளம் வழங்க முடியாமலும் உற்பத்தியாளர்கள் தவித்து வருகின்றனர். இதனால் தனியார் நிதி நிறுவனங்களிலும், வங்கிகளிலும் கடன் பெற முயற்சி செய்து வருகின்றனர்.

    மேலும், தீப்பெட்டி சார்பு தொழிலான வெள்ளை குச்சி தயாரித்தல், ஸ்கிரீன் கோரிங், பிரிண்டிங், அட்டை, குளோரேட், சல்பர், மெழுகு போன்ற மூலப்பொருட்கள் விற்பனையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த ஜூன் மாதமும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    எனவே, மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களின் நீண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் கோவில்பட்டி நே‌ஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் தலைமையில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக்கூட்டம் கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள தனியார் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுரேஸ் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் லாரி வேலை நிறுத்தம் குறித்தும், தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம், மூலப்பொருள்கள் தட்டுப்பாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. முடிவில் நாளை முதல் தீப்பெட்டி ஆலைகளை மூடுவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் நே‌ஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினம், சாத்தூர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் அதுல்ஜெயின், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிறுவனர் ராஜவேல், செயலாளர் கதிரவன், துணை தலைவர் ராஜீ உள்பட பலர் கலந்து கொண்டனர். #lorrystrike
    லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக, வேலூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.140 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrike
    வேலூர்:

    லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்து இன்று 7-வது நாளாக நீடிக்கிறது. வேலூர் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை.

    இதனால் சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ.20 கோடிக்கு மேல் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    7-வது நாளாக லாரிகள் இன்றும் ஓடவில்லை. வேலை நிறுத்தம் நீடிப்பதால், வேலூர் மாவட்டத்தில் 7 நாட்களில் மட்டும் ரூ.140 கோடிக்கு மேல் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    லாரி டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். #LorryStrike

    நாடு முழுவதும் நீடிக்கும் லாரி ஸ்டிரைக்கை மத்திய அரசு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என பாராளுமன்றத்தில் இன்று அ.தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேட்டுக்கொண்டது. #Parliament #LorryStrike
    புதுடெல்லி:

    பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கடந்த 20-ந்தேதி முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இன்று 7-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் தேக்கம் அடைந்து, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.



    மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கை தீவிரப்படுத்தி உள்ளனர்.  லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக், இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது.

    லாரி உரிமையாளர்கள் போராட்டம் தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி. பி.ஆர்.சுந்தரம் மக்களவையில் இன்று பிரச்சினை எழுப்பினார். அப்போது, ஸ்டிரைக் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்திருப்பதாகவும், காய்கறிகள் விலை உயர்ந்து வருவதாகவும் கூறிய அவர், போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. முகமது சலீம் பேசும்போது, லாரி உரிமையாளர்கள் மிக முக்கியமான பிரச்சினையை எழுப்பியிருப்பதால், போராட்டத்திற்கு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். #Parliament #LorryStrike
    7-வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் கேரளாவுக்கு சென்ற லாரிகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். #lorrystrike
    நெல்லை:

    இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் கடந்த 7 நாட்களாக லாரிகள் எதுவும் ஓடவில்லை. நெல்லை காய்கறி மார்க்கெட்டுகளில் உள்ளூர் காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளன. வெளியூர் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளன. கட்டிட பொருட்கள் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு சரக்கு ஏற்றிக் கொண்டு 2 லாரிகள் செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு சென்றன. அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர், அந்த லாரிகள் மீது கல்வீசி தாக்கி விட்டு டிரைவரை எச்சரித்து விட்டு ஓடிவிட்டனர். இதில் 2 லாரிகளின் கண்ணாடிகளும் உடைந்தன.

    இது தொடர்பாக லாரிகளின் டிரைவர்கள் தென்காசி வல்லத்தை சேர்ந்த மோகன், செல்வம் ஆகியோர் செங்கோட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீசிய கும்பலை தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் லாரிகள் ஸ்டிரைக்கை தீவிரபடுத்தவும், டேங்கர் லாரிகள் உள்பட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் லாரிகளையும் நிறுத்துவது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். #lorrystrike
    லாரி ஸ்டிரைக் காரணமாக கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம் அடைந்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. #LorryStrike
    கோவை:

    நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து 7-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை. இதன்காரணமாக கோவையில் இருந்து வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பம்புசெட், கிரைண்டர், விசைத்தறி ஜவுளிகள், தென்னை நார் பொருட்கள், காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளது. லாரி ஸ்டிரைக் காரணமாக கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம் அடைந்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இதுகுறித்து எம்.ஜி.ஆர். மார்க்கெட் மொத்த காய்கறி வியாபாரி ராஜேந்திரன் கூறியதாவது,

    தினசரி கோவை மார்க்கெட்டுக்கு 100 லாரிகளில் காய்கறிகள் லோடு கொண்டு வரப்படும். இதில் 90 லாரி லோடு காய்கறிகள் கேரள மாநிலத்துக்கு அனுப்பப்படும். தற்போது லாரிகள் ஓடாததால் 40 முதல் 50 லாரிகளில் லோடு கொண்டு வரப்படுகிறது. சொந்தமாக லாரிகள் வைத்துள்ள கேரள வியாபாரிகள் மட்டுமே காய்கறிகளை அம்மாநிலத்துக்கு ஏற்றி செல்கின்றனர். இதனால் 90 லாரிகள் செல்ல வேண்டிய கேரளாவுக்கு தற்போது 30 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் கோவை சுற்றி உள்ள 100 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரும் காய்கறிகள் தேக்கம் அடைந்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த வாரம் மொத்த விலையில் 1 கிலோ ரூ. 55 -க்கு விற்பனையான சின்ன வெங்காயம் ரூ. 30 முதல் ரூ. 40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல தக்காளி ரூ. 25 -ல் இருந்து ரூ. 12-க்கும், கேரட் ரூ. 40-ல் இருந்து ரூ. 30-க்கும், கத்தரிக்காய் ரூ. 25-ல் இருந்து ரூ. 20 ஆகவும், முருங்கைக்காய் ரூ. 30-ல் இருந்து ரூ. 20 ஆகவும், புடலங்காய் ரூ. 25-ல் இருந்து ரூ. 20 ஆகவும், பீர்க்கங்காய் ரூ. 30-ல் இருந்து ரூ. 20 ஆகவும், வெண்டைக்காய் ரூ. 30-ல் இருந்து ரூ. 22 ஆகவும், பீட்ருட் ரூ. 30-ல் இருந்து ரூ. 20 ஆகவும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வரும் விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலத்தில் இருந்து விற்பனைக்கு வரும் உருளை கிழங்கு, பெரிய வெங்காயம் ஆகியவவை தொடர்ந்து விலை உயர்ந்தே காணப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #LorryStrike

    தமிழகத்தில் லாரி ஸ்டிரைக் 7-வது நாளாக நீடித்து வருவதால் சாப்பாட்டுக்கு வழியின்றி லாரி டிரைவர்கள் தவித்து வருகின்றனர். #LorryStrike
    நாமக்கல்:

    லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் ஸ்டிரைக் 7-வது நாளாக நீடிக்கிறது.

    நாமக்கல்லில் லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தினால் சரக்கு ஏற்றி வந்த லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    லாரி டிரைவர்கள் ஏற்றி வந்த சரக்குகளை இறக்க முடியாமல் கடந்த 7 நாட்களாக லாரியிலேயே சரக்குகள் இருப்பதால் பொருட்கள் நாசமாக கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் லாரிகளிலேயே டிரைவர்கள் வாழ்க்கை நடத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக இதுபோன்ற நிலை நீடித்து வருவதால் டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் தங்கள் குடும்பத்தை பார்க்க முடியாமலும், குழந்தைகளை கவனிக்க முடியாத அவல நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்த டிரைவர் கருணாகரன் கூறியதாவது:-

    கடந்த 20-ந்தேதி மதுரையில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக் கொண்டு பர்கூருக்கு சென்று கொண்டிருந்தேன். லாரி ஸ்டிரைக் காரணமாக லாரிகள் இயக்க முடியாததால் லாரியை நாமக்கல்லில் நிறுத்தி விட்டேன்.

    லாரியில் சரக்குகள் இருப்பதால் அப்படியே லாரியை விட்டு விட்டு போக முடியாது. ஏனெனில் லாரியில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட இடத்தில் சரக்குகளை கொண்டு போய் சேர்க்கும்வரை முழு பொறுப்பும் எங்களுடையது.

    ஆகையால் தான் என்னை போன்று இங்கு வெளி மாவட்ட, வெளி மாநில டிரைவர்கள், மற்றும் கிளீனர்கள் வீட்டுக்கு போக முடியாமல் கவலையுடன் உள்ளனர். கொசு தொல்லை காரணமாக லாரியில் சரியாக தூங்க முடிவதில்லை.

    குடிக்க தண்ணீர் இல்லாததால் விலைக்கு வாங்கி தண்ணீர் குடித்து வருகிறோம். செலவு தான் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கையில் இருக்கும் பணம் காலியாகி வருவதால் நல்ல உணவு கூட சாப்பிட முடியாமல் உள்ளோம். இதனால் உடல் நலம் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LorryStrike
    லாரிகள் வேலைநிறுத்தம் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் டெல்லியில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. #LorryStrike
    சேலம்:

    பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கடந்த 20-ந்தேதி முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இன்று 7-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

    இப்போராட்டத்தில் தமிழகத்தில் 4½ லட்சம் லாரிகள் உள்பட நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் பங்கேற்றுள்ளன. மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கை தீவிரப்படுத்தி உள்ளனர். வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் கோழித்தீவனம், வெங்காயம், சமையல் எண்ணெய், மைதா, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடைப்பட்டுள்ளது.



    தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ஜவுளி, ஜவ்வரிசி, இரும்பு கம்பிகள், மஞ்சள், தீப்பெட்டி, உப்பு, சோப்பு, பட்டாசு, மோட்டார் இயந்திர பாகங்கள், தேங்காய், துணிகள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் டன் கணக்கில் தேங்கி உள்ளன. அதேபோல் சரக்கு ரெயில்களில் வந்த பொருட்களை லாரிகளில் ஏற்றாததால் ரெயில்வே கிடங்குகளில் தேங்கி உள்ளன.

    விவசாயப் பொருட்கள் அழுகி வீணாவதோடு, கடும் விலை வீழ்ச்சியையும் சந்தித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருப்பதால் மலைபோல் குவிந்து காணப்படுகின்றன.

    சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள லாரி மார்க்கெட்டில் 7-வது நாளாக லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வெளி மாநில லாரி டிரைவர்கள் கடந்த 7 நாட்களாக வேலை இழந்து பரிதவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    அன்னதானப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, நெத்திமேடு, கொண்டலாம் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு, அதில் டிரைவர்கள் படுத்து உறங்குகிறார்கள்.

    நாமக்கல் பைபாஸ், பெங்களூரு பைபாஸ், சென்னை பைபாஸ் சாலைகளில் லாரிகள் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

    லாரிகள் இயங்காததால் சேலத்தில் இருந்து ஜவ்வரிசி, ஜவுளி, இரும்பு கம்பிகள், மஞ்சள், புளி, மளிகை பொருட்கள் எண்ணெய் வகைகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முடியாமல் கோடிக்கணக்கில் பொருட்கள் குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன.

    ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி, மஞ்சள் ஏலம் நடக்கிறது. அதில் ஏலம் விடப்பட்ட 3½ கோடி ரூபாய் மதிப்புள்ள 5,800 மஞ்சள் மூட்டைகள், 6 கோடி ரூபாய் மதிப்புள்ள 27 ஆயிரம் பருத்தி மூட்டைகள் கூட்டுறவு சங்க வளாகம் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. லாரிகள் வேலை நிறுத்தம் நீடிப்பதால் ஏற்றிச்செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது.

    லாரி ஸ்டிரைக் தொடர்பாக மத்திய அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. அரசுக்கும், டீசல் பொருட்கள் விற்பனை வரி என 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இன்று டெல்லியில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து லாரி அதிபர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே, இதில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

    இது குறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:-

    தமிழகத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய், சேலத்தில் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் குடோன்களில் தேக்கமடைந்துள்ளன. வேலை நிறுத்தத்தால் தமிழக லாரி உரிமையாளர்களுக்கு, 100 கோடி ரூபாய் அளவில் வாடகை இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம் டிரைவர்கள், கிளீனர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளர்கள், மினி டோர், சரக்கு ஆட்டோக்கள் உள்ளிட்ட சிறு வாகனங்களை இயக்கி வந்த 1½ கோடி பேர் 7 நாட்களாக வேலை இழந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் லாரி புக்கிங் அலுவலகங்களில் மலைபோல் தேங்கி உள்ளன.

    இது குறித்து தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளன தலைவர் ராஜவடிவேல் கூறுகையில், தமிழகத்தில் தொடரும் லாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.50 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் பொருட்கள் குடோன்களில் தேக்கமடைந்துள்ளன. எனவே லாரி உரிமையாளர்களை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைளை தீர்வு காண வேண்டும் என்றார். #LorryStrike
    ×