search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல்லில் டிரைவர்கள் லாரிக்கு உள்ளேயே உறங்கும் காட்சி.
    X
    நாமக்கல்லில் டிரைவர்கள் லாரிக்கு உள்ளேயே உறங்கும் காட்சி.

    ஸ்டிரைக் நீடிப்பு - சாப்பாட்டுக்கு வழியின்றி தவிக்கும் லாரி டிரைவர்கள்

    தமிழகத்தில் லாரி ஸ்டிரைக் 7-வது நாளாக நீடித்து வருவதால் சாப்பாட்டுக்கு வழியின்றி லாரி டிரைவர்கள் தவித்து வருகின்றனர். #LorryStrike
    நாமக்கல்:

    லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் ஸ்டிரைக் 7-வது நாளாக நீடிக்கிறது.

    நாமக்கல்லில் லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தினால் சரக்கு ஏற்றி வந்த லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    லாரி டிரைவர்கள் ஏற்றி வந்த சரக்குகளை இறக்க முடியாமல் கடந்த 7 நாட்களாக லாரியிலேயே சரக்குகள் இருப்பதால் பொருட்கள் நாசமாக கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் லாரிகளிலேயே டிரைவர்கள் வாழ்க்கை நடத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக இதுபோன்ற நிலை நீடித்து வருவதால் டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் தங்கள் குடும்பத்தை பார்க்க முடியாமலும், குழந்தைகளை கவனிக்க முடியாத அவல நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்த டிரைவர் கருணாகரன் கூறியதாவது:-

    கடந்த 20-ந்தேதி மதுரையில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக் கொண்டு பர்கூருக்கு சென்று கொண்டிருந்தேன். லாரி ஸ்டிரைக் காரணமாக லாரிகள் இயக்க முடியாததால் லாரியை நாமக்கல்லில் நிறுத்தி விட்டேன்.

    லாரியில் சரக்குகள் இருப்பதால் அப்படியே லாரியை விட்டு விட்டு போக முடியாது. ஏனெனில் லாரியில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட இடத்தில் சரக்குகளை கொண்டு போய் சேர்க்கும்வரை முழு பொறுப்பும் எங்களுடையது.

    ஆகையால் தான் என்னை போன்று இங்கு வெளி மாவட்ட, வெளி மாநில டிரைவர்கள், மற்றும் கிளீனர்கள் வீட்டுக்கு போக முடியாமல் கவலையுடன் உள்ளனர். கொசு தொல்லை காரணமாக லாரியில் சரியாக தூங்க முடிவதில்லை.

    குடிக்க தண்ணீர் இல்லாததால் விலைக்கு வாங்கி தண்ணீர் குடித்து வருகிறோம். செலவு தான் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கையில் இருக்கும் பணம் காலியாகி வருவதால் நல்ல உணவு கூட சாப்பிட முடியாமல் உள்ளோம். இதனால் உடல் நலம் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LorryStrike
    Next Story
    ×