search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "matchbox"

    லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக நாளை முதல் தீப்பெட்டி ஆலைகளை மூடுவது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #lorrystrike
    கோவில்பட்டி:

    தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுரேஷ் கோவில்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூலம் தினமும் 600 தீப்பெட்டிகள் கொண்ட 2 லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மதிப்பு சுமார் ரூ.6 கோடியாகும்.

    கர்நாடகா, மகராஷ்டிரா, அசாம், பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம், ஜம்மு உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக கடுமையாக மழை பெய்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து வடமாநிலங்களுக்கு லாரிகள் செல்லவில்லை. தீப்பெட்டிகளுக்கான ஆர்டர்களும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில், கடந்த 20-ம் தேதி முதல் நாடு முழுவதும் டீசல் விலை உயர்வு கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மேலும், தீப்பெட்டி பண்டல்கள் தொழிற்சாலைகளிலும், லாரி ஷெட்டுகளிலும் சுமார் ரூ.75 கோடி முதல் ரூ.100 கோடி மதிப்பிலான தேங்கி கிடக்கின்றன.

    இதனால் தீப்பெட்டி தொழிற்சாலைகள் தொடர்ந்து வேலை நடத்த முடியாத நிலை உள்ளது. கடந்த ஓராண்டுக்கு மேலாகவே பகுதி இயந்திர தீப்பெட்டிக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதமாக குறைக்க, மாநில அரசு கேட்டுக்கொண்டும் மத்திய அரசு முன்வரவில்லை.

    இந்நிலையில், இயற்கை சீற்றங்கள், லாரிகள் வேலை நிறுத்தம், கூடுதல் ஜி.எஸ்.டி. போன்ற காரணங்களால் தீப்பெட்டி தொழில் சரிவை நோக்கி செல்கிறது. தீப்பெட்டி மூலப்பொருள் விற்பனையாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முடியாமலும், தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு கடந்த 2 வாரமாக சம்பளம் வழங்க முடியாமலும் உற்பத்தியாளர்கள் தவித்து வருகின்றனர். இதனால் தனியார் நிதி நிறுவனங்களிலும், வங்கிகளிலும் கடன் பெற முயற்சி செய்து வருகின்றனர்.

    மேலும், தீப்பெட்டி சார்பு தொழிலான வெள்ளை குச்சி தயாரித்தல், ஸ்கிரீன் கோரிங், பிரிண்டிங், அட்டை, குளோரேட், சல்பர், மெழுகு போன்ற மூலப்பொருட்கள் விற்பனையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த ஜூன் மாதமும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    எனவே, மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களின் நீண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் கோவில்பட்டி நே‌ஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் தலைமையில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக்கூட்டம் கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள தனியார் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுரேஸ் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் லாரி வேலை நிறுத்தம் குறித்தும், தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம், மூலப்பொருள்கள் தட்டுப்பாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. முடிவில் நாளை முதல் தீப்பெட்டி ஆலைகளை மூடுவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் நே‌ஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினம், சாத்தூர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் அதுல்ஜெயின், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிறுவனர் ராஜவேல், செயலாளர் கதிரவன், துணை தலைவர் ராஜீ உள்பட பலர் கலந்து கொண்டனர். #lorrystrike
    ×