search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரிகள் ஸ்டிரைக் - ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி விலை சரிவு
    X

    லாரிகள் ஸ்டிரைக் - ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி விலை சரிவு

    லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. #LorryStrike

    ஒட்டன்சத்திரம்:

    பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    8-வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. இதனால் பெரும்பாலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்திலேயே மிகப் பெரிய காய்கறி மார்க்கெட்டான ஒட்டன்சத்திரத்தில் இருந்து தினசரி 100 டன்னுக்கு மேலாக காய்கறிகள் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

    லாரிகள் ஸ்டிரைக் காரணத்தால் விவசாயிகளிடம் இருந்து காய்கறிகள் வாங்குவதை வியாபாரிகள் நிறுத்தி விட்டனர். இதனால் ஏற்கனவே விவசாயிகளிடம் இருந்து வாங்கிய காய்கறிகள் வெளியூர்களுக்கு அனுப்ப முடியாமல் மூட்டை மூட்டையாக தேங்கி கிடக்கிறது.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து தினசரி 60 முதல் 70 டன் முருங்கைக்காய் பரோடா, பம்பாய், கல்கத்தா போன்ற நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். லாரிகள் மூலம் அனுப்ப முடியாத நிலை உள்ளதால் தற்போது கோயம்புத்தூர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    தினசரி 10 முதல் 20 டன் முருங்கைக்காய் மட்டுமே ரெயில் மூலம் அட்டைப் பெட்டிகளில் பேக்கிங் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. இதனால் முருங்கைக்காய் மூலம் மட்டும் தினசரி ரூ.2 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து வெளியூர்களுக்கு காய்கறிகள் அனுப்புவது குறைந்துள்ளதால் உள்ளூர் வியாபாரிகள் மட்டும் குறைந்த அளவு வாங்கிச் செல்கின்றனர். கடந்த வாரம் ரூ.220-க்கு விற்கப்பட்ட ஒரு பெட்டி தக்காளி தற்போது ரூ.150-க்கு விற்கப்படுகிறது. ரூ.500-க்கு விற்கப்பட்ட கத்தரி ரூ.300-க்கும், ரூ. 100-க்கு விற்கப்பட்ட இஞ்சி ரூ.70-க்கும், ரூ.70-க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் ரூ.50-க்கும் விற்பனையாகிறது.

    பெரும்பாலான காய்கறிகள் மார்க்கெட்டை விட்டு வெளியேறினால் சரி என்ற மனநிலையில் வியாபாரிகள் அதனை விற்று வருகின்றனர்.

    விவசாயிகளிடம் இருந்து வாங்கும் காய்கறிகளின் அளவு குறைந்துள்ளதால் பெருமளவு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் காய்கறிகளின் விலை மேலும் வீழ்ச்சியடையும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால் அதே நேரத்தில் வெளி சந்தையில் காய்கறிகள் விற்பனை கடுமையாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #LorryStrike

    Next Story
    ×