search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumari district"

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரள மக்களுக்கு நேற்று வரை 63 வாகனங்களில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆகும். #keralarain
    நாகர்கோவில்:

    கேரளாவில் தொடர் மழை காரணமாக மண் சரிவு மற்றும் வெள்ள பாதிப்பை அடுத்து ஏராளமானோர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றனர்.

    நாகர்கோவிலில் இருந்தும் கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. குமரியில் இருந்து நேற்று வரை 63 வாகனங்களில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆகும். தற்போது படிப்படியாக கேரளாவில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. முகாமில் இருக்கும் பொதுமக்களும் வீடுகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். மழை ஓய்ந்த நிலையில் கொசுக்கள் உற்பத்தியாகி விஷக்காய்ச்சல் ஏற்படும் நிலை உள்ளது. இதையடுத்து கொசுக்களை கட்டுப்படுத்தும் விதமாக நாகர்கோவில் நகராட்சி சார்பில் கொசு மருந்து தெளிக்கும் எந்திரங்கள் வழங்கப்பட்டது. 20 கொசு மருந்து தெளிப்பான் மேலும் 5 பெரிய டப்பாக்களில் ரசாயன மருந்துகளும் நேற்று கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனை கலெக்டர் பிரசாந்த் வடநேரே பார்வையிட்டு எந்திரங்கள் சரியாக இருக்கிறதா? என்று ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்கள் வழங்கிய நிவாரண பொருட்களையும் கேரளாவிற்கு அனுப்பி வைத்தார். #keralarain 
    குமரி மாவட்டத்தில் 5 இடங்களில் கொள்ளையடித்த 2 பேர் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியை அடுத்த ஏழு சாட்டுப்பத்து பகுதியை சேர்ந்தவர் சுந்தர். கட்டிட தொழிலாளி. கூடங்குளத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 40) மற்றும் குழந்தைகள் ஏழு சாட்டுப்பத்துவில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு தூங்கிக்கொண்டு இருந்தனர். பின்னர் காலையில் எழுந்து பார்க்கும் போது வீட்டின் பின்பக்க கதவு திறந்துகிடந்தது. மேலும் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்களும் சிதறிக்கிடந்தது. பீரோவில் இருந்த 2 1/2 பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜன்னல் வழியாக கம்பிமூலம் பின்பக்க கதவை திறந்து உள்ளே வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கதவு மற்றும் பீரோவில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். அதில் கொள்ளையனின் ஒரு கை ரேகை சிக்கியது.

    அருமனை வீராலிக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (40). இவர் சம்பவத்தன்று இரவு குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார். பின்னர் அதிகாலை எழுந்து பார்க்கும்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. மேலும் மேஜையில் உள்ள டிராயர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் இருந்த 2 1/2 பவுன் தங்க செயின், 2 பவுன் தங்க வளையலும் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    இது குறித்து அருமனை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    அருமனை காரோடு பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் நாயர். இவர் மாங்கோட்டில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமாக மாங்கோட்டில் கடை ஒன்று உள்ளது.

    சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு மறுநாள் காலை மீண்டும் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்க்கும் போது கடையில் இருந்த ரூ.52 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது.

    இது குறித்து அருமனை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வல்சலம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    அருமனை கீழ மாங்கோட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கேரளாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜிலா (33). இவர் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    இரவு விஜிலா மற்றும் குழந்தைகள் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது பின்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்று பீரோவில் இருந்த 3 மோதிரங்களை கொள்ளையடித்துச் சென்றிருந்தனர். காலையில் விஜிலா எழுந்து பார்க்கும் போது சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அருமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் அருமனை காரோடு பகுதியை சேர்ந் தவர் ராஜு (44). இவர் நாரகத்தின்குழி பகுதியில் கடை நடத்தி வருகிறார். கடையை பூட்டிவிட்டு சென்ற அவர் மறுநாள் மீண்டும் கடையை திறக்க வந்தபோது கடை ஷட்டர் உடைக்கப்பட்டு கடையில் இருந்து ரூ.10 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து அருமனை போலீசில் புகார் செய்தார். இந்த தொடர் கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடங்களில் கைப்பற்றப்பட்ட கைரேகைகள் மற்றும் ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் இந்த தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக 2 பேர் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குமரி மாவட்டத்தை முண்டன்துறை புலிகள் காப்பகத்துடன் இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் காங்கிரசார் மனு அளித்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    தோவாளை வட்டார காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் செல்வராஜ் தலைமையில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில்  மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதியை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    தோவாளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு ஏராளமான ஏழை விவசாயிகள், தொழிலாளிகள் வசித்து வருகிறார்கள். அவர்கள் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். தற்போது இந்த திட்டம் முறையாக நடைபெறவில்லை. 

    எனவே மாவட்ட நிர்வாகம் மீண்டும் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தி ஏழை தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குமரி மாவட்டத்தை களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்துடன் இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இம்மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே குமரி மாவட்டத்தை முண்டன்துறை புலிகள் காப்பகத்துடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர். 

    வட்டார காங்கிரஸ் தலை வர்கள் ஜெரால்டு கென்னடி, காலபெருமாள், வைகுண்டதாஸ், முருகானந்தம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
    வேலை நிறுத்த போராட்டம் கார ணமாக குமரி மாவட் டத்தில் நேற்று 3-வது நாளாக லாரிகள் ஓட வில்லை. இதனால் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. #LorryStrick
    நாகர்கோவில்:

    அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் சுங்கச் சாவ டிகளை அகற்ற வேண்டும். அதற்கு பதிலாக ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை அமல் படுத்த வேண்டும், பெட் ரோல்-டீசல் விலை உயர்வை கண்டிப்பதோடு, அதை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்து விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடை பெற்று வருகிறது.

    இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் பல்வேறு மாவட் டங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் சரக்கு புக்கிங் அலுவலக ஏஜெண்டுகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் லாரிகள் ஓடவில்லை.

    குமரி மாவட்ட லாரி உரி மையாளர்கள் சங்கமும் ஆத ரவு தெரிவித்து போராட் டத்தில் கலந்து கொண்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் லாரிகள் ஓடவில்லை. இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. வெளி மாநி லங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து லாரிகளும் நாகர் கோவில் அனாதை மடம் மைதானம், கோட்டார் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள லாரி நிறுத்தங்களிலும், லாரி உரிமையாளர்களின் சொந்த இடங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    குமரி மாவட்டத்தில் இருந்து தேங்காய், ரப்பர் ஷீட்கள், ரப்பர் பால், ரப்பர் மர தடிகள், தும்பு, உப்பு போன்ற பொருட்கள் அதிகளவில் வெளி மாநிலங் களுக்கு ஏற்றுமதியாகின்றன. ஆனால் தற்போது வேலை நிறுத்த போராட்டம் காரண மாக இந்த பொருட்களை உரிய இடத்துக்கு கொண்டு போய் சேர்க்க முடியவில்லை. இதனால் பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. லாரி புக்கிங் ஏஜெண்டுகளும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் புக்கிங் அலுவலகத்தில் சரக்கு களுக்கான புக்கிங் எதுவும் நடைபெறவில்லை.

    அதே சமயத்தில் வேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் விதமாக உள் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங் களுக்கு அத்தியாவசிய பொ ருட்களான பால், காய்கறி, பழ வகைகள், மளிகை பொருட்கள், பெட்ரோல்-டீசல் உள்ளிட் டவற்றை ஏற்றிச் செல்லும் லாரிகள் வழக்கம் போல இயங்குகின்றன.

    இதுதொடர்பாக குமரி மாவட்ட லாரி உரிமையா ளர்கள் சங்க செயலாளர் மனோகரனிடம் கேட்ட போது, ‘குமரி மாவட்டத்தில் எங்களது சங்கத்தை சேர்ந்த 1,500 லாரிகள் 3-வது நாளாக ஓடவில்லை. இதனால் குமரி மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் பொருட்கள் தேக்கம் அடைந்திருக்கின்றன. அந்த வகையில் ரூ.2 கோடி மதிப் பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன‘ என்றார்.  #LorryStrick
    குமரி மாவட்டத்தில் உள்ள 42 மீனவ கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
    நாகர்கோவில்:

    வடகிழக்கு வங்கக்கடலில் ஒடிசாவை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 60 கிலோ மீட்டர் வேகத்துக்கு காற்று வீசக்கூடும் எனவும், கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பான எச்சரிக்கை குமரி மாவட்ட மீனவர்களுக்கு விடுக்கப்பட்டது. மீனவளத்துறை அதிகாரிகள், கடற்கரை கிராம பங்குத்தந்தைகளுக்கு கடல் சீற்றம் காரணமாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். இதையடுத்து மீனவர்கள் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த தங்கள் கட்டுமரங்கள், வள்ளங்கள், படகுகளை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வந்து நிறுத்தினர். கடல் சீற்றம் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள கட்டுமரம், வள்ளம், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    குமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் பகுதியில் பயங்கர சூறைக்காற்று வீசுவதால் சீற்றம் அதிகமாகி அலைகள் கரையைவந்து முட்டி மோதுகிறது. நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையுள்ள 42 மீனவ கிராமங்களிலும் இந்த சீற்றத்தை காணமுடிந்தது.

    நித்திரவிளை அருகே உள்ள பூத்துறை, தூத்தூர் பகுதியில் ஏற்பட்ட சீற்றம் காரணமாக அந்த பகுதியில் உள்ள கடலரிப்பு தடுப்புச்சுவர்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. மேலும் ஊருக்குள் தண்ணீர் புகுந்து வீடுகளை சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

    இதேபோல மார்த்தாண்டன் துறை, வள்ளவிளை, இறையுமன்துறை, தூத்தூர், ராஜாக்கமங்கலம் துறை, கோவளம், அழிக்கால் போன்ற பகுதிகளிலும் கடல் சீற்றம் காணப்படுகிறது.

    குளச்சல், முட்டம் பகுதிகளில் ராட்சத அலைகள் கரையை நோக்கி சீறிப்பாய்கின்றன. பொதுமக்கள் கடற்கரையில் அமர்ந்து கடல் அழகை ரசிக்கும் மணல் திட்டுகள் வரை இந்த அலைகள் வந்து செல்வதால் அதை பார்ப்பதற்கு அச்சம் ஏற்படும் வகையில் உள்ளது.

    சுற்றுலா பயணிகள் இங்குள்ள கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா போலீசாரும் கடற்கரைகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக இன்று 3-வது நாளாக விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. #tamilnews
    குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில் தக்கலை அருகே பணியை தடுத்து நிறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தக்கலை:

    குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை அமைக்கும் பணி வேகமாக நடக்கிறது. தற்போது தக்கலை அருகே சேவியர்புரத்தில் சாலை அமைக்கும்பணி தொடங்கி உள்ளது.

    இப்பகுதியைச் சுற்றி மாங்கரம், மடத்து விளை, நெடுவிளை, நெஞ்சந்தி விளை, அண்ணாநகர் காலனி, திருவள்ளுவர் காலனி, புதூர் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களுக்கு செல்லும் இணைப்பு சாலைகள் அனைத்தும் 4 வழிச்சாலை அமையும் பகுதியை ஒட்டியே உள்ளது.

    4 வழிச்சாலை பணிகள் தொடங்கினால் இக்கிராமங்களுக்கு செல்லும் இணைப்பு சாலைகள் துண்டிக்கப்படும். இதனால் கிராமங்களில் வாழும் மக்கள் நகர்ப்புறத்திற்கு வர பல கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் நிலை ஏற்படும்.

    மேலும் இக்கிராமங்களுக்கு வந்து செல்லும் மினி பஸ்களும் நிறுத்தப்படும். இதனால் கிராம மக்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுவார்கள். எனவே இக்கிராமங்களில் 4 வழிச்சாலை அமையும் முன்பு இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

    இக்கோரிக்கையை வலியுறுத்தி நேற்று பிற்பகல் சேவியர்புரம் பகுதியில் கிராமமக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். பிற்பகல் தொடங்கிய இப்போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது.

    இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என கிராமமக்கள் அறிவித்தனர்.

    மேலும் போராட்டக்காரர்களுக்காக கஞ்சி காய்ச்சும் பணியும் தொடங்கியது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மாற்றுபாதை ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பிறகே 4 வழிச்சாலை பணிகள் தொடரும் என்றும் கூறினர்.

    இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #tamilnews
    கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் குமரி மாவட்டத்தில் இன்று அதிகாலை பலத்த மழை பெய்தது. இதனால் அங்கு குளு, குளு சீசன் நிலவுகிறது.

    நாகர்கோவில்:

    கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதையடுத்து குமரி மாவட்டத்திலும் கடந்த 2 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    குளச்சல் பகுதியில் நேற்று இரவு விட்டு, விட்டு மழை பெய்தது. நள்ளிரவு சுமார் 1 மணி நேரம் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிபட்சமாக 6 செ.மீ. மழை பதிவானது. சுருளோடு, ஆரல்வாய்மொழி, மையிலாடி, கொட்டாரம், ஆனைக்கிடங்கு, இரணியல், கோழிப்போர்விளை, கன்னி மார் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

    நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்துவிட்டு, விட்டு மழை பெய்துகொண்டே இருந்தது. இதனால் பள்ளி சென்ற மாணவ, மாணவிகள் குடைபிடித்தவாறு சென்ற னர். மாவட்டம் முழுவதுமே இன்று காலையிலும் மழை பெய்துகொண்டே இருந்தது. தொடர் மழையின் காரணமாக குமரி மாவட்டத்தில் குளு, குளு சீசன் நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் பெய்துவரும் மழையினால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 6.60 அடியாக இருந்தது. அணைக்கு 333 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. 319 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 62.85 அடியாக உள்ளது. அணைக்கு 211 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 52 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் தோவாளை சனலில் விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்று காலை தோவாளை பகுதிக்கு வந்து சேர்ந்தது.

    கன்னிப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை ஆயிரம் ஹெக்டே ரில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. சாகுபடி பரப்பளவை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அம்பை-16 ரக நெல்லை பயிற் செய்யுமாறு அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    குலசேகரம், கீரிப்பாறை பகுதிகளில் பெய்து வரும் சாரல்மழையினால் ரப்பர் மரங்களில் உள்ள சிறட்டை களில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடி பாதிக்கப்பட்டுள்ளது. செண்பகராமன்புதூர், தோவாளை பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதால் செங்கற்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-16.8, பெருஞ்சாணி-25.8, சிற்றாறு 1-21, சிற்றாறு 2-31, மாம்பழத்துறையாறு-20, திற்பரப்பு-20, புத்தன் அணை-30, முள்ளங்கினா விளை-24, இரணியல்-14.6, ஆணைக்கிடங்கு-27, குளச்சல்-60, குருந் தன்கோடு-14.8, அடையாமடை-27, கோழிப்போர்விளை-23, நாகர்கோவில்-14.6, பூதப் பாண்டி-14.4, சுருளோடு-31, கன்னிமார்-16.4, பாலமோர்-22.4, மையி லாடி-10, கொட்டாரம்-5.6 .

    குமரி மாவட்டத்தில் காற்றில் மரங்கள் முறிந்து விழுந்ததால் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தென்னை விவசாயத்திற்கு அடுத்த படியாக விவசாயிகள் அதிகம் பயிரிடும் பண பயிர் வாழை. தாமரைகுளம், மயிலாடி, சாமிதோப்பு தொடங்கி கடுக்கரை, தெரிசனங்கோப்பு, தக்கலை, கருங்கல், குலசேகரம், திருவட்டார் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வாழை பயிர்கள் ஏராளமாக பயிரிடப்பட்டுள்ளன.

    தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் வாழை மரங்கள் நல்ல பலன் கொடுக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழையுடன் சூறைக்காற்றும் வீசியது. இதனால் தோட்டங்களில் வளர்ந்து நின்ற வாழை மரங்கள் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் முறிந்து விழுந்தன.

    வாழைத்தார்கள் குலை தள்ளி நின்ற நிலையில் மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் கவலைக்கு ஆளானார்கள்.

    முறிந்த மரங்களின் வாழைத்தார்கள் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. ஏராளமான வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்ததால் வாழை பழங்களின் விலை வீழ்ச்சி அடைந்தது. குமரி மாவட்ட விவசாயிகள் கொண்டு வந்த வாழைத்தார்களை விட அதிகமாக நெல்லை, தூத்துக்குடி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வாழைத்தார்கள் நாகர்கோவில் மார்க்கெட்டுகளுக்கு வந்தன. அதிகப்படியான தார்கள் விற்பனைக்கு வந்ததாலும் இவற்றின் விலை வழக்கத்திற்கு மாறாக குறைந்தது.

    அதன்படி மட்டிப்பழம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.120-க்கு விற்பனையானது. இன்று இதன் விலை கிலோ ரூ. 80 ஆக குறைந்தது. இது போல ரசகதளி பழம் கிலோ ரூ.80-ல் இருந்து ரூ.45 ஆகவும், பச்சை பழம் கிலோ ரூ. 30-க்கும் விற்கப்பட்டது. சிவப்பு பழம் கிலோ ரூ.90-க்கு விற்பனையானது, இன்று கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டது. நாட்டுப்பழம் ரூ.50-ல் இருந்து ரூ.45 ஆக குறைந்தது. நேந்திரம் பழம் மட்டும் வழக்கத்தை விட சற்று அதிகமாக கிலோ ரூ. 56-க்கு விற்கப்பட்டது.
    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கி உள்ளது. தொடர் மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குளச்சல், முள்ளங்கினாவிளை பகுதியில் நேற்று மாலையில் பெய்யத் தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டித்தீர்த்தது.

    இதனால் அந்த பகுதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. முள்ளங்கினாவிளையில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழை பெய்தது. ஆசாரிபள்ளம், கீரிப்பாறை, வில்லுக்குறி, திருவட்டார், குலசேகரம், குளச்சல், தடிக்காரன்கோணம் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு 12 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய விடிய பெய்தது.

    நாகர்கோவிலில் இரவு அவ்வப்போது மழை தூறியது. இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. திற்பரப்பு அருவி பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அங்கு குளு குளு சீசன் நிலவுகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 6.50 அடியாக இருந்தது. அணைக்கு 450 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 304 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 62.15 அடியாக உள்ளது. அணைக்கு 166 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணைகள் 12.50 அடியாக உள்ளது.

    தொடர் மழையின் காரணமாக சானல்களிலும், ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்களில் 800-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி வழிகின்றன. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது. தொடர் மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    குலசேகரம், கீரிப்பாறை பகுதிகளில் பெய்துவரும் மழையினால் ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. செண்பகராமன்புதூர், தோவாளை பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-8.4, பெருஞ்சாணி-22, சிற்றாறு-1-17, சிற்றாறு-2-28, மாம்பழத்துறையாறு-33, இரணியல்-19, குளச்சல்-74.6, குருந்தன்கோடு-42.6, அடையாமடை-15, கோழிப்போர்விளை-62, முள்ளங்கினாவிளை-80, திற்பரப்பு-38.2, நாகர்கோவில்-18, பூதப்பாண்டி-4, கன்னிமார்-23.4, பாலமோர்-3.4. #tamilnews
    குமரி மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்பு அனைத்து மாவட்டங் களிலும் வெயில் கொளுத்தியது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கோடை மழை பெய்யுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டது. இந்த நிலையில் தென்மேற்கு அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இது புயலாக மாறியது. இதற்கு சாகர் என்று பெயரிட்டு இருப்பதாக தெரிவித்த வானிலை ஆய்வு மையம், இந்த புயல் ஏமன் பகுதிக்கு கிழக்கில் 400 கிலோ மீட்டர் தூரத்தில் மையங்கொண்டிருப்பதாக கூறியது. இது தென்மேற்கு திசையில் நகரும் என்றும் இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரித்தது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்தது.

    வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடி குமரி மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. நாகர்கோவிலில் நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 4 மணி நேரம் நீடித்தது. இதனால் செம்மாங்குடி ரோடு, கோட்டார் ரோடு, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    குருந்தன்கோடு பகுதியில் இடி-மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. அங்க அதிகபட்சமாக 15 செ.மீ. மழை பதிவானது. பூதப்பாண்டி, சுருளோடு, முள்ளங்கினாவிளை, புத்தன் அணை, ஆரல்வாய் மொழி, மயிலாடி, கொட்டாரம், இரணியல், குளச்சல், அடையாமடை, கோழிப் போர்விளை பகுதி களிலும் மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    இடி-மின்னலுடன் மழை பெய்ததை அடுத்து ராஜாக் கமங்கலம், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம், குலசேகரம், திருவட்டார், நாகர்கோவில் பகுதிகளில் நேற்று இரவு மின்சாரம் தடைபட்டது. இதனால் பல்வேறு கிராமங்கள் இருளில் மூழ்கியது.

    நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்திற்கு செல்லும் சாலையில் நின்ற பழமை வாய்ந்த மரம் ஒன்று வேரோடு ரோட்டில் சாய்ந்தது. மரக்கிளைகள் மின் கம்பம் மீது விழுந்ததில் மின் ஒயர்கள் அறுந்தது. மின் கம்பங்களும் உடைந்தன. மரம் ரோட்டில் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்தன.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    48 அடி அளவு கொள்ளளவு கொண்ட பேச்சிப் பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 4.80 அடியாக இருந்தது. அணைக்கு 534 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 460 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 59.10 அடியாக இருந்தது. அணைக்கு 286 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 8.75 அடியாக இருந்தது.

    சானல்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாசன குளங்களும் நிரம்பி வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள 2000-க்கு மேற்பட்ட குளங்களில் 250-க்கு மேற்பட்ட குளங்கள் நிரம்பி வழிகின்றன.

    திருவட்டார், குலசேகரம், ஈத்தாமொழி பகுதிகளில் இன்று காலையிலும் தொடர்ந்து சாரல்மழை பெய்தது. மழை பெய்து வருவதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கன்னிப்பூ சாகுபடிக்காக நாற்று பாவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-51.6, பெருஞ்சாணி - 38.8, சிற்றாறு 1-31.6, சிற்றாறு 2-30.4, மாம்பழத்துறையாறு-112, நாகர்கோவில்-96, பூதப்பாண்டி - 54, சுருளோடு- 60, கன்னிமார் - 11, முள்ளங்கினாவிளை - 54, புத்தன் அணை- 41, திற்பரப்பு -72, ஆரல்வாய்மொழி- 13, குருந்தன்கோடு - 154, பாலமோர் - 22, மயிலாடி -63, கொட்டாரம் - 44, இரணியல் -47, ஆணைக்கிடங்கு - 112, குளச்சல் - 64, அடையாமடை - 48, கோழிப்போர்விளை - 52.

    ×