search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்கலை அருகே 4 வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தி பெண்கள் போராட்டம்
    X

    தக்கலை அருகே 4 வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தி பெண்கள் போராட்டம்

    குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில் தக்கலை அருகே பணியை தடுத்து நிறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தக்கலை:

    குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை அமைக்கும் பணி வேகமாக நடக்கிறது. தற்போது தக்கலை அருகே சேவியர்புரத்தில் சாலை அமைக்கும்பணி தொடங்கி உள்ளது.

    இப்பகுதியைச் சுற்றி மாங்கரம், மடத்து விளை, நெடுவிளை, நெஞ்சந்தி விளை, அண்ணாநகர் காலனி, திருவள்ளுவர் காலனி, புதூர் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களுக்கு செல்லும் இணைப்பு சாலைகள் அனைத்தும் 4 வழிச்சாலை அமையும் பகுதியை ஒட்டியே உள்ளது.

    4 வழிச்சாலை பணிகள் தொடங்கினால் இக்கிராமங்களுக்கு செல்லும் இணைப்பு சாலைகள் துண்டிக்கப்படும். இதனால் கிராமங்களில் வாழும் மக்கள் நகர்ப்புறத்திற்கு வர பல கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் நிலை ஏற்படும்.

    மேலும் இக்கிராமங்களுக்கு வந்து செல்லும் மினி பஸ்களும் நிறுத்தப்படும். இதனால் கிராம மக்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுவார்கள். எனவே இக்கிராமங்களில் 4 வழிச்சாலை அமையும் முன்பு இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

    இக்கோரிக்கையை வலியுறுத்தி நேற்று பிற்பகல் சேவியர்புரம் பகுதியில் கிராமமக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். பிற்பகல் தொடங்கிய இப்போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது.

    இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என கிராமமக்கள் அறிவித்தனர்.

    மேலும் போராட்டக்காரர்களுக்காக கஞ்சி காய்ச்சும் பணியும் தொடங்கியது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மாற்றுபாதை ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பிறகே 4 வழிச்சாலை பணிகள் தொடரும் என்றும் கூறினர்.

    இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #tamilnews
    Next Story
    ×