search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்: மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
    X

    குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்: மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

    குமரி மாவட்டத்தில் உள்ள 42 மீனவ கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
    நாகர்கோவில்:

    வடகிழக்கு வங்கக்கடலில் ஒடிசாவை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 60 கிலோ மீட்டர் வேகத்துக்கு காற்று வீசக்கூடும் எனவும், கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பான எச்சரிக்கை குமரி மாவட்ட மீனவர்களுக்கு விடுக்கப்பட்டது. மீனவளத்துறை அதிகாரிகள், கடற்கரை கிராம பங்குத்தந்தைகளுக்கு கடல் சீற்றம் காரணமாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். இதையடுத்து மீனவர்கள் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த தங்கள் கட்டுமரங்கள், வள்ளங்கள், படகுகளை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வந்து நிறுத்தினர். கடல் சீற்றம் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள கட்டுமரம், வள்ளம், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    குமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் பகுதியில் பயங்கர சூறைக்காற்று வீசுவதால் சீற்றம் அதிகமாகி அலைகள் கரையைவந்து முட்டி மோதுகிறது. நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையுள்ள 42 மீனவ கிராமங்களிலும் இந்த சீற்றத்தை காணமுடிந்தது.

    நித்திரவிளை அருகே உள்ள பூத்துறை, தூத்தூர் பகுதியில் ஏற்பட்ட சீற்றம் காரணமாக அந்த பகுதியில் உள்ள கடலரிப்பு தடுப்புச்சுவர்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. மேலும் ஊருக்குள் தண்ணீர் புகுந்து வீடுகளை சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

    இதேபோல மார்த்தாண்டன் துறை, வள்ளவிளை, இறையுமன்துறை, தூத்தூர், ராஜாக்கமங்கலம் துறை, கோவளம், அழிக்கால் போன்ற பகுதிகளிலும் கடல் சீற்றம் காணப்படுகிறது.

    குளச்சல், முட்டம் பகுதிகளில் ராட்சத அலைகள் கரையை நோக்கி சீறிப்பாய்கின்றன. பொதுமக்கள் கடற்கரையில் அமர்ந்து கடல் அழகை ரசிக்கும் மணல் திட்டுகள் வரை இந்த அலைகள் வந்து செல்வதால் அதை பார்ப்பதற்கு அச்சம் ஏற்படும் வகையில் உள்ளது.

    சுற்றுலா பயணிகள் இங்குள்ள கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா போலீசாரும் கடற்கரைகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக இன்று 3-வது நாளாக விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. #tamilnews
    Next Story
    ×