search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krishna Jayanti"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குச்சியினால் ஓட்டை செய்து, பால், தயிர் ஆகியவற்றைக் குடித்துவிட்டு ஓடுகிறான்.
    • சின்னஞ்சிறிய அந்த பவள வாய்க்குள் அண்ட சராசரங்களும் தெரிந்தன.

    * குழந்தையாக இருக்கும் போதே கிருஷ்ணன் தன்னை கொல்லவந்த பூதனை, சகடாசுரன், திருணாவர்த்தன் ஆகியோரை கொன்றான்.

    * குழந்தை பருவத்தில் கிருஷ்ணனும் பலராமனும் தவழ்ந்து சென்று பலவித லீலைகளில் ஈடுபட்டனர். மாடுகள் மற்றும் அவற்றின் கன்றுகள் இருக்கும் தொழுவத்துக்கு சென்று அவற்றின் வாலை பிடித்து இழுத்து விளையாடினர்.

    *ஆயர்குல சிறுவர்களை அழைத்துக்கொண்டு கோபியர்களின் வீடுகளுக்குச் சென்று யாரும் அறியா வண்ணம் பால், தயிர், வெண்ணெயை எடுத்து உண்டு மகிழ்ந்தார்கள்.

    * கோகுலத்து பெண்கள் ஸ்ரீகிருஷ்ணரை பிடிக்க முயற்சித்தும் முடியவில்லை. ஒருநாள் கோபியர்கள் யசோதையிடம் வந்து கிருஷ்ணரைப்பற்றிக் குறை கூறினார்கள்.

    'அம்மா! உங்கள் மகன் கிருஷ்ணன் எங்கள் வீடுகளில் புகுந்து வெண்ணெய் திருடித் தின்கிறான். உரலின் மீதேறி, உரியில் உள்ள பானைகளைக் குச்சியினால் ஓட்டை செய்து, பால், தயிர் ஆகியவற்றைக் குடித்துவிட்டு ஓடுகிறான்' என்று புகார் செய்தார்கள். ஸ்ரீகிருஷ்ணர் அப்பாவியாய் நடித்து தாயை நம்ப வைத்தார்.

    * ஒருமுறை வெண்ணெய் திருடும்பொழுது மதுகரவேணி என்ற பெண், கிருஷ்ணனை கையும் களவுமாகப் பிடித்து விட்டாள். யசோதையிடம் அழைத்துச் சென்றாள். அப்போது கிருஷ்ணன் அப்பெண்ணின் முகத்தில் கரி இருப்பதாகக் கூறினார். தான் துடைத்து விடுவதாகக் கூறினார். அதைக்கேட்ட மதுகரவேணி குனிந்து நின்றாள். உடனே, தன் கையில் இருந்த வெண்ணெயை அவளது கையிலும் வாயிலும் தடவி விட்டு தன் தாயான யசோதையை அழைத்தான்.

    அங்கு வந்த யசோதையிடம், 'அம்மா! இந்தப் பெண் தன் கணவனுக்குத் தெரியாமல் வெண்ணெ யைத் தின்று விட்டு என்மீது பழியைப் போடுகிறாள். இவளது வாயில் வெண்ணெய் ஒட்டிக்கொண்டு இருக்கிறது பார்' என்று கூறிக் காட்டினான். இதைக்கேட்ட யசோதை மதுகரவேணியைப் பார்த்து, 'நீ தவறு செய்துவிட்டு என் குழந்தைமீது பழி போடுகிறாயா?' என்று கேட்டாள். இதைக் கேட்ட மதுகர வேணி 'அம்மா உன் மகன் மாயாவி கிருஷ்ணன், என் வாயில் வெண்ணெ யைத் தடவி விட்டு ஏமாற்றுகிறான்' என்றாள். யசோதை, ஸ்ரீகிருஷ்ணன் சொன்னதையே நம்பினாள்.

    * ஒருமுறை கிருஷ்ணன் மண்ணைத் தின்று விட்டதாக, அவனுடைய தோழர்கள் யசோதையிடம் தெரிவித்தனர். யசோதை, 'கிருஷ்ணா! நீ மண்ணைத் தின்றாயா?' என்று அதட்டிக் கேட்டாள். 'இல்லை யம்மா' என்று அப்பாவிக் குழந்தைபோல் கண்ணன் மறுத்துக் கூறினான். ' அப்படியானால், வாயைத் திறந்துகாட்டு' என்றாள் யசோதை. கிருஷ்ணன், தன் பவளவாயைத் திறந்து காட்டினான். குழந்தை கிருஷ்ணன் வாய்க்குள் மண் இருக்கிறதா என்று பார்த்த யசோதைக்கு அதிசயம் காத்திருந்தது.

    சின்னஞ்சிறிய அந்த பவள வாய்க்குள் அண்ட சராசரங்களும் தெரிந்தன. அஷ்டதிக்குப் பாலகர்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், நவக்கிரகங்கள், தீவுகள், அஷ்ட நாகங்கள், தேவர்கள், மூவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மாடமாளி கைகள், கூட கோபுரங்கள் உட்பட உலகிலுள்ள அனைத்தும் தெரிந்தன. இந்த அதிசயத்தைக் கண்டு மயங்கி நின்றாள் யசோதை. பின் தனது மாயையால், இந்த நிகழ்ச்சியை யசோதையின் நினைப்பில் இருந்து நீங்கிடுமாறு செய்தான் கிருஷ்ணன். இது போன்று பால பருவத்தில் பல லீலைகளை கிருஷ்ணர் நிகழ்த்திக் காட்டினார்.

    • ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும்.
    • அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும்.

    கிருஷ்ண பரமாத்மாவை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?

    ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை போட்டுக் கொள்ளவும். ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும். கிருஷ்ணகமல பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும். மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும். அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும். பூக்களை நீள்வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும். சந்தனம், தாழம்பூ, மல்லிகை, மணம் கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும்.

    வாசனை திரவியங்களில் சந்தனம் உபயோகிக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

     பூஜை செய்யும் முறை

    கிருஷ்ண ஜெயந்தி அன்று, குழந்தை கண்ணனை வரவேற்கும் விதத்தில் மாக்கோலமிட வேண்டும். வாசல் முதல் வீட்டுக்குள் இருக்கும் பூஜையறை வரை பிஞ்சுக் கண்ணனின் பாதத்தை வரைய வேண்டும். இதனால், கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம். ஆயர்பாடியில் கண்ணனை வரவேற்க சித்திரகோலம், மலர் அலங்காரம், பூக்கோலம் போடுவார்கள். அதை நமது இல்லங்களிலும் செய்யலாம்.

    அன்று காலை லட்சுமியின் அம்சமான பசுவுக்கு உணவு அளிக்க வேண்டும். கண்ணனுக்கு மிகவும் பிரியமான பால், தயிர், வெண்ணெய், சீடை, முறுக்கு, நாவல்பழம், அவல் படைக்க வேண்டும். துவாதச மந்திரமான 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்னும் மந்திரத்தை 108 முறை ஜெபித்து, மலர்களை அவரது படத்திற்கு தூவ வேண்டும். தூப தீபம் காட்ட வேண்டும். பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும்.

    • ஸ்ரீகிருஷ்ணனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
    • ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    ஆலயங்களில் கிருஷ்ண ஜெயந்தியன்று ஸ்ரீகிருஷ்ணனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது கிருஷ்ண அஷ்டோத்திரம் சொல்லப்பட்டு பூஜை செய்யப்படும். சில ஆலயங்களில் கலசங்கள் வைத்து ஹோமங்கள் செய்து கலசநீரால் ஸ்ரீகிருஷ்ணனுக்கு அபிஷேக ஆராதனை செய்விக்கப்படும்.

    பெண்கள் கோபிகா கீதம், திருப்பாவை முதலியவற்றில் இருந்து பாடல்களைப்பாடுவார்கள். நாராயணீயத்தில் இருந்து கிருஷ்ண லீலைகள் பற்றிய பாடல்களைப்பாடுவார்கள். ஆண்கள், கிருஷ்ணனின் பெருமைகளை பஜனைப் பாடல் களாகப் பாடுவார்கள். இசைக்கருவிகளான மத்தளம், ஆர்மோனியம், புல்லாங்குழல், கஞ்சிரா, ஜால்ரா போன்றவை பயன்படுத்தப்பட்டு எங்கும் 'ஹரே ராமாஹரே கிருஷ்ணா, என்ற கோஷங்கள் ஒலிக்கும்.

    ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும். சில ஆலயங்களில் கிருஷ்ண லீலைகள் நாடகமாக நடித்துக் காட்டப்படும். கேரளா போன்ற இடங்களில் 'மோகினி ஆட்டம்' நடைபெறும். சில ஆலயங்களில் உறியடி நிகழ்ச்சிகளும் நடைபெறும். இரவு உற்சவர் புறப்பாடு நடைபெறும். உற்சவர் வீதி உலா வரும்போது பின்னால் பஜனை செய்து கொண்டு பக்தர்கள் வருவார்கள். முன்னால், கிருஷ்ணர் ராதை வேடமிட்டவர்கள் ஆடிப்பாடிக் கொண்டு செல்வார்கள். பறைகள் முழங்க, கொம்புகள் ஊத, நாதஸ்வரம் ஒலிக்க ஸ்ரீகிருஷ்ணர் வீதி உலா வருவார்.

    பகவான் திரும்ப ஆலயத்துக்குள் எழுந்தருளியதும் ஆரத்தி காட்டப்படும். மங்கள வாத்தியங்கள் முழங்க, கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடுகள் நிறைவடையும். பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்படும். இவ்வாறு ஆலயங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா பலவித முறைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. வழுக்குமரம் ஏறுதல், உறியடி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

    • அரசியல் ஞானம் உண்டாகும். நிர்வாக திறன் அதிகரிக்கும்.
    • வறுமை இல்லா வாழ்வு அமையும்.

    நமது பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. தென்னகத்தில் `கோகுலாஷ்டமி' என்றும், வட இந்தியாவில் `ஜென்மாஷ்டமி' என்றும் இது அழைக்கப்படுகிறது. எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார்.

    அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர்-தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார். பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் கிருஷ்ணன் காட்சியளித்தான்.

    பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க சாதாரணக் குழந்தை வடிவானான். மூன்று வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணனின் இளம் வயது கழிந்தது.

    தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி, பெற்றோரையும் விடுவித்தான் கிருஷ்ணன். அவதாரங்களுள் ஒருவரான `ஸ்ரீ கிருஷ்ண பகவானின் ஜென்மாஷ்டமி கிருஷ்ணஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அன்று மக்கள் இனிப்புகள், காரங்கள் செய்து குறிப்பாக சீடை வகைகள் பல செய்து கண்ணனுக்கு நிவேதனம் செய்து மகிழ்வர்.

    அரிசி மாவினால் கண்ணனின் காலடிகளை இட்டு கோபாலனை தத்தம் இல்லங்களுக்குப் பெண்கள் அழைப்பர். அன்று பல கோவில்களில் "உறியடி'' திருவிழா நடைபெறும். மங்களகரமான இந்நாட்களில் ஜகத்தில் உள்ள பக்தர்களுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கிருஷ்ண பரமாத்மா அருள நாம் அவரை "கீத கோவிந்தம்'', "ஸ்ரீமந் நாராயணீயம்'', "ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம்'' போன்ற பல ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்குவோம். "ஆயர்பாடி கண்ணனை ஆராதிப்போம்!

    வழிபாட்டு முறை:

    கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் மாலை 6 மணிக்கு கண்ணனின் படத்தை அலங்கரித்து நெய் விளக்கு ஏற்ற வேண்டும். குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரிக்க வேண்டும்.

    தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு போன்ற பூஜை பொருட்களுடன் கண்ணனுக்கு பிடித்தமான சீடை, முறுக்கு, தட்டை, லட்டு, அதிரசம், முந்திரி, பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ கலந்த கோதுமை பொங்கல், இனிப்பு பூரி, மோர் குழம்பு, ரவா லட்டு, தேன்குழல், சர்க்கரை கலந்த வெண்ணை, பாசிப் பருப்பு பாயாசம் போன்ற பிரசாதங்களை படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

    "ஊரில் உள்ள அத்தனை குழந்தைகளையும் கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரித்து கோவிலுக்கு அழைத்து செல்வார்கள். ஆடல்-பாடல் கோலாட்ட நிகழ்ச்சிகள், குழந்தைகள் ஆடுவதை பார்க்கும் போது கண்ணன் ஒவ்வொரு கோபியர்களிடமும் ஆனந்த நடனம் ஆடிய தீராத விளையாட்டு பிள்ளையை நினைவுபடுத்தும். இவ்வேடமிட்ட குழந்தைகள் புத்திசாலியாக செயல்படுகிறார்கள்.

    பலன்கள்: கிருஷ்ண ஜெயந்தியில் கண்ணனை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகிழ்ச்சி தங்கும், அகந்தை அகலும், மூர்க்க குணம் குழந்தைக்கு ஏற்படாது. தர்மசீலராக இளைஞர்கள் வருவார்கள். அரசியல் ஞானம் உண்டாகும். நிர்வாக திறன் அதிகரிக்கும்.

    திருமணத் தடைகள் அகலும், செல்வம் பெருகும்.வயல்களில் விளைச்சல் அதிகரிக்கும், ஆடு, மாடுகள் பல்கி பெருகும், கடன் தீரும், பகைமை ஒழியும், நண்பர்கள் கூட்டு தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். புகழ் கூடும். அமைதி நிலவும், ஆற்றல் பெரும், வறுமை இல்லா வாழ்வு அமையும்.

    வழிபாடு செய்யும்போது கோவிந்தா என்று அழைத்து வழிபாடு செய்தால் அதிக பலன்களை பெறலாம். அதன் பொருள் பசுக்களின் தலைவன் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவன். பூமியை தாங்குபவர். வேண்டுவதால் அடையக் கூடியவன் என்பதாகும். இதனால்தான் ஆதிசங்கரரும், பஜகோவிந்தம் பாடுங்கள் அது மரண பயத்தை போக்கும் மந்திரம் என்றார்.

    கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை வீட்டில் குழந்தைகளுடன் கொண்டாடும் போது கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். ராஜதந்திரம் அதிகரிக்கும், அரசியல் சாணக்கியத் தன்மை அதிகரிக்கும். பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்திசாலித்தனம் கூடும். எளிமையாகவும், சுருக்கமாகவும், புரிந்து கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும்.

    திருமண தடை நீங்கும்:

    எதிரிகள் அஞ்சிடுவர், நாகதோஷம் நீங்கும், திருமண தடை நீங்கும்.இவ்வாலயம் கும்பகோணத்தில் இருந்து ஆவூர் வழியாக தஞ்சை செல்லும் சாலையில் ஊத்துக்காட்டில் உள்ளது. காம தேனு இறைவனின் அழகை கண்டுகளித்து இசையில் நனைந்த இடமான தேனு சுவாசபுரம் என்று அழைக்கப்பட்ட மூச்சுக்காடு எனும் ஊத்துக்காடு ஆகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இவ்வாலயம் சென்று வழிபட்டு வரமேன்மை காண்பார்கள்.

    கண்ணன் பிறந்த மதுராவில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. யமுனை கரையோரம் கண்ணன் விளையாண்ட கேசியார்ட், கோவர் தனன் ராதை பிறந்த பட்சனா மகாபன் கோகுலம், நந்தி கிராமம் என்ற இடங்களில் மிகவும் பிரமாண்ட முறையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. நாமும் கிருஷ்ண ஜெயந்தி அன்று நம் வீடுகளில் கண்ணனை அழைத்து வழிபட்டு ஏராளமான பலன்களை பெற்றிடுவோம்.

    • நான்கு அவதாரங்கள் சங்குசக்கரத்துடன் காட்சியளிக்கின்றன.
    • தும்பிக்கையாழ்வார் என்ற நாமத்தோடு விநாயகர் பன்னிரு ஆழ்வார்களுடன் அமைந்துள்ளார்.

    நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே வீரகேரளம்புதூரில் நவநீதகிருஷ்ணன் சுவாமி கோவில் உள்ளது. `நவநீதம்' என்றால் "வெண்ணெய்" எனப்பொருள். கிருஷ்ணருக்கு பிடித்தது வெண்ணை. இதனால் அவர் நவநீத கிருஷ்ணர் என பெயர் பெற்றார்.

    இந்த கோவில் கர்ப்பகிரஹத்தில் "ஸ்ரீ நவநீதகிருஷ்ணன்" இரு திருக்கரங்களிலும் வெண்ணெய் ஏந்தியவாறு புன்முறுவலுடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

    கற்பூர ஆரத்தியின்போது அவரது திருமுகத்தில் தவழும் புன்னகை அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும். கர்ப்ப கிரஹத்தின் முன்பு உள்ள மண்டபத்தில் "ஸ்ரீ தேவி, பூமாதேவி நாச்சியார்கள்" சமேதராக "ஸ்ரீ நவநீதகிருஷ்ணன்" அருள்பாலித்து வருகிறார்.

    கர்ப்பகிரஹத்தின் மேலே செப்புக்கலசத்துடன் கூடிய விமானம் உள்ளது. இவ்விமானத்தில் "கிழக்கு முகமாக ஸ்ரீநவநித கிருஷ்ணனும், தெற்கு முகமாக ஸ்ரீ தட்சிணா மூர்த்தியும், மேற்கு முகமாக ஸ்ரீ யோக நரசிம்மரும்,வடக்கு முகமாக ஸ்ரீ பிரம்மாவும்" எழுந்தருளியுள்ளனர்.

    இத்தலத்தில் பெருமாளின் பத்து அவதாரங்களும் உள்ளனர். மச்சவதாரம், கூர்மவதாரம், வராகவதாரம், நரசிம்மவதாரம் ஆகிய நான்கு அவதாரங்கள் சங்குசக்கரத்துடன் காட்சி அளிக்கின்றன. வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், ராம அவதாரம் வில்லன்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், கிருஷ்ணவதாரம் கையில் வெண்ணையுடனும் இருக்கின்றன.

    கல்கி அவதாரம் கையில் கேடயமும், வாளும் ஏந்தியிருக்கிறது. இந்து மதத்தில் நல்ல உடல்நலத்திற்காக வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் தன்வந்திரி ஒன்றாகும். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் இந்த வடிவம் , தசாவதாரத்திற்குள் சேருவதில்லை. பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தன்வந்திரி (தனிக்கோயிலில்) காணப்படுகிறார்.

    இந்து மத வேதங்கள் மற்றும் புராணங்கள் தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுகிறது.

    இங்கு இத்திருக்கோயிலின் தன்வந்திரி பகவான் தனி சன்னதியில் உள்ளார். பிரணவ சொரூபியான விநாயகப்பெருமான் தும்பிக்கையாழ்வார் என்ற நாமத்தோடு ஆலயத்தில் பன்னிரு ஆழ்வார்களுடன் அமைந்துள்ளார்.வைணவத்தை வாழவைத்த ராமானுஜர் தனி சன்னதியில் உள்ளார். உற்சவமூர்த்திக்கு எதிரில் "பெரிய திருவடி"என்றழைக்கப்படும் "ஸ்ரீ கருடாழ்வார்" பெருமாளை நோக்கி கைகூப்பி வணங்கிய நிலையில் எழுந்தருளி உள்ளார்.

    உற்சவர் எழுந்தருளி உள்ள மண்டபத்தின் வடக்குத் தூணில் "சிறிய திருவடி" என்று போற்றப்படும் "ஸ்ரீ ஆஞ்சநேயர்" அருள்பாலிக்கிறார்.பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பாக கொடியேற்றமும் உத்திரம் அன்று தேரோட்டம் நடைபெறுகிறது. மொத்தம் பதினொரு நாட்கள் திருவிழா நடைபெறும்.

    தை பொங்கல் மறுநாள் பாரிவேட்டையும்,தசராவில் பத்து நாட்களுக்கு கொலு வைபவும் ,வைகுண்ட ஏகாதசியில் சொர்க்க வாசல் திறப்பு விழாவும் ,கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் அன்று சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். தமிழ் மாதம் கடைசி சனிக்கிழமையும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். வாரத்தில் புதன், வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய அனைத்து விழாக்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய விசேஷ நாட்களில் இத்தலத்திற்கு வந்து அருகில் உள்ள சிற்றாற்றில் நீராடி விட்டு கிருஷ்ணரை தரிசித்து, பால்பாயாசம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கிருஷ்ணர் தன்னைப்போலவே ஒரு அழகான குழந்தை பிறக்க வரமளித்திடுவார் என்பது ஐதீகம்.

    இந்த கோவிலில் தல விருட்சமாக நெல்லி மரம் உள்ளது.

    • மருதூர் கிருஷ்ணரை தரிசித்தால் பிறப்பற்ற வாழ்வை அருள்வார்.
    • குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் திரட்டுப்பால் செய்து வழிபாடுகிறார்கள்.

    நெல்லையில் இருந்து சீவலப்பேரி செல்லும் சாலையில் உள்ளது மருதூர். இங்கு புகழ் பெற்ற நவநீத கிருஷ்ணர் கோவில் உள்ளது. மருதூர் அணைக்கட்டின் அருகே தாமிரபரணி கரையில் இந்த கோவில் அமைந்துள்ளது. கண்ணன் வெண்ணை திருடி உண்டதால் கோபம் அடைந்த யசோதா, கண்ணனை உரலில் கட்டிப்போட்டாள். அந்த உரலை கண்ணன் இழுத்தப்படி சென்றான்.

    அப்போது இரு மருத மரங்களுக்கிடையே உரல் சிக்கிக் கொண்டது. கண்ணன் கைகள் பட்டதும் மருத மரங்களாக இருந்த குபேரன் மகன்கள் நளகூபன், மணிக்ரீவன் சாபவிமோசனம் பெற்றனர். அவர்கள் மருத மரங்கள் உள்ள ஊர்களில் எல்லாம் கிருஷ்ணர் காட்சி தர கேட்டுக் கொண்டார். அந்த ஐதீகத்தின் அடிப்படையில் மருதூரில் கிருஷ்ணர் ஆலயம் அமைந்துள்ளது.

    இங்கு மூலவர் நவநீதகிருஷ்ணன் 4 அடி உயரத்தில் சிரித்த முகத்துடன் கேட்டவருக்கு கேட்டவரம் தருபவராக நின்று அருள்பாலிக்கிறார். அருகே இரண்டடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன கிருஷ்ணர் இரண்டு வயது பாலகனாக அரை சலங்கையுடன், இருகைகளிலும் வெண்ணெய் ஏந்தி சிறு தொந்தி வயிற்றுடன் அருள் பாலிக்கிறார்.

    எதிரில் நாலடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன கருடாழ்வார், பக்தர்களின் குறைதீர்க்கும் கிருஷ்ணன் அழைக்கும் குரலுக்கு ஓடி வர தயாராக நிற்கிறார். குறிப்பாக ஏகாதசி விரதம் இருந்து மருதூர் கிருஷ்ணரை தரிசித்தால் பிறப்பற்ற வாழ்வை அருள்வார்.

    குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய விசேஷ நாட்களில் இத்தலத்திற்கு வந்து தாமிரபரணி ஆற்றில் நீராடி விட்டு கிருஷ்ணரை தரிசித்து, பால்பாயாசம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கிருஷ்ணர் தன்னைப்போலவே ஒரு அழகான குழந்தை பிறக்க வரம் அளித்திடுவார் என்பது ஐதீகம்.

    விட்டிலாபுரம் பாண்டுரங்கன்

    நெல்லை மாவட்டம் விட்டிலாபுரத்தில் பாண்டுரங்கன் ஆலயம் உள்ளது.இங்கு சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோயிலின் முன்பக்கம் 16 கால் மண்டபம். அடுத்து பெரிய மண்டபத்தில் பலிபீடமும், கொடிமரமும் அமைந்துள்ளது. கோபுரத்தை விட உயரமாக காட்சிதருகிறது இக்கொடிமரம். மேற்கு நோக்கிய கருடாழ்வார் சன்னதியைத் தாண்டி சென்றால் கருவறை உள்ளது.

    அதில் நான்கடி உயரத்தில் நின்ற கோலத்தில் இடுப்பில் கை வைத்தபடி, கருணைப்பார் வையால் காத்து ரட்சிக்கும் பாண்டுரங்க விட்டலேஸ்வரர், அருகே பாமா, ருக்மணி காட்சியளிக்கின்றனர். கருவறைக்கு முன்னால் உற்சவர் நான்கு திருக்கரத்துடன் பாமா, ருக்மணி, பூமாதேவி, ஸ்ரீதேவி, நீளாதேவியுடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் பாமா, ருக்மணி, சேனை முதல்வர், உடையவர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதி உள்ளது.

    ருக்மணி சன்னதியில் அற்புதமாக வேலைப்பாடுகள் அமைந்துள்ளது. இசை, நாட்டியம் இவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் அரங்கேற்றத்திற்கு முன் இங்குள்ள பாண்டுரங்கனை வழிபடுகிறார்கள். திருமணம் வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் திரட்டுப்பால் செய்து வழிபாடு செய்கிறார்கள்.

    குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க பால்பாயாசம் படைத்து வழிபடுகிறார்கள்.16ம் நூற்றாண்டில் விஜயநகரப்பேரரசின் தமிழகப்பிரதிநிதியாக விட்டலராயன் என்ற விட்டல தேவன் ஆட்சி செய்தார். இவருக்கு பண்டரிபுரம் பாண்டுரங்கன் மீது அதிக ஈடுபாடு இருந்தது.

    இவரது கனவில் பாண்டுரங்கன் தோன்றி வடக்கில் இருப்பது போல தென்னகத்தில் உனது இருப்பிடத்திலும் அருள்பாலிக்க உள்ளேன். எனவே தாமிரபரணி ஆற்றில் புதைந்து கிடக்கும் எனது விக்ரகத்தை எடுத்து கோயில் கட்டி வழிபடு,'' எனக் கூறி மறைந்தார். பாண்டுரங்கன் கூறியது போலவே ஆற்றில் இருந்து விக்ரகம் எடுக்கப்பட்டது.

    ஆற்றில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் தன் பெயரால் விட்டலாபுரம் என்ற நகரை உருவாக்கி, நகரின் நடுவே கோயில் கட்டி விக்ரக பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இவரது திருப்பணியில் மகிழ்ந்த பாண்டுரங்கன் இவர் முன் தோன்றி `வேண்டிய வரம் கேள்,' என்றார்.

    விட்டலராயனும், `பெருமாளே! தங்கள் சன்னதியை நாடி வரும் பக்தர்களின் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பெருக வேண்டும். உனது சன்னதிக்கு வந்து பாடி நிற்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களை தந்தருள வேண்டும்,' என வேண்டினார். தன்னலமற்ற இந்த வேண்டுதலை ஏற்ற பெருமாள், அன்றில் இருந்து இத்தலத்தில் கேட்டவருக்கு கேட்டவரம் தந்து அருள்பாலித்து வருகிறார்.

    • கிருஷ்ண பகவான் ருக்மணி, சத்ய பாமாவுடன் காட்சி அளிக்கிறார்.
    • திருமாங்கல்ய தோஷ நிவர்த்திக்கு உரிய திருத்தலமாகும்.

    புதுவை முத்தியால்பேட்டை தெபேசன்பேட் வீதியில் வேணுகோபாலசுவாமி கோவில் உள்ளது. இங்கு கிருஷ்ண பகவான் ருக்மணி, சத்ய பாமாவுடன் காட்சி அளிக்கிறார்.

    நெசவு தொழில் செய்து வந்த பத்மசாலிய சமூகத்தினர் இதை உருவாக்கினர். முதலில் மூலிகைகளாலும் தங்க இழைகளாலும் உருவாக்கப்பட்ட கிருஷ்ணனின் படங்கள் வைக்கப்பட்டு இங்கு பஜனை நடந்து வந்தது. பின்னர் 1922-ல் வேணுகோபால சுவாமியாக சிலை அமைக்கப்பட்டது.

    இங்கு பத்மசாலியர்களின் குலதெய்வமான பாவண மகரிஷி மற்றும் அவரது மனைவி பத்ராவதி அம்மை ஆகியோருக்கும் சிலை உள்ளது. சந்தான கிருஷ்ணனின் உருவமான குழந்தை கிருஷ்ணனுக்கும் இங்கு சிலை வழங்கப்பட்டுள்ளது.

    ஆஞ்சநேயருக்கு என தனி சன்னிதி உள்ளது. தமிழ், தெலுங்கு புத்தாண்டு நாட்களில் இங்கு விஷேச பூஜை நடைபெறும். ஆடி பூரம், பங்குனி மாத ராமநவமி, மார்கழி மாத ஏகாதசி அனுமன் ஜெயந்தி நாட்களிலும் இங்கு விசேஷ பூஜைகளை காண பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.

    கிருஷ்ணஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு வெண்ணெய் தாழி அலங்காரம் செய்யப்பட்டு உறியடி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் இங்கு நடக்கிறது. மாசிமாத தீர்த்த வாரியில் வேணுகோபால சுவாமி உற்சவரும் கலந்து கொள்கிறார்.

    இந்த கோவில் திருமாங்கல்ய தோஷ நிவர்த்திக்கு உரியது ஆகும். மேலும் இங்கு சந்தான கிருஷ்ணரும் அருள்பாலிப்பதால் குழந்தை வரமும் வழங்கும் கோயில் என்கிற ஐதீகமும் உள்ளது. இங்கு உள்ள ஆஞ்சநேய சுவாமி நவக்கிரக தோஷ நிவர்த்தி வழங்குகிறார்.

    • தென்னிந்தியாவிலேயே இந்த சிலை பெரிய சிலை என கூறப்படுகிறது.
    • கிருஷ்ணர் கோவில் அருகில் கலிகண்ட மகாதேவர் சிவன் கோவில் உள்ளது.

    குமரி மாவட்டம் கருங்கல் உள்ள திப்பிறமலையில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் கிருஷ்ணர் சிலை 13 அடி உயரம் கொண்டது.

    தென்னிந்தியாவிலேயே இந்த சிலை பெரிய சிலை என கூறப்படுகிறது. இது தன்னை பெற்றெடுத்த தாய், தந்தையருக்கு கருவில் இருக்கும்போதே விஸ்வரூப காட்சி அளித்த நிலையாகும். எனவே இந்த கோவில் கருமாணித்தாழ்வார் ஸ்ரீகிருஷ்ணன் கோவில் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

    கிருஷ்ணர் சிலை முற்காலத்தில் தானாக வளர்ந்ததாகவும், இப்போதுள்ள கோவில் மூன்றாவது தடவையாக பிரித்து கட்டப்பட்டதாகவும், தானாக வளர்ந்து கொண்டிருந்த இந்த சிலையை முற்காலத்தில் பூஜை செய்து வந்த பூசாரி குறைபடுத்தி சிலையின் வளர்ச்சியை நிறுத்தியதாகவும் கதை ஒன்று சொல்கிறது.

    நம்பிக்கையுடன் வேண்டுவோருக்கு வேண்டுதலை நிறைவேற்றி சகல ஐஸ்வரியங்களையும் கிருஷ்ணர் அள்ளி அள்ளி தருவதாக அங்குள்ள பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.

    கிருஷ்ணர் கோவில் அருகில் கலிகண்ட மகாதேவர் சிவன் கோவில் உள்ளது. சுயம்புலிங்கமாக காட்சி அளிக்கும் சிவன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு இரண்டு கைகளையும் உயர்த்தி அருள்பாலிப்பதாக தேவபிரசன்ன தகவல்கள் கூறுகின்றன.

    சிவனை வழிபட்டு விட்டு இங்குள்ள 9 கிளைகளுடன் கூடிய அரசமரத்தை 9 முறை வலம் வந்தால் 9 கிரக தோஷங்களும் நீங்கி பாவங்களில் இருந்து விடுபடலாம் என சிவனடியார்கள் கூறு கிறார்கள்.

    அடுத்ததாக அங்கு நிற்கும் ஆல மரத்தடியில் வன சாஸ்தாவும் அருள்பாலிக்கிறார். இந்த 3 கோவில்களும் 3100 வருடங்கள் பழமையானவை என கூறப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு செய்யப்படும் பூரண சந்தன காப்பு அலங்காரம் கண்கொள்ளா காட்சி ஆகும். அன்றைய தினம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    • குழந்தை வடிவில், இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்ற கோலத்தில்கிருஷ்ணர் காட்சி தருகிறார்.
    • காவல் தெய்வமான பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார்.

    குழந்தை வரம் வேண்டி வழிபடும் பக்தர்கள் கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலை போன்று குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் குழந்தை ரூபத்தில் அருள்பாலிக்கும் கிருஷ்ணர் சிறப்பு வாய்ந்தவராக திகழ்கிறார்.

    இக்கோவிலின் மூலஸ்தானத்தில் கிருஷ்ணர் குழந்தை வடிவில், இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். அப்போது சுவாமி விசேஷ அலங்காரத்தில் தத்ரூபமாக குழந்தை போலவே காட்சியளிப்பார்.

    மறுநாள் உறியடி உற்சவம் நடக்கும். உற்சவர் ராஜகோபாலர் ருக்மிணி மற்றும் சத்யபாமாவுடன் காட்சி தருகிறார்.

    மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த போது, அவரது குழந்தை பருவத்தில் கிருஷ்ணர் என்றும், பசுக்களை மேய்க்கும் இளைஞனாக இருந்த போது ராஜகோபாலர் என்றும் அழைக்கப்பெற்றார்.

    இதன் அடிப்படையில் இங்கு மூலவராக கிருஷ்ணரையும், உற்சவராக ராஜ கோபாலரையும் வடித்துள்ளனர். மூலஸ்தானம் எதிரில் உள்ள கொடிமரத்தைச் சுற்றிலும், அஷ்டதிக் பாலகர்களின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

    முன்மண்டபத்தில் கருடாழ்வார் இருக்கிறார். நம்மாழ்வார், பெரியாழ்வார், விஸ்வக்சேனர் ஒரே சன்னதியில் காட்சி தருகின்றனர்.

    பிரகாரத்திலுள்ள காவல் தெய்வமான பூதத்தான், மரத்தாலான ஒரு தண்டத்தின் வடிவில் காட்சி தருகிறார்.பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் இருக்கும் பகுதி ஆதித்தவர்ம மகாராஜா ஆட்சி காலத்தில் அவரது எல்கைக்கு உட்பட்டு இருந்தது.

    குருவாயூரப்பனின் பக்தரான இவர், தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் குருவாயூரப்பனுக்கு கோவில் எழுப்ப ஆசைப்பட்டார். அவ்வேளையில் கிருஷ்ணர், கையில் வெண்ணெயுடன் குழந்தை கண்ணனாக அவனது கனவில் காட்சி தந்தார். குறிப்பிட்ட இடத்தில், தனக்கு கோவில் எழுப்பும்படி கூறினார்.

    அதன்படி கோவில் கட்டிய மன்னன், தான் கனவில் கண்ட வடிவத்திலான கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தான். சுவாமிக்கு நவநீத கிருஷ்ணர் (நவநீதம் என்றால் வெண்ணெய்) என திருநாமம் சூட்டினான்.

    இக்கோவிலில் தினமும் காலை 5.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, குழந்தை கிருஷ்ணரை வெள்ளி தொட்டிலில் கிடத்தி, தாலாட்டு பாடி பூஜிக்கின்றனர்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு கிருஷ்ணருக்கு வெண்ணெய் காப்பு செய்வித்து, பால்பாயாசம், உன்னியப்பம், பால், பழம், அரிசிப்பொரி, வெண்ணெய், அவல், சர்க்கரை படைக்கின்றனர். சித்திரை பிரம்மோற் சவத்தின் நான்காம் நாளில் கிருஷ்ணர் கையில் வெண்ணெய் பானையுடன், வெண்ணெய்த்தாழி உற்சவம் காண்கிறார்.

    இவ்விழாவின் ஏழாம் நாளில் இவர் இந்திர வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் விசேஷமாக நடக்கும். சித்ரா பவுர்ணமியன்று கிருஷ்ணர், இங்குள்ள பழையாற்றுக்கு சென்று ஆராட்டு வைபவம் காண்பார்.

    ஆடி கடைசி சனிக்கிழமையன்று இவருக்கு புஷ்ப அபிஷேகம் நடக்கிறது. அன்று மூலஸ்தானம் முழுவதும் மலர்களால் நிரப்பி, சுவாமியின் முகம் மட்டுமே தெரியும்படியாக அலங்கரிப்பர். இவ்வேளையில் சுவாமியை தரிசித்தால் மன நிம்மதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    • நவநீதகிருஷ்ணன் இரண்டு கைகளிலும் வெண்ணையுடன் சிரித்த முகத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
    • புத்திரதோஷம் உள்ளவர்கள் வெண்ணெய், சர்ககரை பொங்கல், அவல் படைத்து வழிபட்டால் பலன் கிடைக்கும்

    மதுரையில் எத்தனையோ கிருஷ்ணன் கோவில்கள் இருந்தாலும் பந்தடி 5-வது தெருவில் (விளக்குத்தூண் அருகே) உள்ள நவநீதகிருஷ்ணன் கோவிலுக்கு தனி சிறப்பு உண்டு.

    சுமார் 500 வருடங்களுக்கு முன்பு இக்கோவில் கட்டப்பட்டதாகும். இந்த கோவிலில் மூலவர் நவநீதகிருஷ்ணன் ஆவார். மகாலட்சுமி அம்மனும் இங்கு உள்ளது. எத்தனையோ திருவிழாக்கள் நடந்தாலும் இந்த கோவிலில் கோகிலாஷ்டமி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, விநாயகர் சதுர்த்தி விழாக்கள் மிகவும் பிரசித்தம். இவற்றையெல்லாம் பின்பற்றும் வகையில் நடக்கும் விழா கிருஷ்ணஜெயந்தி விழா என்றால் மிகையில்லை.

    இக்கோவிலின் முன்பு மண்டபத்தில் மகா கணபதி உள்ளார். சன்னதி முன்பக்கம் இடது புறம் ஆஞ்நேயரும், வலதுபுறம் கருடாழ்வாரும் உள்ளனர். இங்கு அருள்பாலிக்கும் நவநீதகிருஷ்ணன் இரண்டு கைகளிலும் வெண்ணையுடன் சிரித்த முகத்துடன் பாலகனாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நவநீதகிருஷ்ணன் வீதி உலா செல்வது கிடையாது. ஒவ்வொரு ரோகினி நட்சத்திரத்திலும் சாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது.

    கிருஷ்ணர் பிறந்த தினமான கோகுலாஷ்டமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படும். மறுநாள் மாலையில் பகவத்கீதை பாராயணம் நடக்கிறது. புத்திரதோஷம் உள்ளவர்கள் இவருக்கு வெண்ணெய், சர்ககரை பொங்கல், அவல் படைத்து வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.

    இந்த கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீநிவாசா மீது தொடர்ந்து 3 மாதங்கள் சூரிய ஒளி விழுவது சிறப்பு அம்சமாகும். தினமும் காலையில் கிருஷ்ணருக்கு பூஜை செய்யும்போது 27 நட்சத்திர தீபம் மற்றும் 108 தீபம் ஏற்றி தூபம் காட்டுகின்றனர்.

    இந்த கோவிலில் கண்டகி நதியில் கிடைத்த சாளக்கிராம கற்கள் இருக்கின்றன. சாளகிராமம் மற்றும் ஜடாரிக்கு தினமும் பாலாபிஷேகம் நடக்கிறது. இந்த தரிசனம் காண்போருக்கு வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    பொதுவாக பெருமாள் கோவில்களில் நவக்கிரக சன்னதி வைக்கப்படுவதில்லை. கண்ணன், காளிங்கன் என்ற நாகத்திற்கு முக்தி கொடுத்து அதன் மீது நின்று ஆடியவர் என்பதால் இங்கு ராகு, கேது கிரகங்கள் மட்டும் சிலை வடிவில் உள்ளன.

    • நவநீதகிருஷ்ணன் கோவிலில் உள்ள மூலவர் சிறு குழந்தை வடிவில் காட்சி அளிக்கிறார்.
    • மூலஸ்தான விக்ரகத்தை ஸ்ரீபழனிநாச்சி முத்துசுவாமிகள் சித்தர் பிரதிஷ்டை செய்தார்.

    மதுரை மாநகரில் பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு புராணத்தை உள்ளடக்கி இருக்கின்றன. அதேநேரத்தில் சில சமூகத்தினர் தங்களது இஷ்ட தெய்வத்தை பிரதிஷ்டை செய்தும், வணங்கியும் வந்தனர்.

    அந்த தெய்வங்களுக்கு பிற்காலத்தில் பெரிய அளவில் ஆலயங்கள் கட்டப்பட்டு வழி வழியாக வழிபட்டும் வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சிறப்பு பெற்ற கோவில்தான் வடக்குமாசி வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீராமஸ்வாமி ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோவில் ஆகும்.

    இக்கோவில் குறித்து கோவில் அர்ச்சகர் ஒருவர் கூறியதாவது:-

    தேரோடும் வீதியான வடக்கு மாசி வீதியிலே இக்கோவில் அமையப்பெற்றுள்ளது. இக் கோவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு யாதவ பெருமக்களால் நிர்மாணிக்கப்பட்ட தாகும். மூலஸ்தான விக்ரகத்தை ஸ்ரீபழனிநாச்சி முத்துசுவாமிகள் என்னும் சித்தர் தற்போதுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்து விட்டு சமாதியாகி விட்டார். அவரது சமாதியான தினத்தை இன்றளவும் யாதவப் பெருமக்கள் குருபூஜையாக ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாணத்தன்று நடத்துகிறார்கள்.

    முன்னொரு காலத்தில் இந்த பகுதி நந்தவனமாக இருந்தது. அந்த நந்தவனத்திலேயே ஒரு கம்பத்தடியில் ஸ்ரீ ஆஞ்சநேயர், கோவில் கொண்டிருந்தார். இதன் அருகே தான் மூலஸ்தான விக்ரகம் இருந்தது. அப்போது அதற்கு கம்பந்தடி கிருஷ்ணன் என்ற நாமம் இருந்தது.

    பூம்புகாரில் இருந்து மதுரை வந்த கோவலனையும், கண்ணகியையும் இங்குள்ள வடக்கு மாசி வீதி இடைச்சேரி பெண்ணான மாதரி தான் ஆதரித்ததாகவும், சிலப்பதிகாரத்தில் இருந்து தெரியவருகிறது. மேலும் இடைசேரி பெண்களால் ஸ்ரீநவநீதகிருஷ்ணனை முன்னிருத்தி பாடப்பெற்ற தாகவும் கூறப்படுகிறது.

    இந்த நவநீதகிருஷ்ணன் கோவிலின் உபகோவிலான ராமாயண சாவடி கோவிலும் இவ்வீதியில்தான் உள்ளது. பாண்டிய மன்னரிடம் கண்ணகி கோபம் கொண்டு, அங்கிருந்து வந்து கண்ணகி இளைப்பாரிய இடமும் இந்த ராமாயண சாவடி கோவில்தான்.

    ராமன் சன்னதி, விநாயகர் சன்னதி, தண்டபாணி சன்னதி, நாச்சிமுத்து, கருப்பண சாமி சன்னதி ஆகிய துணை கோவில்களையும் கொண்டுள்ளது.

    வடக்கு பார்த்து உள்ள ஸ்ரீராமஸ்வாமி நவநீதகிருஷ்ணன் கோவிலில் உள்ள மூலவர் சிறு குழந்தை வடிவிலான கிருஷ்ணராக காட்சி அளிக்கிறார். கலை நயத்துடன் கற்களால் கட்டப்பட்ட இக்கோவிலின் 10 தூண்களிலும் கிருஷ்ணரின் தசாவாதார காட்சிகளும் பொறிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீநவநீத கிருஷ்ணன் தொட்டில் கட்டும் பிரார்த்தனைக்கு இணங்கி பிள்ளை செல்வத்தை அருள்கிறார். எனவே குழந்தை வரம் வேண்டுவோர் தினசரி வந்து வழிபட்டால் பலன் உண்டு.

    இதேபோல வெண்ணை, வெள்ளி கொலுசு வாங்கி கொடுத்து பிரார்த்தனை செய்வோருக்கு மன இன்னல்களை போக்கி எண்ணங்களை நிறைவேற்றி வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இத்திருக்கோவிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி உற்சவத்தின்போது 10 நாட்கள் பகல் பத்து, ராப்பத்து திருவிழா நடைபெறும். அப்போது 10 நாட்களும் ஸ்ரீகண்ணபிரான் ராமாயண சாவடிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இக்கோவிலில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தினசரி தீர்த்தங்களும், பிரசாதங்களும் வழங்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு சொந்தமான பசுமாட்டை கோவிலுக்கு கொண்டு வந்து தினமும் பூஜை நடத்தப்படுவது சிறப்பாகும்.

    ராமாயண சாவடி ஸ்ரீராமர் சன்னதியில் ஸ்ரீராமநவமி உற்சவத்தன்று சீதா திருக்கல்யாணம் வெகுசிறப்பாக நடத்தப்படுவது வழக்கம்.

    ஆயிரம் வீட்டு யாதவர்களுக்கு சொந்தமான ஸ்ரீராமஸ்வாமி, ஸ்ரீநவநீத கிருஷ்ணன் சுவாமி தேவஸ்தானம் யாதவ பெருமக்களால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிருஷ்ணருக்குப் பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று.
    • அந்த அவல் லட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

    தேவையானப் பொருட்கள்

    அவல் - 1 கப்

    பொட்டுக் கடலை (உடைத்தக் கடலை) - 1/2 கப்

    முந்திரி - 6

    திராட்சை - 6

    ஏலப்பொடி

    பால் - அரை கப்

    சர்க்கரை - 1 கப்

    நெய்

    தேங்காய் துருவல் - 2 கப்

    செய்முறை

    அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து தனித்தனியே வெறுமனே வறுத்து பொடித்து வைத்தக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவல், காய்ந்த திராட்சையை வறுத்து பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் பொடித்து வைத்துக் கொள்ளவும்.

    அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலப்பொடி, பால், நெய் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவில் லட்டுக்களை செய்து கொள்ளுங்கள்.

    உங்கள் வீட்டில் கிருஷ்ணருக்குப் பிடித்த அவல் லட்டுக்கள் தயார்.

    ×