search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீராமர்"

    • திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதால் தான்.
    • எலுமிச்சம் பழம் ராஜாக்களுக்கு கொடுக்கக் கூடிய மரியாதை நிமித்தமான பழம்.

    ராமதூதன் அனுமானுக்கு துளசி மாலை சார்த்துவதால் ஸ்ரீராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் ஆகியவை பெறலாம்.

    அசோக வனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை விளக்கமாக எடுத்துரைத்ததைப் பார்த்த சீதா சந்தோஷமடைந்து அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த கொடிகளின் இலைகளைக் கிள்ளி தலையில் தூவி ஆசீர்வதித்தாள்.

    'இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும்' என்றாளாம். வெற்றியைக் காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் இதற்கு 'வெற்றிலை' என்று பெயர் வந்தது.

    ஆகையால், பக்தர்கள் தன் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அது வெற்றியடைய வேண்டும் என்ற காரணத்தினால் வெற்றிலை மாலையை சார்த்தி தன் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

    திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதால் தான்.

    எலுமிச்சம் பழம் ராஜாக்களுக்கு கொடுக்கக் கூடிய மரியாதை நிமித்தமான பழம்.

    மற்றொன்று சம்ஹார தொழில் செய்யும் கடவுள் களுக்கு மிகவும் பிடித்தமான பழம்.

    நரசிம்மன், வராகம், கருடன் ஆகிய சக்திகள் அனுமானிடத்தில் ஒருங்கே அமைந்துள்ளதாலும், ஈஸ்வரனின் அம்சம் ஆனதாலும் இவருக்கு எலுமிச் சம்பழ மாலை சார்த்தி வழிபடு வோர் வாழ்வில் எதிரிகளின் தொல்லை நீங்கப் பெறுவர்.

    • சுசீந்திரம் ஆஞ்சநேயர் 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார்.
    • அபயவரத ஆஞ்சநேயர் மார்பில் சிவலிங்கம் வடிக்கப்பட்டுள்ளது.

    குபேர ஆஞ்சநேயர்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில் தான் குபேர ஆஞ்சநேயர் உள்ளார். ஆஞ்சநேயர், ராமனை பார்த்தபோது அவர் தென்திசையை பார்த்தபடி அமர்ந்திருந்தார். வடக்கு பக்கமாக திரும்பி அவரை பார்த்ததால் இத்தலத்து ஆஞ்சநேயர் வடதிசை பார்த்தபடியே இருக்கிறார். இது குபேர திசையாகும். இத்திசையை பார்த்த ஆஞ்சநேயரை காண்பது அபூர்வம்.

    இத்தலத்து ஆஞ்சநேயர் பிரகாரமூர்த்தியாக இல்லாமல் மூலவராக அருளுகிறார்.இவர், தனது வாலை சுருட்டி தலைக்கு மேலே கிரீடம் போல வைத்து, வராக (பன்றி) முகத்துடன் காட்சி தருவது சிறப்பு. கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலையர் திருக்கோயிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் அருள்வலிக்கிறார். இவரது வாலின் நுனிப்பகுதி தலைக்கு மேல் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இவரை வணங்கினால் குபேர சம்பத்து பெருகும் என்பது நம்பிக்கை.

    பெருமாள் கருவறைக்குள் ஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் திருக்கோயிலில் உள்ள மூலவர் சுமார் இரண்டரை அடி உயரத்தில் பாலவடிவில் நின்ற கோலத்திலும், அவருக்கு வலப்புறத்தில் ஆஞ்சநேயர் வணங்கிய கோலத்திலும் உள்ளனர்.

    ராமபக்தரான ஆஞ்சநேயர், பெருமாள் கோயில்களில் தனி சன்னதியில் இருப்பதைப் பார்த்திருக்கலாம். ஆனால், இக்கோயிலில் கருவறையில் பெருமாள் அருகிலேயே இருப்பது சிறப்பம்சம்.

    அபயவரத ஆஞ்சநேயர்: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயரின் மார்பில் சிவலிங்கம் வடிக்கப் பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை (காலணி) அணிந்து, இடுப்பில் கத்தி செருகி போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம்.

    ஜெயமங்கள ஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை ஜெயமங்கள ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலை எட்டு அடி உயர சுயம்பு பாறையில் ஆறு அடி உயரமும், ஐந்து அடி அகலமும் உடையவராக கம்பீரமாக நேர் கொண்ட பார்வையுடன் காட்சி அளிக்கிறார். இங்குள்ள பாறையின் பின்புறத்தில் அலங்கார நந்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது.

    இந்த நந்தி சிலை ராமலிங்கேஸ்வரர் பின்நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான அமைப்பு வேறு எங்குமில்லை என்று சான்றோர்கள் கூறினர்.

    வீரஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் சண்முகபுரம் வீரஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் பாலாற்றின் நடுவே படுத்த நிலையில் உள்ள பாறையில் வீர ஆஞ்சநேயராக சுமார் ஐந்து அடி நீளத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    பிரகாரத்தெய்வமாக இல்லாமல் இத்தலத்தின் மூலவராக இருந்து அருள்பாலிக்கும் வீரஆஞ்சநேயரின் முகம் இலங்கையை நோக்கி திரும்பியுள்ளது. கோவிந்தமலை, விஸ்வாமித்திரர் தவம் செய்த தாடகநாச்சி மலை ஆகிய இரு புனிதம் வாய்ந்த மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் தன் வீரத்திற்கு அறிகுறியாக வலது கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில் வைத்தபடியும் ஆறரை அடி உயரத்தில் நின்ற திருகோலத்தில் அருள்பாலிக்கிறார். ஆனால் இவரது காலின் கீழ்பகுதி ஆற்றுநீர் படும் வகையில் பூமிக்குள் அமைந்திருப்பது சிறப்பு.

    அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயரது திருமேனி சாளக்கிராமத்தினால் ஆனது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

    பஞ்சமுக ஆஞ்சநேயர்: விழுப்புரம் மாவட்டம் பஞ்சவடீ ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 36 அடி உயரம் கொண்ட பிரமாண்ட திருமேனியாக அருள் பாலிக்கிறார்.

    பக்த ஆஞ்சநேயர்: நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள பக்த ஆஞ்சநேயர் 18 அடி உயரமும், கையில் ஜெபமாலையும், இடுப்பில் கத்தியும் வைத்திருக்கிறார்.

    யோக நிலையில் ஆஞ்சநேயர்: மதுரை கோ.புதூர் சூர்யாநகர் முத்தப்பா சுவாமி திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 30 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் யோக நிலையில் அருள்பாலிக்கிறார்.

    பிரமாண்டமாய் ஆஞ்சநேயர் தரிசனம்: தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல் புரம் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 75 அடி உயரத்தில் பிரமாண்டமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    அநுமேசுவரர்: சீதாப்பிராட்டியாரை எங்கு தேடியும் காணாமையால் மனம் நொந்து ஓரிடத்தில் ஈசனை ஸ்தாபித்து வேண்டினார் அனுமன். அதனால் அநுமேசுவரர் என்றும் அவ்வூர் அநுமன் பள்ளியாகவும், பூஜை பொருட்டு இறைவன் அனுமன் ஏற்படுத்திய நீர்க்குணி அநுமநதி என்றும் வழங்கலாயிற்று.

    சத்திய ஆஞ்சநேயர்: செங்கல்பட்டில் கோட்டைச் சுவரில் எழுந்தருளியிருக்கிறார் இவர். மக்கள் தங்களுக்குள் ஏற்படும் தகராறுகளைத் தீர்த்துக் கொள்ள இவருடைய சன்னதியில் சத்தியம் செய்வதுண்டு. இங்கே பொய் சத்தியம் செய்வோர் அழிவர் என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது.

    வால் அறுபட்ட ஆஞ்சநேயர்: ராமேஸ்வரத்தில் எழுந்தருளியிருக்கின்றார் இவர். காசியிலிருந்த விசுவநாதலிங்கம் கொண்டு வரச் சென்ற ஆஞ்சநேயர் வருவதற்கு தாமதமாகவே, ஸ்ரீராமன் சீதையை மணலால் லிங்கம் அமைக்கச் செய்து பூஜையை முடித்து விடுகிறார்.

    பின்வந்த அனுமன் ஆத்திரத்தில் மணல் லிங்கத்தை அப்பால் தள்ள முயல, அது முடியாமல் போகவே, வாலினால் சுற்றி பலம்கொண்ட மட்டும் இழுத்தார். அப்போது, அவரது வால் அறுந்து போனது. தனது தவறுணர்ந்து ராமனிடம் மன்னிப்புக் கேட்டு மீண்டும் வால் வளரப் பெற்றார். இங்கு, வால் அறுபட்ட நிலையில் உள்ள ஆஞ்சநேயரின் சிலையைக் காணலாம்.

    பாலரூப ஆஞ்சநேயர்: உடுப்பிக்கு கிழக்கே மூன்று கல் தொலைவில் ஒரு சிறுகுன்றில் துர்க்கை கோயில் ஒன்றுள்ளது. அதன் கீழ் குளக்கரையில் கோவணாண்டியாக பாலரூப ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். உடலெல்லாம் உரோமம் தெரியும்படி அருமையாக அச்சிலை வடிக்கப்பட்டுள்ளது.

    யோக ஆஞ்சநேயர்: வேலூர் சோளிங்கரில் உள்ள ஒரு சிறிய குன்றில் யோக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். நரசிம்மரை நேராக இருந்து தரிசிப்பவராய், நரசிம்மரைப் போலவே யோக நிலையில் இவர் இருக்கின்றார்.

    யந்த்ரோத்தாரக அனுமன்: ஹம்பியில் எழுந்தருளியிருப்பவர் இவர். ஆஞ்சநேயரை யந்திரத்தில் வடிவாக அமைத்துள்ளனர். பத்ம தளத்தோடு கூடிய ஒரு வட்டத்தின் நடுவே ஆறுகோணம் கொண்ட யந்திரம் வரையப்பட்டுள்ளது.

    அதன் மத்தியில் ஆஞ்சநேயர் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். கோணங்களிலே பீஜாக்ஷரங்கள் உள்ளன. வட்டத்தின் உட்புறம் தியான ஸ்லோகம் கிரந்த எழுத்தில் உள்ளது.

    ஜன்மபூமி ஆஞ்சநேயர்: பன்னூரில் உள்ள ஆஞ்சநேயர், ஆலயத்தில் கையைக் கூப்பிக் கொண்டு பவ்யமாக நிற்கும் பக்த ஆஞ்சநேயர் ஜன்மபூமி ஆஞ்சநேயர் என்ற திருநாமம் தாங்கியிருக்கிறார்.

    பிரபத்யாஞ்சநேயர்: மங்கள கிரி (ஆந்திரா) கல்யாண சரஸ் திருக்குளத்தின் கரையில் இந்த ஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ளார். இவரே மங்களகிரியின் காவல் தெய்வம். ராமாவதாரம் முடிந்து ஸ்ரீமத் நாராயணன் வைகுண்டம் செல்லும்போது ஆஞ்சநேயரை மங்களகிரியிலேயே தங்கி நரசிம்மரை வழிபட்டுக் கொண்டிருக்கும்படி பணித்துவிட்டுச் சென்றதாக இத்தல புராணம் கூறுகிறது.

    திரிநேத்ர சதுர்புஜ அனுமார்: நாகப்பட்டினம் மாவட்டம் ஆனந்த மங்கலத்தில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலிலே தான் இந்தத் திரிநேத்ரதசபுஜ அனுமார் வீற்றிருக்கிறார். மூன்று கண்களுடனும் பத்துக் கைகளுடனும் காட்சி தருகின்றார்.

    • ராமாயணம் முழுவதும் சரணாகதி தத்துவம் ஊடுருவி கிடக்கின்றது.
    • காலனின் கையில் சிக்காமல் எந்த உயிரும் தப்பிப்பதற்கு இல்லை.

    ஓரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை எடுத்துக் காட்டவும் மக்களை நல்வழிப்படுத்தவும் சரணாகதி தத்துவத்தை போதிப்பதற்காகவும் ஏற்பட்டது. இந்த அவதாரம் தாய் தந்தையரிடம், குருவிடம், உடன் பிறந்தோரிடம், மனைவியிடம், விரோதியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் உதாரண புருஷனாக திகழ்கிறான் ஸ்ரீ ரகுராமன்.

    அரசனாக எப்படி நல்லாட்சி செய்ய வேண்டும். குடி மக்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதையும் விளக்கிக் காட்டுகிறான். மக்களுடைய மகிழ்சியிலும் துக்கத்திலும் ஸ்ரீராமன் பங்கு கொள்வதை மிக அழகாக காட்டுகிறது ராமாயணம்.

    விபீஷணன் இலங்கையை விட்டு ஸ்ரீராமனிடம் அடைக்கலம் கேட்டு வரும் போது ஸ்ரீ ஹனுமான் போன்றோரின் அபிப்பிராயத்தைக் கேட்டபின் சரணாகதி தத்துவத்தை மிக அழகாக விளக்குகிறான் ஸ்ரீராமன்.

    என்னை சரணம் அடையக் கூட வேண்டாம். தோழன் என்று நினைத்து என்னிடம் வந்தாலே போதும். அவனை ஒருகாலமும் கைவிடமாட்டேன் என்றான் ஸ்ரீராமன். இதையே சீதாபிராட்டியம் ராவணனிடம் கூறுகிறான்.

    ஸ்ரீராமனுடன் உனக்கு தோழமை ஏற்படட்டும் என்ற ராமாயணத்தில் ஒவ்வொரு காண்டத்திலும் சரணாகதியின் பெருமை கூறப்படுகிறது.

    தேவர்களின் சரணாகதி போன்று ராமாயணம் முழுவதும் முனிவர்களின் சரணாகதி பரதன் சரணாகதி விபீஷணன் சரணாகதி போன்று ராமாயணம் முழுவதும் சரணாகதி தத்துவம் ஊடுருவி கிடக்கின்றது. அதனால் வைஷ்ணவர்கள் ராமாயணத்தை சரணாகதி சாஸ்திரம் என்றே போற்றுவர்.

    நாமும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஸ்ரீசீதாப்பிராட்டியையும் சரணாகதி அடைவோம். ஸ்ரீராமநாமத்தை ஜெபிப்போம். சகல பாவங்களையும் நீக்கி சகல நன்மைகளையும் பெறுவோம்.

    ஸ்ரீராமன் ஓர்அனுஷ்டான சீலர். ஆன்மீக செல்வர். இணையற்ற பராக்கிரமசாலி. ஈகையால் உயர்ந்தவர். உத்தமமான பல குணங்களை கொண்டவர். ஊரார் போற்றும் ஊறுதியான வீரம் பல படைத்தவர். எத்திசையும் புகழ் பெற்ற புனிதன். ஏற்றம் மிக்கவன். ஒழுக்கத்தால் ஒப்பற்றவன். ஒளஷதமாய் அனைவரையும் காத்து ரக்ஷிப்பவர்.

    இம்மணுலகில் பிறக்கின்ற எவரும் ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும். அவனவன் இறக்கும் நாள் முன்பே முடிவு செய்யப்பட்டு விடுகிறது. நிலையாமை ஒன்றே தனது பெருமையாய் கொண்டது இவ்வுலகம்.

    மனிதனோ காலாகாலத்திற்கு இங்கேயே நிலைத்திருக்கப்போவதாய் எண்ணி இறுமாப்பு அடைகிறான். படைப்பின் உண்மை பிறந்தவர் எல்லாம் இறந்தே ஆக வேண்டும். இந்த உண்மையை அறிந்தவர் எத்தனைபேர்? தன் வாழ்க்கையை உறுதி செய்ய மனிதன் முயல்கிறான். ஆனால் மனித வாழ்வை இறுதி செய்ய காலன் வந்துவிடுகிறான்.

    காலனின் கையில் சிக்காமல் எந்த உயிரும் தப்பிப்பதற்கு இல்லை. இந்த வாழ்க்கை நிலையற்றது. ஒரு நாளில் கூற்றுவனின் பிடி இறுகும் என்பதை யார் புரிந்து கொண்டிருக்கிறாரோ அவன் அறநெறி தவறாது வாழ்வான். ஸ்ரீராமனை சரணாகதி அடைந்து தானதர்மங்கள் செய்து வாழ்வை அர்த்தமுடையதாக்கி கொள்வான்.

    • `ஸ்ரீராம், ஜெயராம், ஜெயஜெயராம்' என்ற மந்திரத்தை ஜெபிப்பது நல்லது.
    • வீட்டில் ஆஞ்சநேயர் படத்தின் முன் அமர்ந்து அனுமன் சாலீசா துதியை பாராயணம் செய்யலாம்.

    எந்த நேரமும் தன்னை மறந்து ஸ்ரீராமத்தியானத்தில் இருக்கும் அனுமானுக்கு, தன்னைத் துதிப்பதை விட தனது இறைவன் ஸ்ரீராமனைத் துதிப்பதே பிடிக்கும். எனவே, அனுமானைப் பூஜித்து எவ்வளவு தடவை முடியுமோ, அவ்வளவு தடவைகள். `ஸ்ரீராம், ஜெயராம், ஜெயஜெயராம்' என்ற மந்திரத்தை, குரு உபதேசம் பெற்று ஜெபிப்பது நல்லது.

    அனுமானை வழிபடுபவர்கள், பூஜை நேரத்திலும் இதர முக்கிய புண்ணிய தினங்களிலும் கண்டிப்பாக, பிரம்மச்சர்ய விரதம் - புலனடக்கம் அனுஷ்டிக்க வேண்டும். அசைவ (புலால்) உணவை முழுமையாக ஒதுக்குங்கள். இதுவும் கண்டிப்பான நிபந்தனை.

    வடை மாலை - வெற்றிலை மாலையை, காரிய சித்திக்காக அனுமானுக்கு சாற்றலாம். தினசரி `ஸ்ரீராமஜெயம்' முடிந்தவரை எழுதலாம். அனுமானின் வாலுக்கு, 1 மண்டலம் (48 நாட்கள்) சந்தனக் குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டே வந்து இறுதி நாளில், விசேஷ பூஜை செய்து காரிய சித்தி அடையலாம்.

    கண் மூடி தியானித்து, `ராம், ராம்' என்று சொன்னாலே போதும்! அனுமானுக்கு இதை விட பிரியமானது எதுவும் இல்லை. தியாகராஜ சுவாமிகள் 96 கோடிகள் இம்மந்திரத்தை ஜெபித்து, ஸ்ரீராம தரிசனம் பெற்றார்!

    ஆஞ்சநேயர் மாலா மந்திரததை தினமும் 3 முறையோ, 9 முறையோ, 28 முறையோ சொல்லி வரலாம். நல்ல ஆரோக்கியம், ஆயுள் விருத்தி, மனோ வலிமை போன்றவற்றிற்கு இந்த மாலா மந்திரம் கூற அவை கிடைக்கும்.

    கடன்பட்டுக் கலங்கி நிற்பவர்கள் இந்த மாலா மந்திரத்தைச் சொல்லி வந்தால் கடன் நிவர்த்தியடையும். எதிரிகள் பயம் உள்ளவர்கள் இந்த மந்திரத்தைச் சொல்லிவர எதிரிகள் வசமாவர்.

    சிறைவாச பயம் நீங்க இந்த மந்திரத்தைச் சொல்லி ஆஞ்சநேயரை வணங்க சிறைவாச பயம் நீங்கும். பிரயாணம் செய்யும் பொழுது இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டு சென்றால் பிரயாணம் வெற்றிகரமாக முடியும்.

    வீட்டில் வழிபடும் முறைகள்

    ஆஞ்சநேயரை வீட்டில் பூஜை செய்யும் பக்தர்கள் தனியாக ஒரு பூஜை அறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

    அங்கே ஆஞ்சநேயரின் படத்தையோ, சிலையையோ வைக்க வேண்டும். பூஜை காலத்தில் பரிசுத்தமாக இருக்க வேண்டும். விரத காலங்களில் பெண் வாசனை கூடாது. அந்த நாட்களில் பெண்கள் கண்டிப்பாக பூஜை அறை பக்கம் வரக்கூடாது.

    பூஜை அறையினுள் துளசி இலைகள் போட்டு தீர்த்தம் வைத்திருக்க வேண்டும். சுவாமிக்கு பிடித்தமான நிவேதப் பொருட்களையும் வைத்திருக்க வேண்டும்.

    பூஜை செய்பவர்கள் உடல் மட்டுமின்றி உள்ளமும் சுத்தமாக இருக்க வேண்டும்.அதுபோல பூஜை அறையையும் சுத்தமாக இருக்க வேண்டும். பூஜை அறை தரையை விளக்குமாறு கொண்டு பெருக்காமல், துணியால் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

    பூஜை அறையில் எப்போதும் ஆராதனை புகை மனம் வீச வேண்டும். இவையெல்லாம் நாம் ஆஞ்சநேயருடன் மனம் ஒன்று உதவும்.

    வீட்டில் ஆஞ்சநேயர் படத்தின் முன் அமர்ந்து அனுமன் சாலீசா துதியை பாராயணம் செய்யலாம். செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் தொடர்ந்து பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும். தொடர்ந்து ஒரு மண்டலம் பாராயணம் செய்தால் தடைப்பட்ட விவாகம் உள்பட சுபாகரியம் நிறைவேறும்.

    • நவநீதகிருஷ்ணன் கோவிலில் உள்ள மூலவர் சிறு குழந்தை வடிவில் காட்சி அளிக்கிறார்.
    • மூலஸ்தான விக்ரகத்தை ஸ்ரீபழனிநாச்சி முத்துசுவாமிகள் சித்தர் பிரதிஷ்டை செய்தார்.

    மதுரை மாநகரில் பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு புராணத்தை உள்ளடக்கி இருக்கின்றன. அதேநேரத்தில் சில சமூகத்தினர் தங்களது இஷ்ட தெய்வத்தை பிரதிஷ்டை செய்தும், வணங்கியும் வந்தனர்.

    அந்த தெய்வங்களுக்கு பிற்காலத்தில் பெரிய அளவில் ஆலயங்கள் கட்டப்பட்டு வழி வழியாக வழிபட்டும் வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சிறப்பு பெற்ற கோவில்தான் வடக்குமாசி வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீராமஸ்வாமி ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோவில் ஆகும்.

    இக்கோவில் குறித்து கோவில் அர்ச்சகர் ஒருவர் கூறியதாவது:-

    தேரோடும் வீதியான வடக்கு மாசி வீதியிலே இக்கோவில் அமையப்பெற்றுள்ளது. இக் கோவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு யாதவ பெருமக்களால் நிர்மாணிக்கப்பட்ட தாகும். மூலஸ்தான விக்ரகத்தை ஸ்ரீபழனிநாச்சி முத்துசுவாமிகள் என்னும் சித்தர் தற்போதுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்து விட்டு சமாதியாகி விட்டார். அவரது சமாதியான தினத்தை இன்றளவும் யாதவப் பெருமக்கள் குருபூஜையாக ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாணத்தன்று நடத்துகிறார்கள்.

    முன்னொரு காலத்தில் இந்த பகுதி நந்தவனமாக இருந்தது. அந்த நந்தவனத்திலேயே ஒரு கம்பத்தடியில் ஸ்ரீ ஆஞ்சநேயர், கோவில் கொண்டிருந்தார். இதன் அருகே தான் மூலஸ்தான விக்ரகம் இருந்தது. அப்போது அதற்கு கம்பந்தடி கிருஷ்ணன் என்ற நாமம் இருந்தது.

    பூம்புகாரில் இருந்து மதுரை வந்த கோவலனையும், கண்ணகியையும் இங்குள்ள வடக்கு மாசி வீதி இடைச்சேரி பெண்ணான மாதரி தான் ஆதரித்ததாகவும், சிலப்பதிகாரத்தில் இருந்து தெரியவருகிறது. மேலும் இடைசேரி பெண்களால் ஸ்ரீநவநீதகிருஷ்ணனை முன்னிருத்தி பாடப்பெற்ற தாகவும் கூறப்படுகிறது.

    இந்த நவநீதகிருஷ்ணன் கோவிலின் உபகோவிலான ராமாயண சாவடி கோவிலும் இவ்வீதியில்தான் உள்ளது. பாண்டிய மன்னரிடம் கண்ணகி கோபம் கொண்டு, அங்கிருந்து வந்து கண்ணகி இளைப்பாரிய இடமும் இந்த ராமாயண சாவடி கோவில்தான்.

    ராமன் சன்னதி, விநாயகர் சன்னதி, தண்டபாணி சன்னதி, நாச்சிமுத்து, கருப்பண சாமி சன்னதி ஆகிய துணை கோவில்களையும் கொண்டுள்ளது.

    வடக்கு பார்த்து உள்ள ஸ்ரீராமஸ்வாமி நவநீதகிருஷ்ணன் கோவிலில் உள்ள மூலவர் சிறு குழந்தை வடிவிலான கிருஷ்ணராக காட்சி அளிக்கிறார். கலை நயத்துடன் கற்களால் கட்டப்பட்ட இக்கோவிலின் 10 தூண்களிலும் கிருஷ்ணரின் தசாவாதார காட்சிகளும் பொறிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீநவநீத கிருஷ்ணன் தொட்டில் கட்டும் பிரார்த்தனைக்கு இணங்கி பிள்ளை செல்வத்தை அருள்கிறார். எனவே குழந்தை வரம் வேண்டுவோர் தினசரி வந்து வழிபட்டால் பலன் உண்டு.

    இதேபோல வெண்ணை, வெள்ளி கொலுசு வாங்கி கொடுத்து பிரார்த்தனை செய்வோருக்கு மன இன்னல்களை போக்கி எண்ணங்களை நிறைவேற்றி வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இத்திருக்கோவிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி உற்சவத்தின்போது 10 நாட்கள் பகல் பத்து, ராப்பத்து திருவிழா நடைபெறும். அப்போது 10 நாட்களும் ஸ்ரீகண்ணபிரான் ராமாயண சாவடிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இக்கோவிலில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தினசரி தீர்த்தங்களும், பிரசாதங்களும் வழங்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு சொந்தமான பசுமாட்டை கோவிலுக்கு கொண்டு வந்து தினமும் பூஜை நடத்தப்படுவது சிறப்பாகும்.

    ராமாயண சாவடி ஸ்ரீராமர் சன்னதியில் ஸ்ரீராமநவமி உற்சவத்தன்று சீதா திருக்கல்யாணம் வெகுசிறப்பாக நடத்தப்படுவது வழக்கம்.

    ஆயிரம் வீட்டு யாதவர்களுக்கு சொந்தமான ஸ்ரீராமஸ்வாமி, ஸ்ரீநவநீத கிருஷ்ணன் சுவாமி தேவஸ்தானம் யாதவ பெருமக்களால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜோதிர்லிங்க வழிபாட்டுத் தலங்களில் முதன்மையானது சோமநாதர் ஆலயம்.
    • ஸ்ரீராமர் பூஜித்த ஈஸ்வரர் என்பதால் ராமேஸ்வரம் என பெயர் பெற்றது.

    இறைவன் ஒளிமயமானவன். அவ்வாறு ஒளியாய் விளங்கும் பரம்பொருளைத் தியானிப்பது அல்லது பூஜை செய்வது, வணங்குவது என்பது பொதுவாக மனிதர்களுக்கு கடினமாய்த் தென்பட்டது.

    ஆகவே அந்த ஒளியை எளிதாய் வழிபட லிங்க உருவத்தைக் கண்டு, அதைப் பல்வேறு கோணங்களில் உலகின் பல பாகங்களிலும், பல மதத்தினரும் வணங்கி வந்துள்ளனர் என்பது சரித்திர ஆய்வாளர்களின் முடிவு. அந்த சிவலிங்க உருவம் தொன்று தொட்டு பாரதத்தின் 12 முக்கிய திருத்தலங்களில் பிரசித்தமாய் பல்வேறு பெயர்களில் வணங்கப்பட்டு வருகிறது.

    ஜோதிர்லிங்க வழிபாடானது துவாபரயுக ஆரம்பத்தில் விக்கிரமாதித்த மன்னரால் முதல் முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

    ஆக, முழுமுதற் கடவுளாம் சிவனை - ஜோதி உருவாய்த் திகழ்பவரை மனதார எண்ணி, புத்தியின் மூலமாய் தியானம் செய்வது அவருடைய வழிபாட்டின் உன்னத நிலையாகும். இவ்வாறு மனதையும் புத்தியையும் ஒருமுகப்படுத்தும் முறையே ராஜ யோக தியானம் எனப்படுகிறது.

    மனித ஆத்மாக்கள் அனைவருக்கும் மேலான தந்தை நிராகாரமானவர் (மனித உருவற்றவர்); ஜோதி சொரூபமாய் விளங்குபவர். இந்த உலக சிருஷ்டியின் கர்த்தா அவரே! அவரை அன்புடன் நினைத்து தியானம் செய்வதன் மூலமே நமது பாவச்சுமைகள் அழிந்து, அமைதியும் அன்பும் ஆனந்தமும் பொங்கி வழியும்; புதிய உலகமான சொர்க்கம் இப்புவியில் படைக்கப்படும். அதுவே இறைவனின் படைப்பில் முதல் யுகமாகும். அதைத் தொடர்ந்து திரேதா, துவாபர, கலியுகம் என்று காலச்சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கும். தற்போது நாம் கலியுகம் என்னும் இருண்ட- துக்கம் நிறைந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிவோம்.

    ஆனாலும் பலரால் மறந்துபோய் விடப்பட்டிருக்கும் இம்மாபெரும் உண்மையை எளிய முறையில் இன்றைய தலைமுறையினரும் புரிந்து கொண்டு தியானம் செய்ய வேண்டுமென்பதற்காகவே பிரம்மாகுமாரிகள் இயக்கம் இந்த மாபெரும் 12 ஜோதிர்லிங்க தரிசனத்தை ஏற்பாடு செய்துள்ளது.

    தமிழகத்தில் பல முக்கிய நகரங்களில் ஜோதிர்லிங்க தரிசனம் நடந்தேறியுள்ளது. பல லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்துள்ளனர்.

    இத்தரிசனத்தின் சிறப்பு யாதெனில், பாரதத்தின் 12 ஜோதிர்லிங்க சிவத்தலங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கிறது. அதுவும் அந்தந்த தலங்களின் லிங்கங்களை அதே உருவில் அங்கு சென்று தரிசனம் செய்வது போன்ற ஓர் அற்புத அனுபவம் கிடைக்கும்.

    12 ஜோதிர்லிங்கங்கள்

    காசி விஸ்வநாதர் (வாரணாசி- உத்தரபிரதேசம்)

    பாரதத்தின் அனைத்து தீர்த்த தலங்களிலும் தலைசிறந்தது காசி.

    பரமாத்மா சிவன் இந்த புனித தலத்தைத் தனது திரிசூலத்திலிருந்து நேரடியாகப் படைத்தார் எனவும்; பிறகு பிரம்மாவுக்கு உலக சிருஷ்டியை ஆரம்பிக்குமாறு கூறியதாகவும் சிவபுராணம் கூறுகிறது. இந்த தலம் கர்மத்தின் தீய கணக்கினை அழிக்கக்கூடியது எனவும்; அனைவருக்கும் முக்தி அளிக்கக்கூடிய சிவலிங்கத்தை சிவனே படைத்ததாகவும் கூறப்படுகிறது. உலகத்தையே படைக்கும் காரியத்தைச் செய்வித்ததால் அங்குள்ள லிங்கமே விஸ்வநாத் என்றழைக்கப்படுகிறது.

    மல்லிகார்ஜுனர் (ஸ்ரீசைலம்- ஆந்திரா)

    இங்குள்ள மூலவர் எட்டு அங்குல உயரத்தில் சுயம்பு லிங்கமாகக் காட்சியளிக்கிறார். இந்த தலத்தில் ஜோதிர்லிங்கம் என்ற பெயரில் 11 வேறு கோவில்களும் உள்ளன. இக்கோவிலுக்குப் பின்னால் சிறிய குன்றின்மேல் பார்வதி கோவில் ஒன்றும் உண்டு. இத்தேவி இங்கு மல்லிகாதேவி என அழைக்கப்படுகிறாள். இங்குள்ள சிவனின் பெயர் அர்ஜுனன். எனவேதான் இங்குள்ள மூலவரை மல்லிகார்ஜுனர் என்றழைக்கிறோம்.

    ஓங்காரேசுவரர் (மத்தியப் பிரதேசம்)

    இங்குள்ள சிறப்பு யாதெனில், இங்கே ஓங்காரேசுவரர் மற்றும் பரமேஷ்வர் என்னும் இரண்டு ஜோதிர்லிங்கங்கள் உண்டு. அமலேஷ்வர் என்கிற வேறு பெயரும் உண்டு. இக்கோவிலுக்கு சற்று தூரத்தில் நர்மதை நதி இரண்டாகப் பிரிந்து பெருக்கெடுத்து ஓடுகிறது. பிறகு சற்று தூரத்தில் மீண்டும் ஒன்றாக இணைந்து விடுகிறது. இடைப்பட்ட தீவுப் பகுதியில்தான் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இரண்டாகப் பிரிந்தோடும்போது ஒன்று நர்மதா எனவும், மற்றொன்று காவேரி எனவும் அழைக்கப்படுகிறது. இத்தீவில் தான் மகாராஜா மாங்கதன் இறைவனை வேண்டி நின்றதாகவும், அதற்கு இறைவன் காட்சியளித்து அருள்புரிந்ததால் அவரது பெயரே இத்தீவிற்கும் சூட்டப்பட்டு மாங்கத தீவு என்றழைக்கப்படுகிறது.

    சோமநாதர் (குஜராத்)

    ஜோதிர்லிங்க வழிபாட்டுத் தலங்களில் முதன்மையானது சோமநாதர் ஆலயம். இந்த ஜோதிர்லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த சந்திர பகவான், சிவனை வேண்டி தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. இறைவனும் அவரது தவத்தை மெச்சி வரம் அளித்தார். எனவேதான் இந்த லிங்கம் சந்திரன் பெயரால் (சோமன்-சந்திரன்) வழங்கி வருகிறது. இந்த ஜோதிர்லிங்க தரிசனத்தின் மூலமே மனிதர்கள் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுகிறார்கள். மேலும் மேலும் மனம் நிறைந்த பலன்களை அடைந்து, மரணத்திற்குப்பின் சொர்க்கத்தையும் அடைவதாகக் கூறப்படுகிறது. அரபிக்கடல் ஓரத்தில் இக்கோவில் அமைந்திருப்பது சிறப்பு அம்சமாகும்.

    இராமநாதசுவாமி (இராமேஸ்வரம்- தமிழ்நாடு)

    பாரதத்தின் தெற்கு ஓரத்தில் அமைந்திருக்கும் திருத்தலம் இராமேஸ்வரம்.

    ஸ்ரீராமர் பூஜித்த ஈஸ்வரர் என்பதால் ராமேஸ்வரம் என பெயர் பெற்றது. பிரதான மூர்த்தி இராமநாத சுவாமி என்றழைக்கப்படுகிறார். இந்த லிங்க மூர்த்திக்கு கங்கை நீரை அபிஷேகம் செய்து, இத்தலத்திலுள்ள மண்ணை எடுத்து கங்கையில் கரைப்பது விசேஷம். எனவேதான் வடநாட்டு யாத்ரீகர்கள் நிறைய பேர் இங்கு வருகின்றனர்.

    இங்குள்ள 22 தீர்த்தங்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவை. இவற்றில் நீராடவில்லையெனில் இராமேஸ்வர யாத்திரை நிறைவு பெறாது என்றே கூற வேண்டும். இறுதி தீர்த்தமான கோடி தீர்த்தத்தில் நீராடிய பிறகே சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். அக்னி தீர்த்தம் என்ற பெயரில் வங்கக்கடல் விளங்குகிறது.

    நாகேஸ்வரர்

    இங்கு மூலவர் நாகேஸ்வரர் என்றும்; பார்வதி தேவி நாகேஸ்வரி என்றும் பூஜிக்கப்படுகின்றனர். இன்று இந்த ஜோதிர்லிங்கம் பாகிஸ்தானின் தலைநகரான கராச்சியில், கவர்னர் மாளிகைக்கு அருகில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. ஒரு நடைபாதை பாலத்தின் மூலமே இக்குகையைச் சென்றடைய முடியும்.

    கேதார்நாத் (உத்தரகாண்டம், உத்தர பிரதேசம்)

    பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களிலும் இயற்கையின் எழில் சூழ்ந்த அழகுமிக்க தலம் கேதார்நாத் ஆகும். மந்தாகினி நதிக்கு வலப்புறத்தில் அமைந்துள்ள இத்தலத்தைச் சுற்றி மூன்று பக்கமும் மலைகள் சூழ்ந்து காணப்படுவது கண்கொள்ளாக் காட்சி. இந்த இமாலய மலைத் தொடரிலிருந்துதான் மந்தாகினி நதி உற்பத்தியாகி ஓடி வருகிறது. இங்குள்ள கேதாரேஷ்வர் மற்றும் பத்ரி நாராயணரை பக்தி சிரத்தையுடன் வழிபடுவோருக்கு வாழ்க்கையில் வரும் துன்பங்கள் விலகிப் போகும்; எண்ணங்கள் பூர்த்தியாகும் என சிவபுராணம் கூறுகிறது. மேலும் இந்த யாத்திரையின்போது மரணம் எய்துவோருக்கு மோட்சம் நிச்சயம் என்றும் கூறப்படுகிறது.

    கேதார்நாத்திற்கு விஜயம் செய்யும் யாத்ரீகர்கள் மிக அவசியமாக நேபாளத்திலுள்ள பசுபதிநாத் மூலவரையும் சென்று தரிசிக்க வேண்டுமென்பது ஐதீகம். ஏனெனில் பரமனின் தலைப்பாகம் பசுபதி நாத் என்றும்; பாதப்பகுதி கேதார்நாத் என்றும் கூறப்படுகிறது.

    மகாகாளேஸ்வர் (உஜ்ஜயினி, மத்திய பிரதேசம்)

    உஜ்ஜயினி என்றும் அவந்திகா என்றும் அழைக்கப்படும் நகரம் சிப்ரா நதிக்கரையோரம் அமைந்துள்ளது. இந்த நதி பகவான் விஷ்ணுவின் சரீரத்திலிருந்து உற்பத்தியாவதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு கிரகம் சிம்ம ராசியில் வரும்போது, வைகாசி விசாகத்தின்போது இங்கு மகாமகம் நடைபெறுகிறது.

    இரு பிரிவுகளாக வளர்ந்து நிற்கிறது மகாகாளேஸ்வர் கோவில். மேல் தளத்தில் ஓங்காரேஸ்வர் சிவலிங்கம் பிரதிஷ்டையாகியுள்ளது. கீழ்ப்பகுதியில் மகாகாளேஸ்வரர் ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. இந்த சிவனைத் தரிசனம் செய்வதால் ஒருவருக்கு கனவில்கூட துக்கம் ஏற்படாது என்றும்; எந்தெந்த ஆசைகளுடன் பூஜை செய்கின்றனரோ அந்த ஆசைகள் பூர்த்தியாகும் என்றும் கூறப்படுகிறது.

    வைத்தியநாதேஸ்வரர் (பரளி, மகாராஷ்டிரா)

    ஒளரங்காபாத்திற்கு அருகில் பாபானி ரெயில் நிலையத்தருகில் பரளி வைத்திய நாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள லிங்கமானது கைலாசத்திலிருந்து ராவணனால் கொண்டு வரப்பட்டது என்று கருதப்படுகிறது. இந்த லிங்கம் சிறு மலைக்குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.

    இக்குன்றில் எவரது சடலம் எரியூட்டப்படுகிறதோ, அவர்கள் நேரடியாக மோட்சம் செல்வார்கள் என்று கூறப்படுகிறது. எனவே பெருவாரியான மக்கள் தங்கள் உறவினர்களின் சடலங்களை இங்கே கொண்டு வந்து தகனகிரியை செய்தனர். இந்த வழக்கம் சென்ற நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்து வந்தது. எனவே இந்த தலம் தகன பூமியின் பேரால் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இதைப் பின்பற்றி பாரதத்தின் பிற நகரங்களிலும்கூட தகன பூமியில் சிவபெருமானின் கோவில் (சுடலை காப்பவர்) அமைத்துள்ளனர்.

    குகமேசம் (கிருஷ்ணேஷ்வர்- மகாராஷ்டிரா)

    வடமொழியில் குஷ்மேஷ்வர் என்றழைக்கப்படும் இத்தலத்தில் அருள்பாலிக்கும் ஈஸ்வரனின் பெயர் கிருஷ்ணேசுவரர் ஆகும். ஒளரங்காபாத் மற்றும் தௌலதாபாத் நிலையங்களுக்கு அருகே இத்தலம் அமைந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற ஓவியங்கள் அமைந்துள்ள எல்லோரா குகைகளுக்கருகில் இக்கோவில் அமைந்துள்ளது.

    திரியம்பகேஸ்வரர் (மகாராஷ்ட்ரா)

    நாசிக் ரோடு அருகில், பிரம்மகிரி மலையில், கோதாவரி நதி உற்பத்தியாகும் இடத்திற்கு அருகில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகப்பெரிய நிலப்பரப்பில், நாலாபுறமும் மிக உயர்ந்த மதில் சுவர்களுடன் அமைந்துள்ளது. உள்பிராகாரத்தில் மூன்று லிங்கங்கள் உள்ளன. இவை பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் பிரதிமைகள் என்று கூறப்படுகின்றன. இந்த ஜோதிர்லிங்கங்களைத் தொட்டு வணங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் அமிர்தகுண்டம் என்னும் பெயரால் புஷ்கரணி (திருக்குளம்) உள்ளது.

    பீமா சங்கர் (அருணாசலபிரதேசம்)

    இக்கோவில் பழைய அஸ்ஸாமில் தென்புறத்திலுள்ள- தற்போதைய அருணாசல பிரதேசத்தின் தேஜி நகரில் அமைந்துள்ளது. இப்பகுதியில் பீமாசங்கர் மற்றும் பிரம்மா குண்டம் (பரசுராம் குண்டம்) என்னும் இரண்டு புகழ் பெற்ற தீர்த்தங்கள் உள்ளன.

    கும்பகர்ணனின் மகனான பீம சூரன் அனைவருக்கும் பெருந்துன்பம் விளைவித்தான். அப்போது சிவன் தோன்றி சூலத்தால் பீம சூரனை வதம் செய்தார். அந்த சாம்பலிலிருந்து அநேக காரியங்களுக்குப் பயன்படும் மருந்து வகைகள் உற்பத்தியாயின என்றும்; "பூதம், பேய், பிசாசு போன்றவற்றை விரட்ட வல்லது என்றும் கூறப்படுகிறது.

    "தேவர்கள், முனிவர்கள், மக்களுடைய பாதுகாப்பின் பொருட்டு, யுத்தம் செய்யாதோருக்கும் துன்பம் விளைவிக்கக்கூடிய இந்த மண்ணில், தாங்கள் அவசியம் இருந்து காத்தருள வேண்டும்' என்கிற பிரார்த்தனையின்பேரில் பீமாசங்கர் என்னும் பெயரில் ஈசன் இங்கு கோவில் கொண்டார்.

    • மகாராஷ்டிராவிலுள்ள ஒளரங்காபாத் என்ற இடத்தில் கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் அமைந்துள்ளது.
    • சிவபக்தியுடைய ராவணன் பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களுக்குள் ஒரு லிங்கத்தை இலங்கைக்கு எடுத்துச் செல்ல விரும்பினான்.

    இந்தியாவிலிருக்கும் முக்கியமான சிவபெருமானின் 12 தலங்களில் பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்கள் அமைந்திருக்கின்றன என்கிறார்கள். இவை இந்தியாவில் அமைந்திருக்கும் இடங்களையும் அவை எப்படி அந்த இடங்களில் அமைந்தன என்பது குறித்த தகவல்களையும் சிவபுராணம் சொல்லுகிறது. அந்த பன்னிரண்டு ஜோதிர்லிங்கக் கோவில்கள் குறித்த சிறு தகவல்களை இங்கே காணலாம்.

    1. சோமநாத் ஜோதிர்லிங்கம் கோவில் - சோமநாதம் (குஜராத்)

    சோமா என்ற இன்னொரு பெயரைக் கொண்ட சந்திர பகவான் ரோகிணியையும் தக்ஷ மகாராஜாவின் மகளையும் மணந்து கொண்டார். இரு மனைவிகளுக்குள் சோமா ரோகிணியை அதிகமாக நேசித்தார். இதை அறிந்த தக்ஷ மஹாராஜா சோமாவிற்கு சாபம் கொடுத்தார். சந்திரபகவான் ஒளியிழந்து தேயத் தொடகினார். சந்திரனின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட தக்ஷன் ப்ரபாஸா என்ற இடத்தில் சோமாவிற்கு சாபத்திலிருந்து விமோசனம் கிடைக்குமென்ற பரிகாரத்தையும் சொன்னார்.

    அந்த இடத்திற்கு சென்ற சோமா ஒளியையும், தோற்றத்தையும் முழுமையாக பெற்றான். சந்திர பகவான் ப்ரபாஸாவில் சிவபெருமானுக்காகத் தங்கத் தகடுகளால் ஜொலிக்கும் சோமநாதர் கோவிலைக் கட்டினார். அரபிக்கடலின் தென்மேற்கு திசையிலுள்ள குஜராத் மாநிலத்தில் இந்தக் கோவில் இடம் பெற்றுள்ளது. சந்திர பகவானால் கட்டப்பட்ட சோமநாத் கோவில் சேதமடைந்து பிறகு ராவணன், கிருஷ்ண பரமாத்மா, பீமனால் புதுப்பிக்கப்பட்ட இந்தக் கோவில் 1026ஆம் ஆண்டில் முகமது கஜினி அழித்தான். அதன் பிறகு சோமநாத் கோவில் பல முறை புதுபிக்கப்பட்டது. தற்சமயமுள்ள சோமநாத் மந்திர் ஏழாவது முறையாக 1950ஆம் ஆண்டில் புதுபிக்கப்பட்டது.

    2. மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம் கோவில் - ஸ்ரீசைலம் (ஆந்திரா)

    கிருஷ்ணா நதியின் தென்திசையை ஒட்டி ரேஷபாகிரி மலைத்தொடரில் சிவபெருமான் உருவெடுத்து லிங்க வடிவத்தில் மாறினார் என்று சிவபுராணம் சொல்லுகிறது. இந்தக் கோவில் 1404ஆம் ஆண்டில் ஹரிஹர ராயா என்ற அரசனால் கட்டப்பட்டது. 8 மீட்டர் உயரத்தில் இந்தக் கோவிலைச் சுற்றி சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளது. மல்லிகார்ஜுன கோவிலுள்ள லிங்கம் 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. முன்காலத்தில் மக்கள் இந்த லிங்கத்தை மல்லிகை மலர்களால் பூஜை செய்து வந்தார்கள். அதனால் இந்த லிங்கம் மல்லிகார்ஜுன லிங்கம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

    இலங்கையிலிருந்து திரும்பிய ராமபிரான் இந்தக் கோவிலுக்கு வருகை தந்ததாகவும் அந்தச் சமயத்தில் ஸ்ரீ ராமர் ஸஹஸ்ரலிங்கத்தை நிறுவியதாகவும் புராணம் சொல்லுகிறது. இங்கு இவர் 1001 சிறிய லிங்கங்களை உருவாக்கினார் என்ற பெருமையும் இருக்கிறது. இந்தக் கோவிலில் பிரம்மராம்பிகா தேவியின் (பார்வதி தேவியின் இன்னொரு பெயர்) சன்னதியும் இடம் பெற்றுள்ளது.

    3. மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் - உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)

    துஷானா என்ற அரக்கன் அவந்தி நாட்டு மக்களை கொடுமைப்படுத்தி வந்தான். அவனுடைய கொடுமையை அழிக்கவும் அவனிடமிருந்து மக்களைக் காக்கவும் சிவபெருமான் இந்த பூமியில் தோன்றினார். துஷானாவைக் கொன்று அவந்தி நாட்டு மக்களை கொடுமையிலிருந்து விடுவித்தார். அதன்பிறகு மக்கள் சிவபெருமானை அங்கேயே நிரந்தரமாக இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டதின் காரணத்தால் மஹா கால் லிங்கமாக உருவெடுத்தார்.

    மத்தியப் பிரதேசத்திலுள்ள உஜ்ஜைன் மாநகரத்தில் இந்த மஹாகாலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் ஐந்து பிரிவுகளைக் கொண்டது. மாபெரும் சக்தியைக் கொண்ட சுயம்புவாக தோன்றிய மஹாகால் லிங்கம் கோவிலின் அடித்தளத்தில் உள்ளது. இதற்கு மேல்தளத்தில் விநாயகர், பார்வதி, கார்த்திகேயன் சன்னதிகள் இடம் பெற்றுள்ளன.

    மூன்றாவது தளத்தில் நாக சந்திரேஷ்வரர் சன்னதி உள்ளது. இந்தச் சன்னதியின் கதவுகள் நாகபஞ்சமியன்று திறந்து வைக்கப்படுகின்றன. கோவிலின் பிரதான சன்னதியில் 100 கிலோ எடையுள்ள வெள்ளித் தகடுகளால் செய்யப்பட்ட ருத்ரயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கு காரகன் சிவபெருமான். இந்தக் கோவிலில் மஹாகாலேஷ்வர் லிங்கத்திற்கு மனிதப் பிணம் எரிக்கப்பட்ட சாம்பலால் அபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    4. ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)

    நர்மதை, காவேரி ஆகிய இரண்டு நதிகள் கூடுமிடத்திலுள்ள மன்ஹாடா தீவில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. ஓம் என்ற வடிவத்திலுள்ள இந்தத் தீவின் வடதிசையில் கௌரிசோமநாதர் கோவில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கோவிலில் அர்ஜுனன், பீமனின் மூர்த்திகளும் இடம் பெற்றுள்ளன. பத்தாவது நூற்றாண்டில் கட்டப்பட்ட சித்தநாத் கோவிலும் இந்தத் தீவில் இடம் பெற்றிருக்கிறது. நவராத்திரி, கார்த்திகை, பௌர்ணமி ஆகிய பண்டிகைகள் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

    5. காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோவில் - வாரணாசி எனும் காசி (உத்தரப்பிரதேசம்)

    18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருக்கிறது. வாரணாசியை காசி என்றும் அழைக்கிறார்கள். இந்தோரை ஆண்ட அஹில்யாபாய் ஹோல்கர் என்ற மஹாராணி இந்தக் கோவிலைக் கட்டினார். கோவிலின் பிரதான சன்னதியிலுள்ள தங்கத்தகடுகள் மகாராஜா ரஞ்ஜித் சிங்கினால் வழங்கப்பட்டது. இந்தக் கோவிலுள்ளே ஞானவியாபி கிணறு ஒன்று உள்ளது.

    விஸ்வநாதர் சன்னதியில் வைக்கப்பட்டுள்ள லிங்கமும் இந்தக் கிணற்றிலிருந்துதான் கிடைக்கப் பெற்றது என்று புராணங்கள் சொல்லுகின்றன. தாமரை புஷ்பம், மந்தாரை புஷ்பம் ஆகியவைகளால் அலங்கரிக்கப்பட்ட லிங்கத்திற்கு தினந்தோறும் பாலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. தண்டபாணி, மஹாவிஷ்ணு, காலபைரவன் சன்னதிகளும் இந்தக் கோவிலில் இடம் பெற்றிருக்கின்றன.

    6. கேதாரேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோவில் -இமயம் (உத்தரப்பிரதேசம்)

    ருத்ர இமயமலைத் தொடரில் இடம் பெற்றுள்ள இந்தக் கேதாரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் வருடத்தில் ஆறு மாதத்திற்கு மட்டும் திறக்கப்படுகிறது. மற்ற ஆறு மாதத்திற்கு மூடி வைக்கப்படுகிறது. பார்வதி தேவி சிவபெருமானுடன் இணைந்து அர்த்தநாரேஷ்வரராக தோற்றமளிக்க கேதாரேஷ்வரரை பிரார்த்தனை செய்தாள். பார்வதியின் வேண்டுதலுக்காக இங்கு சிவபெருமான் கேதாரேஷ்வர லிங்கமாக உருவெடுத்தார். இந்தக் கோவிலினுள்ளே பார்வதி, விநாயகர் சன்னதிகளும் இடம் பெற்றுள்ளன. கிருஷ்ண பரமாத்மா, பஞ்ச பாண்டவர்கள், திரௌபதிதேவி, குந்திதேவி போன்றவர்களின் மூர்த்திகளும் இந்தக் கோவிலில் இடம் பெற்றிருக்கிறது.

    7. நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம கோவில் - நாகநாதம் (மகாராஷ்டிரா)

    த்வாரகா பெட், த்வாரகா ஆகிய இரண்டு தீவுகளுக்கிடையே நாகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோவில் உள்ளது. சிவபக்தியுடைய சுப்ரியா மற்றும் அவளுடைய தோழிகளையும் தாருகா என்ற அரக்கன் திடீரென்று தாக்கி அவர்களைக் கடத்திச் சென்று தாருகா வனத்தின் சிறையில் வைத்து கொடுமைப்படுத்தினான். சிவபெருமான் ஜோதிர்லிங்கமாக தோன்றி அந்த அரக்கன் தாருகாவை அழித்தார். அன்றிலிருந்து மக்கள் சிவபெருமானை நாகேஷ்வர ஜோதிர்லிங்கமாக பூஜித்து வருகிறார்கள்.

    சிவ பக்தியுடைய நாமதேவர் சிவபெருமானின் புகழை அந்தக் கோவிலில் பாடி வந்தார். அவருடைய தொல்லையை தாள முடியாத மக்கள் நாமதேவரை கடவுளில்லாத இடத்தில் அமர்ந்து பாடச் சொன்னார்கள். நாமதேவர் கடவுளில்லாத இடத்தை காட்டும்படி மக்களிடம் கேட்டார். எரிச்சலடைந்த மக்கள் தென்திசையில் நாமதேவரை தூக்கிக் சென்று அமர்த்தினார்கள். திடீரென்று கிழக்கு திசையை நோக்கியிருந்த நாகேஷ்வர லிங்கம் தென்திசையை நோக்கித் திரும்பியது. கோவிலின் கோபுரம் கிழக்கு திசையை நோக்கியிருந்தாலும் பிரதான சன்னதி தென்திசையை பார்த்திருப்பது இங்கு விசேஷமானது.

    8. கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் - குண்ருனேசம் (மகாராஷ்டிரா)

    மகாராஷ்டிராவிலுள்ள ஒளரங்காபாத் என்ற இடத்தில் கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோவில் அமைந்துள்ளது. தேவகிரி மலைத்தொடரில் சுதர்மா சுதேஹா பிராமணத் தம்பதியர்கள் வசித்து வந்தார்கள். வேதங்களை அறிந்த சுதர்மா தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியமில்லை. இதனால் வேதனையடைந்த சுதேஹா சகோதரி கிரிஷ்னாவை சுதர்மாவுக்கு மணம் செய்து கொடுத்தார். சிவபக்தியுடைய கிரிஷ்னா 101 லிங்கங்களை உருவாக்கி பூஜைகள் செய்த பிறகு ஏல கங்கா நதியில் விசர்ஜனம் செய்தாள். அவளுடைய பக்தியை கண்டு மெச்சிய சிவபெருமான் அவளுக்கு ஆண் குழந்தையை வரமாக கொடுத்தார்.

    பொறாமை கொண்ட சுதேஹா அவளுடைய ஆண் குழந்தையைக் கொன்று ஏலகங்கா நதியில் தூக்கி வீசினாள். அனைத்தையும் அறிந்த கிரிஷ்னா சிவபெருமானால் கொடுக்கப்பட்ட குழந்தை அவரால் ரட்சிக்கப்படுவான் என்று மன உறுதியோடு சிவலிங்க பூஜையைத் தொடங்கினாள். லிங்கங்களை நதியில் விசர்ஜனம் செய்யும்போது அவளுடைய ஆண் குழந்தை திரும்பி வருவதைக் கண்டாள். சிவபெருமானும் அவள் முன் காட்சி தந்தார்.

    தன் சகோதரியை மன்னிக்குமாறு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டாள். தன்னுடைய பெயரில் சிவபெருமான் ஜோதிர்லிங்கமாக உருவெடுக்க வேண்டுமென்று அவளுடைய ஆசையையும் தெரிவித்தாள். அவளுடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் சிவபெருமான் அங்கு கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கமாக காட்சி கொடுக்கிறார். இந்தக் கோவிலில் மதிய வேளையில் பஜனைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    9. த்ரியம்புகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோவில் - திரியம்பகம் (மகாராஷ்டிரா)

    நாசிக்கிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் த்ரியம்பக் என்ற இடத்தில் இந்தக் கோவில் உள்ளது. 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோவில் கண்களின் வடிவத்தில் காட்சி தருவது விசேஷமானது. பிராமணர்கள் நிறைந்த த்ரியம்பக் நகரத்தில் வேத பாடசாலைகள், ஆசிரமங்கள் அதிகமாக இருக்கின்றன.

    10. ராமேஸ்வரம் ஜோதிர்லிங்கம் கோவில் - ராமேஸ்வரம் (தமிழ்நாடு)

    ராமேஸ்வரம் ஜோதிர்லிங்கம் கோவில் பழமையான கோவிலாகும் இந்தக் கோவிலில் பிரம்மாண்டமான நந்தி பகவான் இடம் பெற்றிருக்கிறார். சீதாதேவியால் ஸ்தாபனம் செய்யப்பட்ட ராமலிங்கம், அனுமாரால் கொண்டு வரப்பட்ட விஸ்வலிங்கம் ஆகிய இரண்டும் இந்தக் கோவிலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீராமர் இலங்கைக்கு செல்வதற்கு முன் ராமேஸ்வரத்தில் சிவபெருமானுக்கு சிறப்புப் பூஜை செய்தார் என்று ராமாயணம் சொல்கிறது.

    11. பீமசங்கர் ஜோதிர்லிங்கம் கோவில் - பீமசங்கரம் (மகாராஷ்டிரா)

    திரிபுரசுர அரக்கனின் தவத்தை மெச்சி சிவபெருமான் அவனுக்கு சாவில்லாத வரத்தை கொடுத்து கூடவே ஆண்பாதி, பெண்பாதி உடல் கொண்டவரால் அவனுக்கு சாவு என்று சொன்னார். சிவபெருமானிடமிருந்து வரத்தை பெற்ற திரிபுரசுரன் மக்களை கொடுமைப்படுத்தினான். அவனுடைய கொடுமையை தாளமுடியாத மக்கள் சிவபெருமானிடம் கோரிக்கை வைத்தார்கள்.

    கார்த்திகை பௌர்ணமியன்று பார்வதி தேவி சிவபெருமானின் உடலில் புகுந்து அர்த்தநாரீஷ்வரராக மாறி திரிபுசுர அரக்கனை கொன்றார். அவனோடு போராடும் சமயத்தில் பூமியைத் தொட்ட சிவபெருமானின் வியர்வைத் துளிகள் பீம நதியாக மாறியது. அந்த இடத்தில்தான் சிவபெருமான் பீமசங்கர் ஜோதிர்லிங்கமாக காட்சி அளிக்கும் கோவில் இருக்கிறது.

    12. வைத்யநாத் ஜோதிர்லிங்கம் கோவில் - பரளி (மகாராஷ்டிரா)

    சிவபக்தியுடைய ராவணன் பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களுக்குள் ஒரு லிங்கத்தை இலங்கைக்கு எடுத்துச் செல்ல விரும்பினான். அவனுடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் சிவபெருமான் நேரில் காட்சி கொடுத்து, அவனிடம் சக்தி வாய்ந்த லிங்கத்தை கொடுத்தனுப்பினார். அரக்கர்கள் நிறைந்த இலங்கைக்கு ராவணன் லிங்கம் எடுத்துச் செல்வது தேவர்களுடைய மனம் ஒப்புக் கொள்ளவில்லை.

    ராவணனுக்கு தடங்கல்கள் உருவாக்க முடிவெடுத்தார்கள். திடீரென்று கங்கா தேவி ராவணன் வயிற்றுக்குள் புகுந்து கொண்டாள். தண்ணீர் நிரம்பிய வயிற்றின் பாரத்தை குறைக்க ராவணன் கையிலிருந்த லிங்கத்தை பிராமணனிடம் கொடுத்தான். ராவணன் அந்த பிராமணனை மஹாவிஷ்ணு என்று அறிந்து கொள்ளவில்லை. ராவணன் திரும்புவதற்குள் மஹாவிஷ்ணு லிங்கத்தை பூமியில் ஆழமாக புதைத்து விட்டு மறைந்தார்.

    மண்ணில் புதைந்த லிங்கத்தை ராவணன் எடுக்க முயன்றும் தோல்வி அடைந்தான். லிங்கத்தை எடுக்க முடியாததால் சலிப்படைந்த ராவணன் இலங்கையிலிருந்து இந்த இடத்திற்கு வந்து பூஜை செய்தான் என்று புராணங்கள் சொல்லுகின்றன. லிங்கம் புதைந்த இடத்தை வைத்யநாத் ஜோதிர்லிங்கம் என்ற பெயரால் அழைக்கிறார்கள். இந்தக் கோவிலைச் சுற்றி 22 கோவில்கள் இடம் பெற்றுள்ளன. சிவகங்கை குளமும் இந்தக் கோவிலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குளத்தில் நீராடினால் தீராத எந்த வியாதியும் மறைந்து விடும் என்ற நம்பிக்கையோடு பக்தர்கள் இங்கு அதிகமாக வந்து செல்லுகிறார்கள்.

    ×